என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெற்றோரை அவதூறாக பேசியதால் பனியன் நிறுவன ஊழியரை கழுத்தை அறுத்து கொன்ற பள்ளி மாணவன்
    X

    பெற்றோரை அவதூறாக பேசியதால் பனியன் நிறுவன ஊழியரை கழுத்தை அறுத்து கொன்ற பள்ளி மாணவன்

    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யுவராஜ் குடிநீர் கம்பெனியில் இருந்து வேலையை விட்டு விட்டு, அவிநாசி அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
    • கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமணன் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில், வள்ளியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் யுவராஜை லட்சுமணன் வாடகைக்கு தங்க வைத்துள்ளார்.

    அவிநாசி:

    தென்காசியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசிராயன் கோவில் காலனி 4-வது வீதியில் தனது மனைவி கங்கா, 10-ம் வகுப்பு படித்து வரும் மகன் அருண்குமார்(16) மற்றும் மகள் ஜோதி(10) ஆகியோருடன் வசித்து வருகிறார். மேலும் அவிநாசி பகுதியில் குடிநீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இந்தநிலையில் அங்குள்ள சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சிங்காரச்சோலை பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் யுவராஜ்(வயது 32) என்பவரோடு லட்சுமணனுக்கு நட்பு ஏற்பட்டது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யுவராஜ் குடிநீர் கம்பெனியில் இருந்து வேலையை விட்டு விட்டு, அவிநாசி அருகே உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது தங்குவதற்கு இடமில்லாததால் யுவராஜை, லட்சுமணன் தனது வீட்டில் கடந்த 3 மாதங்களாக தங்க வைத்துள்ளார். மேலும் இருவரும் குடிநீர் கேன் விநியோகிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லட்சுமணன் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில், வள்ளியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் யுவராஜை லட்சுமணன் வாடகைக்கு தங்க வைத்துள்ளார்.

    இந்தநிலையில் யுவராஜின் வீடு நேற்று நீண்ட நேரமாகியும் திறக்காததால், வீட்டின் உரிமையாளர் வள்ளியம்மாள், ஜன்னல் வழியாக பார்த்த போது, உள்ளே யுவராஜ் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    உடனே இதுகுறித்து அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அவிநாசி போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது யுவராஜின் கழுத்து மற்றும் தோள் பகுதிகளில் வெட்டுக்காயங்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் யுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவரை கொலை செய்த மர்மநபர்கள், எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணையை தொடங்கினர். கொலையாளியை கண்டுபிடிக்க மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    மோப்ப நாயானது யுவராஜ் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது நண்பரான லட்சுமணன் வீட்டிற்கு சென்று வட்டமிட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் லட்சுமணனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

    போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் லட்சுமணனின் மகன் அருண்குமார், யுவராஜை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அருண்குமாரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் அவர் தென்காசி கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் அவிநாசிக்கு அழைத்து வருகின்றனர்.

    யுவராஜ் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கும் போது பரபரப்பு தகவல் கிடைத்தது. யுவராஜ், லட்சுமணன் வீட்டில் தங்கியிருந்த போது லட்சுமணனுக்கும், யுவராஜ்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருண்குமார் கண் முன்பே யுவராஜ், லட்சுமணனையும், அவரது மனைவி கங்காவையும் அவதூறாக பேசியுள்ளார். இந்த பிரச்சனை காரணமாக யுவராஜை லட்சுமணன் தனியாக வீடு எடுத்து தங்க வைத்துள்ளார்.

    இதனிடையே பெற்றோரை அவதூறாக பேசியதால் யுவராஜ் மீது அருண்குமார் கோபத்தில் இருந்து வந்தார். இந்த பிரச்சனையில் நேற்று யுவராஜ் வீட்டிற்கு சென்ற அருண்குமார், யுவராஜின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபரை பள்ளி மாணவன் கொலை செய்த சம்பவம் அவிநாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×