என் மலர்
திருவண்ணாமலை
- எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார்.
- ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.
திருவண்ணாமலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணிக்கு விஜய் வருவது என்பது நடக்காத காரியம். தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு ஆகியவற்றை சி.பி.ஜ விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக போலீஸ்துறை மீது உள்ள நம்பிக்கை போய்விடக் கூடாது என்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தி.மு.க ஆட்சி மட்டும் அல்ல தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக மனு செய்திருப்பார்கள். இந்த கருத்தை சொல்வதால் நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என நீங்கள் கருத வேண்டாம். கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பு இல்லை.
இதுபோன்ற கொடூர எண்ணம் செந்தில் பாலாஜிக்கு கிடையாது. எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியின் பயனாளிகள்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். டாஸ்மாக் மூலம் 22 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஊழல் செய்துள்ளது என குற்றம்சாட்டும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்துக்கு செல்லாமல் ஊர், ஊராக சென்று பேசுவது ஏன்? ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
- இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலையில் இளம்பெண்ணை 2 காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான காவலர்கள் இருவரும் சஸ்பெண்ட் ஆன நிலையில் தற்போது நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 114 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவு 119.00 அடியாகும். தற்போது அணையின் நீர் இருப்பு 113.55 அடியாக உள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று மதியம் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 114 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக சாத்தனூர் அணைக்கு வரும் உபரி நீரை அணையின் நீர் மின் நிலையத்தின் வழியாக வினாடிக்கு 1000 கன அடி வீதம் வெளியேற்றப்பட உள்ளது.
சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கலெக்டர் தர்ப்பகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
வருவாய் துறை, நீர் வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பணியாளர்கள் இணைந்து வெள்ள அபாயம் ஏற்படும் இடங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் தர்ப்பகராஜ் அறிவுறுத்தி உள்ளார்.
- பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.46 மணிக்கு (6-ந்தேதி நள்ளிரவுக்கு பின்) தொடங்கி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வர உள்ளதால் பவுணர்மியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
- விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழ்நாட்டில் தெருநாய் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு நாய்க்கு ஆதரவாக பேசியவர்களின் கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தெருநாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அனாமிகா என்ற 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
- அருண் என்பவருக்கும் மகா லெட்சுமி என்ற பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது.
- அருண் தற்போது ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார்.
திருவண்ணாமலை அடுத்த வட ஆண்டாப்பட்டு கிராமத்தில் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் மகா லட்சுமி (25) என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் அருண் ஜெர்மனியில் வேலை செய்து வரும் நிலையில், மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் மகா லட்சுமி உயிரை மாய்த்துக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மகா லெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மகா லட்சுமியின் தந்தை மதுரையில் தலைமைக் காவலராக பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு.
- மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.
சிவ வழிபாட்டில் நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாக கருதப்படுவது திருவண்ணாமலை. அப்படிப்பட்ட திருவண்ணாமலை தலத்துக்கு இணையான கோவில் கொங்கு மண்டலமான கோவையில் உள்ளது. அந்த கோவில் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் ஆகும்.
கொங்கு திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் இந்த கோவில் கோவை- பாலக்காடு சாலையில் குனியமுத்தூரை தாண்டியதும் மதுக்கரை மரப்பாலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுமார் 1600 அடி உயரமுள்ள மலை உச்சியில் கோவில் அமைந்திருப்பது சிறப்பானது. இந்த மலை தர்மலிங்க மலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்வது சிறப்பு. திருவண்ணாமலைக்கு அடுத்து அதிக பக்தர்கள் கிரிவலம் செல்லும் ஆலயமாக தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இதனால் கொங்கு திருவண்ணாமலை என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
அதேசமயம் வனவிலங்குகள் நடமாட்டம் கருதி பவுர்ணமி தினத்தில் மட்டும் கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். திருவண்ணாமலையில் ஏற்றுவது போல் இங்கும் கார்த்திகை திருவிழாவின் போது மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
தர்மலிங்கேஸ்வரர் பெயர்க்காரணம்
பஞ்சபாண்டவர்கள் காலக்கட்டத்தில் பாண்டவர்களில் மூத்தவரான தருமன் இங்கு வந்து ஈஸ்வரனை தவமிருந்து வழிபட்ட காரணத்தால் சுவாமி, தர்மலிங்கேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அந்த சமயத்தில் பீமன் கீழே காவல் காத்ததாகவும், மற்ற தம்பிகள் பாதுகாப்பாக கிரிவலம் வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இதன்காரணமாக மலையடிவாரத்தில் பீமன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

சுயம்பு மூர்த்தி
தர்மலிங்கேஸ்வரர் மலையில் தானாகவே தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார். பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கு சொந்தமான பசுமாடு காணாமல் போய் இருக்கிறது. அந்த பசுவை தேடி விவசாயி மலை உச்சிக்கு சென்று இருக்கிறார். அங்கு சுயம்புலிங்கத்திற்கு மாடு பால்சொரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் ஊர் முழுக்க பரவி அதன்பிறகே பக்தர்கள் வழிபடத் தொடங்கி அங்கு கோவில் எழுப்பப்பட்டதாக சொல்கிறார்கள்.
ஏன் கொங்கு திருவண்ணாமலை
இந்த ஆலயத்தை கொங்கு திருவண்ணாமலை என்று அழைப்பதற்கும் சில காரணங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தான் தர்மலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் மலை. ஆனால் மற்ற மலைகளுடன் சேர்ந்து இருக்காமல் தனித்துவமாக இந்த மலை அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ளது போல் இங்கும் கிரிவலப்பாதையில் 8 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
ஆலய அமைப்பு:
கோவில் சன்னதிக்கு முன்பு முதலில் ஸ்தூபியும், கொடிமரமும் உள்ளன. அதையடுத்து மகாமண்டபம், நந்தி, பலிபீடத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் உள்ளது. கருவறையில் சித்தலிங்கேஸ்வரர் ஆவுடையார் மீது சிவலிங்கத் திருமேனியில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மூலவர் தர்மலிங்கேஸ்வரர் இரண்டே கால் அடி உயரத்தில் உள்ள கற்சிலை ஆகும். கருவறை நுழைவுவாசலில் இடதுபுறம் விநாயகர் மற்றும் வலது புறம் முருகப் பெருமான் திருமேனிகள் உள்ளன.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காலைக் கதிரவன் தன் பொற்கதிர்களால் கருவறை இறைவனை தினம் தினம் குளிப்பாட்டும் காட்சி நம் கண்களை வியக்க வைக்கும் காட்சியாகும். கருவறையின் விமானம் தொலைவிலிருந்து பார்க்கும் பக்தர்களின் கண்களுக்கு நல் விருந்தாக அமைகிறது. தைப்பூசம், நவராத்திரி, சிவராத்திரி, ஆண்டு பிறப்பு நாட்களில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் இங்கு வந்து இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் பிரார்த்தனை பலித்ததும் பிறந்த குழந்தையை அழைத்து வந்து இறைவன் சன்னதியில் இறைவனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவது இங்கு இயல்பாக காணும் காட்சிகளாக உள்ளது. கோவிலில் தமிழ் முறைப்படி மட்டுமே அர்ச்சனைகள், வழிபாடுகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
- தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை ஸ்டாலின் அரசு கைது செய்கிறது.
- திமுகவின் பாவ மூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம்
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சி பேரணியை மேற்கொண்டுள்ளார். தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
அவ்வகையில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது மக்களிடம் உரையாற்றிய அவர், " தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை ஸ்டாலின் அரசு கைது செய்கிறது. அதற்கு திருமாவளவன் வக்காலத்து வாங்குகிறார். திமுகவின் பாவ மூட்டைகளை திருமாவளவன் சுமக்க வேண்டாம்.
கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். அப்போது நான் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக திருமாவளவன் அறிவித்தார். பின்னர் திமுக கொடுத்த நெருக்கடியால் மது ஒழிப்பு மாநாட்டை போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு என திருமாவளவன் பெயர் மாற்றினார். பாவம் திருமாவளவன் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார்" என்று தெரிவித்தார்.
- செங்கத்தில் சாலையின் குறுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்தது.
- எடப்பாடி பழனிசாமி வாகனம் சென்ற சில வினாடிகளில் சரிந்ததால் தப்பினார்.
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சி பேரணியை மேற்கொண்டுள்ளார். தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி சாலையின் இரண்டு பக்கத்திலும் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. சாலையில் வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்து.
செங்கத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று சாலையின் குறுக்கே பேனர் வைக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பேருந்து இந்த வரவேற்று பேனரை கடந்து சுமார் 50 அடி தூரம் சென்றிருக்காது. பலத்த காற்றால் திடீரென அந்த பேனர் சரிந்து சாலையில் விழுந்தது. பேருந்து கடந்த நிலையில் பேனர் விழுந்ததால், நூலிழையில் தப்பினார். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பேனர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.
- 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
- பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்றார்.
செய்யாறு, வந்தவாசி, ஆரணி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திரளாக கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் நடுவில் நின்று பேசினார். இதனை தொடர்ந்து திருவண்ணாமலை சென்றார். அங்குள்ள ஓட்டலில் இரவு தங்கினார். இன்று காலை தண்டராம்பட்டு பகுதியில் இருந்து மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
மேலும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவ உபகரணங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதனை தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் வர்த்தக அமைப்புகளை சேர்ந்த வியாபாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
இன்று மாலை 4 மணிக்கு செங்கத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுகிறார். அதனைத் தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பேசுகிறார்.
எடப்பாடி பழனிசாமி வருகையொட்டி திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் கட்சி கொடிகளுடன் வரவேற்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசக்கூடிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது அங்கிருந்த ரெயில்வே கேட் மூடப்படாததால் சிக்னல் விழவில்லை என கூறப்படுகிறது.
- சில நிமிடங்கள் தாமதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
திருவண்ணாமலை:
விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாக நாகர்கோவில்-காச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் இருந்து காச்சிகுடாவுக்கு சென்றுகொண்டிருந்தது.
இந்த நிலையில், திருக்கோவிலூர்-திருவண்ணாமலை இடையே தண்டரை கிராமத்திற்கு அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது அங்கிருந்த ரெயில்வே கேட் மூடப்படாததால் சிக்னல் விழவில்லை என கூறப்படுகிறது.
அதனால், நடுவழியிலேயே எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்திவிட்டு, என்ஜின் டிரைவர் கீழே இறங்கி வந்தார். பின்னர், ரெயில்வே கேட் மூடாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். கேட் கீப்பரின் அலட்சியத்தால் கேட் மூடாதது தெரியவந்தது.
பின்னர், அவர் ரெயில்வே கேட்டை மூடிவிட்டு சென்றார். இதனால் சில நிமிடங்கள் தாமதமாக எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
இது தொடர்பாக, எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி தெற்கு ரெயில்வே கோட்ட உயர் அலுவலர்களுக்கு புகார் அளித்தார். அதன் பேரில், துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், ரெயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் ராமு என்பவரை தெற்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்டு செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி கேட்டை மூடாமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஏற்கனவே ரெயில்வே கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.






