என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்துகளை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் பணி புரியும் வட மாநில வாலிபர்கள் போதைக்காக இருமல் மருந்தை பயன்படுத்துவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பத்தூர் மதுவிலக்கு போலீசார் அத்திப்பட்டு ஐ.சி.எப். காலனியில் உள்ள ஒரு மருந்து கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மருந்து கடை விற்பனையாளரான அசோகன் என்பவர் வட மாநில வாலிபர்களை குறிவைத்து மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்துகளை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து மருந்து கடைக்காரர் அசோகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீபாவளி சீட்டு நடத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் தலைமறைவாக இருந்து வந்தது தெரிந்தது.
    • போலீசில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவித்து உள்ளதும் தெரியவந்தது.

    போரூர்:

    சைதாப்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது45). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் நேற்று காலை வானகரம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி பலியானார். விசாரணையில் அவர் தீபாவளி சீட்டு நடத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் தலைமறைவாக இருந்து வந்தது தெரிந்தது.

    மேலும் கணேஷ் பலகோடி ரூபாய் வரை பணம் வசூலித்து இருப்பதும் இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவித்து உள்ளதும் தெரியவந்தது.

    • திருமழிசையில் 311 ஏக்கரில் ரூ.2160 கோடி மதிப்பில் துணைநகரம் அமைக்கப்படும் என்று கடந்த 2011-ம் ஆண்டு அரசு அறிவித்தது.
    • கிராம மக்களின் எதிர்ப்பு மற்றும் வழக்குகள் காரணமாக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

    திருவள்ளூர்:

    சென்னை நகருக்கு இணையாக தற்போது புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. நகரத்தில் இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலானோார் இப்போது புறநகர் பகுதிகளில் குடியேற தொடங்கிவிட்டனர்.

    இதனால் சென்னையை சுற்றி உள்ள காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் மக்கள்தொகை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப அப்பகுதிகளில் போக்குவரத்து, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதில் சென்னை புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் புதிதாக குடியேறும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய துணை நகரங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று சி.எம்.டி.ஏ. பரிந்துரைத்தது.

    அதன்படி திருமழிசையில் 311 ஏக்கரில் ரூ.2160 கோடி மதிப்பில் துணைநகரம் அமைக்கப்படும் என்று கடந்த 2011-ம் ஆண்டு அரசு அறிவித்தது. இதற்காக திருமழிசை அருகே உள்ள குத்தம்பாக்கம், செம்பரம்பாக்கம், வெள்ளவேடு பர்வதராஜபுரம், நரசிங்க புரம் கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

    கிராம மக்களின் எதிர்ப்பு மற்றும் வழக்குகள் காரணமாக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே துணை நகர திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தற்போது ஒரு சாலை அமைக்கும் பணி மட்டுமே இதுவரை நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சாலையை ஒட்டி இருந்த 24 ஏக்கர் நிலம் குத்தம்பாக்கம் பஸ் நிலைய பணிக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் மீதி உள்ள நிலத்தில் துணை நகரம் அமைப்பதற்கு வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டது. இதற்காக ரூ.1280 கோடி மதிப்பில் புதிய வரைவு திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த திட்டமும் இப்போது செயல்படுத்த முடியாத நிலையில் முடங்கி கிடப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த 2011-ம் ஆண்டு 311 ஏக்கரில் அறிவிக்கப்பட்ட திருமழிசை துணை நகர திட்டம் பல்வேறு குளறுபடிகள் காரணமாக 16.92 ஏக்கரில் மட்டுமே செயல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திருமழிசை துணைநகர திட்டம் செயல்பாட்டிற்கு வருவதில் சிக்கல் நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி 16.92 ஏக்கரில் மட்டுமே இதனை செயல்படுத்த முடியும். இங்குள்ள விவசாய நிலங்களை வகைப்பாடு மாற்றம் செய்யக்கோரி சி.எம்.டி.ஏ.வுக்கு விண்ணப்பித்து இருக்கிறோம். வாரிய நிதியில் மனை திட்டம் மட்டுமே இங்கு செயல்படுத்த முடியும் என்றார்.

    • நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.
    • கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி உலகநாத நாராயணசாமி கலை கல்லூரியின் கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரசு ஆதிதிராவிட கல்லூரி மாணவர் மாணவியர் விடுதிகளில் பயிலும் மாணவர்களுக்கான அண்ணல் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டு திட்டம் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் வரவேற்றார்.

    பொன்னேரி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் சித்ரா, பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலைக்கல்லூரி முதல்வர் தில்லை நாயகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு விடுதிகளில் பயிலும் மாணவிகள் கலந்து கொண்டு தாங்கள் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் நிலைகள் குறைத்து எடுத்துரைத்தனர் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர். செரின் ஆசா அண்ணல் அம்பேத்கரின் பிறப்பு மற்றும் வளர்ப்பு குறித்தும், சாதியல் தீண்டாமை கொடுமைக்கு ஆளாகி கல்வியால் சட்டம் பயின்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எவ்வாறு பல துன்பங்களுக்கு மத்தியில் உருவாக்கினார் என்பது குறித்தும் தியாகங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பூபதிஜான், பட்டதாரி காப்பாளினி மரிய ஜெயந்தி, கல்லூரி தமிழ் பேராசிரியர் தேவராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி லேஜா உள்ளிட்டோர் நோக்க உரையாற்றினர். பட்டதாரி காப்பாளர் நன்றி உரையாற்றினார். கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

    • சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.
    • கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரையில் தனியார் கியாஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து பைப் மூலம் கியாஸ் கொண்டுவரப்பட்டு சேமிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு டேங்கரில் கியாஸ் நிரப்பிய லாரி ஒன்று மீஞ்சூர்-மணலி நெடுஞ்சாலையில் வெள்ளிவாயில் சாவடி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரியில் உள்ள டேங்கரில்இருந்து திடீரென கியாஸ் கசிந்து வெளியேறத் தொடங்கியது.

    சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு இறங்கினார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

    மேலும் வாகனங்கள் திரும்பி செல்ல முடியாததால் அதில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் சோபிதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். மேலும் லாரியில் இருந்து வெளியேறிய கியாசை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.மேலும் அத்திப்பட்டு, மணலி புதுநகர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு கேஸ் நிறுவனத்தில் இருந்து வந்த ஊழியர்கள் டேங்கரில் இருந்து கியாஸ்கசிவு ஏற்பட்ட பகுதியை சரிசெய்தனர். இதன்பின்னர் கியாஸ் ஏற்றிய லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதனால் மீஞ்சூர்- திருவொற்றியூர் சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • கட்டுப்பாட்டை இழந்த அங்குள்ள சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.
    • மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள தாமரைக்குப்பம், புதூர் முதலாவது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் ரிக்கேஷ் (வயது22). இவர், கன்னிகைப்பேரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இந்தநிலையில் ரிக்கேஷ் வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளில் பாலவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பரான உடன் படிக்கும் சாந்தகுமார்(22) என்பவரை ஏற்றிக்கொண்டு கல்லூரிக்கு சென்றார். வழியில் மற்றொரு நண்பரை ஏற்றிக்கொண்டு கல்லூரியின் உள்ளே சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அங்குள்ள சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.

    இதில் ரிக்கேஷ் உள்பட உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவர் ரிக்கேஷ் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • இடிபாடுகளில் சிக்கிய லட்சுமியால் வெளியே வரமுடியவில்லை. அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. பின்னர் நேற்று இரவு தொடங்கிய பலத்த மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் புழலில் மழைக்கு வீடு இடிந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புழல் அடுத்த லட்சமிபுரம், சப்தகிரி நகரை சேர்ந்தவர் முருகன். இறைச்சி கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது47). நேற்று காலை வழக்கம் போல் முருகன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி லட்சுமி மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு புழல் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதில் சேதம் அடைந்து இருந்த லட்சுமி வசித்த வீட்டின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய லட்சுமியால் வெளியே வரமுடியவில்லை. அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.

    தனி வீடு என்பதால் லட்சுமி கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்தது பக்கத்துவீட்டில் வசிப்பவர்களுக் கு தெரியவில்லை.

    இதற்கிடையே இரவு 8.30 மணியளவில் முருகன் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீடு இடிந்து விழுந்ததில் மனைவி லட்சுமி சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது.
    • தற்போது பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

    பூந்தமல்லி:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரிகளில் 8,227 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளவில் 70 சதவீதம் ஆகும்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 22 அடிக்கு (மொத்த உயரம் 24 அடி) தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மி.கனஅடியில் 2665 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. வழக்கமாக பலத்த மழை பெய்யும்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை தாண்டினால் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும். கடந்த மாதம் கனமழை கொட்டியபோது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் உபரிநீர் நிறுத்தப்பட்டது.

    தற்போது பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஏரிக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 108 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி ஆகும். தற்போது ஏரியில் 2,665 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 80 சதவீதம் ஆகும். ஏரிக்கு 235 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1854 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. எரிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது. 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி கனஅடியில் 439 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.

    இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வீரம்மாளை மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள வாணியன் சத்திரம், அண்ணா நகர் பகுதியில் வசித்து வருவபர் சீனிவாசன். இவரது மனைவி வீரம்மாள் (வயது47). இவர்களது வீட்டில் உள்ள பிரிட்ஜில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை கவனிக்காமல் வீரம்மாள் பிரிட்ஜை திறந்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய வீரம்மாளை மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது.
    • பழவேற்காடு தீவு பகுதி மக்களுக்கு இதுவே சோதனையாக மாறி விடுகிறது.

    பழவேற்காடு ஏரி சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் தமிழக ஆந்திர பிரதேச மாநில எல்லையில் அமைந்திருக்கிறது.

    வடக்கே ஸ்வரணமுகி ஆறும், வட மேற்கே காலாங்கி ஆறும், தெற்கே ஆரணி ஆறும் கூடுதலாக இன்னும் சில ஓடைகளும் இந்த ஏரியினை உருவாக்குகின்றன. ஆற்று நீருக்கும் கடலுக்கும் இடைப்பட்ட பகுதியாக இந்த ஏரி விளங்குகிறது.

    பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் ஏரியினைச் சார்ந்த பறவைகளுக்கான ஆதரவு பணிகளைப் பார்த்து வருகிறது. வங்காள விரிகுடாவில் இருந்து இந்த ஏரியினை ஸ்ரீஹரிக்கோட்டா தீவு பிரிக்கிறது.

    இந்தத் தீவில் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்திருக்கிறது. ஏரியின் தெற்கே பழவேற்காடு மீனவ கிராமம் அமைந்திருக்கிறது.

    பருவகால மழை மற்றும் கடல் மட்ட ஏற்றதாழ்வுகள் இந்த ஏரியின் பரப்பளவை நிர்ணயிக்கும் வகையில் உள்ளன. கடல் மட்டம் உயர்ந்து நீர் அதிகமாக இருக்கும் போது இதன் பரப்பளவு 460 கி.மீ ஆகவும் கடல் மட்டம் தாழ்ந்து நீர் குறைவாக இருக்கும் போது இதன் பரப்பளவு 250 கி.மீ ஆகவும் வேறுபடும்.

    வெள்ளம் ஏற்படும் காலங்களில் இது நீரினை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது.

    இந்த ஏரியும் ஆறுகளின் வடிநிலங்களும் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அமைந்திருக்கின்றன. 1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் சட்டத்தின்படி இந்த ஏரி ஒரு மாநிலத்திற்குச் சொந்தமானது என உரிமை கொள்ள இயலாது.

    கடலில் கலக்கும் பகுதியும் பெரும்பான்மையான ஏரிப்பகுதியும் ஆந்திராவில் அமைந்திருக்கின்றன. இந்த ஏரிநீரில் கடல்நீரின் தன்மை ஆண்டின் சில பருவங்களில் மிக குறைவாக இருக்கும், சில பருவங்களில் அதிகரித்தும் இருக்கும்.

    இந்த மாறி கொண்டிருக்கும் தன்மையே இங்கு இருக்கும் நீர்வாழ் உயிரினங்களின் தன்மையையும் உருவாக்குகிறது. ஆனால் பழவேற்காடு தீவு பகுதி மக்களுக்கு இதுவே சோதனையாக மாறி விடுகிறது.

    மழை இல்லாத காலங்களில் பழவேற்காடு தீவு மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வடகிழக்கு பருவ மழையின் போது அதிகளவு மழை பெய்யும் என்பதால் அவர்கள் தீவில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

    பழவேற்காடு தீவில் மொத்தம் 5 கிராமங்கள் உள்ளன. சாத்தான்குப்பம், எடமணி, எடமணி காலனி, ரகமத் நகர், பசியாவரம் ஆகிய 5 கிராமங்கள் கொண்ட அந்த தீவில் சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். 2 தொடக்கப் பள்ளிக்கூடங்கள் அங்கு உள்ளன.

    வழிபாட்டு தலங்கள், சாலைகள் எல்லாம் இருந்த போதிலும் அத்தியாவசிய தேவையான மருத்துவமனை அங்கு கிடையாது. இதனால் பழவேற்காடு தீவில் உள்ள 5 கிராம மக்களும் அத்தியாவசிய மருத்துவ சேவை மற்றும் பொருட்களுக்காக வெளியில்தான் வரவேண்டும்.

    பொதுவாக நவம்பர் மாதம் தீவை சுற்றி தண்ணீர் அதிகரிக்கும். அப்போது ஏரியில் இருந்து வெளியில் வருவது மிகவும் சிரமம். இதை கருத்தில் கொண்டு பழவேற்காடு ஏரியில் பிரமாண்டமான பாலம் கட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. சென்னை சாலையை இணைக்கும் வகையில் அந்த பாலத்தை கட்ட வரையறுக்கப்பட்டது.

    ஆனால் சுற்றுச்சூழல் காரணமாக பாலம் கட்டுவது நீண்ட நாட்களாக தடைபட்டு வந்தது. கடலோர ஒழுங்குப்படுத்தும் கழகத்தின் உத்தரவு கடந்த 2018-ம் ஆண்டு கிடைத்த பிறகு பாலம் கட்டுவதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனால் 2022-ம் ஆண்டுதான் பாலம் கட்டும் பணிகள் தொடங்கின.

    சுனாமி மறுவாழ்வு திட்டத்தின்கீழ் அங்கு பாலம் கட்ட தமிழக அரசு ரூ.15 கோடி வழங்கி உள்ளது. ஆனால் நாளடைவில் திட்ட செலவு அதிகரித்தது. 432 மீட்டர் நீளத்துக்கும் சுமார் 9 மீட்டர் அகலம் கொண்ட அந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணிகள் மிகவும் மெல்ல நடக்கின்றன. இதன் காரணமாக பழவேற்காடு ஏரி தீவு மக்கள் கடும் அவதிகளை சந்தித்து வருகிறார்கள்.

    வருகிற நாட்களில் அதிக மழை பெய்து தண்ணீர் பெருகி விட்டால் தீவு பகுதியில் உள்ள 5 கிராம மக்களும் வெளியில் வர முடியாமல் தவிக்க நேரிடும். ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு பலத்த மழை பெய்த போது 5 கிராம மக்களும் சுமார் 2 வாரங்கள் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிக்க நேரிட்டது.

    பாலம் கட்டும் பணி காரணமாக ஏற்கனவே மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்குள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 மாதங்களாக அந்த பாலம் கட்டும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.

    எனவே பழவேற்காடு பகுதி தீவு மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் அந்த பாலத்தை கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முத்துசரவணன், சண்டே சதீஷ் ஆகிய இரு ரவுடிகள் தலைமறைவாகி இருந்தனர்.
    • பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், துப்பாக்கி சூடு நடத்திய தனிப்படை போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியின் முன்னாள் தலைவர் பார்த்திபன்(53) கடந்த ஆகஸ்டு 17- ந்தேதி பாடியநல்லூர் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலையில், முத்துசரவணன், சண்டே சதீஷ் ஆகிய இரு ரவுடிகள் தலைமறைவாகி இருந்தனர். இதையடுத்து, அவர்கள் இருக்கும் இடம் அறிந்து கடந்த மாதம் 12-ந் தேதி அதிகாலை போலீசார் சுற்றி வளைத்தபோது அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

    அதனால் காவல் அதிகாரிகள், தற்காப்புக்காக சுட்டதில், முத்துசரவணன் சண்டே சதீஷ் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், பொன்னேரி உதவி கலெக்டர் ஐஸ்வர்யா, நேற்று முன்தினம், மாரம் பேட்டில் என்கவுண்டர் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பிறகு, அவர், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், துப்பாக்கி சூடு நடத்திய தனிப்படை போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

    இதில், உதவி கலெக்டர் ஐஸ்வர்யா, பூந்தமல்லி காவல் உதவி ஆணையர் ஜவஹர், காவல் ஆய்வாளர்கள் ரமேஷ், சாய் கணேஷ், உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜேஷ், பிரபு ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தி, அவர்களை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

    • கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருமழிசையில் கடந்த 26-ந் தேதி மாலை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 11 பவுன் நகையை பறித்து தப்பினர்.

    இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது ஈக்காடு பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் மற்றும் அவரது நண்பரான சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×