search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Financial institutions"

    • ஆன்லைனில் வேலைவாங்கி தருவதாகவும், பணம் டெபாசிட் செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகவும், அதிக வட்டி தருவதாகவும் ஏமாற்றுகிறார்கள்.
    • நபர்கள் குறித்து சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர்களிடம் பல லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கடன் தருவதாகவும், குறைவான வட்டியில் கடன் தருவதாகவும், முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் பொய்யான விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். ஆன்லைனில் வேலைவாங்கி தருவதாகவும், பணம் டெபாசிட் செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகவும், அதிக வட்டி தருவதாகவும் ஏமாற்றுகிறார்கள். தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் இனிவரும் காலங்களில் இதுபோல் அரசால் அங்கீகரிக்கப்படாத நிதி நிறுவனங்களின் விளம்பரங்களை பார்த்து முதலீடு செய்ய வேண்டாம். இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து உண்மை தன்மையை அறியலாம்.

    வீடு, கடையின் உரிமையாளர்கள் வாடகைக்கு விடும்போது அந்த நபர்கள் பற்றி முழுமையான விவரங்களை தெரிந்தும், அவர்களின் பான்கார்டு, ஆதார் கார்டு, நிரந்தர முகவரி ஆகிய ஆவணங்களை பெற வேண்டும். நபர்கள் குறித்து சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

    ஆன்லைனில் தங்களது வங்கியின் மூலமாக பேசுவதாக கூறி வங்கி கணக்கை அப்டேட் செய்ய வேண்டும் என்றும், ஓ.டி.பி. நம்பரை பகிருமாறு கூறினால் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துவிடுவார்கள். அவ்வாறு கூறாமல் எச்சரிக்கையாக இருங்கள். பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், வியாபார நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதனால் குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கிராம கண்காணிப்பு கமிட்டி உருவாக்கி அதன் மூலமாக போலீசுடன் நல்லுறவு ஏற்படுத்தி புகார்களை தெரிவிக்கலாம்.

    வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து வேலைக்கு வரும் நபர்கள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர் அந்த நபரின் முழு விவர ஆதாரங்களை பெற வேண்டும். நபர் குறித்து போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்ழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதில் வங்கிகள் தற்போது தயக்கம் காட்டி வருகின்றன.
    • டீமாவில் 950 உறுப்பி]னர்கள் உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கொண்ட டிரிப் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான கருத்தரங்கம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் பேசியதாவது:-

    கொரோனா ஊரடங்கு முடக்கம், நூல் விலை உயர்வு போன்ற காரணங்களால் திருப்பூரில் பனியன் ஏற்றுமதி தொழில் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர இல்லை. தொழில் வளர்ச்சிக்கு வங்கிக்கடன் மிகவும் முக்கியம். ஆனால் வங்கிகள், உற்பத்தி நிறுவனங்களின் ஆண்டு வரவு-செலவை கணக்கிட்டு அதன்பிறகே கடன் வழங்கும். அப்படி பார்க்கும்போது திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதில் வங்கிகள் தற்போது தயக்கம் காட்டி வருகின்றன.

    கடனுக்கு நூல் வாங்கி தொழில் செய்த நிலை மாறி, தற்போதைய சூழ்நிலையில் மூலப்பொருளான நூலை நூற்பாலைகளிடம் பணம் கொடுத்து வாங்கி ஆடை தயாரிக்க வேண்டியுள்ளது. தொழிலின் அனைத்து நிலைகளிலும் பணத்தை முன்கூட்டியே கொடுத்து தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. வங்கிகளை மட்டுமே நம்பியிருந்த நிலையில் அதுவும் சிக்கலாகி வருகிறது. அதற்காக தனியார் நிதி நிறுவனங்களுடன் டீமா ஒப்பந்தம் செய்துள்ளது. டிரிப் அமைப்புடன் ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    டீமாவில் 950 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்றுமதியாளர்கள் ஆவார்கள். ஆர்டர்களை பெற்று வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தால் அதற்கான பணத்தை திரும்ப பெற 30 நாட்கள், 60 நாட்கள், 90 நாட்கள் வரை ஆகும். அதுவரை கடன் பெறாமல் சமாளிக்க முடியாது. வங்கிகள் கைவிட்ட நிலையில் தற்போது ஆர்டருக்கான ஆவணங்களை தனியார் நிதி நிறுவனங்களுக்கு கொடுத்தால் ஆர்டர் தொகையில் 80 சதவீதம் வரை கடன் கொடுக்கிறார்கள். அதன்பிறகு ஆர்டருக்கான தொகையை வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுத்ததும் வங்கிக்கு திரும்பி செலுத்த வசதியாக அமைகிறது. இதை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் டிரிப் அமைப்பினர், தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். டீமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×