என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊதியூர் மலைப்பகுதியில் 6 மாதமாக பதுங்கி அட்டகாசம் செய்யும் சிறுத்தை - விவசாயிகள் கவலை
    X

    கோப்புபடம்

    ஊதியூர் மலைப்பகுதியில் 6 மாதமாக பதுங்கி அட்டகாசம் செய்யும் சிறுத்தை - விவசாயிகள் கவலை

    • சிறுத்தை விவசாய தோட்டத்தில் புகுந்து அவ்வப்போது பட்டிகளில் உள்ள ஆடுகளை தூக்கி சென்று வருகிறது
    • வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை விவசாய தோட்டத்தில் புகுந்து அவ்வப்போது பட்டிகளில் உள்ள ஆடுகளை தூக்கி சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தாயம்பாளையம் விவசாயி பழனிசாமி (வயது 63) என்பவரது தோட்டத்து பட்டியில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன.

    பழனிசாமி வீட்டில் தூங்கி கொண்டு இருந்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பழனிசாமி ஆட்டுபட்டியை பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை , ஆடு ஒன்றை கவ்விக்கொண்டு அங்கிருந்து ஓடி மறைந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.எனினும் சிறுத்தை தென்படவில்லை.

    இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    கடந்த 6 மாதமாக இந்த சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. மலையின் 4 பக்கங்களிலும் உள்ள தோட்டங்களில் பட்டிகளில் அடைக்கப்பட்டுள்ள ஆடுகளை இரவு நேரங்களில் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. பழனிசாமி தோட்டத்தில் ஆட்டை வேட்டையாடி சென்ற சிறுத்தை சேமலைகவுண்டர் தோட்டத்திற்கு அதிகாலை 3 மணியளவில் வந்துள்ளது.

    அப்போது அங்கிருந்த ஆடுகள்,மாடுகள் அலறல் சத்தம் கேட்டு சேமலைகவுண்டர் வீட்டில் மின்விளக்குளை போட்டு, டார்ச் லைட் அடித்து ஆடுகளை பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை ஒன்று அங்கிருந்து ஓடியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அவரது ஆடுகளை சிறுத்தை ஒன்றும் செய்யவில்லை. இதுவரை 10-க்கும் மேற்பட்ட கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடியுள்ளது தங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    இந்த சிறுத்தை சுற்றித்திரியும் ஊதியூர் மலையை சுற்றி சுமார் 940 ஏக்கர் காட்டுப்பகுதி உள்ளது.பொதுவாக சிறுத்தை இரவு 7 மணிக்கு மேல்தான் வெளியே வந்து வேட்டையாடுகிறது. காலை 6 மணியில் இருந்து மாலை வரை வெளியே வருவதில்லை. இதனால் அது எங்கள் பார்வையில் படவில்லை. பல இடங்களில் கூண்டுகள் அமைத்தும் அதில் சிக்காமல் இந்த சிறுத்தை சுற்றி திரிகிறது. சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு இந்த சிறுத்தை விரைவில் பிடிக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×