என் மலர்
திருவாரூர்
- 26 பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
- நெடுவாக்கோட்டை பள்ளி மாணவிகள் வசீகா, ரித்திகா ஸ்ரீ, நிஷாந்தினி ஆகியோர் முதல் பரிசு பெற்றனர்.
மன்னார்குடி:
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் துளிர் வினாடி வினா போட்டி மன்னார்குடி ஒன்றிய அளவில் நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் முனைவர்.எஸ்.அன்பரசு தலைமை வகித்தார்.
அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் யு.எஸ்.பொன்முடி வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவரும் துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஆர்.கே. சரவண ராஜன் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியை மா.தேவி வாழ்த்துரை வழங்கினார். மன்னார்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட 26 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் வினாடி- வினா போட்டிகளில் பங்கேற்றனர். 6, 7, 8 இளநிலை பிரிவுகளில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நெடுவாக்கோட்டை மாணவிகள் தே.வசீகா, மா. ரித்திகா ஸ்ரீ, அ.நிஷாந்தினி ஆகியோர் முதல் பரிசையும், புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் ச.சிவஸ்ரீ.ரா ஹர்ஷினி, க.ஹனிஸ்காஸ்ரீ ஆகியோர் இரண்டாம் பரிசையும், மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோ. ஹரிஷ் குமார், கா.இனியன் பிரசாத், கு.தி யுகேஸ்வரன் ஆகியோர் மூன்றாம் பரிசினையும், 9, 10 ம் வகுப்பு உயர்நிலைப் பிரிவில் புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கு.சுபஸ்ரீ, பா. வைத்தீஸ்வரன், ஆர். ஹரிஹரன் ஆகியோர் முதல் பரிசினையும்.
தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஏ.ஆர். ஹர்ஷிதா, கு. சிவகனேஷ்வர், மு. மாதேஷ் ஆகியோர் இரண்டாம் பரிசினையும், பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டி. தேச தேவன், டி. கிஷோர் ஆகியோர் மூன்றாம் பிரச்சினையும் பெற்றனர். 11,12ஆம் வகுப்பு மேல்நிலை பிரிவில் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.பிரசன்ன வெங்கடேஷ், ஆர்.வி. ஸ்ரீராம், ஜி. மோகேஷ் ஆகியோர் முதல் பரிசையும், பரவக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் டி. பிரவீன், ஆர்.சூரிய பிரகாஷ், எம் சரவணா ஆகியோர் இரண்டாம் பரிசினையும் பெற்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவர்கள் வரும் 29ம் தேதி திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான துளிர் வினாடி வினா போட்டிக்கு பங்கேற்கத் தகுதி பெறுகின்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மன்னார்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் டி. தனபால் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்திப் பேசினார். நிறைவாக அறிவியல் இயக்க செயலாளர் டி.இமானுவேல் நன்றி கூறினார்.
- மாணவிகள் தினமும் பள்ளி முடிந்தவுடன் அரசு பஸ்களில் செல்வது வழக்கம்.
- கூடுதலாக பஸ்கள் ஏதும் இயக்கப்–படாததால், மாணவர்கள் கூட்ட நெரிசலில் செல்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் மணலி, ஆலத்தம்பாடி, பல்லாங்கோயில், கலப்பால், பாமணி, நெடும்பலம், திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மாணவ- மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளி முடிந்தவுடன் அரசு பஸ்களில் செல்வது வழக்கம்.
இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் வெளியூருக்கு செல்வ–தற்காக பயணிகள் அதிகளவில் திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தில் குவிந்துள்ளனர்.
ஆனால், கூடுதலாக பஸ்கள் ஏதும் இயக்கப்–படாததால், மாணவர்கள் கூட்ட நெரிசலில் செல்கின்றனர். மேலும், பஸ்சுக்காக பல மணி நேரம் பஸ் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே, விழா காலங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொருளாதார நெருக்கடியாலும், உரிய வழிகாட்டுதல் இல்லாததாலும் மாணவர்கள் வேலை தேடி செல்கின்றனர்.
- மாணவர்கள் தங்கி பயிலக்கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மைய கட்டடம் கட்டி தர வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் மாரிமுத்து எம்.எல்.ஏ அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழகத்திலேயே ஏழை,எளிய மக்கள் நிறைந்த பகுதியாக டெல்டா மாவட்டம் உள்ளது. அதில் திருத்துறைப்பூண்டி தொகுதி உழைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.
இப்பகுதியில் ஆதிதிராவிடர் பட்டியல் சமூக மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இத்தொகுதியில் பெரிய தொழில் சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஏதும் இல்லை. இயற்கையின் பல இன்னல்களுக்கு மத்தியில் இப்பகுதி இளைஞர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியாலும், உரிய வழிகாட்டுதல் இல்லாததாலும், பல மாணவ மாணவிகள் உயர்கல்வியை தொடராமல் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலத்திற்கு வேலை தேடி செல்கின்றனர்.
இதனால் அவர்களின் கல்வியும் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாக உள்ளது. மிகவும் பின்தங்கிய இப்பகுதியில் படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்வது எட்டாக்கனியாக உள்ளது.
ஆகையால் இப்பகுதியில் படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் வகையில் அவர்களுக்கு வழிகாட்டியாக தேர்வுகளை எதிர்கொள்ள விடுதியுடன் கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மையம் துவங்கினால் பேருதவியாக இருக்கும்.
இப்பகுதியில் பயிற்சி மையம் துவங்கினால் ஆதிதிராவிட பட்டியல் இன சமூக மாணவர்களும், பிற சமூக மாணவர்களும் பெரும் பயனடைவார்கள்.
ஆகையால் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், முத்துப்பேட்டை ஆகிய வட்டாரங்களில் 100 மாணவர்கள் தங்கிப் பயில கூடிய போட்டித்தேர்வு பயிற்சி மைய கட்டடம், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கட்டித்தர வேண்டியும் அதே போல கோட்டூரில் மேற்ப்படி துறையின் மூலம் சமுதாயக்கூடம் கட்டடம் கட்டித்தர நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டியும்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரிடம் மாரிமுத்து எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்.
- இரு நபர்களுக்கும் சொத்து தகராறு பிரச்சினை நிலுவையில் உள்ளது.
- செல்வகுமாரை அம்மாபேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நீடாமங்கலம்:
அம்மாபேட்டைஅருகே உள்ள புலவர் நத்தம், குடியான தெருவை சேர்ந்த வர் ஜவகர் என்பவரது மகன் ராஜ்மோகன் (39).
இவருக்கும்அவரது உறவினரான அவளிவ நல்லூரை அடுத்த சடையங்கால் கிராமத்தைச் சேர்ந்த முருகையன் என்ப வரது மகன் செல்வ க்குமாருக்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது.
அதன் காரணமாக ராஜ்மோகனை, செல்வக்குமார் கடத்தி வந்து அவளிவநல்லூர் கடைத்தெருவில் வெட்டியு ள்ளனர்.
இதனால் சம்பவ இடத்திலேயே ராஜ்மோகன் துடிதுடித்து இறந்துள்ளார்.
இறந்த ராஜ்மோகன் உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்க்காக அனுப்பி வைத்து தப்பி ஓடிய செல்வகுமாரை அம்மாபேட்டை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடிய 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
- 3 வருடங்கள் மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கூறியதாவது,
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் அரசு இடங்கள், பள்ளிகள், பூங்காக்கள், குப்பை கிடங்குகள், குளம், ஆறு, வாய்க்கால் கரை பகுதிகளில் இந்தாண்டு நகராட்சிக்கு வருமானம் தரக்கூடிய வகையிலும், இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடிய 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம், நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம், ஸ்கார்டு தொண்டு நிறுவனம் இணைந்து இப்பணியை மேற்கொள்ளவுள்ளது.
இப்பணியானது ஒரு மாதத்தில் முடிவடையும். தொடர்ந்து 3 வருடங்கள் மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும் என்றார்.
இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் மரக்கன்றை நட்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், திட்ட அலுவலர் திருலோகசந்தர் மற்றும் அலுவலர்கள் கனகதுர்கா, திலகவதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
- மாணவர்களுக்கு சீருடை, இனிப்பு, பட்டாசு மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது.
- பணிகளை பாராட்டி நினைவுப்பரிசு, பொன்னாடைகள் வழங்கி கவுரவிப்பு.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி பெயர் பொறித்த சீருடை, தீபாவளி இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக தலைமை–யாசிரியர் வேதரெத்தினம், உதவிஆசிரியை சுசீலா, ஆட்டோ ஓட்டுநர் அன்புமணி ஆகியோரின் பணிகளை பாராட்டி நினைவுப்பரிசு, பொன்னாடைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் கருணாநிதி, வட்டார கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், அறிவழகன், ரோட்டரி துணை ஆளுநர் சிவக்குமார், ஆதப்பன், இளங்கோவன், திலகமணி, முத்து சாமி, அறிவழகன், உறுப்பினர் அஜித் ராஜா, ஹாஜா அலாவுதீன், தலைமையாசிரியர்கள் சுபாஷ், முருகாdந்தம், ஆசிரியர்கள் வேதரெத்தினம், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- தேர்வு கட்டணம் உயர்வுக்கு கண்டனம்.
- பழைய கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த, கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாக தொடங்கப்பட்டு, தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆக மாறி உள்ளது நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
தற்போது தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்டணம் உயர்த்தப்பட்டதை கைவிடக்கோரியும், ஏற்கனவே வாங்கிய பழைய கட்டணத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கடந்த செமஸ்டர் தேர்வில் இளங்கலையில் தேர்வு கட்டணம் 75 ரூபாய் இருந்ததை தற்போது 120 ரூபாயும், முதுகலையில் 150 ரூபாய் இருந்த தேர்வு கட்டணம் தற்போது 200 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதேபோல் செய்முறை கட்டணமும் உயர்ந்துள்ளதால் பழைய கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
- காய்கறி வியாபாரம் செய்து வரும் முதியவர் கடை தெருவிற்கு சென்றுள்ளார்.
- பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மேல அக்ராஹாரம் தெருவை சேர்ந்தவர் முகமது யூசுப் (வயது 60).
இவர் சைக்கிளில் காய்கறிகளை வியாபாரம் செய்து வந்தார்.
நேற்று வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்தவுடன் கடை தெருவிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆற்றில் சடலமாக முகமது யூசுப் கிடந்துள்ளார்.
உடன் அக்கம் பக்கத்தினர் நன்னிலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முகமது யூசுப் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை.
- கவியரசன் என்பவரை கைது செய்து 200 கிராம் கஞ்சா பறிமுதல்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை மன்னார்குடி கீழப்பாலம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள மீனாட்சியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற மன்னார்குடியை சேர்ந்த கவியரசன் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.
- நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து மத்திய குழுவினரால் ஆய்வு.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், திருப்பத்தூர், ஆலத்தம்பாடி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழக சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மைய துணை இயக்குனர் எம்.இசட்.கான்.
இந்திய உணவு கழக தரக்கட்டுப்பாடு பிரிவு தொழில் நுட்ப அலுவலர் சி.யூனிஸ், உதவி பொது மேலாளர் குணால் குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மண்டல மேலாளர் செந்தில் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வின்போது மாரிமுத்து எம்.எல்.ஏ உடனிருந்தார்.
டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதை யொட்டி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது.
இதையடுத்து, திருவாரூர் மாவட்டம் பூவானத்தம், முன்னவால்கோட்டை, செருமங்கலம், ஓவர்சேரி, திருப்பத்தூர், ஆலத்தம்பாடி ஆகிய நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து மத்திய குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன்,வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.
- ஆஞ்சநேயரை புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
- ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் அதிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் 16 அடி உயர வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
இந்த ஆஞ்சநேயரை புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி புரட்டாசி மாதம் சனிக்கிழமையையொட்டி நேற்று வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிங்காரவடிவேலு.
தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் செய்திருந்தனர்.
- கடந்த ஆண்டு படிக்க பிடிக்கவில்லை என்று வீட்டை விட்டு மாதேஷ் வெளியேறினார்.
- போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மாயமான மாதேசை தேடி வந்தனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் இலவங்கார்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய ஒரே மகன் மாதேஷ்(வயது 17). இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாதேஷ் தனக்கு ஆடை எடுக்க வேண்டும் என்று வீட்டில் இருந்து ரூ.5 ஆயிரம் வாங்கிக்கொண்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. மாணவரின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் மறுநாள் வீடு திரும்பினார்.
இதேபோல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் படிக்க பிடிக்கவில்லை என்று வீட்டை விட்டு மாதேஷ் வெளியேறினார். அவர் திரும்பி வராததால் திருவாரூர் தாலுகா போலீசில் அறிவழகன் புகார் கொடுத்தார். அதன்பேரில் தாலுகா போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மாயமான மாதேசை தேடி வந்தனர். இந்த நிலையில் மாதேசின் தந்தை அறிவழகனின் செல்போனுக்கு ஓ.டி.பி. எண் ஒன்று வந்துள்ளது. அதனை திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஓ.டி.பி. எண் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் மூலம் விசாரணை நடத்தியபோது அந்த ஓ.டி.பி. எண் மும்பையில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்ததால் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின்படி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, ஏட்டு ஜானி ரஞ்சித் மற்றும் மாதேசின் தந்தை அறிவழகன் ஆகியோர் மும்பை சென்று மாதேசை கண்டுபிடித்தனர்.
அறிவழகன் தனது மகன் மாதேசை கண்டதும் கட்டிப்பிடித்து கதறி அழுதார். ஒரே மகன் சார்... ஒரே மகன் சார்... என்று போலீசாரிடம் புலம்பியபடி அவர் அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
அறிவழகன் மடியில் மாதேஷ் அமர்ந்து கொண்டு அவருக்கு முத்தம் கொடுத்து நீ அழாத அப்பா... அழாத... என்று கூறினார். இந்த வீடியோ அங்கிருந்த ஒருவரால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
மாணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மாதேஷ் திருவாரூரில் இருந்து பெங்களூரு ரெயிலில் சென்று அங்கிருந்து மும்பை சென்றுள்ளார். அங்கு சேலத்தை சேர்ந்த தொழிலதிபரான கனகவேல் என்பவரிடம் சென்று சேர்ந்த மாதேஷ் தனக்கு தாய், தந்தை யாரும் கிடையாது என்று அவரிடம் கூறியுள்ளார். இதனால் மாதேசை தனது மகன் போல அவர் வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மாதேசுக்கு மும்பையில் ஆதார் கார்டு எடுப்பதற்காக பதிவு செய்தபோது அறிவழகன் செல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்துள்ளது தெரிய வந்துள்ளது.






