search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் சிற்றாறு தண்ணீர் விளை நிலங்களுக்கு  கிடைக்க விவசாயிகள் கோரிக்கை
    X

    கோப்புபடம்

    மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் சிற்றாறு தண்ணீர் விளை நிலங்களுக்கு கிடைக்க விவசாயிகள் கோரிக்கை

    • பாலாற்றின் இருகரையிலும், அமைந்துள்ள இப்பகுதியில், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது.
    • அந்த தண்ணீர் மீண்டும் கிடைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேவனுார்புதுார், ஆண்டியூர், வலையபாளையம், ராவணாபுரம், திருமூர்த்திநகர், பொன்னலாம்மன் சோலை உள்ளிட்ட 15-க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. பாலாற்றின் இருகரையிலும், அமைந்துள்ள இப்பகுதியில், தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. தென்னை மரங்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- பி.ஏ.பி., பாசன திட்டத்தில், காண்டூர் கால்வாய் மற்றும் திருமூர்த்தி அணை கட்டப்படும் முன், மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து பல சிற்றாறுகள் சமவெளியை நோக்கி கரைபுரண்டு ஓடியது. இதனால், எங்கள் பகுதி வளமிக்கதாக இருந்தது. சிற்றாறுகளில் இருந்த நீரோட்டத்தால், நீர்மட்டம் குறையாமல் இருந்தது. காண்டூர் கால்வாய் கட்டப்பட்ட பிறகு, சிற்றாறுகளின் நீர்வரத்து, முழுமையாக தடைபட்டு, கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு சென்று விடுகிறது. இதனால், மலை அடிவாரத்திலுள்ள அனைத்து சிற்றாறுகளும் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு எவ்வித பாசன திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரின்றி தரிசு நிலமாக காட்சியளிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, வேதனையுடன் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட பல கிராம விவசாயிகள், தற்போது ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, அதன்மூலம் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். அதில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதிகளுக்கு, தனியாக பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள சிற்றாறுகளில், இருந்து வரும் தண்ணீர் காண்டூர் கால்வாயை அடைகிறது. அந்த தண்ணீரை அருகிலுள்ள விளை நிலங்களுக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும். பாலாற்றின் குறுக்கே திருமூர்த்தி அணை கட்டிய பிறகு இயற்கையான முறையில் கிடைக்கும் தண்ணீர் தடைபட்டுள்ளது. அந்த தண்ணீர் மீண்டும் கிடைக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    Next Story
    ×