என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    விண்ணவனூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    திருவண்ணாமலை:

    விண்ணவனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணவனூர், பாச்சல், சேராந்தாங்கல், குப்பந்தாங்கல், நரசிங்கநல்லூர், கண்ணக்குருக்கை, அம்மாபாளையம் மற்றும் இறையூர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    இந்த தகவலை செங்கம் மின்வாரிய செயற்பொறியாளர் கேசவராஜ் தெரிவித்துள்ளார்.
    சந்தவாசல் அருகே குடும்ப தகராறில் மின் ஊழியரை தாக்கிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 50). ஆரணி அடுத்த தச்சூர் மின் வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி வெள்ளி (46). கணவன்-மனைவி இருவகுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    கடந்த 7-ந் தேதி இரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தாமோதரன் தூங்கவிட்டார். அப்போது தாமோதரனை, அவரது மனைவி வெள்ளி, கம்பால் முகத்தில் தாக்கியுள்ளார். அவருடைய சத்தம் கேட்டு ஒடிவந்த மருமகள் மகாலட்சுமி, மகன் பிரபாகரன் ஆகிய இருவரும் ரத்த காயத்துடன் கிடந்த தாமோதரனை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மகாலட்சுமி சந்தவாசல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து, தாமோதரனின் மனைவி வெள்ளியை கைது செய்தார்.
    வந்தவாசி அருகே சொத்து தகராறில் தாயை பழிவாங்க பாலில் விஷம் கலந்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெரேசாபுரத்தை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள் உள்ளனர். மேரியின் பெயரில் உள்ள வீட்டுமனையை இரண்டாவது மகனான சதீஷ் மனைவி பெயரில் மேரி எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த மூத்த மகன் வினோத், தாய் மேரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தாய் மேரி மீது கோபத்தில் இருந்துள்ளார். அவரை பழிவாங்கவும் திட்டமிட்டுள்ளார்.

    மேரி தனக்கு சொந்தமான பசுவின் பாலை கறந்து தனியார் பால் கம்பெனிக்கு வழங்குவது வழக்கம். அதன்படி மேரி பாலை எடுத்துக்கொண்டு பால் கொள்முதல் செய்யும் ஜான்பால் என்பவரிடம் வழங்க சென்றுள்ளார்.

    பால் கேனை திறந்து பார்த்தபோது பாலின் நிறம் மாறியிருந்தது. மேலும் பாலில் இருந்து வித்தியாசமான வாடை வந்தது. இதனால் சந்தேகமடைந்த ஜான்பால் தெள்ளாறு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பாலை கைப்பற்றி பரிசோதித்தனர்.

    அந்தப் பாலில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மேரி மற்றும் வினோத் ஆகியோரிடம் போலிசார் விசாரித்தனர். விசாரணையில் தாய் மீது இருந்த கோபத்தில் பாலில் விஷம் கலந்ததாக வினோத் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தார்.
    புங்கனூர் அருகே வரட்சணை தகராறில் மனைவியை கத்தியால் வெட்டி படுகொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    சித்தூர் மாவட்டம் புங்கனூர் மண்டலம் மங்கலம் பஞ்சாயத்து கங்காதரநெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெட்டியப்பா. இவரின் மகன் சுரேஷ். இவர், 9 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஹேமபிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஓராண்டாக ஹேமபிந்துவிடம் சுரேஷ் உனது தாய் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணையாக நகை, பணம் மற்றும் நிலத்தை எழுதி வாங்கி வருமாறு கூறி துன்புறுத்தி வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாமியார் பார்வதியம்மா, மாமனார் ரெட்டியப்பா மற்றும் சுரேஷின் சகோதரர் நரேஷுடன் கணவரும் சேர்ந்து கொண்டு கூடுதல் வரதட்சணை கேட்டு எழுந்த தகராறின்போது ஹேமபிந்துவை தாக்கி உள்ளனர்.

    இதுகுறித்து ஹேமபிந்து புங்கனூர் போலீசில் புகார் செய்தார். மேலும் கிராம முக்கியஸ்தர்கள் கணவன்-மனைவியை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் தொடர்ந்து வரதட்சணை கேட்டு அவர்கள் ஹேமபிந்துவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் அவர் தனது கணவரை விட்டு பிரிந்து, புங்கனூர் கோனேட்டிப்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, 2 குழந்தைகளுடன் தங்கி வசித்து வந்தார்.

    சுரேஷ் தினமும் மதுபானத்தைக் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கத்தியால் ஹேமபிந்துவை சரமாரியாக வெட்டி, கழுத்தை அறுத்துப் படுகொலை செய்தார்.

    ஹேமபிந்துவின் அலறல் சத்தத்தைக் கேட்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். வீட்டில் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்த ஹேமபிந்துவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், புங்கனூர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பிரசாத்பாபு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஹேமபிந்துவின் பிணத்தை மீட்டு புங்கனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கணவர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 167 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் நடைபெற்றது.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகங்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் 120 பெண்கள் உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வந்தவாசி அருகே நீச்சல் பழக சென்ற பள்ளி மாணவி கிணற்றில் மூழ்கி பலியானாள்.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் தமிழேந்தி (வயது 10), மகன் கவிமணி..

    இதில் தமிழேந்தி வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். அவள், நீச்சல் பழக தனது தோழிகளுடன் அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்றாள். அங்கு அவள், தனது உடலில் சேலையைக் கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கி நீச்சல் பழகினாள்.

    அப்போது சேலை உடலில் சுற்றிக்கொண்டதால் ஈரத்தில் உடலோடு ஒட்டிக்கொண்டது. இதனால் அவளால் கை, கால்களை அசைக்க முடியவில்லை, எனக் கூறப்படுகிறது. இதனால் அவள் நீரில் மூழ்கினாள். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சகதோழிகள் கூச்சலிட்டனர்.

    அக்கம் பக்கத்தில் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் ஓடி வந்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடடனடியாக கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு வந்து, கிணற்றில் இறங்கி சிறுமி தமிழேந்தியை மீட்க முயன்று தண்ணீருக்குள் மூழ்கி தேடினர். ஆனால் தமிழேந்தியை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அங்கு வந்த பெரணமல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரில் மூழ்கி தேடினர். தமிழேந்தியை அவர்களால் பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இது குறித்து வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலுடன் இணைந்த ஸ்ரீயோக ராமச்சந்திரமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான லட்சுமி யானை இன்று காலை லாரி மூலம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலுடன் இணைந்த ஸ்ரீயோக ராமச்சந்திரமூர்த்தி கோவிலுக்கு சொந்தமான லட்சுமி யானை இன்று காலை லாரி மூலம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு நாளை (திங்கட்கிழமை) தொடங்கும் புத்துணர்வு முகாம் வருகிற மார்ச் 27-ந்தேதி வரை 48 நாட்கள் நடக்கிறது.

    யானையுடன் கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், கால்நடை மருத்துவர் பெரியசாமி, பாகன்கள் ரங்கன், சரவணன் உள்பட பலர் உடன் சென்றுள்ளனர்.

    முன்னதாக யானை லட்சுமிக்கு ரேணுகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழியனுப்பி வைக்கப்பட்டது.

    யானையின் தற்போதைய எடை 5,200 கிலோ ஆகும். யானை மற்றும் யானையுடன் செல்லும் அனைவருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    கொரோனா இல்லை என ஊர்ஜிதம் செய்து முகாமுக்கு அனுப்பப்பட்டது என கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    களம்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த களம்பூர் பஜார் வீதியில் வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் புதுடெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியாக சென்ற விவசாயிகள் மீது தாக்கியதை கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் சி.நாராயணசாமி தலைமை தாங்கினார். சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட பொருளாளர் உதயகுமார், மாவட்ட நிர்வாகி செல்வன், மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் உள்பட 25 பேரையும் களம்பூர் போலீசார் கைது செய்தனர்.
    செல்போன் டவரில் பேட்டரி திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூரை அடுத்த மொடையூரில் தனியார் செல்போன் டவர் உள்ளது. நேற்று முன்தினம் டவர் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியை திருடி சென்றுள்ளனர். நடமாடும் வாகன டவர் கண்காணிப்பாளர் வெங்கடேசன் அறை திறந்து உள்ளதை பார்த்து, அறையில் சென்று பார்த்த போது பேட்டரி திருட்டு போனது தெரிய வந்தது. இதையடுத்து அவர் போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து, செங்குனம் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலையில் மொபட்டில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்கால் ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கடந்த 3-ந் தேதி மொபட்டில் திருவண்ணாமலை -செங்கம் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று உள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து ரூ.3 லட்சம் எடுத்து அதனை ஒரு பையில் வைத்து தான் வந்த மொபட்டின் சீட் அடியில் வைத்து உள்ளார்.

    தொடர்ந்து அங்கிருந்து அவர் மத்தலாங்குளத்தெருவில் உள்ள ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று சில நிமிடங்கள் கழித்து வந்து பார்த்த போது மொபட்டில் வைக்கப்பட்டு இருந்த பணத்துடன் கூடிய பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான கட்சிகளையும் பார்வையிட்டனர்.

    அப்போது ரமேஷ் வந்த மொபட்டின் அருகில் நின்று கொண்டிருந்த 2 பேர் சீட் அடியில் உள்ள பெட்டியை போலி சாவி போட்டு திறந்து அதில் இருந்த பணப்பையை திருடி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது பதிவாகி இருந்தது. 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு பகுதியில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    செய்யாறு:

    செய்யாறு மின் கோட்டத்தில் சிறுங்கட்டூர் மற்றும் மாங்கால் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்யாறு, திருவத்திபுரம், பெருங்கட்டூர், பிரம்மதேசம், ராந்தம், வாழ்குடை, செங்காடு, கொருக்கை, ஆக்கூர், பல்லி, மாமண்டூர், மாங்கால், மாத்தூர், சோழவரம், செல்ல பெரும்புலிமேடு, சுருட்டல், வடகல்பாக்கம், பாவூர், தூசி உள்ளிட்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.
    ஆரணி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமி, பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள ஜவுளி கடையில் கூலி வேலை செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரது பாட்டி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக டாக்டர்கள் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி மற்றும் போலீசார் சிறுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சந்தவாசல் அருகே ஏ.கே. படவேடு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ராஜி (வயது 19) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததும் இதனால் சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்துள்ளது.

    அதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போளூர் சிறையில் அடைத்தனர்.
    ×