என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலையில் நாளை தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு- முதலமைச்சர் பங்கேற்பு
- பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.
- 1.30 லட்சம் இளைஞர் அணியின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலையொட்டி பல்வேறு அணிகளின் செயல்பாடுகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. இளைஞர் அணியில் தமிழகம் முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறப்பினர்கள் உள்ளனர்.
இதில் உள்ள 5 லட்சம் நிர்வாகிகளை ஒன்றிணைத்து மண்டலம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு நடத்த தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு திருவண்ணாமலையில் நாளை நடைபெறுகிறது.
இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞர் அணியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார்.
இதற்காக திருவண்ணாமலை அருகே உள்ள வாணியந்தாங்கள் பகுதியில் பிரமாண்ட மேடை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் திடல் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கலைஞர் திடலில் நாளை மாலை 4 மணிக்கு தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு தொடங்குகிறது.
நிகழ்ச்சிக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்று பேசுகிறார்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர். இதில் 1.30 லட்சம் இளைஞர் அணியின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் அணி நிர்வாகிகள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வருகையையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் தி.மு.க. கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. பிரமாண்ட வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலையில் நாளை நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டுக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்க அனைவரும் அணி திரண்டு வாருங்கள் என அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.






