என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
நடுப்பட்டியில் விவசாயிகள் போராட்டம்
- வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கான்கிரீட் சாலையில் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
- கழிவுநீர் சாலையில் செல்வதை தடுத்து நிறுத்தி சுகாதாரம் காக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி ஊராட்சி, நித்தியஜீவபுரம் பகுதியில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கான்கிரீட் சாலையில் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. ஆகவே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை உறிஞ்சிகுழி அமைத்து அதில் செலுத்த வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை கண்டு கொள்ளாத நடுப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், நடுப்பட்டி கிளை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நித்தியஜீவபுரம் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி), நடுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஒரு வார காலத்திற்குள்ளாக கழிவுநீர் உறிஞ்சுகுழி அமைக்காத வீடுகளுக்கு உறிஞ்சுகுழி அமைப்பு ஏற்படுத்தி சாக்கடை கழிவுநீர் சாலையில் செல்வதை தடுத்து நிறுத்தி சுகாதாரம் காக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தாலுகா தலைவர் க.பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர். குமார், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தைசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ஆர்.மணியன், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி நடுப்பட்டி கிளை செயலாளர் மு.பழனிசாமி உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






