என் மலர்
திருவள்ளூர்
- பலத்த காயம் அடைந்த அஸ்வின் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
- அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வின்(18). இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பேரம்பாக்கம் பகுதியில் இளம் பெண்களை சிலர் கேலி-கிண்டல் செய்தனர். இதனை அஸ்வின் தட்டி கேட்டார்.
இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் நேற்று மாலை கல்லூரி முடிந்து கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே நடந்து வந்த அஸ்வினை 4 பேர் கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அஸ்வின் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
- குமார் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
- திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருத்தணி, காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது27).பூ கட்டும் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த சரவணன், திருமால், பரமு ஆகியோருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் திருவள்ளூர் நோக்கி சென்றார். திருவாலங்காடு அருேக நாகாத்தாங்கல் என்ற இடத்தில் சென்றபோது திருவாலங்காடு நோக்கி வந்த அரசு பஸ் திடீரென கார் மீது மோதியது. இதில் குமார் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் பலத்த காயம் அடைந்த குமார் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- கால்வாய் மூலம் அத்திப்பட்டு புதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
- தரமான தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் தாழ்வான பகுதி ஆகும். இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி வழியாக வல்லூர், கொண்டக்கரை, குருவி மேடு, கவுண்டர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வெளிவரும் மழை நீர், கால்வாய் மூலம் அத்திப்பட்டு புதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
மழைக்காலங்களில் இந்த கால்வாயில் அதிக அளவு தண்ணீர் பாய்ந்து செல்லும். அத்திப்பட்டு புதுநகர் தாழ்வான பகுதி என்பதால் மழைநீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அங்குள்ள தாங்கல் நீர்நிலை இடத்தில் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதி மூலம் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ரூ.50 லட்சம் மதிப்பில் மழைநீர் கால்வாயில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது.
இந்த தடுப்பு சுவர் தரமாக கட்டப்படாததால் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு சுமார் 50 அடி நீளத்திற்கு உடைந்து விழுந்து உள்ளது. இதனால் பலத்த மழை பெய்யும் போது இந்த கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றுக்கு பாய்ந்து செல்லும் தண்ணீர் தாழ்வான பகுதியான உடைந்த கரைகள் வழியாக அத்திப்பட்டு புதுநகர் கிராமத்திற்குள் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முறையாக அளவீடு செய்து நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி தரமான தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- ஊராட்சி மன்ற தலைவர் உமையாள், வட்டாரத் தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த வெள்ளி வாயல் சாவடி ஊராட்சி துருக்கன் காலனி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கொசஸ்தலை ஆறு திரும்பும் இடத்தில் ஆற்றின் கரைப்பகுதி கரைந்து மிகவும் பழுதடைந்து முட்புதற்கள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. கரைப்பகுதி சேதம் அடைந்தால் வெள்ளிவாயல்சாவடி, கொண்டக்கரை, பழைய நாப்பாளையம், உள்ளிட்ட கிராமங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் துருக்கன் காலனியில் உள்ள சேதம் அடைந்த கொசஸ்தலை ஆற்றின் கரையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் இதனை சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது ஒன்றிய சேர்மன் ரவி, ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நந்தகுமார், மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், ஊராட்சி மன்ற தலைவர் உமையாள், வட்டாரத் தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
- செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- எண்ணூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:
செவ்வாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சாவுடன் வந்த சென்னை, எண்ணூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டனை (30) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் 587 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8667மில்லியன் கனஅடி ஆக உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 73 சதவீதம் ஆகும்.
இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு கனமழை கொட்டியது.
இதனால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு 686 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் 2632மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஏரிக்கு நீர் வரத்து 362 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இதில் 3135 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 188 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. தற்போது ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டி உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். பலத்த மழை பெய்தால் ஏரியில் இருந்து உபரிநீர் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிகிறது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 1872 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 160 கனஅடி தண்ணீர் வருகிறது. 545 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கனஅடியில் 587 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 105 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 12 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 441 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 30 கனஅடி தண்ணீர் வருகிறது.
- நாய் கடித்ததில் காலில் பலத்த காயமடைந்த மேரி குளோரியை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருநின்றவூர்:
பட்டாபிராம், அம்பேத்கர் நகர், சுசில் பிரான்சிஸ் தெருவில் வசித்து வருபவர் மேரி குளோரி(வயது82). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் நேற்று காலை, பாபு நகர் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே வந்த போது தெருவில் சுற்றிய நாய் ஒன்று திடீரென மூதாட்டி மேரி குளோரி மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் நிலை தடுமாறிய மேரி குளோரி கீழே விழுந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டபடி திரண்டு வந்தனர். உடனே மேரி குளோரியை கடித்து குதறிய நாய் ஓடிவிட்டது. நாய் கடித்ததில் காலில் பலத்த காயமடைந்த மேரி குளோரியை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு நாய்கள் தெருக்களில் சுற்றி வருகின்றன. இதனால் விபத்துக்களும், நாய்கள் பொதுமக்களை துரத்தி கடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனை தடுக்க தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
திருத்தணி, காந்தி சாலையில் பட்டா கத்தியுடன் 2 வாலிபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், திருத்தணி அக்கைய்யா நாயுடு தெருவைச் சேர்ந்த முகமது யூசப் அலி, முருகப்பா நகரைச் சேர்ந்த நிர்மல் என்பது தெரிந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கெமிக்கல் பேரல்களும் வெடித்து சுமார் 20 அடி உயரத்திற்கு தீ பிழம்பு ஏற்பட்டது.
- தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 2-வது பிரதான சாலையில் தனியார் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் காயின்கள், பத்திரிகை அச்சடிக்கும் பிரிண்டிங் மை, மற்றும் பேப்பர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது.சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமையான நேற்று தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நள்ளிரவு 11 மணி அளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனை கண்ட அருகே உள்ள தொழிற்சாலையில் இருந்தவர்கள் உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர், அண்ணாநகர், ஆவடி, வில்லிவாக்கம் உள்ளிட்ட 12 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். தொழிற்சாலை மற்றும் சேமிப்பு கிடங்கு முழுவதும் பற்றி எரிந்ததால் தீயணைப்பு வீரர்களால் உள்ளே செல்ல முடிய வில்லை. அங்கிருந்த பேப்பர், மை, பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்தும் தீப்பற்றி பயங்கரமாக எரியத்தொடங்கியது. மேலும் கெமிக்கல் பேரல்களும் வெடித்து சுமார் 20 அடி உயரத்திற்கு தீ பிழம்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கூடுதலாக 40-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளும் அங்கு வரவழைக்கப்பட்டன. நள்ளிரவில் பற்றிய தீயை சுமார் 6 மணி நேரம் போராடி அதிகாலை 5 மணிக்கு முழுவதும் கட்டுப்படுத்தினர். தீவிபத்து காரணமாக அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி உள்ள பகுதியில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் அடுத்தடுத்து உள்ள மற்ற தொழிற்சாலைகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மேலும் நேற்று தொழிற்சாலைக்கு விடுமுறை நாள் என்பதால் தொழிலாளர்கள் யாரும் இல்லை. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. கடந்த 2007-ம் ஆண்டும் இதே தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜெயக்குமார் எம்பி., மாநில தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் இவரை நியமித்துள்ளனர்.
- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமான பேர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பொன்னேரி:
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளராக மீஞ்சூர் கே.ஜி.என். முகமது அல்தாஃப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார் எம்பி., மாநில தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் இவரை நியமித்துள்ளனர்.
அவருக்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமான பேர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
- பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.
- கிராமமக்கள் சிலர் பணி நடைபெறும் பம்ப்செட் நோக்கி திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றும் முடியவில்லை.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ளது பெரம்பூர் கிராமம். இங்கு சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இலவச வீட்டு நிலப்பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு பெரம்பூர் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் லட்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்த 46 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
இதற்கு பெரம்பூர் கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த இடத்தை தங்களது கிராமத்திற்கு வேறு திட்டத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டு இருந்ததாக கூறி அவர்களும் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே நேற்று இரவு 7 மணியளவில் பெரம்பூர் கிராமத்தில் பட்டா வழங்கப்பட்ட இடத்திற்கு குடிநீர் வழங்க அங்குள்ள பம்ப் செட் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டது. இதற்கு பெரம்பூர் கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெண்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்த ஊழியர்களிடமும் கடும் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரம்பூர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள் லட்சிவாக்கம் கிராமத்தினருக்கு பட்டா வழங்கப்பட்டதற்கும், குடிநீர் இணைப்பு வழங்க பள்ளம் தோண்டப்படுவதற்கும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கலைந்து செல்ல மறுத்தனர். மேலும் அவர்கள் பெரம்பூர்-பாட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதேபோல் கிராமமக்கள் சிலர் பணி நடைபெறும் பம்ப்செட் நோக்கி திரண்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றும் முடியவில்லை.
இதைத்தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கிராமமக்களை கலைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா உட்பட 3 போலீசார் காயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிராமமக்களின் போராட்டம் நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்கா கூடுதல் போலீசார் அங்கு வரவைழக்கப்பட்டனர். பின்னர் கிராமமக்களை அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர்.
பெரம்பூர் கிராம பகுதியில் இன்று காலையும் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது. 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பட்டா வழங்கப்பட்ட இடம் தொடர்பாக பெரம்பூர் கிராமமக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
- கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டி பேரூர் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நகர செயலாளர் இளஞ்செல்வன், நகர தலைவர் அஸ்வின்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநில மாணவர் அணி சங்க செயலாளர் இரா.கீர்த்தி ரதன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் வ.மு.பிரகாஷ், மாவட்டத் தலைவர் எஸ்.வி.ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு? எதிர்கொள்வது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளும், கட்சியை பலப்படுத்த கிளைகள் தோறும் கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும்,கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு வசதி, பஸ் நிலையத்தில் மேற்கூரை, அனைத்து பஸ் புறவழிச்சாலையில் செல்லாமல் பஸ் நிலையம் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் ஆர்.விக்னேஷ் வரவேற்றார். முடிவில் இ.கண்ணன் நன்றி கூறினார்.






