என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தூத்துக்குடியில் உள்ள பெற்ரோர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றார்.
    • திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள வள்ளியம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் மோகன்ராஜ்( 28 ). தூய்மை பணியாளர் இவரது மனைவி தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த இந்திரா (21). இவர்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். இந்திரா மீண்டும் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் பிரசவத்திற்காக தூத்துக்குடியில் உள்ள பெற்ரோர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றார். மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. மனைவி மற்றும் மகளை ஊருக்கு அழைத்து வருவதற்காக மோகன்ராஜ் தூத்துக்குடிக்கு காரில் சென்றார். அங்கிருந்து அதிகாலை உடுமலைப்பேட்டைக்கு காரில் புறப்பட்டு வந்தனர். காரில் மோகன்ராஜ், இந்திரா, மோகன், 3 மாத பெண் குழந்தை, இந்திராவின் தாயார் பேச்சியம்மாள்( 43), உறவினர் வன்னியராஜ் (55) ஆகியோர் இருந்தனர். பழனி உடுமலை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்திரா, வன்னியராஜ் ,மோகன்ராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். கார் டிரைவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் காயம் இன்றி தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாமிநாதபுரம் போலீசார் பேச்சியம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருப்பூர் மாவட்டம் காங்கயம் வாய்க்கால் மேடு பகுதியில் தனியார் வாடகை கட்டிடத்தில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இயங்கி வந்துள்ளது.
    • திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் உத்தரவின்படி தனிப்படை போலீசார் இந்த பணம் மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் வாய்க்கால் மேடு பகுதியில் தனியார் வாடகை கட்டிடத்தில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக இயங்கி வந்துள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் வேலை பார்த்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் போல குழு கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழிற்கடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி விளம்பரம் செய்தது. அதன்படி இந்த நிதி நிறுவனத்தில் உறுப்பினராக பதிவு செய்தால் மட்டுமே கடன் உண்டு. தனிநபருக்கு பதிவு கட்டணமாக ரூ.1,341-ம், 10 பேர் கொண்ட குழு என்றால் ரூ.13 ஆயிரத்து 400-ம் செலுத்த வேண்டும் என்று நிபந்தனைகளை அந்த நிதி நிறுவனம் கூறியது.

    கடன் கிடைக்கும் என்ற ஆசையில் காங்கயம், வெள்ளகோவில், திருப்பூர் பகுதியை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பெண்களும், குழுவினரும் பதிவுக்கட்டணம் செலுத்தினர். பதிவுக்கட்டணம் செலுத்தியவர்கள் கடன் கேட்டபோது அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சத்திற்கு ரூ.5 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஒரு சில பெண்கள் ரூ.5 லட்சம், ரூ.7 லட்சம் கடன் கேட்டு அதற்கான முன்பணமாக ரூ.25 ஆயிரமும், ரூ.35 ஆயிரமும், சிலர் ரூ.70 ஆயிரமும் செலுத்தினர்.

    ஆனால் இந்த பணம் செலுத்திய பின்னரும் அந்த நிறுவனம் கடன் கொடுக்கவில்லை. இதையடுத்து பணம் செலுத்திய பெண்கள் அந்த நிதி நிறுவனத்திற்கு சென்றனர். அப்போது அந்த நிதி நிறுவனம் சார்பில் தனியார் வங்கி காசோலை கொடுக்கப்பட்டது. அந்த காசோலையை வங்கிக்கு சென்று மாற்ற முயன்றபோது அந்த வங்கி கணக்கில் பணம் இல்லை என்று ெதரியவந்தது. இதையடுத்து அந்த பெண்கள் காங்கயத்தில் உள்ள அந்த நிதி நிறுவனத்திற்கு திரண்டு வந்தனர். ஆனால் அந்த நிதி நிறுவன அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. ஊழியர்களின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. நிதி நிறுவன பெயர் பலகையை கூட காணவில்லை. நேரம் செல்ல செல்ல அங்கு ஏராளமானவர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் காங்கயம் போலீசில் புகார் கொடுத்தனர்.

    இந்த மோசடி குறித்து போலீசார் கூறுகையில்,

    இந்த நிதி நிறுவனத்தின் கிளைகள் தமிழகத்தில் காங்கயம், அவினாசி, சோமனூர், பொன்னமராவதி, அன்னூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை என 7 இடங்களில் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகமானது தர்மபுரியில் உள்ளது. இந்த நிதி நிறுவனம் கடன் வழங்குவதாக கூறி எத்தனை பேரிடம் மோசடி செய்தது என்று தெரியவில்லை. காங்கயம் அலுவலகத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்து இருக்கலாம். இதனால் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஜாமீன் இல்லாமல் பல லட்சம் கடன் கிடைக்கும் என்ற ஆசையில் ஏராளமானவர்கள் பணம் கட்டி ஏமாந்து இருக்கலாம். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் உத்தரவின்படி தனிப்படை போலீசார் இந்த பணம் மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மாசுபட்டு விவசாயம், குடிநீர் ஆதாரம், சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்,
    • தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறி இந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    காங்கயம்:

    பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் மூலம் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கரூர் வரை சாலையோரமாகவும், விவசாயம் இல்லாத நிலங்கள் வழியாகவும் இரும்பு குழாய் பதித்து எரிவாயு மற்றும் குருடு ஆயில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள பாப்பம்பாளையம் கிராம பகுதியில் நிலத்தின் கீழ் ஏற்கனவே செல்லும் இரும்பு குழாயில் இருந்து புதிதாக பெங்களூரு, தேவனகொந்தி வரை 360 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக குழாய் பதித்து ஆயில் கொண்டு செல்ல பாரத் பெட்ரோலிய நிறுவனம் திட்ட அறிக்கையை தயார் செய்து உள்ளது.

    அதன்படி இந்த குழாய் முத்தூர் அருகே சாந்தலிங்கபுரம், நம்பகவுண்டன்பாளையம், மலையத்தாபாளையம் பகுதி கீழ்பவானி பாசன விவசாய விளைநிலங்களில் சுமார் 10 அடி ஆழத்தில் 45 அடி அகலத்தில் குழிதோண்டி குழாய் பதித்து மேட்டுக்கடை வரை கொண்டு சென்று பின்னர் மீண்டும் சாலையோரத்தில் பெங்களூரு வரை கொண்டு செல்லப்படுகிறது.

    இதனால் வேளாண் நிலம் பாதிக்கப்படும் என்றும், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீர் மாசுபட்டு விவசாயம், குடிநீர் ஆதாரம், சுற்றுச்சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும், தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறி இந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் முத்தூர் பகுதி விவசாய விளை நிலங்களை ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் எம்.பி.யிடம் மாற்று வழியாக சாந்தலிங்கபுரத்தில் இருந்து சாலையோரம் வழியாக குழாய் பதித்து ந.கரையூர் ஓடை பாலம் வரை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட அ.கணேசமூர்த்தி எம்.பி. இதுபற்றி மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    இந்த நிலையில் பாரத் பெட்ரோலிய நிறுவன திட்ட தலைமை அதிகாரி ராபின் மற்றும் என்ஜினீயர்கள் குழுவினர் முத்தூர் கீழ்பவானி பாசன பகுதியில் குழாய் வழியாக ஆயில் கொண்டு செல்லப்பட உள்ள கீழ்பவானி பாசன விளை நிலங்களை நேரில் பார்வையிட்டனர். அப்போது எம்.பி. மற்றும் கீழ்பவானி பாசன விவசாயிகள் விளை நிலங்கள் வழியாக குழாய் பாதிக்கும் திட்டத்தை கைவிட்டு மாற்றுப்பாதையில் குழாய் அமைத்து ஆயில் கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் படி புதியதாக கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் சுகாதார சான்றிதழ் அவசியம் பெற வேண்டும்.
    • தமிழக அரசு உத்தரவின்படி உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து சுகாதார சான்றிதழ் பெற வேண்டும்.

    திருப்பூர்:

    வெள்ளகோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையிடம் இருந்து குடியேற்ற சான்றிதழ் பெறுவது அவசியம் என வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் படி புதியதாக கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் சுகாதார சான்றிதழ் அவசியம் பெற வேண்டும். அவ்வாறு சுகாதார சான்றிதழ் பெற்ற கட்டிடங்களுக்கு மட்டுமே வீட்டின் குடிநீர் வசதி மற்றும் மின் இணைப்பு, சொத்து வரி விதிப்புக்கான அனுமதி சான்றிதழ் பெற முடியும். இவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களிலும் நடைமுறையில் உள்ள சட்டம் ஆகும்.

    புதிய கட்டிடங்களில் முறையற்ற வகையில் கழிவுநீர் தேக்கம், கழிவு நீர் வெளியேற்றம், போதுமான குடிநீர் வசதி இல்லாதது, கழிவு நீர் பொருட்களை தேக்கி வைத்து முறையாக அப்புறப்படுத்தாதது, சுகாதார முறைப்படி கழிவுகளை அப்புறப்படுத்தாமல் இருப்பது போன்றவற்றால் அருகில் வசிப்பவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது மற்றும் நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு உத்தரவின்படி உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து சுகாதார சான்றிதழ் பெற வேண்டும்.

    சான்றிதழ் பெறுவதற்கான மாதிரி விண்ணப்பம் அந்தந்த ஊராட்சி அமைப்புகளிடம் இருக்கும் எனவும் கட்டுவதற்கு முன்பே அந்த விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய சுகாதார அலுவலகத்தில் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு முன்பும் மற்றும் கட்டியதற்கு பின்பும் ஆய்வு மேற்கொள்ளுவர். இதற்கு சான்றிதழ்களும் வழங்கப்படும். அதன் பின்னரே குடிநீர் இணைப்பு, சொத்து வரி விதிப்பு, மின் இணைப்பு நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6-வது தளத்தில் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    பஞ்சாலை தொழிலுக்கு (வேலை பழகுனர்கள் தவிர) குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் செயலாளராக கோவை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்), தற்சார்பு உறுப்பினர்களாக இணை இயக்குனர் பஞ்சாலை சென்னை, இணை இயக்குனர்-1 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் திருப்பூர், புள்ளியியல் உதவி இயக்குனர், பொருளியல் மற்றும் புள்ளியல்துறை கோவை ஆகியோர் உள்ளனர். தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த குழுவால் வருகிற 17-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் பஞ்சாலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து விவரங்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவின் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 17-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6-வது தளத்தில் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர், வேலையளிப்போர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழுவினரிடம் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.

    • காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை இரண்டாமாண்டு மாணவா் ஜெயராமன் 52 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டாா்.
    • மாணவா் ஜெயராமனுக்கு கல்லூரி முதல்வா் நசீம்ஜான், பேராசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

     காங்கயம்:

    கோவையில் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் என்ற தனியாா் அமைப்பு சாா்பில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை இரண்டாமாண்டு மாணவா் ஜெயராமன் 52 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டாா். இதில் 150 கிலோ எடையை தூக்கி 3ம் இடம் பிடித்தாா். கடந்த வாரம் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு 3ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.போட்டியில் வெற்றிபெற்ற மாணவா் ஜெயராமனுக்கு கல்லூரி முதல்வா் நசீம்ஜான், பேராசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

    • அவிநாசி கருப்புசாமி, அந்தியூா் குணசேகரன், அவல்பூந்துறை செல்வம், சண்முகம் ஆகியோா் பயிற்சி வழங்கினா்.
    • பயிற்சி வகுப்பை அவிநாசி பேருராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தொடங்கி வைத்தாா்

    அவிநாசி:

    அவிநாசியில் பேரூராட்சி செயல் அலுவலா்களுக்கு தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி நடைபெற்றது.பயிற்சி வகுப்பை அவிநாசி பேருராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி தொடங்கி வைத்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் இந்துமதி தலைமை வகித்தாா்.இதில் அவிநாசி கருப்புசாமி, அந்தியூா் குணசேகரன், அவல்பூந்துறை செல்வம், சண்முகம் ஆகியோா் பயிற்சி வழங்கினா். தூய்மைப்பணியாளா்களின் விவரங்களை சேகரிப்பது, முக்கிய தூய்மைப் பணியாளா்களை கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.அவிநாசி, குன்னத்தூா் மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், பேரூராட்சிகளின் பரப்புரையாளா்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் பயிற்சி பெற்றனா்.

    • அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 -ந் தேதி நடைெபறவுள்ளது.
    • சிவாச்சாரியா்கள், அறங்காவலா் குழுவினா், உபயதாரா், கோவில் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
    • கடந்த காலங்களில் தொழில் துறைக்கு அதிக அளவில் சலுகைகள் வழங்கப்பட்டதால்தான் தொழில் வளா்ச்சி அடைந்தது.
    • தமிழ்நாடு தொழில்துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பினா், தொழில் துறையினா் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மின் கட்டண உயா்வை குறைக்க கோரி சென்னையில் அக்டோபா் 16 -ந் தேதி உண்ணாவிரதம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு அறிவித்துள்ளாது.

    இதுகுறித்து, தமிழ்நாடு தொழில் துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு மற்றும் நாடா இல்லா தறி நெசவாளா் சங்கத்தின் (சிஸ்வா) ஒருங்கிணைப்பாளா் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் மின் கட்டண உயா்வு காரணமாக ஜவுளி உற்பத்தியாளா்கள் அண்டை மாநிலங்களுடன் போட்டிபோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சோலாா் உள்பட மின் கட்டணங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    ஆனால், இங்கு எங்களது சொந்த கட்டடங்களின் மேல் சோலாா் அமைத்து பயன்படுத்தவும் கட்டணம் விதிக்கப்படுகிறது. தமிழகத்தில், கடந்த காலங்களில் தொழில் துறைக்கு அதிக அளவில் சலுகைகள் வழங்கப்பட்டதால்தான் தொழில் வளா்ச்சி அடைந்தது. தற்போது மின் கட்டண உயா்வால் தொழில்கள் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றன.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கவன ஈா்ப்பு கோரிக்கையில் கொமதேக., பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., கேட்ட கேள்விக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் தொழில் துறைக்கு எந்த விதத்திலும் உபயோகமாக இருக்காது.ஏற்கெனவே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதையே மீண்டும் சட்டப் பேரவையில் அமைச்சா் அறிவித்துள்ளாா்.

    எனவே, இப்பிரச்சனையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தொழில் துறையினரைப் பாதுகாக்க வேண்டும். அதுவரை தொழில்துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் போராட்டங்கள் தொடரும்.

    இந்நிலையில் அடுத்தகட்டமாக திட்டமிட்டபடி அக்டோபா் 16 -ந் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும். இதில், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகா்வோா் கூட்டமைப்பினா், தொழில் துறையினா் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றாா்.

    • திருப்பூர் கோல்டன் நகர் சமூக ஆர்வலரும், திருப்பூர் மாநகர் மாவட்ட சிறுபான்மைத் துறை செயல் தலைவருமான எஸ்.எம். முன்னா பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்தார்.
    • திருப்பூர் மாநகராட்சி 32 வது வார்டுக்கு உட்பட கோல்டன்நகர் பகுதியில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக தெரு மின் விளக்குகள் சரியாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 32 வது வார்டுக்கு உட்பட கோல்டன்நகர் பகுதியில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக தெரு மின் விளக்குகள் சரியாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று திருப்பூர் கோல்டன் நகர் சமூக ஆர்வலரும், திருப்பூர் மாநகர் மாவட்ட சிறுபான்மைத் துறை செயல் தலைவருமான எஸ்.எம். முன்னா பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து இருந்தார். மேலும் மாலை மலர் பத்திரிகையில் படத்துடன் செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. பின்னர் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவே, கோல்டன் நகர் உள்ளே நுழையும் பள்ளியின் முக்குப்பகுதி, சூர்யா காலனி 9- வது வீதியில் இரண்டு இடம், சூர்யா காலனி 2-வது வீதி இரண்டு இடம் மற்றும் அருவி பர்னிச்சர் கடை பகுதி. மேலும் கோல்டன்நகர் பாலத்தின் அருகே சஞ்சய் நகர். கோல்டன் நகர் பிரியும் பிரிவில் தெரு மின் விளக்கு ஒரு பக்கம் வெளிச்சத்துடனும் மறுபக்கம் இருட்டாகவும் இருந்த விளக்கு என அனைத்தும் பழுது பார்க்கப்பட்டு இப்போது பளீரென மின்னியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இதனை உடனடியாக சரி செய்த அதிகாரிகள் மற்றும் இதற்கு குரல் கொடுத்த சமூக ஆர்வலர் முன்னா மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

    • துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் கம்பிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.

    தாராபுரம், அக்.11-

    தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாராபுரத்தை அடுத்த செலாம் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் கம்பிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம் பாளையம், தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல்பாளையம், கொட்டமுத்தம்பாளையம், தேவநல்லூர், சந்தராபுரம், நாட்டுக்கல்பாளையம், கள்ளிவலசு, சிக்கன்னாபுரம், ரஞ்சிதா பாளையம், வட்டமலை புதூர் மற்றும் இதர பகுதிகளில் மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினர்.
    • சரியான நேரத்தில் கொள்ளையர்களை போலீசார் பிடித்ததால் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் பகுதிகளில் வழிப்பறி, நகைப்பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று இரவு திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உதவி ஆணையர் அனில் குமார் தலைமையில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் புதிய பேருந்து நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை நிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினர்.

    இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருப்பூர் ஸ்ரீநகரை சேர்ந்த பன்னீர்செல்வம், மும்மூர்த்தி நகரை சேர்ந்த மணிகண்டன், புதிய பேருந்து நிலைய பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பதும், அவர்களிடமிருந்து பட்டாக்கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர்கள் மீது கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைதான மணிகண்டன் ஒரு கொலை வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது, அங்கு திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குணசேகரன் மற்றும் பன்னீர்செல்வம், திருப்பூர் டூம்லைட் ரஹீம் , குமார் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நண்பர்களாக பழகி உள்ளனர். இதில் பன்னீர்செல்வம் தவிர மற்ற 4பேரும் சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்து விட்டனர்.

    பன்னீர்செல்வம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வந்துள்ளார். திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள தொழில் அதிபர் வீட்டில் காவலாளி இல்லாததை நோட்டமிட்டு அறிந்து வைத்திருந்த மணிகண்டன், சிறையில் இருந்து வந்த பன்னீர்செல்வம் மற்றும் நண்பர்கள் குணசேகரன், ரஹீம், குமார் ஆகியோருடன் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க சென்ற போது போலீசில் சிக்கியுள்ளனர்.

    தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் வேறு எங்கெல்லாம் கொள்ளையடித்துள்ளனர் என்பது போன்ற விவரங்கள் தெரிய வர வாய்ப்புள்ளது. சரியான நேரத்தில் கொள்ளையர்களை போலீசார் பிடித்ததால் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டுள்ளது.

    ×