search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீண்டும் ஊருக்குள் புகுந்த சிறுத்தை- கன்றுக்குட்டியை கடித்து குதற முயன்றதால் பொதுமக்கள் பீதி
    X

    மீண்டும் ஊருக்குள் புகுந்த சிறுத்தை- கன்றுக்குட்டியை கடித்து குதற முயன்றதால் பொதுமக்கள் பீதி

    தகவல் அறிந்ததும் வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த 7-ந் தேதி சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றதாக அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் திருப்பூர் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று தெரிவித்தனர்.

    மேலும் அந்த பகுதியில் காலடித்தடங்களை ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் இல்லை என்றும் தெளிவாக தெரிவித்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பல்லடம்-தாராபுரம் சாலையில் உள்ள துத்தாரி பாளையத்தில் வித்தியாசமான உருவம் கொண்ட மிருகம் ஒன்று சாலையை கடந்து சென்றதாக ஒருவர் தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற வனத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்ட போது அங்கிருந்த கால் தட பதிவுகள் நாயின் கால் தட பதிவுகளை விட சற்று பெரியதாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிறுத்தையின் கால் தடப்பதிவுகள் போல் அல்லாமல் இருந்தது.

    சிறுத்தையின் கால் தட பதிவுகளில் நகம் பதிவாகி இருக்கும். ஆனால் இந்த கால் தட பதிவுகளில் அப்படி இல்லை என்று தெரிவித்தனர். இந்நிலையில் பொதுமக்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டம் குறித்த பீதியை போக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    இந்நிலையில் பல்லடம் அருகே அலகுமலை பகுதியில் நேற்றிரவு சிறுத்தை ஒன்று புகுந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். விவசாய தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை கடித்து கொல்ல முயற்சித்ததாகவும், அப்போது அருகே இருந்த விவசாயிகளின் அலறல் சத்தம் கேட்டு கன்றுக்குட்டியை விட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சாமிநாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கன்றுகுட்டி மீது சிறுத்தை விரலால் கீறியதற்கான தடயங்கள் இருந்தது. அதனைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதனால் பல்லடம் பகுதி பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். மேலும் சிறுத்தையை பிடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லடம் அருகே மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×