என் மலர்
திருப்பூர்
- வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கான்கிரீட் சாலையில் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
- கழிவுநீர் சாலையில் செல்வதை தடுத்து நிறுத்தி சுகாதாரம் காக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சி, நித்தியஜீவபுரம் பகுதியில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கான்கிரீட் சாலையில் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. ஆகவே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை உறிஞ்சிகுழி அமைத்து அதில் செலுத்த வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை கண்டு கொள்ளாத நடுப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், நடுப்பட்டி கிளை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நித்தியஜீவபுரம் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி), நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஒரு வார காலத்திற்குள்ளாக கழிவுநீர் உறிஞ்சுகுழி அமைக்காத வீடுகளுக்கு உறிஞ்சுகுழி அமைப்பு ஏற்படுத்தி சாக்கடை கழிவுநீர் சாலையில் செல்வதை தடுத்து நிறுத்தி சுகாதாரம் காக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் க.பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர். குமார், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தைசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஆர்.மணியன், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி நடுப்பட்டி கிளை செயலாளர் மு.பழனிசாமி உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட உள்ள சுருக்க முறை திருத்தத்துக்கான முந்தைய திருத்த பணிகள் இன்று முதல் தொடங்கின.
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது.
திருப்பூர்:
வரும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இந்திய தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது. வரும் நவம்பரில் சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2024 ஜனவரி மாதம் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இது, தேர்தலுக்கான பட்டியலாக அமையும்.
நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட உள்ள சுருக்க முறை திருத்தத்துக்கான முந்தைய திருத்த பணிகள் இன்று முதல் தொடங்கின. வருகிற ஆகஸ்டு 21-ந்தேதி வரை நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கின்றனர்.
இப்பணியில் ஈடுபட உள்ள 2,513 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, ஓட்டுச்சாவடி பதிவு அலுவலர்களால் ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பி.எல்.ஓ., ஆப் என்கிற மொபைல் செயலியில் உள்ள ஹவுஸ் டூ ஹவுஸ் என்கிற வசதியை பயன்படுத்தி சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
குறிப்பிட்ட முகவரியில் வாக்காளர் வசிக்கிறாரா, வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படம் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளனவா; இளம் வாக்காளர் பெயர் பட்டியலில் இடம்பெற்றதா என ஆய்வு செய்யப்படும். மேலும், புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளது.
- கோ பூஜை இன்று 21ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
- ஒரு இடத்தில் பாரம்பரியமான நாட்டுப் பசுக்களை வைத்து கோ பூஜை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.
பெருமாநல்லூர்:
திருப்பூர் மாவட்ட கோ சேவா சமிதி சார்பில் மாதம் ஒரு இடத்தில் பாரம்பரியமான நாட்டுப் பசுக்களை வைத்து கோ பூஜை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான கோ பூஜை இன்று 21ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பூர் மங்கலம் ரோடு பெரியாண்டிபாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
ஆடி வெள்ளியில் நடைபெறும் புனிதமான இந்த கோ பூஜையில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு கோமாதா அருளைப் பெற வேண்டும் என்று திருப்பூர் ஜில்லா கோ சேவா சமிதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆடி முதல் வெள்ளியான இன்று, வீடுகளில் திருக்கலசம் எழுந்தருளச்செய்து, அதில் அம்மன் முகத்தை போன்ற உருவ அமைப்பை ரவிக்கை துணியில் ஏற்படுத்தி, அதற்கு அணிகலன்கள் மலர் மாலைகள் சூட்டி அலங்கரித்து வழிபட்டனர்.
- பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் வந்து, அம்மனை வழிபட்டனர்.
திருப்பூர்:
ஆடி மாத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு தான். ஒவ்வொரு வெள்ளியன்றும் வித்தியாசமாக கொண்டாடுகின்றனர்.முதல் வெள்ளியான இன்று, வீடுகளில் திருக்கலசம் எழுந்தருளச்செய்து, அதில் அம்மன் முகத்தை போன்ற உருவ அமைப்பை ரவிக்கை துணியில் ஏற்படுத்தி, அதற்கு அணிகலன்கள் மலர் மாலைகள் சூட்டி அலங்கரித்து வழிபட்டனர்.
வீட்டு முற்றத்திலும், பூஜை அறையிலும் மாக்கோலமிட்டு, மாவிலை, தென்னை தோரணங்கள் சூட்டினர். சர்க்கரை பொங்கல், எலுமிச்சை, தேங்காய், புளி, தயிர் சாதங்களை தயாரித்து, அம்பாளுக்கு படைத்தனர்.
அம்பாளை துதித்து போற்றி, மாலைகளை பாராயணம் செய்தனர். தொடர்ந்து, முப்பெரும் தேவியரை துதித்து, வீடுகளுக்கு சுமங்கலிப்பெண்களை அழைத்து விருந்து பரிமாறி, வளையல், ரவிக்கை, மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்ட மங்கல பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர். இப்படி ஆடிப்பண்டிகையை சுமங்கலிப்பெண்கள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாடினர்.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஏ.பி.டி., ரோடு பட்டத்தரசிம்மன் கோவி்ல், தில்லை நகர் ராஜ மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம் போலீஸ்லைன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், ெபருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில், அவிநாசியை அடுத்துள்ள கருவலூர் மாரியம்மன் கோவில் உள்பட உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில், இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.
அம்மன் கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பெண்கள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடைகளில் வந்து, அம்மனை வழிபட்டனர். கோவில்களில், பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தக்காளி சாதம், தயிர்சாதம் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.மேலும் கூழ் வார்த்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இன்று முதல் ஆடி வெள்ளி என்பதால் குறைந்திருந்த பூக்கள் விலை மெல்ல உயர துவங்கியுள்ளது.
திருப்பூர் பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ, 300 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ நேற்று கிலோவுக்கு, 150 ரூபாய் உயர்ந்து 450 ரூபாய்க்கு விற்றது. முல்லை கிலோ 250 ரூபாயில் இருந்து 320 ரூபாய்க்கு விற்பனையானது. ஆடி வெள்ளி என்றாலே அம்மன் கோவில்கள் தான் பிரசித்தம். கோவிலுக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் அரளி பூ விலையும் உயர்ந்துள்ளது.
ஒரு வாரமாக கிலோ 80 முதல் 120 ரூபாய் இருந்த ஒரு கிலோ அரளி நேற்று 200 முதல் 240 ரூபாய்க்கு விற்றது. துளசி ஒரு கட்டு 20 ரூபாய், செவ்வந்தி 300 ரூபாயாக விலை உயர்ந்தது. ஒரு சில வியாபாரிகளிடம் மட்டும் அரளி பூ இருந்ததால், அதனை வாங்க சில்லறை வியாபாரிகள் பலர் போட்டி போட்டனர். வரத்து குறைவால், மக்களுக்கு அரளி கிடைக்கவில்லை; வியாபாரிகள் மொத்தமாக விற்பனைக்கு அள்ளிச்சென்றனர்.
பூ வியாபாரிகள் கூறுகையில், காற்றின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், பூக்கள் உதிர்ந்து வருகிறது. வரத்து குறைந்து வரும் இவ்வேளையில் ஆடி வெள்ளி விற்பனை சற்று அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் ஓரிரு நாளில் விலை குறைந்து விடும். ஆவணி முகூர்த்தம் வரை மல்லிகை பூ விலையில் பெரிய ஏற்றம் இருக்காது என்றனர்.
- கோவிலில் 14ம் ஆண்டாக பொங்கல் திருவிழா நடைபெற்றது.
- பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காவடி ஆட்டம் நடைபெற்றது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் ஏரி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 14ம் ஆண்டாக பொங்கல் திருவிழா நடைபெற்றது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம் செய்தனர்.
பின்னர் மாவிளக்கு எடுத்து வந்து அலங்கார சிறப்பு பூஜைகள் செய்தனர். பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காவடி ஆட்டம் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அய்யம்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்
- போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே, அவிநாசி பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், மத்திய அரசு எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கை படி சாகுபடி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து அனைத்து விவசாய பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும், பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும்.
தமிழக அரசு 100 நாள் வேலை திட்ட பணிகளை முழுவதும் வேளாண் துறை பணிகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 15 வது நாளாக நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர்.
நேற்றைய போராட்டத்தில், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மக்காச்சோளக் கதிர்களை விவசாயிகள் கையில் ஏந்திய படி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பெருந்தொழுவு பாசன சபை தலைவர் தமிழ்நாடு பாலு, பெருந்தல் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, நாச்சிபாளையம் பாசன சபை தலைவர் குப்புசாமி, பாசன சபை உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் குருசாமி, சுப்பிரமணியம், முத்துராமலிங்கம், தெய்வசிகாமணி கிருஷ்ணசாமி, மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பத்திரப்பதிவு துறையின் மூலமாக அளிக்கப்படுகின்ற சேவைகளை பெறுவதற்காக நாள்தோறும் வந்து செல்கின்றோம்.
- மின்தடையின் போது இயங்கக்கூடிய யுபிஎஸ்., பேட்டரிகள் பழுதடைந்து விட்டது.
உடுமலை:
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது.இந்த அலுவலகத்தின் மூலமாக பத்திரப்பதிவு,பிறப்பு,இறப்பு சான்றிதழ்,திருமண பதிவு, வில்லங்கச்சான்று நில வழிகாட்டி மதிப்பு,பத்திர நகல்கள்,வில்லங்க சான்று உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் நாள்தோறும் பெற்று வருகின்றனர்.
மின்தடையின்போது பொதுமக்கள் தங்கு தடையின்றி சேவையை பெறுவதற்கு ஏதுவாக இந்த அலுவலகத்தில் யுபிஎஸ்., வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.ஆனால் நேற்று மின்தடை ஏற்பட்ட போது யுபிஎஸ்., பேட்டரிகள் இயங்கவில்லை.இதன் காரணமாக பத்திரப்பதிவு உள்ளிட்ட பிற சேவைகள் பாதிக்கப்பட்டது.இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,
பத்திரப்பதிவு துறையின் மூலமாக அளிக்கப்படுகின்ற சேவைகளை பெறுவதற்காக நாள்தோறும் வந்து செல்கின்றோம்.இந்த சூழலில் நேற்று பத்திரப்பதிவு மற்றும் பிற சேவைகள் செயல்பாட்டில் இருந்த போது அலுவலகத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது.அப்போது மின்தடையின் போது இயங்கக்கூடிய யுபிஎஸ்., பேட்டரிகள் பழுதடைந்து விட்டது.அனைத்து சேவைகளும் ஆன்லைன் முறையில் செய்யப்பட்டதால் பத்திரப்பதிவு உள்ளிட்ட பிற சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
மேலும் பத்திரப்பதிவுக்கு வருகை தந்திருந்த மூத்த குடிமக்கள்,உடல் நலன் குன்றியோர்,கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.அதிகாரிகள் அலட்சியம் காரணமாக யுபிஎஸ் பேட்டரிகள் முறையாக பராமரிக்காததே சேவை குறைபாட்டிற்கான காரணமாகும்.
அரசுக்கு பெருமளவு வருமானம் ஈட்டி தரக்கூடிய பத்திரப்பதிவு அலுவலகத்தில் சுமார் 4 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் அரசுக்கு வருமான இழப்பும் பொது மக்களுக்கு கால நேர விரையமும் ஏற்பட்டது.எனவே உடுமலை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதுடன்,யுபிஎஸ் பேட்டரிகளை முறையாக பராமரிப்பு செய்வதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
- போலீசார் குறிப்பிட்ட நேரங்களில் ஆய்வு மேற்கொண்டு அத்துமீறும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது .
- கூடுதலாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை:
உடுமலை அரசு கலைக் கல்லூரி எலைய முத்தூர் பிரிவு சாலையில் உள்ளது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் உடுமலையில் இருந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியவாறு விபரீத பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே உடுமலை போக்குவரத்து போலீசார் குறிப்பிட்ட நேரங்களில் ஆய்வு மேற்கொண்டு அத்துமீறும் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது .
அரசு பஸ் மிக குறைவாக இயக்கப்படுவதால் மாணவர்கள் தனியார் பஸ்சில் உயிரை துச்சமாக நினைத்து பயணிக்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கூறி மாணவர்கள் பலமுறை போராட்டம் நடத்தியுள்ளனர். எனவே மாணவர்கள் நலன் கருதி போலீசார் பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும். அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் விடுதி கட்டப்பட்டது.
- விடுதியை பார்வையிட்ட அமைச்சர்கள் மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
உடுமலை,
உடுமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்ற ஆதி திராவிட மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் விடுதி கட்டப்பட்டது. இந்த விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இணைந்து விடுதியை திறந்து வைத்தனர்.
அதைத் தொடர்ந்து விடுதியை பார்வையிட்ட அமைச்சர்கள் அங்கு மாணவர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவரும் மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன், உடுமலை நகர செயலாளர் சி.வேலுச்சாமி,உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன்,ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், எஸ்.கே.எம் தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார்,மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முருகன், மடத்துக்குளம் ஒன்றிய குழு துணைத்தலைவர் ஈஸ்வர சாமி, உடுமலை ஆர்.டி.ஓ., ஜஸ்வந்த் கண்ணன்,தாசில்தார் கண்ணாமணி, தொழிற் பயிற்சி மைய முதல்வர் ராஜேஸ்வரி, பயிற்சி அலுவலர் ரமேஷ்குமார் உடன் இருந்தனர்.
- கடந்த 30 ஆண்டுகளாக அந்த இடத்தில் வீடு கட்டி மின்சார வசதி பெற்று குடியிருந்து வருகிறேன்.
- அரசுக்கு வீட்டு வரி, குடிநீர் செலுத்தி வருகிறேன்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டு கல்லம்பாளையத்தில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர் திருப்பூர் வடக்கு தாலுகா தாசில்தாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் குடியிருந்து வரும் இடம் மாநகராட்சிக்கு உரிய வண்டிப்பாதை என பதிவேடுகளில் உள்ளது.
நான் கடந்த 30 ஆண்டுகளாக அந்த இடத்தில் வீடு கட்டி மின்சார வசதி பெற்று குடியிருந்து வருகிறேன். அரசுக்கு வீட்டு வரி, குடிநீர் செலுத்தி வருகிறேன். ஆகவே எனக்கு பழைய கிராம பதிவேடுகளில் உள்ளதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எனது வறுமை நிலையை கருத்தில் கொண்டு அந்த இடத்துக்கு பட்டா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்
- தண்டவாள பணிகள் முடிக்க பட்டதால் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
திருப்பூர்:
கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் பாலக்காடு- திருச்சி ெரயில் சேவை வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என,ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பாலக்காடு ெரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
திருச்சி ரெயில் நிலையம் - திருச்சி கோட்டை ெரயில் நிலையம் இடையே, தண்டவாள பணிகள் நடப்பதால், பாலக்காடு - திருச்சி (16844), திருச்சி - பாலக்காடு (16843) உள்ளிட்ட 2 ெரயில்களின் சேவை, ஜூலை 20-ந் தேதி முதல் 25ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இந்துக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் அனைத்து ஒன்றியங்கள், வட்டங்களில் நடத்தப்பட்டது.
- தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களை காக்க முன்வர வேண்டும்.
திருப்பூர்:
தமிழகத்தில் கோவில்களின் அவல நிலை குறித்து கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஜூலை 16-ந் தேதி, 'நம்ம சாமி, நம்ம கோவில், நாமே பாதுகாப்போம்' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்து முன்னணி கொள்கை விளக்கம், இந்துக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் அனைத்து ஒன்றியங்கள், வட்டங்களில் நடத்தப்பட்டது.
மொத்தம் 3,500 இடங்களில் நடந்த தெருமுனை கூட்டங்களில், 1.75 லட்சம் மக்கள் பங்கேற்றனர். 10 லட்சத்துக்கும் அதிகமான துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
கோவில்களுக்கு ஏற்பட்டுள்ள சீர்கேடுகள் குறித்தும், இந்துக்களின் நம்பிக்கைகள் திட்டமிட்ட ரீதியில் கொச்சைப்படுத்தும் தி.மு.க., - தி.க., - காங்., - கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் கட்சி என, ஆகிய கட்சிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர் களான சமூக ஊடகத்தினர் (யூ-டியூபர்) பற்றியும்,இந்து விரோத செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது
இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு அந்தந்த பகுதியில் உள்ள இந்து முன்னணி பொறுப்பாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட் சமயத்தில் ராளமான மக்கள், அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களின் அவல நிலை குறித்து கூறினர்.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்கள் அவல நிலையில் உள்ளது.
இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, 'அரசே கோவிலை விட்டு வெளியேறு,' என்ற கோஷத்தை முன்னிறுத்தி, தமிழக கவர்னர் ரவியை சந்தித்து அறிக்கை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களை காக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






