என் மலர்
திருப்பூர்
- உடுமலை கச்சேரி வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
உடுமலை :
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் விலைவாசி உயர்வை குறைத்திடவும், பெட்ரோல் டீசல் கியாஸ் விலையை பாதியாக குறைக்கவும், அரசு துறைகளை தனியாருக்கு விற்க கூடாது , உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி., வரியை திரும்ப பெற வேண்டும், சிறு குறு தொழில்களை பாதுகாத்திட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்திற்கு முழுமையாக நிதி ஒதுக்க வேண்டும் , விவசாய விளை பொருட்களுக்கு நியாயமான விலையை தீர்மானித்திட வேண்டும், பொதுவிநியோக திட்டத்தை பலப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உடுமலை கச்சேரி வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து ஊர்வலமாக சென்று தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடுமலை போலீசார் 181 பெண்கள் உட்பட 283 பேரை கைது செய்தனர்.பின்னர் அவர்கள் அனைவரும் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதேபோன்று தளி பகுதிக்கு உட்பட்ட பள்ளபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 52 பெண்கள் உட்பட 130 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து ஜல்லிபட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.பின்னர் மாலையில் விடுவித்தனர். உடுமலை மற்றும் தளி பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.
- ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செயல்பாடு குறித்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்படுகிறது.
- அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த ஒரு வார காலமாக ஆய்வு நடத்தப்படுகிறது.
உடுமலை :
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் திறன், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செயல்பாடு குறித்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்படுகிறது.
முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஆய்வாளர், உதவி திட்ட அலுவலர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உள்ளடக்கிய குழுவினர் இந்த ஆய்வை மேற்கொள்வர்.அவ்வகையில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுப்பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த ஒரு வார காலமாக ஆய்வு நடத்தப்படுகிறது.
இது குறித்து குழுவினர் கூறியதாவது:-
ஆய்வின் போது வகுப்பறைக்கு நேரடியாக சென்று மாணவர்களின் கற்றல் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் சோதிக்கப்படும். ஆசிரியர்கள் எவ்வாறு பாடம் நடத்துகின்றனர் என்பது குறித்தும் கேட்டறியப்படும்.
இது தவிர அலுவலர்களின் செயல்பாடு, பள்ளி வளாகத் தூய்மை, கழிவறை தூய்மை, குடிநீர் வசதி, பதிவேடுகள் பராமரிப்பு, எமிஸ் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகள் குறித்தும் பரிசோதிக்கப்படும்.குறைகள் கண்டறியப்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்படும். அதன்படி உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில் மாதந்தோறும் 3 பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ராஜ்மோகன்குமார் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
- அவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு மாவட்ட முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர் ராஜ்மோகன்குமார். இவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைதானதையடுத்து தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது கட்சியின் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்ததையடுத்து ராஜ்மோகன்குமார் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் ராஜ்மோகன்குமார் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். அவரோடு கட்சியினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசு திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவு பயிற்சி வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன,
- நெசவாளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் நேற்று கைத்தறி நெசவு பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. சர் பிட்டி தியாகராயர் தொழிற்சங்க பொதுச் செயலாளர் கே.ஜி. நட்ராஜ் முன்னிலையில், சேலம் நெசவாளர் சேவை மைய இணை இயக்குனர் கார்த்திகேயன் கலந்து கொண்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
மத்திய அரசு திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, நெசவாளர்களுக்கு 90 சதவீத மானியத்துடன் தறி மற்றும் உபகரணங்கள் , நெசவாளர் தறி கூடம் அமைக்க ரூ.1லட்சத்து 20 ஆயிரம் மானியம் பெறவும், நெசவாளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
- 54 விவசாயிகள் கலந்து கொண்டு 57 ஆயிரத்து 424 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.50.59க்கும், குறைந்தபட்சம் ரூ.46.57க்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்று செல்கின்றனர்.
நேற்று வியாழக்கிழமை 54 விவசாயிகள் கலந்து கொண்டு 57 ஆயிரத்து 424 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியை சேர்ந்த 7 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.50.59க்கும், குறைந்தபட்சம் ரூ.46.57க்கும் கொள்முதல் செய்தனர்.
நேற்று மொத்தம் ரூ.27லட்சத்து 63ஆயிரத்து 553க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
- பெருமாநல்லூா் பாரதி நகா் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
- தாமோதரனின் (37) இருசக்கர வாகனத்தின் மீது சேதுராமன் இருசக்கர வாகனம் மோதியது.
பெருமாநல்லூர்:
அவிநாசியை அடுத்த பெருமாநல்லூா் எஸ்.எஸ்.நகரைச் சோ்ந்தவா் சேதுராமன் (வயது 43). இவா், ஊத்துக்குளி ஒன்றியம், காவுத்தம்பாளையம் ஊராட்சியில் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், இவா் பெருமாநல்லூா் பாரதி நகா் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த பெருமாநல்லூா் லட்சுமி காா்டன் பகுதியை சோ்ந்த திருமூா்த்தி மகன் தாமோதரனின் (37) இருசக்கர வாகனத்தின் மீது சேதுராமன் இருசக்கர வாகனம் மோதியது.
இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா். திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சேதுராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாநல்லூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
- வேனில் சுமார் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
- முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது பள்ளி வேன் மோதியது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள குங்குமம் பாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி வாகன ஓட்டுனநராக கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த மணி என்பவரது மகன் பிரவீன் குமார் (வயது 31) என்பவர் கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக்குச் சொந்தமான வேனில் சுமார் 15க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் - பல்லடம் மெயின் ரோட்டில் பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கரையாம்புதூர் என்ற இடம் அருகே சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த கார் மீது பள்ளி வேன் மோதியது. இதில் காரின் பின்புற கண்ணாடி உடைந்தது. பள்ளி வேனுக்குள் இருந்த குழந்தைகள் நிலை தடுமாறி அய்யோ அம்மா என்று அலறினர். இந்த நிலையில் வேனை நிறுத்தாமல் மீண்டும் வேகமாக பிரவீன் குமார் செலுத்தியுள்ளார்.
இதை அடுத்து விபத்து ஏற்பட்ட கார் உரிமையாளர், பள்ளி வேனை துரத்தி ராயர் பாளையம் என்ற இடத்தில் மடக்கி பிடித்தார். பின்னர் வேனிலிருந்து ஓட்டுனரை இறங்கச் செய்தபோது, அவர் குடிபோதையில் நிதானம் இன்றி இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்த பொது மக்களிடம் இது குறித்து தெரிவித்தார்.
அவர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுநரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். வேறு வாகனம் வரவழைக்கப்பட்டு குழந்தைகள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர், அதிர்ஷ்டவசமாக சிறிய விபத்தினால் பள்ளி வேனில் இருந்த குழந்தைகள் உயிர் தப்பினர். இதுவே குடிபோதை ஓட்டுனரால் பெரிய விபத்து ஏற்பட்டு இருந்தால், வேனில் இருந்த 15 குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும் என அதிர்ச்சியுடன் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
- அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.
- மதுபான கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பல்லடம்:
பல்லடம்- செட்டிபாளையம் ரோடு பிரிவில் அரசு மதுபான கடை எண் 1830 செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதால், அந்தக் கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பல்லடம் தாசில்தார் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி மதுபான கடையை மூட உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மதுபான கடையை அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி அதே பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் அமைக்க, இடம் ஆய்வு செய்யப்பட்டது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், அந்தப் பகுதியில் மீண்டும் மதுபான கடை அமைக்க கூடாது. அதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
- போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், முத்தூர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகே காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவத்தன்று வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார், முத்தூர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கந்தசாமி என்பவர் தோட்டத்தில் வேலம்பாளையத்தை சேர்ந்த காங்குசாமி (வயது 68), துரைசாமி (51) ,ரவி (60) ,சுப்பிரமணி (52) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ. ஆயிரத்து 300ஐ கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நேற்று வழக்கம்போல் மில்லில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
- ஒரு தனியார் நூல் மில்லில் புஷ்பா (வயது 33) என்பவர் வேலை செய்து வருகின்றார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் செங்காளிபாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் புஷ்பா (வயது 33) என்பவர் வேலை செய்து வருகின்றார். புஷ்பா நேற்று வழக்கம்போல் மில்லில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது ரோட்டில் வந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதில் அலறி துடித்த புஷ்பா அருகில் இருந்தவர்களுடைய உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்று உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
- சொந்த ஊரான தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தனர்.
- அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவினாசி:
அவினாசி அருகேயுள்ள சின்னேரிப்பாளையத்தை சேர்ந்தவர் அழகேசன் (வயது37). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் சொந்த ஊரான தூத்துக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு இன்று அதிகாலை சின்னேரிப்பாளையம் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் நகை திருட்டு போயிருந்தது. இது குறித்து அழகேசன் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பல்லடம் பஸ் நிலையம் முன்பாக சென்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
பல்லடம்:
பல்லடம் பஸ் நிலையம் முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்திட ஒன்றிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.முன்னதாக பல்லடம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு இருந்து பேரணி தொடங்கி பல்லடம் பஸ் நிலையம் முன்பாக சென்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி,மற்றும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், பவித்ரா தேவி மற்றும் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம், பொங்கலூர் ஒன்றிய செயலாளர் பி. பாலன் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக வை.பழனிசாமி, கே .வி.சுப்பிரமணியம் வாலிபர் சங்கம் சார்பாக சி.முருகேஷ், சிவக்குமார், நாகேந்திரன் இந்திய மாணவர் சங்கம் சார்பாக பிரவீன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.






