என் மலர்tooltip icon

    திருப்பூர்

    குன்னத்தூர்:

    குன்னத்தூர் சித்தாண்டி பாளையத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் இந்த கடையில் வாங்கப்பட்ட ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதி பொதுமக்கள் கலப்படம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் அரிசியை தனியாக எடுத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.

    ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசியை கலப்படம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தேசிய தொழில்நுட்ப சிம்போசியம் உக்ரா 2 கே 23 நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    காங்கயம் சேரன் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப சிம்போசியம் உக்ரா 2 கே 23 நடைபெற்றது. நிகழ்ச்சியை சேரன் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில் , ஒவ்வொரு மாணவர்களிடமும் ஒளிந்துள்ள தனித்திறமைகளை வாய்ப்பு கிடைக்கும் போது அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் .அதற்கு ஆசிரியர்களும் தூண்டு கோளாக இருக்க வேண்டும் என்றார்.

    இவரைத்தொடர்ந்து கல்லூரியின் துணை முதல்வர் கெளசல்யா தேவி வரவேற்று பேசினார். மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி மேடையில் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து வணிகவியல் துறைத்தலைவர் தேன்மொழிசெல்வி சிறப்புரை ஆற்றினார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவம் இருக்கும். அதனை தகுந்த நேரத்தில் வெளிக்காட்ட வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சிக்கு 20க்கும் மேற்பட்ட கல்லூரியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் கட்டுரை வாசித்தல், வினாடி வினா,சமையல்போட்டி, குறும்பட போட்டி, புகைப்பட போட்டி, நடனப்போட்டி ஆகிய நிகழ்ச்சிகள்நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் ஆங்கில உதவிப்பேராசிரியர் புவனா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    • சூர்யா மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் கோர்ட்டு நீதிபதி பாலு தீர்ப்பு கூறினார்.

    திருப்பூர்:

    திருச்சி மாவட்டம் மிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சூர்யா ( வயது 21). இவர் இன்ஸ்டா கிராம் மூலம் திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் பழகி உள்ளார். இதில் இருவரும் முதலில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அந்த மாணவியை சூர்யா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திருச்சிக்கு வரும்படி அழைத்துள்ளார். கடந்த 13.9.2021ம் ஆண்டு மாணவி வீட்டிற்கு தெரியாமல் திருச்சி சென்றுள்ளார். திருச்சி பஸ் நிலையத்தில் தயாராக நின்று கொண்டிருந்த சூர்யா மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இது குறித்து தனது பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார் . மாணவியின் பெற்றோர் மூலனூர் மகளிர் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்நிலையில் வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் கோர்ட்டு நீதிபதி பாலு தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்டுள்ள சூர்யாவிற்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

    • ஆன்லைனில் வேலைவாங்கி தருவதாகவும், பணம் டெபாசிட் செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகவும், அதிக வட்டி தருவதாகவும் ஏமாற்றுகிறார்கள்.
    • நபர்கள் குறித்து சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர்களிடம் பல லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கடன் தருவதாகவும், குறைவான வட்டியில் கடன் தருவதாகவும், முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் பொய்யான விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். ஆன்லைனில் வேலைவாங்கி தருவதாகவும், பணம் டெபாசிட் செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகவும், அதிக வட்டி தருவதாகவும் ஏமாற்றுகிறார்கள். தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் இனிவரும் காலங்களில் இதுபோல் அரசால் அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனங்களின் விளம்பரங்களை பார்த்து முதலீடு செய்ய வேண்டாம். இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து உண்மை தன்மையை அறியலாம்.

    வீடு, கடையின் உரிமையாளர்கள் வாடகைக்கு விடும்போது அந்த நபர்கள் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்தும், அவர்களின் பான்கார்டு, ஆதார் கார்டு, நிரந்தர முகவரி ஆகிய ஆவணங்களை பெற வேண்டும். நபர்கள் குறித்து சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

    ஆன்லைனில் தங்களது வங்கியின் மூலமாக பேசுவதாக கூறி வங்கி கணக்கை அப்டேட் செய்ய வேண்டும் என்றும், ஓ.டி.பி. நம்பரை பகிருமாறு கூறினால் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுவார்கள். அவ்வாறு கூறாமல் எச்சரிக்கையாக இருங்கள். பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், வியாபார நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதனால் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கிராம கண்காணிப்பு கமிட்டி உருவாக்கி அதன் மூலமாக போலீசுடன் நல்லுறவு ஏற்படுத்தி புகார்களை தெரிவிக்கலாம்.

    வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து வேலைக்கு வரும் நபர்கள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர் அந்த நபரின் முழு விவர ஆதாரங்களை பெற வேண்டும். நபர் குறித்து போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்ழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்
    • கோரிக்கை மனுவுடன் தங்கள் முகவாி, செல்போன் எண், ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞர் மக்கள் சேவை முகாம் காங்கயம் ஊராட்சி ஒன்றியம் சிவன்மலை ஊராட்சி ஸ்ரீ அண்ணாமலை செட்டியார் திருமண மண்டபத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. முகாமை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர். முகாமில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். எனவே சிவன்மலை ஊராட்சி பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறலாம். கோரிக்கை மனுவுடன் தங்கள் முகவாி, செல்போன் எண், ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
    • மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன.

    திருப்பூர்:

    திருமுருகன் பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேஷனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 92-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாணவர்கள் வெண்மை, கருமை, சிகப்பு, மஞ்சள் வண்ணத்தில் ஆடை அணிந்து கலாமின் திருமுகம் தோன்ற அணிவகுத்து அமர்ந்த காட்சியானது கலாமை நேரில் காண்பது போன்ற எண்ண அலைகளை உருவாக்கியது. மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து ராக்கெட் ஒன்றை உருவாக்கி அதன் அருகில் கலாம் நிற்பது போன்று அமைத்திருந்த காட்சியும், கலாமின் நூற்றுக்கணக்கான பொன்மொழிகளை எழுதி மரங்களில் வரிசையாக தோரணம்போல் கட்டியிருந்த காட்சியும் காண்போரை கவர்ந்தது. "பசுமை இந்தியாவை" நினைவுபடுத்தும் விதமாக அவரைப் போலவே வேடமணிந்த மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். மேலும் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் பள்ளியின் முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • திடீரென கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது திருமூர்த்தி அணை. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த அணையில், தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க தம்பதிகள் அணையின் ஓரமாக இருந்து உள்ளனர்.

    அப்போது அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர், இந்த பக்கம் இருக்க வேண்டாம், இது மிகவும் ஆபத்தான பகுதி என்று வயதான தம்பதிகளிடம் கூறி விட்டு, சென்று விட்டார். அவர் கொஞ்சம் தூரம் செல்வதற்குள் திடீரென கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    உடனே இதுகுறித்து தளி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அணையில் தண்ணீர் வரத்து அதிகம் காணப்பட்டதாலும், இரவு அதிக நேரமாகி விட்டதாலும் அவர்களின் உடலை மீட்க முடியவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு சல்லடை போட்டு தேடினர். இதில் இருவரது உடலும் மீட்கப்பட்டது.

    பின்னர் இதுகுறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. ஆனால் கோவையில் எந்த இடம்? பெயர் என்ன? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. இதனால் தளி போலீசார், அவர்களது புகைப்படத்தை கோவைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மெட்ரோ பள்ளியில் தொடங்கும் பயணம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு முடிவடைகிறது.
    • அண்ணாமலை நடை பயணத்தையொட்டி அவினாசியில் பா.ஜ.க.,கொடி, தோரணங்களுடன் தொண்டர்கள் உற்சாக நடனமாடினர்.

    அவினாசி:

    தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டும், மத்திய பா.ஜ.க., அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேசுவரத்தில் அண்ணாமலையின் முதல் கட்ட நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லையில் நடை பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். தனது 2-ம் கட்ட நடைபயணத்தை செப்டம்பர் 3-ந்தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கி னார். தேனி, திண்டுக்கல், நீலகிரியில் நடைபயணம் மேற்கொண்டு, கோவையில் தனது 2-ம் கட்ட நடை பயணத்தை செப்டம்பர் 27-ந்தேதி நிறைவு செய்தார்.

    2 கட்ட நடைபயணத்தை முடித்த அவர் 3-ம் கட்ட நடைபயணத்தை கடந்த 6-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்க இருந்தார். ஆனால் மிலாடி நபி காரணமாக மேட்டுப்பாளையத்தில் நடக்க இருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது.

    தொடர்ந்து அவரது டெல்லி பயணம், உடல்நலக்குறைவு காரணமாக அவரது நடைபயணம் மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டு, இன்று 16-ந்தேதி அவினாசியில் இருந்து தொடங்கும் என தமிழக பா.ஜனதா தலைமை அறிவித்தது. அதன்படி இன்று காலை 11மணிக்கு நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதியில் இருந்து தனது 3-ம் கட்ட நடை பயணத்தை அண்ணாமலை தொடங்கினார். மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மந்திரி பியூஸ்கோயல், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் நடைபயணத்தை தொடங்கி வைத்தனர்.

    அவிநாசி சேவூர் ரோட்டில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை , அவிநாசி தாலுகா அலுவலகம், வடக்கு ரதவீதி, கிழக்கு ரத வீதி , பி.எஸ். சுந்தரம் வீதி வழியாக சுமார் 2 கி.மீ., தூரம் வரை நடந்து சென்று அவினாசி புதிய பஸ் நிலையத்தை அடைந்தார். அங்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் அண்ணாமலை பேசினார்.

    அவிநாசியில் நடை பயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் திரளான பா.ஜனதா கட்சியினரும் ஊர்வலமாக நடந்து வந்தனர். வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து அண்ணாமலை உற்சாகமாக கையசைத்தும், கும்பிட்ட வாறும் நடந்து சென்றார்.

    அப்போது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை புகார் பெட்டியில் அளித்தனர். வியாபாரிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை நேரிடையாக கேட்டறிந்ததுடன் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    அண்ணாமலை நடை பயணத்தையொட்டி அவினாசியில் பா.ஜ.க.,கொடி, தோரணங்களுடன் தொண்டர்கள் உற்சாக நடனமாடினர்.

    அண்ணாமலையை வரவேற்று அவிநாசியின் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சார்பில் வரவேற்பு வளையங்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. கொங்குநாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி நடனம் ஆடியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணாமலை நடைபயணத்தால் அவிநாசி பகுதியானது களை கட்டியது. ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவினாசியில் நடைபயணத்தை முடித்து கொண்டு காரில் மேட்டுப்பாளையத்திற்கு அண்ணாமலை செல்கிறார்.

    பின்னர் மாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் மெட்ரோ பள்ளி முன்பு அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.அவருக்கு மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பா.ஜ.க.வினர் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு முடிந்ததும், அங்கிருந்து பல்வேறு வீதிகள் வழியாக 2 அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்கிறார்.மெட்ரோ பள்ளியில் தொடங்கும் பயணம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் மாலை 6.30 மணிக்கு முடிவடைகிறது. அதனை தொடர்ந்து அங்கு பா.ஜனதா சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

    அந்த கூட்டத்தில் பங்கேற்று அண்ணாமலை பேசுகிறார். அவினாசி மற்றும் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் நடைபயணத்தில் மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

     அவினாசி, மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, நாளை 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூரிலும், 18-ந்தேதி பவானிசாகர், கோபி செட்டிபாளையத்திலும் நடைபயணம் மேற்கொள்கிறார்.19-ந் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம், சூலூரிலும், 20-ந்தேதி திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, 25-ந் தேதி பெருந்துறை, மொடக்குறிச்சி யிலும் நடைபயணம் செல்கிறார்.26-ந்தேதி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கிலும், 27-ந்தேதி சங்ககிரி, குமாரபாளையம், 28-ந்தேதி நாமக்கல், திருச்செங்கோட்டிலும் நடை பயணம் மேற் கொள்கிறார். அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு அண்ணாமலை இன்று முதல் மேற்கொள்ளும் 3-ம் கட்ட நடைபயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கருத்தரங்கில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து முன்னோடி சந்தன மர விவசாயிகள் பங்கேற்றனர்.
    • திருப்பூர் மாவட்டத்தின் ஆட்சியர் கிறிஸ்துராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்தரங்கை சிறப்பித்து வைத்தார்.

    பல்லடம்:

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'கோடிகளை கொடுக்கும் சந்தனம் - சாமானியர்களுக்கும் சாத்தியம்' என்ற மர விவசாய் கருத்தரங்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. முன்னோடி விவசாயி துரைசாமி அவர்களின் 50 ஏக்கர் சந்தன பண்ணையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 3,000 விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.

    தொடக்க விழா நிகழ்வில் தமிழக விவசாய சங்க தலைவர் கு. செல்லமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் அவர் பேசுகையில், "விவசாயிகளின் மனதில் மரம் நடும் எண்ணத்தை ஈஷா விதைத்து இருக்கிறது. ஈஷா என்ற ஒரு அமைப்பு இல்லாவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் விவசாய நிலங்களில் மரம் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டு வருகிறது. இது மிகவும் பாராட்டுக்குரியது.

    இந்த நிகழ்ச்சி நடைபெறும் தோட்டத்தின் உரிமையாளர் துரைசாமி சந்தன மரங்களை நட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் அவர் பெரும் கோடீஸ்வரர் ஆகிவிடுவார். இக்கருத்தரங்கும் விழிப்புணர்வும் 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால் தமிழக விவசாயிகள் கடனாளியாக இருக்க வேண்டிய தேவை இருந்து இருக்காது. எனவே, வரும் தலைமுறை விவசாயிகள் எதிர்காலத்தில் கடன் இன்றி, மானம் மரியாதையுடன் கெளரவமாக, பணக்காரர்களாக வாழ வேண்டும் என்றால் காவேரி கூக்குரல் சொல்லும் மரம் நடும் வழிமுறைகளை முழு மனதாக ஏற்று செயலாற்ற வேண்டும்" என்றார்.

    வனம் இந்தியா அறக்கட்டளையின் செயலாளர் சுந்தரராஜன் பேசுகையில், "ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கமும் வனம் இந்தியா அமைப்பும் பூமி தாயின் பசுமை போர்வையை அதிகரிக்கும் ஒரே நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது" என கூறினார்.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில், "உலகிலேயே மிக விலை உயர்ந்த மரம் சந்தன மரம் தான். இம்மரத்தை வளர்ப்பதன் மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு மரத்தில் இருந்து மட்டும் குறைந்தபட்சம் ரூ.2 லட்சமும், 25 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலும் விவசாயிகள் சம்பாதிக்க முடியும். சந்தன மரத்தை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்க முடியும். இம்மரம் உப்பு தண்ணீரிலும் கூட வளரும் சாத்தியம் உள்ளது.

    இம்மரத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருந்தும் திருட்டு பயம் காரணமாக இதை வளர்க்க தயங்குகின்றனர். ஆனால், தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் மைக்ரோ சிப், சென்சார் மற்றும் ரேடார் தொழில்நுட்பம் என பல்வேறு விதமான தொழில்நுட்ப கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இன்னும் பல கருவிகள் வந்துவிடும். எனவே, சந்தன மரத்தை பயமின்றி நடவு செய்யலாம்.

    இந்திய சந்தனத்திற்கு உலகளவில் பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. 1950-ம் ஆண்டுகளில் சுமார் 4,000 டன் வரை சந்தனத்தை நாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டினோம். ஆனால், தற்போது நம்முடைய உள்நாட்டு தேவைக்கு கூட வெளிநாடுகளில் இருந்து சந்தனத்தை இறக்குமதி செய்து வருகிறோம். எனவே சந்தன மரத்திற்கான தேவை நம்மிடம் அதிகம் இருக்கிறது. அதை பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டில் விவசாயிகள் அதிகளவில் சந்தன மரங்களை வளர்க்க வேண்டும்.

    சந்தன மரத்தை வெட்டி விற்பனை செய்வதில் உள்ள சட்ட சிக்கல்களும் படிப்படியாக நீங்கி வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் கூட வன சட்டங்கள் எதுவும் விவசாய நிலங்களுக்கு பொருந்தாது என கூறியுள்ளது. இதன்மூலம், விவசாயிகள் தாங்கள் விரும்பும் எந்த வகையான மரத்தையும் தங்கள் நிலங்களில் வளர்த்து விற்க முடியும். எனவே, விவசாயிகள் கோடீஸ்வரர்களாக ஆக மாறுவதற்கு சந்தன மரம் வளர்ப்பது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்" என்றார்.

    இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து மரம் சார்ந்த விவசாய விஞ்ஞானிகளும், முன்னோடி மர விவசாயிகளும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

    குறிப்பாக, பெங்களூரு IWST நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற விஞ்ஞானி டாக்டர் சுந்தரராஜ் சந்தன மரத்தை நடவு முதல் விற்பனை செய்வது வரை உள்ள அனைத்து முக்கிய அம்சங்கள் குறித்தும் விரிவாக பேசினார். கேரளாவைச் சேர்ந்த வன அதிகாரி வினோத் குமார் 'சந்தனத்தின் உலகளாவிய தேவை' என்ற தலைப்பிலும், காரைக்குடி விவசாயி ராமன் 'மானாவாரி நிலத்தில் செம்மர வளர்ப்பு' என்ற தலைப்பிலும் பேசினர்.

    இதுதவிர, முன்னோடி சந்தன மர விவசாயிகள் கவிதா மிஸ்ரா (கர்நாடகா), இஸ்தரப்பு ரெட்டி (தெலுங்கானா), ரமேஷ் பலூடகி (கர்நாடகா), நிலத்தின் உரிமையாளரும் முன்னோடி சந்தன மர விவசாயியுமான துரைசாமி உள்ளிட்டோர் தங்களின் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டனர்.

    தகவல் அறிந்ததும் வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த 7-ந் தேதி சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றதாக அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் திருப்பூர் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று தெரிவித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் காலடித்தடங்களை ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் இல்லை என்றும் தெளிவாக தெரிவித்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பல்லடம்-தாராபுரம் சாலையில் உள்ள துத்தாரி பாளையத்தில் வித்தியாசமான உருவம் கொண்ட மிருகம் ஒன்று சாலையை கடந்து சென்றதாக ஒருவர் தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற வனத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்ட போது அங்கிருந்த கால் தட பதிவுகள் நாயின் கால் தட பதிவுகளை விட சற்று பெரியதாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிறுத்தையின் கால் தடப்பதிவுகள் போல் அல்லாமல் இருந்தது.

    சிறுத்தையின் கால் தட பதிவுகளில் நகம் பதிவாகி இருக்கும். ஆனால் இந்த கால் தட பதிவுகளில் அப்படி இல்லை என்று தெரிவித்தனர். இந்நிலையில் பொதுமக்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டம் குறித்த பீதியை போக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்நிலையில் பல்லடம் அருகே அலகுமலை பகுதியில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று புகுந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். விவசாய தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை கடித்து கொல்ல முயற்சித்ததாகவும், அப்போது அருகே இருந்த விவசாயிகளின் அலறல் சத்தம் கேட்டு கன்றுக்குட்டியை விட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கன்றுகுட்டி மீது சிறுத்தை விரலால் கீறியதற்கான தடயங்கள் இருந்தது. அதனைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதனால் பல்லடம் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். மேலும் சிறுத்தையை பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லடம் அருகே மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சமுதாய நலக்கூடம் ஏற்கனவே சிதலமடைந்திருந்த நிலையில் அதனை இடித்து புதிய கட்டிடம் கட்டப்பட இருந்தது.
    • சம்பவம் குறித்து குமரலிங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் பழனி செல்லும் சாலையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இப்பகுதி பஸ் நிறுத்தமாகவும் உள்ளது. இதனால் காலை முதல் இரவு வரை அப்பகுதி பொதுமக்கள் சமுதாய நலக்கூடம் முன்பு பஸ்சுக்காக காத்து நின்று உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வார்கள்.

    இன்று காலை கொழுமம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களான மணிகண்டன் (வயது 28), கவுதம் (29), முரளிராஜன் (35) ஆகியோர் வேலைக்கு செல்வதற்காக பஸ்சுக்காக சமுதாய நலக்கூடம் முன்பு காத்து நின்றனர்.

    இந்தநிலையில் உடுமலை பகுதியில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சமுதாய நலக்கூடத்தின் முன்புற ஸ்லாப் திடீரென இடிந்து, அதன் கீழ் நின்று கொண்டிருந்த 3 பேர் மீதும் விழுந்தது. இதில் மணிகண்டன், கவுதம், முரளிராஜன் ஆகியோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினார்.

    இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனே 3பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. உடனே இது குறித்து குமரலிங்கம் போலீஸ் மற்றும் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளை அகற்றி அடியில் சிக்கியிருந்த 3பேரையும் மீட்டனர். ஆனால் 3பேரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 3பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலைக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்ற 3 தொழிலாளர்கள் மேற்கூரை இடிந்து பலியான சம்பவம் உடுமலை பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    3பேர் பலியான சம்பவத்தை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் 3பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து குமரலிங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமுதாய நலக்கூடம் ஏற்கனவே சிதலமடைந்திருந்த நிலையில் அதனை இடித்து புதிய கட்டிடம் கட்டப்பட இருந்தது. இந்தநிலையில் மேற்கூரை இடிந்து 3பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து அந்த கட்டிடம் முற்றிலும் அகற்றப்பட உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • லியோ படத்தை குறிப்பிடும் வகையிலான டீ-சர்ட் அணிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • அதிக அளவிலான ஆர்டர் லியோ படத்துக்கு பெறப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்கள் மூலம் விளையாட்டு போட்டி , தேர்தல் பிரசாரம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அணியக்கூடிய வகையில் டீ-சர்ட் பனியன் தயாரித்து கொடுக்கப்படுகிறது.

    தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணிவது போன்று, நீலநிறத்தில் தயாரிக்கப்பட்ட 'சிங்கிள் ஜெர்சி' டீ -சர்ட்களுக்கு கிராக்கி அதிகமாகி உள்ளது. 'இந்தியா' மற்றும் வீரர்களின் பெயர் பிரின்ட் செய்யப்பட்ட 'டீ-சர்ட்' பனியன்களை திருப்பூரில் வாங்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஆடை வர்த்தகர்கள் கூறுகையில், வழக்கத்தைவிட குறைவாக இருந்தாலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து, 'டீ-சர்ட்' கேட்டு ஆர்டர்கள் வருகிறது. குறிப்பாக, 'ஆன்லைன்' விசாரணை வேகமெடுத்துள்ளது என்றனர்.

    இதேப்போல் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வருகிற 19-ந்தேதி வெளியாகிறது. இப்படம் வெளியாகும் நாளில், வரவேற்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். இந்தநிலையில் லியோ படத்தை குறிப்பிடும் வகையிலான டீ-சர்ட் அணிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக திருப்பூர் பனியன் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வந்துள்ளது. பனியன் உற்பத்தியாளர் ஒருவர் கூறுகையில், ரஜினி நடித்த கபாலி படம் வெளியானபோது அதை சிறப்பிக்கும் வகையில், டீ-சர்ட் உற்பத்தி செய்யப்பட்டது. நம் நாடு மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் கூட அனுப்பப்பட்டது.

    அதற்கு அடுத்தபடியாக அதிக அளவிலான ஆர்டர் லியோ படத்துக்கு பெறப்பட்டுள்ளது. விஜய் நற்பணி இயக்கத்தினர், ரசிகர்கள் அதிக அளவில் இதற்கு ஆர்டர் அளித்து வாங்கியுள்ளனர். லியோ படத்தின் விஜய் போஸ்டர், அதில் இடம் பெறும் பஞ்ச் டயலாக் ஆகியன அச்சிட்ட டீ-சர்ட்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது என்றார்.

    ×