என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகே ஜனார்த்தனன் (வயது 25) என்பவர் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். அங்கு மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்த மசாஜ் சென்டரை கண்காணித்து வந்தனர். இதில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளர் ஜனார்த்தனனை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 5 இளம்பெண்களை போலீசார் மீட்டு, அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • க.முத்தம்மாள் நினைவு கோப்பை தேசிய அளவிலான ஆண்கள் ஒற்றையர் கேரம் போட்டி (தம்பிங்) குலாலர் திருமண மண்டபத்தில் தொடங்கியது.
    • மொத்தம் 192 அணியினர் பங்கேற்று விளையாடினார்கள்.

    திருப்பூர்:

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மாணவர் அணி சார்பில் க.முத்தம்மாள் நினைவு கோப்பை தேசிய அளவிலான ஆண்கள் ஒற்றையர் கேரம் போட்டி (தம்பிங்) குலாலர் திருமண மண்டபத்தில் தொடங்கியது. மாவட்ட நிர்வாகி திலகராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. போட்டியை தொடங்கிவைத்தார். மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் சிவபாலன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 192 அணியினர் பங்கேற்று விளையாடினார்கள். நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

    இன்று மாலை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    • நடப்பாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் போனஸ் வழங்கப்படும்
    • செலுத்த வேண்டிய கட்டணத்தில் 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் நகராட்சியில் நடப்பாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் போனஸ் வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

    இது தொடா்பாக நகராட்சி ஆணையா் (பொறுப்பு) எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது:- வரிவசூல் செய்வதில் நகராட்சி நிா்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2023 - 24 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியினை அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மக்கள் நலப் பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்த நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய குடிநீா்க் கட்டணம், இதர வரியினங்களை பொதுமக்கள் முறையாகச் செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

    • மாணவர்களின் கல்வி செயல்பாடு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது.
    • போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்கள் காமராஜர் விருதுக்கு பரிந்துரைக்க ப்படுகின்றனர்.

    திருப்பூர்:

    அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களின் கல்வி செயல்பாடு மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 15 சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 10 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ், பிளஸ் 2 பயிலும் சிறந்த 15 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 20 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    போட்டிகள் நடத்தி தேர்வு செய்யப்படும் சிறந்த மாணவர்கள் காமராஜர் விருதுக்கு பரிந்துரைக்க ப்படுகின்றனர். நடப்பாண்டுக்கான காமராஜர் விருது குறித்து பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் தரப்பில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி விருதுக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் பட்டியலை பள்ளி கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • 27 ரெயில்களில் புறப்படும் பயணிக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    • திருச்சி நிலைய அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்துக்கு (மாலை, 4:50 மணிக்கு) வந்து சேரும்.

     திருப்பூர்:

    திருச்சி மார்க்கத்தில் நடக்கும் பொறியியல் மேம்பாட்டு பணி காரணமாக 27 ெரயில்களில் புறப்படும் பயணிக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    வருகிற ஆகஸ்டு 13ந்தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் புறப்படும் ெரயில் சேரன் எக்ஸ்பிரஸ் (எண்:12673) காட்பாடி நிலையத்திற்கு இரவு 11:48 மணிக்கு வந்து 5 நிமிடம் தாமதமாக இரவு 11:53 மணிக்கு வரும். இந்த ெரயில் ஜோலார்பேட்டை நிலையத்திற்கு அதிகாலை 1:03க்கு பதிலாக 10 நிமிடம் தாமதமாக 1:13 மணிக்கு வந்து சேரும்.

    ஆகஸ்டு 14ந்தேதி மயிலாடுதுறை - கோவை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (எண்:12083) மதியம் 2:55 மணிக்கு பதில் 5 நிமிடம் தாமதமாக 3 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்படும். கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் நிலையங்களுக்கு தாமதமாக வரும்.

    ஆனால் திருச்சி நிலைய அட்டவணையில் குறிப்பிட்ட நேரத்துக்கு (மாலை, 4:50 மணிக்கு) வந்து சேரும். இந்த 2 ரெயில்கள் உட்பட 25 ெரயில்களின் புறப்படும், பயணிக்கும் நேரம் ஆகஸ்டு 2-வது மற்றும் 3-வது வாரம் குறிப்பிட்ட தேதியில் மாற்றப்பட்டுள்ளது. இத்தகவலை ரெயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் பயணிகள் அறியலாம் என சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தகுதியான மாணவர்களை கண்டறிந்து, பள்ளி மேலாண்மை குழு மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களின் விபரங்களை, பிரத்யேகமாக எமிஸ் இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.

    திருப்பூர்,ஜூலை.30-

    10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்காதவர்கள், தோல்வியடைந்தவர்கள், துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து அரசின் தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியான மாணவர்களை கண்டறிந்து, பள்ளி மேலாண்மை குழு மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, ஐ.டி.ஐ., படிப்பில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். இதற்கு பள்ளிகளில் அணுகுவோருக்கு, மதிப்பெண் சான்றிதழ் வழங்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களின் விபரங்களை, பிரத்யேகமாக எமிஸ் இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.இடைநிற்றல் தழுவியோருக்கு, இந்த வாய்ப்பை வகுப்பு ஆசிரியர்கள் மூலம் எடுத்துரைக்குமாறு அறிவுறுத்த ப்பட்டுள்ளது. 

    • தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • நோய்கள் குறித்து, வேளாண் துறை, வேளாண் விஞ்ஞானிகள் குழு கள ஆய்வு செய்து, இருக்கும் மரங்களை காப்பாற்ற வேண்டும்.

     மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தேங்காய், கொப்பரை விலை கடும் சரிவு மற்றும் விற்பனை இல்லாமல் தேக்கம் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தென்னையில் தற்போது நோய்த்தாக்குதல் அதிகரித்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.சின்ன பொம்மன் சாளை பகுதியில், மனோன்மணிக்கு சொந்தமான தென்னந்தோப்பில், நூற்றுக்கணக்கான மரங்களின் குருத்து அழுகி, திடீரென கீழே சாய்ந்தும், ஒரு சில நாட்களில் அம்மரங்கள் காய்ந்து கீழே விழுந்தும் வருகிறது.அதே போல் விஜயகுமாருக்கு சொந்தமான தோட்டத்திலும், இதே போல் தென்னை மரங்கள் காய்ந்து வருகிறது.

    காரணமே தெரியாமல் தஞ்சாவூர் வாடல் நோயாக இருக்கலாம் காண்டாமிருக வண்டு, சிவப்பு கூண் வண்டு என எந்த விதமான நோய் தாக்குதல் என தெரியாமல், பாதிக்கப்பட்ட மரங்களை காய்களுடன் வெட்டி வீழ்த்தி தீ வைத்தும் வருகின்றனர்.இவ்வாறு சின்ன பொம்மன் சாளை, புங்கமுத்தூர், வாளவாடி, பொன்னாலம்மன் சோலை என தென்னை மரங்கள் அதிகம் உள்ள பெரும்பாலான கிராமங்களில், பரவலாக தென்னை மரங்களில் நோய்த்தாக்குதல் தீவிரமாக பரவி வருகிறது.

    எனவே தென்னை மரங்களை தாக்கும் நோய்கள் குறித்து, வேளாண் துறை, வேளாண் விஞ்ஞானிகள் குழு கள ஆய்வு செய்து, இருக்கும் மரங்களை காப்பாற்றவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை பெற்றுத்தரவும் வேண்டும் என்பதே விவசாயிகள் கோரிக்கையாகும்.

    இது குறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

    தென்னை மரங்கள் பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அதிக அளவு காண்டாமிருக வண்டு தாக்குதல் காணப்பட்டதும் குருத்துக்களில் அவை உணவாக கொண்டு அவற்றை நாசம் செய்துள்ளன.

    தொடர்ந்து பெய்த மழையின் போது குருத்துக்களில் மழை நீர் தேங்கி குருத்து அழுகல் நோயாகவும் மாறியுள்ளது. பசும் பூஞ்சாணம் தாக்கி கடும் துர்நாற்றம் அடிக்கும். இதற்கு பசுஞ்சாணம் உள்ளிட்டவற்றை மக்க வைக்காமல் நேரடியாக பயன்படுத்துவதே காரணமாகும்.

    பிடித்த உணவாகவும், புழுக்கள் அதிகளவு உற்பத்தியாகவும் மக்கவைக்காத சாணங்கள் காரணமாக அமைகிறது. இவற்றில் காண்டாமிருக வண்டுகள் அதிகளவு உற்பத்தியாகி தென்னை மரங்களை தாக்கி வருகிறது.இதற்கு எருக்குழிகளில் மெட்டாரைசியம் தெளித்தால் புழுக்களை கட்டுப்படுத்த முடியும். வேப்பம்புண்ணாக்கு, மணலுடன் கலந்து மூன்று அடுக்காக மரத்தை சுற்றிலும் அணைக்க வேண்டும்.

    குருத்து அழுகல் நோய்க்கு காப்பர் ஆக்சி குளோரைடு பயன்படுத்தலாம். மெட்டாரைசியம் தேவையான அளவு வேளாண் துறையில் இருப்பு உள்ளது.

    நோய் பாதிப்புகள் குறித்து வேளாண் துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தால் உடனடியாக ஆய்வு செய்து மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது. எது மாதிரியான பாதிப்பு என தெரியாமல் விவசாயிகள் தேவையற்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் நீர் வழங்கப்படுகிறது
    • நீர்வரத்து இல்லாததால் மொத்தமுள்ள 60 அடியில் நிலவரப்படி 20.58 அடியாக குறைந்து காணப்பட்டது.

    உடுமலை

    பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் நீர் வழங்கப்படுகிறது.வழக்கமாக, கோடை மற்றும் தென்மேற்கு பருவ மழையால் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளான, சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். நடப்பாண்டு பருவ மழைகள் குறைந்தது, தென்மேற்கு பருவ மழை ஒரு மாதம் தாமதமாக துவங்கியது ஆகிய காரணங்களினால் திட்ட தொகுப்பு அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை.

    அதே போல் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் மண்டல பாசனம் நிறைவு செய்ததும், திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரும் காண்டூர் கால்வாயில், விடுபட்ட பகுதிகளில், கான்கிரீட் கால்வாயாக மாற்றும் பணி 3 இடங்களில் நடந்து வருகிறது.பிரதான கால்வாயில் 5 இடங்களில் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளும் தாமதமாகி வருகிறது.

    வழக்கமாக மண்டல பாசனத்திற்கு ஆகஸ்டு முதல் வாரத்தில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். நடப்பாண்டு பருவ மழை தாமதம், பணிகள் காரணமாக 4ம் மண்டல பாசனம் துவங்குவதும் ஒரு மாதம் வரை தாமதமாகும் நிலை உள்ளது.

    திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து இல்லாததால் மொத்தமுள்ள 60 அடியில் நிலவரப்படி 20.58 அடியாக குறைந்து காணப்பட்டது. இதனால் விவசாயம் மட்டுமின்றி, குடிநீர் திட்டங்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது, அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை துவங்கி நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதே போல் பராமரிப்பு பணிகளும் தாமதமாகி வருகிறது. ஆகஸ்டு இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும் வாய்ப்புள்ளது.

    பருவ மழைகளும் ஒத்துழைத்தால், செப்டம்பர் முதல் வாரத்தில் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்பட்டு அம்மாத இறுதிக்குள் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளது என்றனர். 

    • உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
    • தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

     உடுமலை, ஜூலை.30-

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:-

    இளநிலை 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் சார்பில் துறைச் செயலர் பதவிக்கான போட்டியும், இளநிலை 2- ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் சார்பில் துறை இணைச் செயலர் பதவிக்கான போட்டியும் நடைபெற்றது. துறைச் செயலருக்கான தேர்தலில் ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இளநிலை 3-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் வாக்களித்து தங்களுக்கான செயலரை தேர்ந்து எடுத்தனர்.

    துறையின் இணைச் செயலருக்கான தேர்தலில் போட்டியிட்டவர்களை ஒவ்வொரு துறையைச் சேர்ந்த இளநிலை 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் வாக்களித்து தேர்ந்து எடுத்தனர். பிற்பகலில் கல்லூரியின் மாணவர் பேரவைக்கான தலைவர், துணைத் தலைவர் மற்றும் செயலருக்கான போட்டி நடைபெற்றது.

    இளநிலை 3-ம் ஆண்டு மாணவர்களின் சார்பாக, துறைவாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட துறைச்செயலர்கள் கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்து எடுத்தனர்.இளநிலை 2-ம் ஆண்டு மாணவர்களின் சார்பாகத் துறைவாரியாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட இணைச் செயலர்கள் கல்லூரியின் மாணவர் பேரவைக்கான செயலர் மற்றும் மகளிர் செயலரை தேர்ந்து எடுத்தனர்.

    அதன்படி மாணவர் பேரவைத் தலைவராக ஆ.யுவராஜ், துணைத்தலைவராக சை.முகமது ஜூனைத் ரஸ்வி, செயலாளராக சி.கோகுல்நாத், மகளிர் செயலராக தீபிகா தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.மாணவர் பேரவைக்கான தேர்தலில் கல்லூரியின் கணிதவியல் துறைத்தலைவர் பேராசிரியர் ச.பொன்முடி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டார்.

    தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

    • கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • சங்கத்தை சேர்ந்த 10 உறுப்பினர்களை ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் வாக்களிக்க செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    திருப்பூர் ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் உறுப்பினராக இருந்து வரும் நிலையில் சங்கத்தை அந்த கவுன்சிலில் ஆயுட்கால உறுப்பினராக மாற்றுவது என்றும், அதற்காக சங்கத்தை சேர்ந்த 10 உறுப்பினர்களை ஆர்பிட்ரேசன் கவுன்சிலில் வாக்களிக்க செய்வது என்றும், பின்னலாடை தொழில் மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதால் மின்கட்டண உயர்வை மத்திய, மாநில அரசுகள் திரும்பப்பெற வேண்டும் என்றும், கடந்த 1½ ஆண்டுகளாக திருப்பூரில் தொழில் மந்தநிலை காரணமாக வங்கிகள் கடன் பெற்றவர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தொழிலை காப்பாற்ற வங்கிகள் வழங்கிய கடனை குறைந்தபட்சம் ஓராண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் வரும் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வரும் இ-இன்வாய்ஸ் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஏ.எக்ஸ்.என். நிறுவனம் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. இதேபோல் சங்க உறுப்பினர்கள் தங்களது நிறுவனங்களுக்கு காப்பீடும் செய்யும்போது அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும், காப்பீடு செய்யாவிட்டால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி மணிகண்டன் தலைமையிலான குழுவினர் விளக்கமளித்தனர்.

    • தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு 3-ம் ஆண்டு நிறைவு பெற்றது.
    • ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருதல், சிந்தனையை ஊக்குவித்தல், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல் வேண்டும்.

    உடுமலை:

    தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு 3-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதன் பயன்கள் குறித்து விளக்கவும் மாவட்டம் தோறும் ஒரு பிரதிநிதியை மத்திய கல்வி அமைச்சர் அமைச்சகத்தின் உத்தரவின்படி சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் நியமித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்ட பிரதிநிதியாக சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மேகநாதன் நியமிக்க ப்பட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து அவர் உடுமலை கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:- தேசிய கல்விக் கொள்கை 21 ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப பரந்த நெகிழ்வான பல்துறை கல்வி வழங்குகிறது.

    இதனால் நமது நாட்டை ஒரு துடிப்பான அறிவு சார்ந்த சமூகமாகவும் உலகளாவிய அறிவு வல்லரசாகவும் மாற்ற முடியும். ஒவ்வொரு மாணவனின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருதல், சிந்தனையை ஊக்குவித்தல், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தேசிய கல்விக்கொள்கையில் உள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இதனை பின்பற்றி வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வியாழக்கிழமை தோறும் இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்து
    • கூடுதல் விலை, உடனடி தொகை உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வியாழக்கிழமை தோறும் இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் 11 விவசாயிகள், 65 மூட்டை கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.70.10க்கும், குறைந்தபட்சமாக ரூ.58.69க்கும் விற்பனையானது.

    விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் இ - நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடக்கிறது. கூடுதல் விலை, உடனடி தொகை உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு 94880 00163,94439 62834 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

    ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ - நாம் வாயிலாக மட்டை உரித்த தேங்காய் மற்றும் பாக்கு மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்தில் 112 தேங்காய் மூட்டைகள் வந்தன. தேங்காய் கிலோ 22.70 - 24.30 ரூபாயக்கு சென்றது. இதில் 19 விவசாயிகள் , 4 வியாபாரிகள் பங்கேற்றனர்.தொடர்ந்து இரண்டு பாக்கு மூட்டைகள் ஏலம் விடப்பட்டது. அதில் பாக்கு கிலோ அதிகபட்ச விலையாக, 350 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 170 ரூபாய்க்கும் விற்பனையானது.

    மொத்தம் இரண்டு வியாபாரிகள், இரண்டு விவசாயிகள் பங்கேற்றனர். இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தெரிவித்தார்.

    ×