search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரமற்ற முட்டை, இளம்பட்டு புழுக்கள் இறப்பால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு
    X

    கோப்புபடம்

    தரமற்ற முட்டை, இளம்பட்டு புழுக்கள் இறப்பால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு

    • பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்களில் புழு வளர்ந்து கூடு கட்டியதும் விற்பனைக்கு தயாராகிறது.
    • புழு வளர்ப்பு மனைகளில் 80 சதவீதம் வரை மகசூல் பாதித்து வருகிறது.

    உடுமலை:

    மாநில அளவில் வெண் பட்டுக்கூடு உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பிரதானமாக உள்ளது. உடுமலை, பல்லடம், பொள்ளாச்சி, பழனி உள்ளிட்ட பகுதிகளில் 2,778 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு 1,221 பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக மாதம் தோறும், பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.

    பட்டுப்புழு முட்டை உற்பத்தி மையங்களில் இருந்து முட்டை தொகுதிகளை பெற்று இளம் புழு வளர்ப்பு மனைகளில் 5 நாட்கள் வரை பாதுகாப்பாக வளர்த்து, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்களில் புழு வளர்ந்து கூடு கட்டியதும் விற்பனைக்கு தயாராகிறது.

    இளம்பட்டு புழு வளர்ப்பு மனைகளில் இருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் புழு தரமற்றதாக உள்ளதால் தற்போது பெரும்பாலான மனைகளில் வளர்க்கப்பட்ட புழுக்கள் திடீரென இறக்கின்றன.நூற்றுக்கணக்கான புழு வளர்ப்பு மனைகளில் 80 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இது குறித்து தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    தரமற்ற பட்டுப்புழு முட்டை வினியோகம், இளம் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் தரமற்ற புழு வழங்கப்படுவதால் ஒரு சில நாட்களிலும் ஒரு சில பகுதிகளில் கூடு கட்டும் பருவத்திலும் புழுக்கள் இறந்து வருகின்றன. இதனால் புழு வளர்ப்பு மனைகளில் 80 சதவீதம் வரை மகசூல் பாதித்து வருகிறது.

    ஒரு ஏக்கர் மல்பெரி சாகுபடி செய்தால் ஒரு முட்டை தொகுப்புக்கு 450 முதல் 500 முட்டைகள் என 125 முட்டை தொகுதிகள் வளர்த்தால் 21 நாட்களில் 125 கிலோ பட்டுக்கூடு உற்பத்தியாக வேண்டும்.தற்போது 25 கிலோ கூட உற்பத்தியாவதில்லை. உடுமலை கோட்டமங்கலம் பகுதியில் விவசாயிகள் பாதித்துள்ளனர். இது குறித்து பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.

    எனவே விஞ்ஞானிகள், அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து பாதிக்கப்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அனைத்தையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வீரியம் மிக்க முட்டை தொகுதி உற்பத்தி செய்யவும், இளம்புழு வளர்ப்பு மனைகளை கண்காணித்து தரமான புழுக்களை வினியோகிக்க வேண்டும்.

    பட்டுப்புழு வளர்ப்பு மனைகளுக்கான இன்சூரன்ஸ், கடந்த ஜனவரி மாதம் காலாவதியாகியுள்ள நிலையில் உடனடியாக புதுப்பிக்க வேண்டும். அதேபோல் ஒரு கிலோ கூடு 500 ரூபாய்க்கு குறைவாக விற்பனையாகிறது. உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×