என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • நலத்திட்ட உதவிகள் விழா கொண்டரசம்பாளையம் காடேஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் விரைவாக ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

     தாராபுரம் : 

    தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா கொண்டரசம்பாளையம் காடேஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். விழாவில் நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ.64 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கடனுதவி, வீட்டுமனைப்பட்டா மற்றும் சாதிச்சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் வழங்கினர். விழாவில் அமைச்சர் மு.ெப.சாமிநாதன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி எல்லாம் நிறைவேற்றி வருகிறார்கள். மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்து கழகக்கட்டுப்பட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவிகள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பஸ் பயண அட்டை வழங்கல் புதுமைப்பெண் என்கிற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் கயல்விழி பேசும்போது " இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து வீட்டுமனைப் பட்டா வழங்குதல் போன்ற பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பட்டாவை பெற்ற நபர்கள் அங்கே வீடு கட்டி குடியேறிய பட்சத்தில் அடிப்படை வசதிகள் விரைவாக ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    விழாவில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் புஷ்பா தேவி. தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், தாராபுரம் நகர்மன்ற தலைவர் கு.பாப்பு கண்ணன், தாசில்தார் கோவிந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.10 லட்சம் மதிப்பிலான நீர்த்தேக்கத் தொட்டியானது கட்டப்பட்டது.
    • விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார்.

    காங்கயம் : 

    காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பாப்பினி ஊராட்சி, வரதப்பம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பிலான 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியானது கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். குடிநீர் தொட்டியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிகரன், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவனாந்தன் உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூரை சேர்ந்த டாக்டர் கே.கிங் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு கொடுத்தார்.
    • ஜீனியஸ் எபிடெமிக்ஸ் என்ற விதிப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓமியோபதி மருந்தை கொடுக்கலாம்.

    திருப்பூர் : 

    தமிழ்நாடு அரசு ஓமியோபதி மருத்துவ முன்னாள் ஆலோசகரும், ஓமியோபதி டாக்டர்கள் சங்க முன்னாள் மாநில தலைவருமான திருப்பூரை சேர்ந்த டாக்டர் கே.கிங் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    200 ஆண்டுகளுக்கு முன்பே டெங்கு காய்ச்சலுக்கு ஓமியோபதி மருந்து பயன்பாட்டில் இருந்துள்ளது. ஓமியோபதி மருந்துகள் பெரும்பாலும் உள்நாட்டு, வெளிநாட்டு மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. குறைந்த செலவில் இந்த மருந்தை அதிகப்படியான மக்களுக்கு வழங்கி டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும். ஒரே வகையான நோய் அறிகுறியால் (எபிடெமிக்) பலரும் பாதிக்கப்படும்போது ஜீனியஸ் எபிடெமிக்ஸ் என்ற விதிப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓமியோபதி மருந்தை கொடுக்கலாம்.

    கடந்த 2009-ம் ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தபோது, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஏற்பாடு செய்திருந்த ஆயுஷ் மாநாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் ஓமியோபதி மருந்து பெட்டகத்தை நான் வழங்கினேன். விளக்கத்தை கேட்டு, மருத்துவர்கள் மத்தியில் தடுப்பு மருந்தை அமைச்சர் உட்கொண்டார்.

    தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அறியப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போர்க்கால அடிப்படையில் டெங்கு தொற்று பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கு ஓமியோபதி டாக்டர்கள் சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு, குணப்படுத்தும் ஓமியோபதி மருந்தின் குறிப்புகளை பெற்று உடனடியாக மக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை ஆணையாளர், இந்திய மருத்துவத்துறை ஆணையாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். இதை அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • திருப்பூர் தொழில் பங்களிப்போர்கள் குழு தொடக்க விழா திருப்பூர் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
    • 'திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கூட்டு முயற்சியால் தொழில் பங்களிப்போர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் பின்னலாடை தொழில் மற்றும் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அங்கமான திருப்பூர் தொழில் பங்களிப்போர்கள் குழு தொடக்க விழா திருப்பூர் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    விழாவுக்கு வந்திருந்தவர்களை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் வரவேற்றார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசும்போது, 'திருப்பூர் தொழில் பங்களிப்போர்கள் குழுவில் தொழிற்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலாளர் துறை, தொழிற்சாலை பாதுகாப்புத்துறை மற்றும் இங்கிலாந்தின் எத்திக்கல் டிரேடிங் இனிசியேட்டிவ் நிறுவனம் ஆகியவை உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான பிரச்சினைகளை களைவதற்கும், பின்னலாடை ஏற்றுமதி தொழில் மேம்பாட்டுக்கும் உதவும். உலக அளவிலான தொழில் பங்களிப்போர்கள் இந்த குழுவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி' என்றார்.

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசும்போது, 'திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கூட்டு முயற்சியால் தொழில் பங்களிப்போர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரின் வளர்ச்சிக்கு இந்த குழு மிகவும் உதவும்' என்றார்.

    எத்திக்கல் டிரேடிங் இனிசியேட்டிவ் நிறுவன முதன்மை இயக்குனர் பீட்டர் மெக்அலிஸ்டர் பேசும்போது, 'அனைத்து தரப்பினர் குழுவில் இணைந்திருப்பதால் தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக அமையும் என்றார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசும்போது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழில் நிலைத்து நிற்பதற்கு, அனைத்து காலங்களிலும் தொழிற்சங்கத்தினர் ஒத்துழைப்பு சிறப்பாக அமைந்துள்ளது. அந்த ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்றார்.தொ.மு.ச. பனியன் தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் பேசும்போது, 'திருப்பூர் பனியன் தொழில் மேம்பாட்டுக்கும், தொழில் பங்களிப்போர் குழு செயல்பாட்டுக்கும் என்றைக்கும் தொ.மு.ச. துணை நிற்கும்' என்றார். சேவ் அமைப்பு நிறுவனர் அலோசியஸ் இந்த குழுவுக்கு தங்கள் ஒத்துழைப்பு இருக்கும் என்றார்.

    முடிவில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் ராஜ்குமார் ராமசாமி நன்றி கூறினார்.இந்த கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கம், எம்.எல்.எப்., எச்.எம்.எஸ். சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • பாதுகாப்பான முறையில் வெடிபொருட்கள், பட்டாசுகளை வைத்து கையாள்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், இணை இயக்குனர்கள் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) சரவணன், புகழேந்தி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அதிகாரி அப்பாஸ், துணை இயக்குனர்கள் ஜெயமுருகன், சுதாகர் மற்றும் வெடிபொருட்கள், பட்டாசு தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, 'மாவட்டத்தில் வெடிபொருள் கிடங்குகள், பட்டாசு தொழிற்சாலைகள், பட்டாசு கடைகள் ஆகியவற்றில் பாதுகாப்பான முறையில் வெடிபொருட்கள், பட்டாசுகளை வைத்து கையாள்வதை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வப்போது தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு குழு ஏற்படுத்தி, அதன் முதல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் வெடிபொருட்கள் கையாள்வது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

    • மனமுடைந்து காணப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் நேற்று வீட்டில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மாணவனின் தற்கொலை குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சாமுண்டி புரத்தை சேர்ந்தவர் ஜெயராமன், பனியன் தொழிலாளி. இவரது மகன் மணிகண்டன் (வயது 19). இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மணிகண்டனின் தந்தை ஜெயராமன் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென பலியானார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் நேற்று வீட்டில் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது மணிகண்டன், வீட்டில் கடிதம் ஒன்று எழுதி வைத்திருப்பது தெரியவந்தது. அந்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அப்பா உயிரோடு இருக்கும் போது அவரது அருமை எனக்கு தெரியவில்லை. அவரின் சொல் பேச்சு கேட்காமல் எனது இஷ்டம் போல் இருந்தேன்.

    எனவே நான் எனது தந்தையிடம் நேரடியாக சென்று மன்னிப்பு கேட்க செல்கிறேன். எனது நண்பர்கள் உள்ளிட்ட யாரிடமும் விசாரிக்க வேண்டாம். தந்தை சென்ற இடத்திற்கு நானும் செல்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
    • சுருக்கமுறை திருத்தத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்கள் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில், 23.16 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கலெக்டர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் 27 -ந் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது.

    முன்னதாக, கடந்த ஜூன் மாதம் முதல் திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிதாக 7 ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு மாவட்ட மொத்த ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 2,520 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஸ்ட்ராங் ரூமில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, வரும் 27-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெறுகின்றன.

    அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நவம்பர் மாதம் 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில் சுருக்கமுறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    சுருக்கமுறை திருத்தத்தின்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தங்கள் நடைபெறுகிறது. இதற்காக, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர், தாசில்தார்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில், சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும்.

    Voters.eci.gov.in என்கிற இணையதளம், VSP மொபைல் செயலி வாயிலாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.சுருக்கமுறை திருத்தம் முடிவடைந்து வரும் 2024 ஜனவரி 5ந் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான பட்டியல் என்பதால், இந்தாண்டுக்கான வாக்காளர் சுருக்கமுறை திருத்த பணி முக்கியத்துவம் பெறுகிறது.

    வீடுவீடாக செல்லும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வதற்காக, இறந்தோர் விவரங்கள், பெயர் சேர்ப்பதற்காக புதியவர் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    வருகிற 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் ஒட்டப்படும். வாக்காளர்கள் தவறாமல் வரைவு பட்டியலை பார்வையிடவேண்டும். குடும்ப உறுப்பினர்களின் பெயர், புகைப்பட விவரங்கள், முகவரி, தொகுதி சரியாக உள்ளனவா என சரிபார்க்க வேண்டும். மாறுதல்கள் இருப்பின் சுருக்கமுறை திருத்த காலத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை சேர்ப்பதில், தேர்தல் கமிஷன் அதிக கவனம் செலுத்திவருகிறது. இதற்காக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 1-ந் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளைஞர்கள், தவறாமல், தங்களை வாக்காளராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

    • மருத்துவம னையில் திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.
    • டாக்டர்கள் மற்றும் சுகாதா ரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி அரசு மருத்துவம னையில் திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து டாக்டர்கள் மற்றும் சுகாதா ரத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கோவை செல்லும் ரோட்டில் இருந்து ஒரு ஆட்டோ அவினாசி நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • திடீரென ரோட்டின் பக்க வாட்டில் கவிழ்ந்தது.

    அவினாசி : 

    திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்து உள்ள ஆட்டையம்பாளைம் அருகே கோவை செல்லும் ரோட்டில் இருந்து ஒரு ஆட்டோ அவினாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள ஸ்டீல் கடை அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, திடீரென ரோட்டின் பக்க வாட்டில் கவிழ்ந்தது. இதைப் பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர் ஒடோடி வந்து ஆட்டோ டிரைவரை மீட்டனர். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் ரோட்டில் கவிழ்ந்த ஆட்டோவை தூக்கி நிறுத்தினர். ஒட்டுனர் சிறிது நேரத்திற்கு ஓய்வு எடுத்த பின்பு ஆட்டோவை ஒட்டி சென்றார். திடீரென நடு ரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததால் அப்பகுதியில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • 4 மணியில் இருந்து இடி முழக்கத்துடன் கன மழை பெய்ய தொடங்கியது
    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.

    பெருமாநல்லூர் : 

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர், கணக்கம் பாளையம், பூலுவபட்டி, மலையம்பாளையம், தொரவலூர், செங்கப்பள்ளி, குன்னத்தூர் மற்றும் ஊத்துக்குளி ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை கொட்டியது. காலை முதல் வெயில் லேசாக அடித்தது. பின்னர் மதியத்துக்கு மேல் கரு மேகம் இருள தொடங்கியது. பின்னர் மாலை 4 மணியில் இருந்து இடி முழக்கத்துடன் கன மழை பெய்ய தொடங்கியது. காற்றும் பலமாக வீசியது. அத்துடன் மழை விடாமல் தொடர்ந்து கிட்டத்தட்ட சுமார் 2 மணி பெய்தது. இதனால் ஆங்காங்கே உள்ள கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் நிரம்பி வழிந்தது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் உள்ள காட்டன் மார்க்கெட் அருகில் 5 அடி உயரத்திற்கு மழைநீர் நிரம்பி ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே உள்ள பாதுகாப்பான இடத்தில் ஒதுங்கினர். வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. இந்த வடகிழக்கு பருவமழை காலங்களில் நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக இந்த மழை காலங்களில் பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு 170 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கொழுமங்குளி கிராம சேவை மைய வளாகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு 170 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து அரசுத்துறை அலுவலர்கள் அங்குள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வும் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாராபுரம் வட்டம், கொழுமங்குளி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முக்கிய நோக்கம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பது ஆகும். இந்த பகுதியில் உள்ள கிராமங்களான கொழுமங்குளி, அண்ணா நகர், ராசிபாளையம், கள்ளிப்பாளையம், தம்புரெட்டிபாளையம், ஆண்டிபாளையம், பேராங்காட்டுப்பதி, கள்ளிமேட்டுபாளையம், ஓரம்பபுதூர், கம்மாளபாளையம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் கவனத்தில் எடுத்து க்கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து பணியாற்றிட வேண்டும்.

    மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்கள் இங்கு பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள். அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். மேலும் கடைகோடி கிராமம் வரை அரசின் திட்டங்கள் சென்று சேர்வதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் தாட்கோ சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.93.36 லட்சம் மதிப்பில் லோடு வாகனம், ஆட்டோ, டூரிஸ்ட் வாகன கடனுதவி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 71 பயனாளிகளுக்கு ரூ.46.39 லட்சம் மதிப்பீட்டில் இணையவழி பட்டா , 15 பயனாளிகளுக்கு ரூ.18,900 மதிப்பில் முதியோர் உதவித்தொகை என மொத்தம் 170 பயனாளிகளுக்கு ரூ.1,58,30,247 மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். தொடர்ந்து மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு மருந்து பெட்டகத்தினையும், கலைஞரின் கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் 3 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளையும் கலெக்டர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திருக்குமரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குமாரராஜா, தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் கோவிந்தசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மூணார் செல்லும் பேருந்துக்காக உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
    • வாலிபரை பிடித்து விசாரித்த போது செல்போனை திருடியது தெரியவந்தது.

    உடுமலை : 

    கேரள மாநிலம் மூணார் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார். இவர் நேற்று முன்தினம் இரவு மூணார் செல்லும் பேருந்துக்காக உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அதிகாலையில் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் பேருந்து நிலையத்திலேயே தூங்கி உள்ளார். அதிகாலையில் நவீன் குமார் எழுந்து பார்த்த போது அவரது பேக்கில் வைத்து இருந்த செல்போன் திருடு போனது தெரியவந்தது. செல்போனை தொலைத்த நவீன் குமார் கதறி அழு தது பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல பஸ் நிலையத்தில் தாங்கி இருந்த வேலூரை சேர்ந்த ஆசிக் அலி (43) என்பவரிடம் செல்போன், ரூ.15,000 பணம் திருடு போனது. இதை தொடர்ந்து சக பயணிகள் நவீன்குமாருக்கு உதவி செய்யும் வகையில் அவருடன் அருகே படுத்து இருந்த மற்றொரு வாலிபரை பிடித்து விசாரித்த போது செல்போனை திருடியது தெரியவந்தது. பொதுமக்கள் அவரை போலீஸிடம் ஒப்படைப்பதற்காக உடுமலை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் சென்ற பிறகு போலீசார் பஸ் நிலையத்துக்கு வந்தனர். இதை அடுத்து பொதுமக்கள் திருடனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    ×