என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    தூசி அருகே பிளஸ் 2 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூசி:

    செய்யாறு தாலுகா மகாஜனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 22), டிராக்டர் டிரைவர். ஏற்கனவே திருமணமான இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது இளம்பெண்ணை பாலாஜி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இளம்பெண்ணை பாலாஜி கடத்திசென்றதாக மாணவியின் தந்தை தூசி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் கிருஷ்ணகிரியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஷாகின் மற்றும் போலீசார் அங்கு சென்று இருவரையும்அழைத்து வந்தனர். பின்னர் மாணவியை கடத்தி சென்ற பாலாஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசியில் வாலிபரை கத்தியால் குத்திவிட்டு ஆட்டோவை கடத்திச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி கோட்டை தெருவை சேர்ந்தவர் ஆதம். அவரது மகன் மஸ்தான் (வயது 23), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு பழைய பஸ் நிலையம் அருகில் ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், அவரிடம் உத்திரமேரூர் அருகில் உள்ள அம்மையப்பநல்லூருக்கு செல்ல வேண்டும் என்று கூறி, ஆட்டோவில் பயணம் செய்தனர்.

    மங்கநல்லூர் கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது 2 வாலிபர்களும் திடீரென மஸ்தானை கத்தியால் குத்திவிட்டு ஆட்டோவை கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கரராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் இருந்த மஸ்தானை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை கடத்தி சென்ற 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவண்ணாமலை அருகே காதல் கணவர் இறந்த விரக்தியில் அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவண்ணாமலை;

    திருவண்ணாமலை கோபால் தெருவை சேர்ந்தவர் பரத் (வயது24). மீன் கடையில் வேலை செய்து வந்தார்.

    இவர் தென்முடியனூர் கிராமத்தை சேர்ந்த லோகேஸ்வரி (20) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். 2 பேரின் குடும்பத்தினரும் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் கடந்த 15-ந்தேதி பரத் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பரத் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    தகவலறிந்து மருத்துவமனைக்கு நேற்றிரவு வந்த லோகேஸ்வரி காதல் கணவன் இறந்த சம்பவத்தால் மனம் உடைந்து கதறி அழுதார்.

    பின்னர் காதல் கணவன் இல்லாத வாழ்க்கை தேவையில்லை என முடிவு செய்த லோகேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    திடீரென அவர் மருத்துவமனையில் 3-வது மாடியில் இருந்து குதித்தார். இதில் தலைக்குப்புற தரையில் விழுந்த லோகேஸ்வரியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு அவர் போராடினார்.

    உடனடியாக அங்கிருந்த டாக்டர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    லோகேஸ்வரி ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    ஆரணியில் நண்பராக பழகி ரூ.15 லட்சம் பட்டுநூல் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 60). முன்னாள் ராணுவவீரர். இவர் சுந்தரம் தெருவில் பட்டு நூல் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஆரணி சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் எனது கடைக்கு அடிக்கடி வருவார். இதனால் பழக்கம் ஏற்பட்டது. எனவே நான் அவ்வப்போது வெளியே செல்லும் போதெல்லாம் நண்பர் கந்தசாமியை கடையை பார்க்கச் சொல்லி விட்டு செல்வேன்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடையில் வைக்கப்பட்டுள்ள பட்டுநூல் குறைந்து கொண்டே வந்தது. இதனை கண்காணிக்க கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினேன். அதில் கடையில் யாரும் இல்லாத நேரத்தில் கந்தசாமி பட்டு நூலினை திருடும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அவரிடம் விசாரித்ததில் திருடப்பட்ட பட்டு நூலை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள பாபு என்பவரிடத்தில் கொடுத்து பணம் பெற்றது தெரியவந்தது. இவ்வாறு ரூ.15 லட்சம் வரை நூல்கள் திருடப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் திருட்டு சம்பந்தமாக கந்தசாமி, பாபு மற்றும் புகார் அளித்த மதியழகன் ஆகிய 3 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்கொவளைவேடு கிராமத்தில் சாலை அமைக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கீழ்கொவளை வேடு, பழைய காலனி பகுதியில், துர்க்கை அம்மன் கோவிலிலிருந்து ராட்டினங்கிணறு வரையில் சிமெண்டு சாலை அமைப்பதற்காக 4 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே இருந்த சாலை தோண்டப்பட்ட நிலையில் பணிகள் முடங்கின. தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே உடனடியாக சாலை அமைக்கக் கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் பணிகள் நாளை முதல் துவங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தில், தொகுதி செயலாளர் மேத்தா ரமேஷ், வந்தவாசி நகர செயலாளர் இனியவன், இளம்சிறுத்தைகள் செயலாளர் அன்பரசு, இளங்கோ, ஏழுமலை, சிலம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    போளூர் அருகே வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    திருவண்ணாமலை:

    போளூர் அருகே உள்ள கங்களமகாதேவி பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 41). இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பரசுராமனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஆரணியில் பிளஸ்-2 மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆரணி:

    ஆரணி முள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் திட்டியதால் கோவித்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. 


    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஆரணி நகர போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட குழு சார்பில் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட குழு சார்பில் நேற்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை செயலாளர் நந்தன், மாவட்ட செயலாளர் அன்பரசன், மாவட்ட பொருளாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், கேங்மேனாக தேர்வு பெற்றுள்ள அனைவரையும் மின்வாரியத்தில் நியமனம் செய்திட வேண்டும். பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
    மூட்டுவலிக்கு சிகிச்சையளிப்பதாக கூறி மூட்டிக்கு மயக்க மாத்திரை கொடுத்து 6 பவுன் நகையை பறித்துச்சென்ற ஆண், பெண் இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுக்காநல்லூர் மந்தைவெளி பஸ் நிறுத்த பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 75). இவரது மனைவி காசியம்மாள் (70). நேற்று காலை சுமார் 7 மணி அளவில் இவர்களது வீட்டுக்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணும், ஒரு பெண்ணும் மோட்டார்சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள் மூட்டு வலிக்கு சிகிச்சையளிப்பதாக, வீட்டில் இருந்த காசியம்மாளிடம் கூறிஉள்ளனர்.

    இதை நம்பிய காசியம்மாள், அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் சென்றதும் அவர்கள் காசியம்மாளுக்கு மயக்க மாத்திரை கொடுத்து, மசாஜ் சிகிச்சை அளித்துள்ளனர். மசாஜ் செய்து கொண்டிருந்தபோது சிறிது நேரத்தில் காசியம்மாள் மயங்கி விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காசியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்த காசியம்மாள், தனது கழுத்திலிருந்த நகையை அந்த மர்ம நபர்கள் பறித்துச்சென்றதை அறிந்து கூச்சலிட்டார்.

    உடனடியாக இது குறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஆனால் 6 பவுன் நகையுடன் அந்த ஆணும், பெண்ணும் தலைமறைவாகி விட்டனர். அந்தப்பகுதியில் உள்ள கண்காப்பு கேமராக்களில் மர்ம நபர்கள் வந்து சென்றது பதிவாகி இருக்கிறதா என போலீசார் ஆய்வுசெய்து வருகின்றர். இந்த சம்பவத்தால் காட்டுக்காநல்லூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 67 அடி தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.  இதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடந்தது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக குறைந்த அளவு பக்தர்களே கலந்து கொண்டனர்.

    கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 29-ந் தேதி (10-ம் நாள் விழா) அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மதியம் சுப்ரமணியர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம், அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப தரிசனத்திற்கு வருகிற 28, 29-ந்தேதிகளில் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதி இல்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.

    இதுகுறித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனா் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் மற்றும் பல்வேறு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு தீபத்திருவிழாவின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தீபத்திருவிழாவின் போது தூய்மை பணி மேற்கொள்ளவது, குடிநீர் வசதி செய்வது போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி வருகிற 3-ந்தேதி வரை ஆன்லைன் நுழைவு சீட்டு மூலம் 5 ஆயிரம் பக்தர்களுக்கு கோவிலில் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் ஆன்லைன் நுழைவு சீட்டு எடுக்காத சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    கோவிலில் வருகிற 3-ந்தேதி வரை தீபத்திருநாளான 29-ந் தேதியை தவிர்த்து காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 2 மணி நேரத்திற்கு ஒரு பிரிவு என்ற அடிப்படையில் 6 பிரிவுகளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அப்போது பக்தர்கள் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை பி்ன்பற்ற வேண்டும் என்ற நிபந்தனை வலியுறுத்தப்படும். கொரோனா காலம் என்பதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சாமி தாிசனம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

    திருவிழாவின் போது அவசர தேவைக்கு நகரத்தில் 15 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீபத்திருநாளான 29-ந்தேதி கோவில் வளாகத்தில் ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்படும்.

    இந்த ஆண்டு தீபத்திருவிழாவிற்கு சிறப்பு பஸ் வசதி கிடையாது. வழக்கமாக மாட வீதியில் நடைபெறும் தேரோட்டம் இந்த ஆண்டு கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெறும். விழா நாட்களில் நடைபெறும் சாமி உலாவின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    வருகிற 28, 29-ந்தேதிகளில் திருவண்ணாமலை நகரத்தை சுற்றி 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளூர் மக்களை தவிர மற்றவர்கள் உள்ளே வராத வகையில் சோதனை செய்யப்படும். உள்ளூர் மக்கள் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

    வெளியூர்களில் இருந்து தீப தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. பஸ்களில் வெளியூர் மக்கள் அதிகளவில் வர வாய்ப்பு உள்ளதால் அந்த சமயத்தில் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 29-ந்தேதி மாலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அதில் இருந்து தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளிக்கும். வழக்கமாக மகா தீபம் காண மலையேற பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு 11 நாட்களும் பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது.

    மேலும் 29 மற்றும் 30-ந்தேதி வரும் பவுர்ணமியன்றும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி கிடையாது. விழா நாட்களில் காலை மற்றும் இரவில் 5-ம் பிரகாரத்தில் நடைபெறும் உலாவின் போதும், தெப்பல் உற்சவத்தின் போதும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    தீபத்திருவிழாவின் போது அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கும் இந்த ஆண்டு அனுமதி கிடையாது. தீபத்திருவிழாவை மக்கள் யுடியூப் மூலம் வீட்டில் இருந்தபடியே பக்தர்கள் காண கோவில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு அங்காரத்தில் சாமி சன்னதியில் எழுந்தருளி 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து பிடாரி அம்மன் சன்னதிக்கு வந்தார். அங்கு அம்மனுக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடந்தது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையொட்டி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உற்சவ நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், சாமி தூக்கும் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து அம்மனை மேளதாளங்களும் 5-ம் பிரகாரம் கொண்டு வந்தனர். மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பிடாரி அம்மன் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உலா வந்தார்.

    இன்று (வியாழக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சாமி சன்னதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. காலையில் மற்றும் இரவில் கோவில் 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெறும். அதிலிருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் விழாவும் நடைபெற உள்ளது.

    கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 29-ந் தேதி (10-ம் நாள் விழா) அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மதியம் சுப்ரமணியர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம், அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் உற்சவ உலாவும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    ×