என் மலர்
திருப்பூர்
- தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 முதல் 10:00 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது.
- உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், மின்சார நிலை கட்டண உயர்வு, மற்றும் பீக்ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இது குறித்து தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், ஜேம்ஸ், முத்துரத்தினம், சுருளிவேல், ஸ்ரீகாந்த்,கோபிபழனியப்பன், கோவிந்தராஜ் ஆகியோர் கூறியதாவது : -
தமிழ்நாட்டில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர்கள் "எல்.டி 111பி "என்ற மின் இணைப்பை பெற்று தொழில் செய்து வருகிறோம். எங்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள், மற்ற மின் நுகர்வோர்களை போல மின்கட்டணத்தில் சலுகையோ, இலவச மின்சாரமோ, தனியார் ஜெனரேட்டர் நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்ளும் அனுமதியோ, காற்றாலை மூலம் மின்சாரத்தை பேங்கிங் வசதியுடன் பெற்றுக் கொள்ளும் அனுமதியோ எதுவும் எங்களிடம் இல்லை.
இதற்கிடையே தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 முதல் 10:00 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது. தொழில் இயக்காவிட்டாலும் அதிகபட்சமாக நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான மின் கட்டண செலவில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டண உயர்வை வாபஸ் வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
அரசின் கவனத்தை ஈர்க்க இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 70 அமைப்புகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் நிறுவனங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,கலந்து கொண்டு பேசினார்.
- சரஸ்வதியும் அவரது மகள் ராணியும் பெரியசாமியிடம் லோன் விஷயமாக கேட்டுள்ளனர்.
- அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார்.
உடுமலை:
உடுமலை தாலுகா மசக்கவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது54).விவசாயம் செய்து வருகிறார்.இவர் தனது குடும்ப நண்பரான உடுமலையில் வசித்து வரும் சரஸ்வதி என்பவரிடம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக கூறி அசல் பத்திரத்தை பெற்றுச் சென்று உள்ளார். அதைத் தொடர்ந்து சரஸ்வதியும் அவரது மகள் ராணியும் பெரியசாமியிடம் லோன் விஷயமாக கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் வங்கியில் கொடுத்தாகிவிட்டது .விரைவில் லோன் கிடைத்துவிடும் என்று தெரிவித்து உள்ளார். அதன் பின்பு எந்த தகவலும் இல்லை. இந்த சூழலில் திடீரென சரஸ்வதியின் பெயருக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் பெரியசாமி வாங்கிய கடனுக்கு சரஸ்வதி ஜாமின் கையெழுத்து இட்டுள்ளதாகவும் நிலுவை கடனை செலுத்துமாறும் தெரிவித்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி, ராணி ஆகியோர் பெரியசாமியிடம் இது குறித்து கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் நான் வாங்கிய கடனை கட்டி உங்கள் பத்திரத்தை மீட்டு கொடுத்து விடுகிறேன் என்று தெரிவித்து உள்ளார். ஆனால் காலம் கடந்தும் அவர் சொன்னபடி பத்திரத்தை மீட்டுக் கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து ராணியும் சரஸ்வதியும் பெரியசாமியிடம் உடனடியாக பத்திரத்தை மீட்டுத் தருமாறு கேட்டு உள்ளனர். அதற்கு அவர் ராணியையும் சரஸ்வதியையும் மிரட்டி அனுப்பி விட்டதாக தெரிகிறது. இது குறித்து ராணி குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அந்த வழக்கு உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜெயந்தி ஆஜராகி வழக்கை நடத்தி வந்தார். விசாரணை முடிந்த நிலையில் மாஜிஸ்திரேட் ஆர்.மீனாட்சி தீர்ப்பளித்தார். கையெழுத்தை மோசடி செய்து கடன் பெற்ற குற்றத்திற்காக பெரியசாமிக்கு 3 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும்,ரூ 5 ஆயிரம் அபராதமும்,கட்ட தவறினால் 6 மாதம் சாதாரண சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யுவராஜ் குடிநீர் கம்பெனியில் இருந்து வேலையை விட்டு விட்டு, அவிநாசி அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
- கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமணன் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில், வள்ளியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் யுவராஜை லட்சுமணன் வாடகைக்கு தங்க வைத்துள்ளார்.
அவிநாசி:
தென்காசியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசிராயன் கோவில் காலனி 4-வது வீதியில் தனது மனைவி கங்கா, 10-ம் வகுப்பு படித்து வரும் மகன் அருண்குமார்(16) மற்றும் மகள் ஜோதி(10) ஆகியோருடன் வசித்து வருகிறார். மேலும் அவிநாசி பகுதியில் குடிநீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார்.
இந்தநிலையில் அங்குள்ள சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சிங்காரச்சோலை பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் யுவராஜ்(வயது 32) என்பவரோடு லட்சுமணனுக்கு நட்பு ஏற்பட்டது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யுவராஜ் குடிநீர் கம்பெனியில் இருந்து வேலையை விட்டு விட்டு, அவிநாசி அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது தங்குவதற்கு இடமில்லாததால் யுவராஜை, லட்சுமணன் தனது வீட்டில் கடந்த 3 மாதங்களாக தங்க வைத்துள்ளார். மேலும் இருவரும் குடிநீர் கேன் விநியோகிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமணன் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில், வள்ளியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் யுவராஜை லட்சுமணன் வாடகைக்கு தங்க வைத்துள்ளார்.
இந்தநிலையில் யுவராஜின் வீடு நேற்று நீண்ட நேரமாகியும் திறக்காததால், வீட்டின் உரிமையாளர் வள்ளியம்மாள், ஜன்னல் வழியாக பார்த்த போது, உள்ளே யுவராஜ் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
உடனே இதுகுறித்து அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அவிநாசி போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது யுவராஜின் கழுத்து மற்றும் தோள் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரை கொலை செய்த மர்மநபர்கள், எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணையை தொடங்கினர். கொலையாளியை கண்டுபிடிக்க மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மோப்ப நாயானது யுவராஜ் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது நண்பரான லட்சுமணன் வீட்டிற்கு சென்று வட்டமிட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் லட்சுமணனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் லட்சுமணனின் மகன் அருண்குமார், யுவராஜை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அருண்குமாரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் தென்காசி கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் அவிநாசிக்கு அழைத்து வருகின்றனர்.
யுவராஜ் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கும் போது பரபரப்பு தகவல் கிடைத்தது. யுவராஜ், லட்சுமணன் வீட்டில் தங்கியிருந்த போது லட்சுமணனுக்கும், யுவராஜ்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருண்குமார் கண் முன்பே யுவராஜ், லட்சுமணனையும், அவரது மனைவி கங்காவையும் அவதூறாக பேசியுள்ளார். இந்த பிரச்சனை காரணமாக யுவராஜை லட்சுமணன் தனியாக வீடு எடுத்து தங்க வைத்துள்ளார்.
இதனிடையே பெற்றோரை அவதூறாக பேசியதால் யுவராஜ் மீது அருண்குமார் கோபத்தில் இருந்து வந்தார். இந்த பிரச்சனையில் நேற்று யுவராஜ் வீட்டிற்கு சென்ற அருண்குமார், யுவராஜின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபரை பள்ளி மாணவன் கொலை செய்த சம்பவம் அவிநாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவது ஆய்வு செய்யப்பட்டது
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.254.10 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட தென்னம்பாளையம் மீன் சந்தை, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தில் ரூ.17.71 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகன நிறுத்தும் இடம், மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் எதிரில் ரூ.27.05 கோடியில் மேம்படுத்தப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் பணி ,திருப்பூர் மாநகராட்சி 3-ம் மண்டலம் மற்றும் 4-ம் மண்டலப்பகுதிகளில் ரூ.207.15 கோடி மதிப்பீட்டில் 17எண்ணிக்கையிலான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல் மற்றும் குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவது ஆய்வு செய்யப்பட்டது.
இதில் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் எதிரில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 10,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, செல்லாண்டியம்மன் துறை ராஜீவ் நகர்பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 10,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அமர்ஜோதி கார்டன் காளியப்பா நகர் பகுதிகளில் அம்ரூத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 20,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
மேலும் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் எதிரில் கட்டப்பட்டு வரும் கால்நடை பன்முக மருத்துவமனை பணியும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், திருப்பூர் மாநகராட்சியை பொறுத்த வரையில் குடிநீர்த்திட்டப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இப்பணிகள் முடிந்த பிறகு மாநகர பகுதிகளில் குடிநீர்த்தட்டுப்பாடின்றி பொது மக்களுக்கு வழங்குகின்ற சூழ்நிலை ஏற்படும். இனி வரும் காலங்களில் குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அடிப்படை தேவைகள் குறித்து தனி கவனம் செலுத்தவும், நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது துணை மேயர் பாலசுப்பிர மணியன், தலைமைப்பொறியாளர் (பொறுப்பு) செல்வவிநாயகம், உதவி ஆணையர் வினோத், செயற்பொறியாளர்கள் வாசுகுமார், கண்ணன், உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வியாபாரிகளிடம் அபராதம் விதிப்பதை வணிகவரித்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்
- கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
திருப்பூர் :
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் சோதனை கொள்முதல் என்ற பெயரில் வியாபாரிகளிடம் அபராதம் விதிப்பதை வணிகவரித்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும். புகையிலை பொருட்கள் விற்பனையில் பழைய வழக்குகளை காட்டி வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளை முடக்குவதை நிறுத்த வேண்டும். சுதேசி வியாபாரத்தை ஊக்குவிக்க வேண்டும். கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி ரெயில் இயக்கப்பட வேண்டும். வியாபார ரீதியாக பணப்புழக்கம் உள்ள திருப்பூரில் அடிக்கடி வழிப்பறி நடப்பதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- மின் மீட்டரை எரித்து மோசடி செய்த சம்பவம் தொடர்பாக நடைபெற உள்ள விசாரணையை ரத்து செய்ய வேண்டும்
- விசாரணைக்கு நியமிக்கப்பட்ட அதிகாரி மீது பல்வேறு புகார்கள் உள்ளன.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருப்பூரில் மின் மீட்டரை எரித்து மோசடி செய்த சம்பவம் தொடர்பாக நடைபெற உள்ள விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை விசாரணை அதிகாரியை மாற்ற வில்லை. விசாரணைக்கு நியமிக்கப்பட்ட அதிகாரி மீது பல்வேறு புகார்கள் உள்ளன. ஏற்கனவே பல்வேறு புகார்களுக்கு ஆளான ஒரு அதிகாரியை அதே புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்டது சட்டவிரோத செயலாகும். திருப்பூர் டவுன் தெற்கு மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் மின்சார மீட்டரை எரித்து பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. புகார் தொடர்பாக அரசிற்கு வர வேண்டிய ரூ.17 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்டவர்களில் முதல் கட்டமாக 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த மோசடிகளில் தொடர்புடைய மேலும் 6 பேர் மீது நடவடிக்கை எடுத்து அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கையின் மூலமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.விசாரணை அதிகாரியை மாற்றி நியாயமான முறையில் விசாரணை நடைபெற நடுநிலையாக செயல்படும் ஒருவரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- இன்று காலை கிரஷருக்கு பயன்படுத்தும் சிலிண்டரை வண்டியில் இருந்து தொழிலாளர்கள் சிலர் இறக்கி கொண்டிருந்தனர்.
- தாசநாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான கிரஷர் நிறுவனம் உள்ளது.
இந்தநிலையில் இன்று காலை கிரஷருக்கு பயன்படுத்தும் சிலிண்டரை வண்டியில் இருந்து தொழிலாளர்கள் சிலர் இறக்கி கொண்டிருந்தனர். அப்போது சிலிண்டர் வெடித்து திடீரென பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் தாசநாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுத்தை விவசாய தோட்டத்தில் புகுந்து அவ்வப்போது பட்டிகளில் உள்ள ஆடுகளை தூக்கி சென்று வருகிறது
- வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்
காங்கயம் :
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை விவசாய தோட்டத்தில் புகுந்து அவ்வப்போது பட்டிகளில் உள்ள ஆடுகளை தூக்கி சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தாயம்பாளையம் விவசாயி பழனிசாமி (வயது 63) என்பவரது தோட்டத்து பட்டியில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன.
பழனிசாமி வீட்டில் தூங்கி கொண்டு இருந்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பழனிசாமி ஆட்டுபட்டியை பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை , ஆடு ஒன்றை கவ்விக்கொண்டு அங்கிருந்து ஓடி மறைந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.எனினும் சிறுத்தை தென்படவில்லை.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த 6 மாதமாக இந்த சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. மலையின் 4 பக்கங்களிலும் உள்ள தோட்டங்களில் பட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகளை இரவு நேரங்களில் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. பழனிசாமி தோட்டத்தில் ஆட்டை வேட்டையாடி சென்ற சிறுத்தை சேமலைகவுண்டர் தோட்டத்திற்கு அதிகாலை 3 மணியளவில் வந்துள்ளது.
அப்போது அங்கிருந்த ஆடுகள்,மாடுகள் அலறல் சத்தம் கேட்டு சேமலைகவுண்டர் வீட்டில் மின்விளக்குளை போட்டு, டார்ச் லைட் அடித்து ஆடுகளை பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை ஒன்று அங்கிருந்து ஓடியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அவரது ஆடுகளை சிறுத்தை ஒன்றும் செய்யவில்லை. இதுவரை 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடியுள்ளது தங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
இந்த சிறுத்தை சுற்றித்திரியும் ஊதியூர் மலையை சுற்றி சுமார் 940 ஏக்கர் காட்டுப்பகுதி உள்ளது.பொதுவாக சிறுத்தை இரவு 7 மணிக்கு மேல்தான் வெளியே வந்து வேட்டையாடுகிறது. காலை 6 மணியில் இருந்து மாலை வரை வெளியே வருவதில்லை. இதனால் அது எங்கள் பார்வையில் படவில்லை. பல இடங்களில் கூண்டுகள் அமைத்தும் அதில் சிக்காமல் இந்த சிறுத்தை சுற்றி திரிகிறது. சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு இந்த சிறுத்தை விரைவில் பிடிக்கப்படும் என்றனர்.
- இந்த நாட்டு வெடியை, பழம் என நினைத்து கடிக்கும் யானைகள் வாயில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழக்கின்றன
- யானைகள் தமிழகத்துக்குள் வந்து உயிரிழப்பதையும், வனத்துறையினர் கண்டறிந்தனர்.
உடுமலை :
காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துவதை தடுக்க அவுட்டுக்காய் எனும் நாட்டுவெடியை சிலர் பயன்படுத்துகின்றனர். இந்த நாட்டு வெடியை, பழம் என நினைத்து கடிக்கும் யானைகள் வாயில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழக்கின்றன.
இந்நிலையில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள, கேரள மாநிலப்பகுதிகளில் அதிக அளவு அவுட்டுக்காய் வெடி பயன்படுத்தப்படுவதாகவும், அங்கு காயமடையும் யானைகள் தமிழகத்துக்குள் வந்து உயிரிழப்பதையும், வனத்துறையினர் கண்டறிந்தனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில், அவுட்டுக்காய் பயன்பாடு அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது. அம்மாநில வனத்துறைக்கு இது குறித்து தெரிவிக்க ப்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்ந்து கூட்டு ரோந்து, கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. அவுட்டுக்காய், நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். மீறி பயன்படுத்தினால் அவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என்றனர்.
- மொத்தம் ரூ.9 லட்சத்து 31 ஆயிரத்துக்கு விற்பனை நடந்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
- ஏலத்துக்கு விவசாயிகள் 463 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
அவிநாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.9.31 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள் 463 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில், ஆா்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ.7,355 வரையிலும், மட்டரக (கொட்டு ரகம்) பருத்தி குவிண்டால் ரூ.2, 000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம் போனது. ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.9 லட்சத்து 31 ஆயிரம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
- அடிக்கடி நூல் விலை ஏற்றத்தால் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது.
- அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனத்துக்கு நான் பதில் கூற முடியாது
திருப்பூர்:
ஒரே நாடு ஒரே தோ்தல் சாத்தியமில்லை என்று மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சித் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.இது தொடா்பாக அவர் திருப்பூரில் நிருபர்களிடம் கூறும் போது, திருப்பூரில் அடிக்கடி நூல் விலை ஏற்றத்தால் பின்னலாடை தொழில் மிகவும் நலிவடைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். இதற்கு அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்ய வேண்டும்.அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனத்துக்கு நான் பதில் கூற முடியாது. ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது சாத்தியமற்றது. இந்தியா என்ற பெயரை மாற்ற வேண்டும் எனக் கூறியிருப்பது மக்களைத் திசை திருப்பக் கூடிய ஒரு செயலாகும். நாம் இந்தியா்கள் என்று உலக நாடுகளுக்கு பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம், அதை மாற்ற வேண்டும் என்பது தவறான செயல் என்றாா்.
- அடிவார பகுதியில் வனவிலங்குகள் தங்கும் பகுதி தூய்மைப் படுத்தப்பட்டுள்ளது.
- விவசாயிகளின் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தூய்மை பணி கைவிடப்பட்டது.
உடுமலை:
உடுமலை மாவட்ட வன அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி வனப் பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் தலைமை வகித்தார்.அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் கூறியதாவது;- வளையபாளையம் பகுதியில் குரங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அவை தென்னை மரங்களில் இளநீர் பதத்தில் உள்ள காய்களை பறித்து சேதப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரையில் ஏராளமான
தேங்காய்கள் வீணாகி உள்ளது. அதற்கு கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்று அதிகாரி தெரித்தார். மேலும் காண்டூர் கால்வாய் அருகே வீட்டு மனை இடங்கள் கொடுப்பதற்காக மணல் பாங்கான மலைக் குன்று ஒன்றில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளின் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அந்த பணி கைவிடப்பட்டது.
அடிவார பகுதியில் வனவிலங்குகள் தங்கும் பகுதி தூய்மைப் படுத்தப்பட்டதால் மான் காட்டுப்பன்றி உள்ளிட்டவை விளைநிலங்களுக்கு புகுந்து வருகிறது. அதை தடுப்பதற்கும் தூய்மைப்படுத்திய நபர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
மேலும் காண்டூர் கால்வாயின் குறுக்காக கட்டப்பட்டுள்ள உபயோகம் இல்லாத பாலத்தின் வழியாக மான்,காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வருகிறது. இதனால் அந்தப் பாலத்தை அடைத்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.இது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி வனப்பாதுகாவலர் தெரிவித்தார்.






