என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • புக்குளம் ஊராட்சியில் ரூ.23½ லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
    • வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    குடிமங்கலம்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தளி பேரூராட்சியில் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, முடிவுற்ற பணியினை திறந்து வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்காக பங்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.1.000 என்கிற மகத்தான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்ட பலவற்றை செயல்படுத்திவருகிறார். மகளிர் சுயஉதவி குழு கடன்கள், நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அனிக்கடவு ஊராட்சி, நால்ரோட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, ரூ.6½ லட்சத்தில் சுகாதார வளாகம் மற்றும் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். புக்குளம் ஊராட்சியில் ரூ.23½ லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.

    தளி பேரூராட்சியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.82.20லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி மற்றும் மாநில நிதிக்குழுதிட்டத்தின் கீழ் ரூ.87லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தும் என மொத்தம் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் திட்டபணிகளை துவக்கி மற்றும்முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்இல.பத்மநாபன்,வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை தாசில்தார் சுந்தரம், வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுகந்தி முரளி, குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேந்திரன்,செந்தில் கணேஷ்மாலா, தளி பேரூராட்சித்தலைவர் உதயகுமார், பேரூராட்சி செயல்அலுவலர் கல்பனா, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் புஷ்பராஜ், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கவிதா முருகானந்தம், புக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் தெய்வாத்தாள், வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இக்கோவிலில் கடவுள் முருகன் சுப்பிரமணிய சுவாமியாக எழுந்தருளி இருக்கிறார்
    • அந்த பெட்டிக்குள் எந்த பொருள் வைக்க வேண்டும் என பக்தர்கள் கனவில் வந்து முருகப் பெருமானே கட்டளையிடுவதாக கூறுகின்றனர்.

     காங்கயம்:

    காங்கயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு முருகப் பெருமான் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலின் தனிச்சிறப்பாக உத்தரவு பெட்டி என்று ஒன்று உள்ளது. அந்த பெட்டிக்குள் எந்த பொருள் வைக்க வேண்டும் என பக்தர்கள் கனவில் வந்து முருகப் பெருமானே கட்டளையிடுவதாக கூறுகின்றனர்.

    அந்த பொருள் சமுதாயத்தில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இக்கோவிலில் கடவுள் முருகன் சுப்பிரமணிய சுவாமியாக எழுந்தருளி இருக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் இறுதியில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு கோவிலின் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும்.

    அதே போல் இந்த வருடமும் வரும் 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்களுக்கு தங்கத்தேரானது நிறுத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவன்மலை முருகன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • பயன்படுத்திய எண்ணெயை ஆர்.யு.சி.ஓ. திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்க வேண்டும்.
    • உணவுப்பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகை பலகாரங்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுரை வழங்கி கூறியிருப்பதாவது:-

    பண்டிகை காலங்களில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரவகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்குவதும், சொந்தபந்தங்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதும் நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகை காரணமான இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயம்.

    இனிப்பு கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்கக்கூடாது. மேலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்கக்கூடாது. பயன்படுத்திய எண்ணெயை ஆர்.யு.சி.ஓ. திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்க வேண்டும்.

    பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருட்களுக்கு விவரம் சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழுமுகவரி, உணவுப்பொருட்களின் பெயர், தயாரிப்பு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

    உணவுப்பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உரிமம் அல்லது பதிவு சான்று பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். உணவு தயாரிப்பு விவர சீட்டு இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். உணவு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
    • திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு ஓட்டலில் உள்ள அறையில் மசாஜ் சென்டர் நடந்து வந்தது. இந்த சென்டரில் விபசாரம் நடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கொங்கு நகர் உதவி போலீஸ் கமிஷனர் அனில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

    அங்கிருந்து மும்பையைச் சேர்ந்த 30 வயது பெண், திருப்பூர் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோரை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டர் நடத்தி வந்த திருப்பூர் பி.என். ரோடு பகுதியை சேர்ந்த மோகன் (வயது 30) என்பவரை வடக்கு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் 14 மற்றும் 17 வயது பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
    • பொருளாளர் ஸ்ருதி வி. ஹரீஸ், பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    திருப்பூர்,:

    திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் ெஜய் சாரதா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆக்கி போட்டியில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவில் முதலிடம் பிடித்தனர். கைப்பந்து போட்டியில் 14, 17 வயது பிரிவில் முதலிடம், எறிபந்து போட்டியில் 17 வயது பிரிவில் முதலிடம், 14 வயது பிரிவில் 2-வது இடம் பெற்றனர். சதுரங்க போட்டியில் 11 வயது பிரிவில் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் பால்பேட்மிட்டன் போட்டியில் முதலிடம் பிடித்தனர்.

    மாணவருக்கான தடகள போட்டியில் 14 வயது பிரிவில் 400 மீ., 600 மீட்டரில் முதலிடம் மற்றும் 3-வது இடம், 4x100 மீட்டர் போட்டியில் முதலிடம், 17-வயது பிரிவில் 3 ஆயிரம் மீட்டர், 1500 மீட்டர், 400 மீட்டர் போட்டியில் முதலிடம் மற்றும் 2-வது இடம் பிடித்தனர். 4x100 மற்றும் 4x400 மீட்டர் போட்டியில் முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் 2-வது இடமும், தடைதாண்டும் போட்டியில் 2-வது இடமும் பிடித்தனர்.

    19-வயது பிரிவில் 400 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், தடை தாண்டும் போட்டியில் முதலிடம், 4x400 மீட்டர் போட்டியில் முதலிடம், நீளம் தாண்டுதல் போட்டியில் 3-வதுஇடம் பெற்றனர்.

    மாணவிகள் 14 வயது பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் முதலிடம், 17 வயது பிரிவில் 400 மீட்டர், 800 மீட்டர் முதலிடம், 1500 மீட்டரில் 2-வது இடம், நீளம் தாண்டுதலில் 3-வது இடம், 4x100 மீ. போட்டியில் 2-வது இடம், மற்றும் 4x400 மீ போட்டியில் முதலிடம் பெற்றனர். 17 வயது பிரிவில் 800, 1500, 3 ஆயிரம் மீட்டர் போட்டியில் 2-வதுஇடம், உயரம் தாண்டுதலில் முதலிடம், நீளம் தாண்டுதலில் 3-வது இடம் பிடித்தனர். 4x100 மீட்டர் போட்டியில் 2-வதுஇடம், 4x400 மீட்டரில் முதலிடம், குண்டு எறிதலில் 3-வது இடம் பிடித்தனர்.

    மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் 14 மற்றும் 17 வயது பிரிவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். தடகள போட்டியில் 800 மீட்டர், 1500 மீட்டர், 400 மீட்டர், 4x100 மீட்டர், 4x400மீட்டர் ஆகிய போட்டிகளில் முதல், 2-வது இடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் திருப்பூர் வடக்கு குறுமையம் முதலிடம் பெற 40 புள்ளிகள் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் ஈ.வேலுச்சாமி, பள்ளி செயலாளர் கீர்த்திகா வாணி வி.சதிஷ், பொருளாளர் ஸ்ருதி வி. ஹரீஸ், பள்ளி முதல்வர் ஏ.எஸ்.மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
    • நீண்ட நாட்களுக்குப் பிறகு அருவியில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்து உள்ளது.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்த சூழலில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.இதன் காரணமாக அருவிக்கு நீர் வரத்தை அளிக்கக்கூடிய ஆறுகள் ஓடைகள் வறண்டு விட்டது. இதனால் அருவியும் நீர்வரத்து இல்லாமல் வெறுமனே காட்சி அளித்து வந்தது.சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.இந்த நிலையில் அருவியின் நீராதாரங்களான குழிப்பட்டி, குருமலை பகுதியில் திடீரென மழை பெய்தது.இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து ஏற்பட்டது.இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் உற்சாகத்தோடு அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். மேலும் குடும்பத்தோடு அருவிப்பகுதியில் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.அதைத்தொடர்ந்து அடிவார பகுதிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி சென்றனர்.நீண்ட நாட்களுக்குப் பிறகு அருவியில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு உயர்ந்து உள்ளது.

    • 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
    • உலக விளையாட்டு மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் : 

    தமிழக அரசால் ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி சர்வதேச போட்டிகளில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன் ஷிப் போட்டிகள், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட காமன்வெல்த் சாம்பியன் ஷிப் போட்டிகள், ஆசிய சாம்பியன் ஷிப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சர்வசே விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக விளையாட்டு மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள், பங்கேற்றவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

    இதில் தேசிய அளவிலான போட்டிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன் ஷிப் போட்டிகளான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன் ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட போட்டிகளில் 1-1-2018 அன்றோ அல்லது அதற்கு பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானதாக கருதப்படும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதள முகவரி அல்லது சென்னை நேரு விளையாட்டரங்கில் இயங்கி வரும் தலைமை அலுவலகத்தில் நேரிலும் விண்ணப்பிக்கலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

    • நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
    • உதவி பொறியாளர்கள் அரவிந்தன், தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதிஅணை உள்ளது.அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு,சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன.அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுத்து உதவவில்லை.இதன் காரணமாக பாசன பரப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.அத்துடன் அமராவதி ஆறு,பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கும் சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமராவதி ஆறு, பிரதான கால்வாய் பாசனப் பகுதியில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற சிறப்பு நனைப்புக்கும் குடிநீர் தேவையை போக்கவும் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள 10 பழைய வாய்க்கால் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப்பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவைக்காகவும் 1503.36 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.அதேபோன்று பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்ட புதிய பாசன பகுதியில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் 570.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று அமராவதி அணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி தண்ணீர் திறந்து வைத்தார்.அதைத் தொடர்ந்து அமராவதி ஆற்று சட்டர்கள் மற்றும் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.அதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.

    நேற்று முதல் வருகிற 27-ந் தேதி வரையில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.இதனால் அமராவதிஆறு மூலம் பாசன பெறுகின்ற பழைய வாய்க்கால்களில் 21 ஆயிரத்து 867 ஏக்கரும் பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறுகின்ற புதிய பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கரும் ஆக மொத்தம் 47ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் (பயிற்சி)கிர்திகா,திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன்,தெற்கு மாவட்ட அவைத்தலைவர், ஜெயராமகிருஷ்ணன் உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன்,ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி,செந்தில்குமார்,மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி,உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், பொதுக்குழு உறுப்பினர் யு.என்.பி.குமார்,திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முருகன்,பிஏபி பாசன பாசனசங்க தலைவர் மொடக்குப்பட்டி ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து,சௌந்தர்ராஜன், ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம்,செயற் பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன்,உதவி பொறியாளர்கள் அரவிந்தன், தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பிளாஸ்டிக் பைகள் எனப்படும் நெகிழிகளை பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையாக நகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
    • தொடர்ந்து உபயோகிப்பது கண்டறியப்பட்டால் கடையின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காங்கயம் : 

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் வணிக வளாக கடைகளில் பிளாஸ்டிக் பைகள் எனப்படும் நெகிழிகளை பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையாக நகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சூரியப்பிரகாஷ் தலைமை தாங்கினார். ஆணையர் கனிராஜ் முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் சரவணன் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகக் கடைகள், ஓட்டல், பேக்கரி, பூக்கடை மற்றும் சாலையோர கடைகள் என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் கவர்கள் இருப்பது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து உபயோகிப்பது கண்டறியப்பட்டால் கடையின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் அறிவுறுத்தினார்.இதனை தடுக்கும் நடவடிக்கையாக காங்கயம் பஸ் நிலையம் பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஊராட்சி அலுவலகங்களிலும் பல்வேறு பணிகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது.
    • இப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, அனைத்து ஆன்லைன் சேவைகளும், தடையின்றி கிராமங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருப்பூர்:

    மத்திய, மாநில அரசு சார்பில், பல்வேறு சேவைகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பல்வேறு வரியினங்கள் செலுத்துதல், சான்றிதழுக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகள் இ - சேவை மையங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. ஊராட்சி அலுவலகங்களிலும் பல்வேறு பணிகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆன்லைனில், வரியினங்களை செலுத்த கிராமப்புறங்களில் பல்வேறு சிக்கல் நிலவுகிறது. குறிப்பாக இணையதள வசதி போதுமான அளவு வேகம் இல்லாததால், காலதாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு விண்ணப்பத்தை பதிவு செய்யவும் நீண்ட நேரம் ஆகிறது. காத்திருக்கும் மக்கள் வேறு வழியின்றி, நகரிலுள்ள இ - சேவை மையங்களுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வாக, கிராமப்புறங்களிலுள்ள, இ - சேவை மையங்கள், ஊராட்சி அலுவலகம் மற்றும் இதர அரசு அலுவலகங்களுக்கு இணையதள இணைப்பு வழங்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது, மத்திய அரசு திட்டத்தின் கீழ், கேபிள் வாயிலாக கிராமங்களிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு இணைய தள இணைப்பு வழங்க பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனம் வாயிலாக நகரங்களில் இருந்து, உடுமலை பகுதி கிராமங்களுக்கு கேபிள் பதிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, அனைத்து ஆன்லைன் சேவைகளும், தடையின்றி கிராமங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களான காய்கறிகள் பெரும்பாலான விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது
    • விவசாயிகளே தங்கள் சொந்த நிலங்களில் மேட்டுப்பாத்தி அமைத்து விதைகளை நடவு செய்து நாற்றுக்களை தயார் செய்யலாம்.

    போடிப்பட்டி : 

    மடத்துக்குளம் தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலை பயிர்களான காய்கறிகள் பெரும்பாலான விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தக்காளி சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நல்ல வடிகால் வசதியான இருமண்பாட்டு நிலம் தக்காளி சாகுபடி செய்வதற்கு உகந்த நிலமாகும். விதைகள் மிக சிறியதாக இருப்பதால் நாற்று விட்டு நடவு செய்யப்படுகிறது. ஒரு ஏக்கரில் நாற்று விட்டு நடவு செய்ய 160 கிராம் விதைகள் தேவைப்படும். விவசாயிகளே தங்கள் சொந்த நிலங்களில் மேட்டுப்பாத்தி அமைத்து விதைகளை நடவு செய்து நாற்றுக்களை தயார் செய்யலாம். ஆனால் பெரும்பாலான விவசாயிகள் நாற்றுப் பண்ணைகளில் குழித்தட்டு நாற்றுகள் வாங்கி நடவு செய்து வருகின்றனர். அவ்வாறு வாங்கும் போது தரமான நாற்றுகளாக விவசாயிகள் தேர்வு செய்து வாங்க வேண்டும். நடவு செய்யும் நிலத்தை 3 அல்லது 4 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 8 முதல் 10 டன் மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இட்டு மண்ணுடன் கலக்க செய்ய வேண்டும். பின்பு 60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்து வசதியான அளவில் வாய்க்கால் வரப்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும். நடவு செய்த 3-ம் நாள் உயிர் தண்ணீர் விட வேண்டும். அதனை தொடர்ந்து 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும்.நடவு செய்த 30 முதல் 35 நாட்களில் களையெடுத்து, பின் மேலுரம் இட்டு மண் அணைக்க வேண்டும். தேவைக்கேற்ப இயற்கை அல்லது செயற்கை உரங்களை பயன்படுத்தவும். தகுந்த பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். தக்காளி செடியில் இருக்கும் போதே செங்காய் பதத்தில் பறிக்கப்பட்டு கூடைகளில் அடுக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்ய நன்கு பழுத்த பின் அறுவடை செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.

    போடிப்பட்டி : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் நடப்பு பருவத்தில் சுமார் 2,400 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையாக சோழமாதேவி, கடத்தூர், கணியூர், காரத்தொழுவு, அக்ரகாரம் கண்ணாடிப்புத்தூர் பகுதிகளில் சுமார் 1,600 ஏக்கர் நெல் பயிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் தற்போது அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால் உடனடியாக நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவில் திருப்பூர் மண்டல மேலாளர் சின்னுசாமி கலந்து கொண்டு கொள்முதல் மையத்தை தொடங்கி வைத்தார். மடத்துக்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் தேவி முன்னிலை வகித்தார். நெல் கொள்முதல் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-'தமிழக அரசாணையின் படி சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,203 மற்றும் ஊக்கத்தொகை ரூ.107 சேர்த்து மொத்தம் ரூ.2,310-க்கு கொள்முதல் செய்யப்படும். இது கடந்த ஆண்டு கொள்முதல் விலையை விட ரூ.150 அதிகம் ஆகும். பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,183 மற்றும் ஊக்கத்தொகை ரூ.82 சேர்த்து மொத்தம் ரூ.2,265-க்கு கொள்முதல் செய்யப்படும். இதுவும் கடந்த ஆண்டை விட ரூ. 150 அதிகம் ஆகும். கொள்முதல் செய்யப்படும் நெல்லில் சேதமடைந்த முளை விட்ட மற்றும் பூச்சி துளைத்த தானியங்கள் 4 சதவீதம் மற்றும் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் குறிப்பிடத்தக்க தர நிர்ணயங்களின் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும். நெல் கொள்முதல் மையம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும். 1.30 மணி முதல் 2.30 மணி வரை உணவு இடைவேளையாகும். எனவே விவசாயிகள் பட்டா, சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையத்தில் விற்பனை செய்து பயனடையலாம். ஈரப்பதம் 17 சதவீதம் வரை உள்ள தரமான நெல் எந்தவித பிடித்தமும் இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்'என்று அவர்கள் கூறினர்.

    ×