என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காதல் கணவன் இறந்த விரக்தியில் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி

    திருவண்ணாமலை அருகே காதல் கணவர் இறந்த விரக்தியில் அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவண்ணாமலை;

    திருவண்ணாமலை கோபால் தெருவை சேர்ந்தவர் பரத் (வயது24). மீன் கடையில் வேலை செய்து வந்தார்.

    இவர் தென்முடியனூர் கிராமத்தை சேர்ந்த லோகேஸ்வரி (20) என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். 2 பேரின் குடும்பத்தினரும் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் கடந்த 15-ந்தேதி பரத் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பரத் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    தகவலறிந்து மருத்துவமனைக்கு நேற்றிரவு வந்த லோகேஸ்வரி காதல் கணவன் இறந்த சம்பவத்தால் மனம் உடைந்து கதறி அழுதார்.

    பின்னர் காதல் கணவன் இல்லாத வாழ்க்கை தேவையில்லை என முடிவு செய்த லோகேஸ்வரி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    திடீரென அவர் மருத்துவமனையில் 3-வது மாடியில் இருந்து குதித்தார். இதில் தலைக்குப்புற தரையில் விழுந்த லோகேஸ்வரியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு அவர் போராடினார்.

    உடனடியாக அங்கிருந்த டாக்டர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    லோகேஸ்வரி ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    Next Story
    ×