என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • விற்பனையாளர் பருப்பு இல்லை என்று சொல்பவர்கள் வரட்டும் , நான் பேசி கொள்கிறேன் என மெத்தனமாக பதில் அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • ஊழியரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சார்பதிவாளர் செல்வி உத்தரவிட்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் - 15வேலம்பாளையம் தொடக்க வேளாண்மைக்கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 59, வேலம்பாளையம் ரேசன் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேசன் கார்டு இல்லாமல் சுமார் 20 கிலோ பருப்பை வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற போது அங்கிருந்த பொதுமக்கள் ரேசன்கார்டு இல்லாமல் இவ்வளவு பருப்பை எப்படி மொத்தமாக கொண்டு செல்கிறீர்கள் என அந்த வாலிபரை பார்த்து கேட்டனர்.

    மேலும் கார்டுதாரர்கள் கேட்டால் பருப்பு இல்லை என திருப்பி அனுப்பிவிட்டு கடைக்காரர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்கிறீர்களா என விற்பனையாளரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

    அதற்கு விற்பனையாளர் பருப்பு இல்லை என்று சொல்பவர்கள் வரட்டும் , நான் பேசி கொள்கிறேன் என மெத்தனமாக பதில் அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்தநிலையில் 15வேலம்பாளையம் ரேசன் கடையில், ரேசன் கார்டு இல்லாமல் விற்பனையாளர் ராமாத்தாள் மொத்தமாக பருப்பை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சார்பதிவாளர் செல்வி இன்று உத்தரவிட்டார்.

    • பாலாற்றின் இருகரையிலும், அமைந்துள்ள இப்பகுதியில், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது.
    • அந்த தண்ணீர் மீண்டும் கிடைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேவனுார்புதுார், ஆண்டியூர், வலையபாளையம், ராவணாபுரம், திருமூர்த்திநகர், பொன்னலாம்மன் சோலை உள்ளிட்ட 15-க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. பாலாற்றின் இருகரையிலும், அமைந்துள்ள இப்பகுதியில், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. தென்னை மரங்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- பி.ஏ.பி., பாசன திட்டத்தில், காண்டூர் கால்வாய் மற்றும் திருமூர்த்தி அணை கட்டப்படும் முன், மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து பல சிற்றாறுகள் சமவெளியை நோக்கி கரைபுரண்டு ஓடியது. இதனால், எங்கள் பகுதி வளமிக்கதாக இருந்தது. சிற்றாறுகளில் இருந்த நீரோட்டத்தால், நீர்மட்டம் குறையாமல் இருந்தது. காண்டூர் கால்வாய் கட்டப்பட்ட பிறகு, சிற்றாறுகளின் நீர்வரத்து, முழுமையாக தடைபட்டு, கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு சென்று விடுகிறது. இதனால், மலை அடிவாரத்திலுள்ள அனைத்து சிற்றாறுகளும் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு எவ்வித பாசன திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரின்றி தரிசு நிலமாக காட்சியளிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, வேதனையுடன் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட பல கிராம விவசாயிகள், தற்போது ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, அதன்மூலம் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். அதில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதிகளுக்கு, தனியாக பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள சிற்றாறுகளில், இருந்து வரும் தண்ணீர் காண்டூர் கால்வாயை அடைகிறது. அந்த தண்ணீரை அருகிலுள்ள விளை நிலங்களுக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும். பாலாற்றின் குறுக்கே திருமூர்த்தி அணை கட்டிய பிறகு இயற்கையான முறையில் கிடைக்கும் தண்ணீர் தடைபட்டுள்ளது. அந்த தண்ணீர் மீண்டும் கிடைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    • தேன், பன்னீர், கரும்புச்சர்க்கரை, சந்தனாதி தைலம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    உடுமலை:

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகரில் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று பிரதோஷத்தை யொட்டி மூலவர் நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடை பெற்றது. அப்போது சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால், மஞ்சள், இளநீர், பழரசம், தேன், பன்னீர், கரும்புச்சர்க்கரை, சந்தனாதி தைலம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொணடு சிவன் நந்தியை பற்றி பக்தி பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர். இதே போன்று உடுமலை பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழாவை யொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.
    • உடுமலை நகர மன்றத்தலைவர் மு.மத்தீன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.

    உடுமலை:

    தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்சார பணியாளர், பொருத்துனர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்றவைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் - ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி.என்.சி. மெஷின் - டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அரசு உதவிகளுடன் பயிற்சியின் போதே தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய-மாநில அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் நடப்பாண்டில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் என்.வி.நதிச்சந்திரன் தலைமை தாங்கினார். வால்பாறை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குணசேகரன் முன்னிலை வகித்தார். பயிற்சி அலுவலர் ரமேஷ்குமார் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக உடுமலை நகர மன்றத்தலைவர் மு.மத்தீன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள். இதில் அதிகாரிகள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் உதவி பயிற்சி அலுவலர் மாரிமுத்து நன்றி கூறினார்.

    • பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கண்ணன் விழா தொடக்க உரையாற்றினார்.
    • உடுமலை ஸ்ரீஜி.வி.ஜி. விசாலாட்சி பெண்கள் கல்லூரியில் எட்ஜ் கம்பியூட்டிங் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

    உடுமலை:

    உடுமலை ஸ்ரீஜி.வி.ஜி. விசாலாட்சி பெண்கள் கல்லூரியில் எட்ஜ் கம்பியூட்டிங் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கணிப்பொறியியல் செயற்கை நுண்ணறிவுத்துறையும், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் துறைத் தலைவர் ஜெ.ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி முதன்மை உரையாற்றினார். பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கண்ணன் விழா தொடக்க உரையாற்றினார்.

    இதையடுத்து உடுமலை அரசு கலைக்கல்லூரி கணிப்பொறி அறிவியல் துறை தலைவரும் இணை பேராசிரியருமான ஈ.கார்த்திகேயன், கோவை கே.ஜி.கலை அறிவியல் கல்லூரி கணிப்பொறி பயன்பாட்டு துறை இணை பேராசிரியர் கே.எஸ்.மகராசன், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் எஸ்.ப்ரீத்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்கள். நிறைவாக உதவி பேராசிரியர் கி.பவித்ரா நன்றியுரை வழங்கினார். இந்த நிகழ்வில் பல்வேறு கல்லூரியில் இருந்து 153 மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

    • சோலார் மேற்கூரை நெட் வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
    • தமிழக அரசு அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் உள்ள தொழில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து மின்துகர்வோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு சார்பில் 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணம், பரபரப்பு நேர ( பீக் ஹவர் ) கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். '3பி'யில் இருந்து '3ஏ1' நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சோலார் மேற்கூரை நெட் வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாவட்ட தலைவர் தாமஸ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள். அந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளித்து அனைத்து கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்களும் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 3பி கட்டணத்தை 3 ஏ முறைக்கு மாற்றி அமைத்திருப்பதாக அறிவித்திருந்தாலும் அது ஒர்க்ஷாப் தொழிலுக்கு பொருந்தாது. எனவே தமிழக அரசு அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மளமளவென தீ பரவியதால் அருகே இருந்த செல்வன் வீட்டிற்கும் தீ பரவியது.
    • அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி மங்கலம் சாலையில், தாமரைக் குளம் பகுதியில் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான காலி இடம் உள்ளது.இங்கு தர்மபுரி மாவட்டம் எம். பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் தனது மனைவி சிவகாமியுடனும், அதே பகுதியை சேர்ந்த செல்வன் என்பவர் தனது மனைவி உமாவுடனும், தனித்தனியாக தற்காலிக குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று இரவு குமாரின் மனைவி சிவகாமி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குடிசையில் தீ பற்றியது. இதில் மளமளவென தீ பரவியதால் அருகே இருந்த செல்வன் வீட்டிற்கும் தீ பரவியது. சிறிது நேரத்திலேயே இரு குடிசைகளும் முற்றிலும் தீயில் எரிந்ததால் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது.

    தகவல் அறிந்த அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர். அவிநாசி வட்டாட்சியர் மோகன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், தீ விபத்து பகுதியில் ஆய்வு செய்து இரு குடும்பத்தினரும் மாற்றிடத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

    • கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் அக்டோபா் 18-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.
    • சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3- ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின்கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.நிகழாண்டில் புதுப்பித்தல் மாணவா்கள் இணையதள முகவரியில் சென்று ஆதாா் எண்ணை அளித்து இணைக்க செய்ய வேண்டும்.இதில் ஏதாவது இடா்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரை ஆதாா் எண் நகலுடன் அணுக வேண்டும்.

    கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான இணையதளம் அக்டோபா் 18-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421- 2999130 என்ற எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பணியிடத்துக்கான உடற்தகுதி தோ்வு நவம்பா் 7 -ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
    • திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளா்களுக்கான எழுத்துத் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு உடற்தகுதி தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:- தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தின் அறிக்கையில் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணியிடத்துக்கான உடற்தகுதி தோ்வு நவம்பா் 7 -ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

    எழுத்து தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள அனைத்து இளைஞா்களும் உதவி ஆய்வாளா் பணிக்கான உடற்தகுதி தோ்வினை எதிா்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆகவே இந்த உடற்கல்வி தோ்வுக்கு தயாராகும் இளைஞா்கள் இலவச பயிற்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரை முன்பதிவு செய்ய திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். 

    • பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த 450க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
    • முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2023-2024 ம் கல்வி ஆண்டிற்கான மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் பள்ளியின் கலையரங்கில் நடைபெற்றது.

    பள்ளியில் செயல்பட்டு வரும் பல்வேறு மன்றங்களின் சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளிலும், மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே, டேக்வாண்டோ, சதுரங்கம்,கேரம்,நீச்சல், இறகுப்பந்து, கோ - கோ மற்றும் சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளின் சார்பாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த 450க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பள்ளியின் பொருளாளர் லதா கார்த்திகேயன் மற்றும் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றி தழ்களையும், கேடயங்களையும் வழங்கினர்.

    முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளியின் முதல்வர் பிரமோதினி வரவேற்றார். முடிவில் பள்ளியின் கலைநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்யா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • விழா நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    காங்கயம்:

    முத்தூர் அருகே உள்ள சக்கரபாளையம் தாமோதர பெருமாள் கோவிலில் புரட்டாசி 4-வது சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கப்பட்டு கணபதி ஹோம பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு தாமோதர பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை பூஜை நடைபெறுகிறது.

    விழா நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • முகாமிற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
    • ரூ.8ஆயிரம் முதல் ரூ. 10ஆயிரம் வரை மதிப்புள்ள செவிப்புலன் உதவி சாதனம் காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

    காங்கயம்:

    காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் நாளை ( சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான இலவச ஆடியோகிராம் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாமிற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முகாமிற்கு வருபவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு குறைபாடுகள் இருப்பின் அதற்கு உண்டான மருத்துவம் அளிக்கப்படும். ரூ.8ஆயிரம் முதல் ரூ. 10ஆயிரம் வரை மதிப்புள்ள செவிப்புலன் உதவி சாதனம் காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

    குறைபாடு உள்ளவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் மற்றும் முகாமிற்கு வருபவர்கள் தங்கள் புதிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, முதலமைச்சர் காப்பீட்டு அட்டை,முதல்-அமைச்சர் காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் பழைய குடும்ப அட்டை இவைகளை கண்டிப்பாக எடுத்து வரவும் தெரிவித்தனர்.

    ×