search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாட்டு ஆர்டர்களுக்கு கடன் உதவி பெற   நிதி நிறுவனங்களுடன் ஆடை உற்பத்தியாளர் சங்கம்  ஒப்பந்தம்
    X

    கோப்புபடம். 

    வெளிநாட்டு ஆர்டர்களுக்கு கடன் உதவி பெற நிதி நிறுவனங்களுடன் ஆடை உற்பத்தியாளர் சங்கம் ஒப்பந்தம்

    • திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதில் வங்கிகள் தற்போது தயக்கம் காட்டி வருகின்றன.
    • டீமாவில் 950 உறுப்பி]னர்கள் உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கொண்ட டிரிப் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான கருத்தரங்கம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் பேசியதாவது:-

    கொரோனா ஊரடங்கு முடக்கம், நூல் விலை உயர்வு போன்ற காரணங்களால் திருப்பூரில் பனியன் ஏற்றுமதி தொழில் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர இல்லை. தொழில் வளர்ச்சிக்கு வங்கிக்கடன் மிகவும் முக்கியம். ஆனால் வங்கிகள், உற்பத்தி நிறுவனங்களின் ஆண்டு வரவு-செலவை கணக்கிட்டு அதன்பிறகே கடன் வழங்கும். அப்படி பார்க்கும்போது திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதில் வங்கிகள் தற்போது தயக்கம் காட்டி வருகின்றன.

    கடனுக்கு நூல் வாங்கி தொழில் செய்த நிலை மாறி, தற்போதைய சூழ்நிலையில் மூலப்பொருளான நூலை நூற்பாலைகளிடம் பணம் கொடுத்து வாங்கி ஆடை தயாரிக்க வேண்டியுள்ளது. தொழிலின் அனைத்து நிலைகளிலும் பணத்தை முன்கூட்டியே கொடுத்து தொழில் செய்ய வேண்டிய நிலை உள்ளது. வங்கிகளை மட்டுமே நம்பியிருந்த நிலையில் அதுவும் சிக்கலாகி வருகிறது. அதற்காக தனியார் நிதி நிறுவனங்களுடன் டீமா ஒப்பந்தம் செய்துள்ளது. டிரிப் அமைப்புடன் ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    டீமாவில் 950 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்றுமதியாளர்கள் ஆவார்கள். ஆர்டர்களை பெற்று வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தால் அதற்கான பணத்தை திரும்ப பெற 30 நாட்கள், 60 நாட்கள், 90 நாட்கள் வரை ஆகும். அதுவரை கடன் பெறாமல் சமாளிக்க முடியாது. வங்கிகள் கைவிட்ட நிலையில் தற்போது ஆர்டருக்கான ஆவணங்களை தனியார் நிதி நிறுவனங்களுக்கு கொடுத்தால் ஆர்டர் தொகையில் 80 சதவீதம் வரை கடன் கொடுக்கிறார்கள். அதன்பிறகு ஆர்டருக்கான தொகையை வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுத்ததும் வங்கிக்கு திரும்பி செலுத்த வசதியாக அமைகிறது. இதை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் டிரிப் அமைப்பினர், தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். டீமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×