என் மலர்
திருப்பூர்
- பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்களில் புழு வளர்ந்து கூடு கட்டியதும் விற்பனைக்கு தயாராகிறது.
- புழு வளர்ப்பு மனைகளில் 80 சதவீதம் வரை மகசூல் பாதித்து வருகிறது.
உடுமலை:
மாநில அளவில் வெண் பட்டுக்கூடு உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பிரதானமாக உள்ளது. உடுமலை, பல்லடம், பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் 2,778 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு 1,221 பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக மாதம் தோறும், பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.
பட்டுப்புழு முட்டை உற்பத்தி மையங்களில் இருந்து முட்டை தொகுதிகளை பெற்று இளம் புழு வளர்ப்பு மனைகளில் 5 நாட்கள் வரை பாதுகாப்பாக வளர்த்து, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்களில் புழு வளர்ந்து கூடு கட்டியதும் விற்பனைக்கு தயாராகிறது.
இளம்பட்டு புழு வளர்ப்பு மனைகளில் இருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் புழு தரமற்றதாக உள்ளதால் தற்போது பெரும்பாலான மனைகளில் வளர்க்கப்பட்ட புழுக்கள் திடீரென இறக்கின்றன.நூற்றுக்கணக்கான புழு வளர்ப்பு மனைகளில் 80 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-
தரமற்ற பட்டுப்புழு முட்டை வினியோகம், இளம் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் தரமற்ற புழு வழங்கப்படுவதால் ஒரு சில நாட்களிலும் ஒரு சில பகுதிகளில் கூடு கட்டும் பருவத்திலும் புழுக்கள் இறந்து வருகின்றன. இதனால் புழு வளர்ப்பு மனைகளில் 80 சதவீதம் வரை மகசூல் பாதித்து வருகிறது.
ஒரு ஏக்கர் மல்பெரி சாகுபடி செய்தால் ஒரு முட்டை தொகுப்புக்கு 450 முதல் 500 முட்டைகள் என 125 முட்டை தொகுதிகள் வளர்த்தால் 21 நாட்களில் 125 கிலோ பட்டுக்கூடு உற்பத்தியாக வேண்டும்.தற்போது 25 கிலோ கூட உற்பத்தியாவதில்லை. உடுமலை கோட்டமங்கலம் பகுதியில் விவசாயிகள் பாதித்துள்ளனர். இது குறித்து பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
எனவே விஞ்ஞானிகள், அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து பாதிக்கப்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அனைத்தையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வீரியம் மிக்க முட்டை தொகுதி உற்பத்தி செய்யவும், இளம்புழு வளர்ப்பு மனைகளை கண்காணித்து தரமான புழுக்களை வினியோகிக்க வேண்டும்.
பட்டுப்புழு வளர்ப்பு மனைகளுக்கான இன்சூரன்ஸ், கடந்த ஜனவரி மாதம் காலாவதியாகியுள்ள நிலையில் உடனடியாக புதுப்பிக்க வேண்டும். அதேபோல் ஒரு கிலோ கூடு 500 ரூபாய்க்கு குறைவாக விற்பனையாகிறது. உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவ, மாணவிகளுக்கு மாலை பள்ளி முடிந்து திரும்புவதற்கு பேருந்து வசதி வேண்டி மனு அளிக்கப்பட்டுள்ளது.
- பழைய பேருந்து நிலையத்திலிருந்து 30-ஏ நகரப்பேருந்து மாலை 4.10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
திருப்பூர்:
பல்லடம் வட்டம், ஆறுமுத்தாம்பாளையம் அறிவொளிநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாலை பள்ளி முடிந்து திரும்புவதற்கு பேருந்து வசதி வேண்டி 4.7.2023 அன்று நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 30-ஏ நகரப்பேருந்து மாலை 4.10 மணி கால அட்டவணையின் படி பல்லடம் வட்டம், ஆறுமுத்தாம்பாளையம், அறிவொளி நகர் அரசு உயர் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 3 உழவர் சந்தைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- 320கிலோ தக்காளியை கிலோ ஒன்றுக்கு ரூ.88 என்ற அளவில் விற்பனை செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் வெளிசந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் மூலம் வரத்தினை அதிகரித்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி தடையின்றி கிடைக்க தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை அலுவலர்கள் ஆகியோர் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை ஆகிய 3 உழவர் சந்தைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வெளி சந்தையில் தக்காளி விற்பனை செய்யும் விவசாயிகள் உழவர் சந்தைகளில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமை மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமையின் மூலம் விவசாயிகள் சுமார் 320கிலோ தக்காளியை கிலோ ஒன்றுக்கு ரூ.88 என்ற அளவில் விற்பனை செய்தனர்.
இதே போல் பல்லடம் உழவர் சந்தையில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமையின் மூலம் விவசாயிகள் சுமார் 265 கிலோ தக்காளிகளை ஒரு கிலோ ரூ.85 க்குவிற்பனை செய்தனர். உடுமலைப்பேட்டை உழவர் சந்தையில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை வளர்ச்சி முகமையின் மூலம் விவசாயிகள் சுமார் 300 கிலோ தக்காளியை ஒரு கிலோ ரூ.79க்கு விற்பனை செய்தனர் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
- தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கைகளை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் மங்கலத்தில் நடைபெற்றது
- கர்நாடக தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல 2024-ல் நாடாளுமன்ற தேர்தலிலும் இது தொடரும் என்றார் சுடலை.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் பொதுசிவில் சட்டத்தை கண்டித்தும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கைகளை விளக்கியும் மாபெரும் பொதுக்கூட்டம் மங்கலத்தில் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர்சாதிக் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயம்செந்தில் வரவேற்புரையாற்றினார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் சந்தோஷ் கிருஷ்ணன், , திருப்பூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் சரவணன், திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், அமைப்பு செயலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கனல்கண்ணன், மாநில ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜோதி குமரவேல், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை, , தலைமை நிலைய பேச்சாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பொது சிவில் சட்டத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை இந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில் " மணிப்பூர் கலவரத்தில் நடவடிக்கை எடுக்காத பா.ஜ.க. அரசை கண்டித்தும், பொது சிவில் சட்டத்தினால் ஏற்பட இருக்கின்ற பாதிப்புகளை விளக்கியும் பேசினார்.மேலும் சமீபத்தில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல 2024-ல் நாடாளுமன்ற தேர்தலிலும் இது தொடரும் என்றார்.
- துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பெருமாநல்லூர்:
பெருமாநல்லூா், பழங்கரை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற 12-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
பெருமாநல்லூா் துணை மின்நிலையம்: பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகா், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பரிசல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூா்.
பழங்கரை துணை மின்நிலையம்: அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூா், தங்கம் காா்டன், விஸ்வ பாரதி பாா்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகா், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூா் (ஒரு பகுதி), ரங்கா நகா் (ஒரு பகுதி), ராஜன் நகா், ஆா்.டி.ஓ. அலுவலகம், கமிட்டியாா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா், துரைசாமி நகா், பெரியாயிபாளையம் (ஒரு பகுதி), பள்ளிபாளையம், வி.ஜி.வி. நகா், திருநீலகண்டா் வீதி ,நெசவாளா் காலனி, எம்ஜிஆா்., நகா், மகாலட்சுமி நகா், முல்லை நகா், தன்வா்ஷினி அவென்யூ.
- பொது சிவில் சட்டம் தேவையான ஒன்றுதான்.
- மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் சரியானது.
திருப்பூர்:
தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் மற்றும் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் பட்டியல் வெளியேற்றம் கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் திருப்பூர் சிவன் தியேட்டர் ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் பெ.ஜான்பாண்டியன், மாநில இளைஞரணி தலைவர் ஜா.வியங்கோ பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அப்போது ஜான்பாண்டியன் பேசியதாவது:-
தேவேந்திர குல வேளாள மக்கள் எத்தனை பேருக்கு மத்திய, மாநில அரசுகள் வேலையும், சலுகையும் கொடுத்துள்ளன. இப்படிப்பட்ட நிலையை மாற்ற வேண்டும். இந்த நாட்டில் ஏழைகளுக்கு ஒரு சட்டம். பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஒரு சட்டம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஜான்பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பொது சிவில் சட்டம் தேவையான ஒன்றுதான். மத்திய அரசு கொண்டு வரும் பொது சிவில் சட்டம் சரியானது. தமிழக கவர்னருக்கும் முதலமைச்சருக்கும் உள்ள பிரச்சனை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ஜாதியின் பெயரை வைத்து திரைப்படங்கள் எடுத்து, அதன் மூலம் மற்றொரு சமுதாயத்தினரை இழிவுப்படுத்துவது தவறான முன்உதாரணம். அதுபோன்ற திரைப்படங்களை அரசு தடை செய்ய வேண்டுமேயன்றி, அதை ஊக்குவிக்கக் கூடாது.
பாராளுமன்ற தேர்தலில் எங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து அந்த நேரத்தில் செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவெடுக்கப்படும். இல்லத்தரசிகளுக்கு தமிழக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
- தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி கோட்டையை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசி பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்துகள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 6-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காவிட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். விவசாயிகளின் அவல நிலையை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில் கஞ்சி தொட்டி அமைத்து கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில் இருந்து விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். 10 அம்ச கோரிக்கைகளை பரிசீலனை செய்து விவசாயிகளை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை திரட்டி கோட்டையை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
- பழையகோட்டையில் 101 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
- 60 மாடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்துக்கு விற்பனையாயின.
காங்கயம்:
திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான இந்த பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 101 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
இதில் 60 மாடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.79 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- பயணிகள் அதிக அளவில் அந்த பகுதியில் இல்லாத காரணத்தால் யாரும் விபத்தில் சிக்கவில்லை.
- பயணிகள் நிற்பதற்காக நிழற்குடை அமைக்க சாரங்கட்டும் பணி நடைபெற்று வந்தது.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் நகராட்சி பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அதே போன்று இங்கிருந்து வெளியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பஸ் வசதியும் உள்ளது. இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் முன்பு பயணிகள் நிற்பதற்காக நிழற்குடை அமைக்க சாரங்கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று ஞாயிறு மாலை திடீரென சாரங்கள் சரிந்து விழுந்தன. நேற்று ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நாட்கள், விசேஷ தினங்கள் இருப்பினும் பயணிகள் அதிக அளவில் அந்த பகுதியில் இல்லாத காரணத்தால் யாரும் விபத்தில் சிக்கவில்லை. இது குறித்து தகவல்அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் பணியாளர்களை கொண்டு உடனே சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 20 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 5 சொகுசு வேன்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு இன்று காலை கோவை ஈஷா யோகா மையத்துக்கு புறப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலைக்கடை பகுதியில் செல்லும் போது ஒரு வேனின் டிரைவர் சீர்காழியை சேர்ந்த விஜய் (வயது 38) என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரமுள்ள வயலுக்குள் புகுந்து கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணித்த சரோஜா, பத்மா, அரிய முத்து, மது, சுமதி, சரோஜினி உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த விவசாயி ஒருவர் உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 20 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவினாசி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் லோகநாதன் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்.
- முத்துச்சாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவினாசி
அவினாசியை அடுத்து கருவலூர் டாஸ்மாக் மதுக் கடை அருகில் சட்டவிரோதமாக பார் நடத்தி வருவதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் லோகநாதன் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டபோது அங்கு சட்டவிரோதமாக பார் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
விசாரணையில் சட்டவிரோத பார் நடத்திய நைனாம்பாளையத்தை சேர்ந்த முத்துச்சாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அனுமதியின்றி நடத்தப்பட்ட பார் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
- மழைநீர் செல்ல வழிவகை செய்யாமல், நீர் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்ததுள்ளனர்.
- அரசிடம் அனுமதி பெறாமல் சுமார் 100 மீட்டருக்கு மேல் நீர் வழி தடத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சிப் பகுதியில், கோவை திருச்சி - தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனியார் கட்டடத்திற்கு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள நீர் வழித்தடம் தனியார் சிலரால் மண் கொட்டி மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வந்த புகாரின் பேரில் பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது மழைநீர் செல்ல வழிவகை செய்யாமல், நீர் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த இடத்தை பார்வையிட்ட தேசிய நெடுஞ்சாலை துறை கோவை கோட்ட உதவி பொறியாளர் அழகர்ராஜா கூறுகையில்:- வழித்தடம் அமைக்க தனியார் இட உரிமையாளர்கள் அனுமதி பெறவில்லை. அரசுக்கு சொந்தமான சாலையோர இடத்தில் மண் கொட்டி வழித்தடம் அமைக்க வேண்டுமானால் நீர் செல்ல குழாய் அமைத்து, அதன் மீது அரசின் வழிகாட்டி விதிமுறைகளை பின்பற்றி வழித்தடம் அமைக்க வேண்டும்.
இதுகுறித்து விளக்கம் கேட்டு நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார். அரசிடம் அனுமதி பெறாமல் சுமார் 100 மீட்டருக்கு மேல் நீர் வழி தடத்தை தனியார் ஆக்கிரமித்தது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.






