என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • புறம்போக்கு இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் இடிப்பதை கண்டித்து மறியல்.
    • கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர், காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து பேசினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை ஊராட்சி, கண்ணன்மேடு கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் குடியிருப்புகள் கட்டப்பட்டதாக அதிகாரிகள் இடிப்பதை கண்டித்து பாமணி இ.சி.ஆர். சாலையில் அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய தலைவர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் ஒன்றிய செயலாளர் சோதி பாஸ், கொற்கை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன், பாமணி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, கொக்கலாடி ஊராட்சி மன்ற தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் சாமிநாதன், கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கோபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.பி சுந்தர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் மறியில் ஈடுப்பட்டோர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    காமராஜ் எம்.எல்.ஏ. சந்திப்பு

    இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களை முன்னாள் அமைச்சர், காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து பேசினார். இதில் திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் டி.சி. சண்முகசுந்தர், ஒன்றிய செயலாளர் சிங்காரவேல் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சுவாமிமலையில் இருந்து பாபநாசம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • பிரேக் பிடிக்காததால் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டர் சைக்கிள் மோதியது.

    நீடாமங்கலம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறையை சேர்ந்தவர் சாகிர் உசேன்.

    இவரது மகன் அப்துல் ரஜும் (வயது 20). இவர் சம்பவத்தன்று இரவு சுவாமிமலையில் இருந்து பாபநாசம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, உத்தாணி அருகே சென்ற போது சாலையில் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. லாரி நிற்பதை கண்டு அப்துல் ரஜும் பிரேக் அடிக்க முயற்சி செய்துள்ளார்.

    பிரேக் பிடிக்காததால் லாரி மீது மோட்டர் சைக்கிள் மோதியது.

    இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கரூரை சேர்ந்த மணிவண்ணன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜலட்சுமி தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • விபத்தில் துகிலியை சேர்ந்த ராஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீடாமங்கலம்:

    மயிலாடுதுறை அடுத்த கோமல் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி.

    இவர், தன் மகளுடன் இருசக்கர வாகனத்தில் திருவிசநல்லூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு தீபாவளியை முன்னிட்டு சென்றுள்ளார்.

    பண்டிகை கொண்டா ட்டம் முடிந்தவுடன் இரவு ஊருக்கு செல்லலாம் என ராஜலட்சுமி தனது மகளுடன் கிளம்பி தனது இருசக்கர வாகனத்தில் வேப்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாரா தவிதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது.

    இதில் காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்தில் துகிலியை சேர்ந்த ராஜா என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முதியோர் உதவித்தொகை 50பேருக்கு தீபாவளி விழா தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மாரிமுத்து எம்எல்ஏ, மன்றத்தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் விலையில்லா வேட்டி சேலை வழங்கினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் முதியோர் உதவித்தொகை பெறும் 50பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலை வழங்கும் விழா தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது.

    ஆர்டி.ஓ கீர்த்தனா மணி தலைமை வகித்தார்.

    துணை கலெக்டர் கண்மணி முன்னிலை வகித்தார்.

    தாசில்தார் மலர்கொடி வரவேற்றார்.

    மாரிமுத்து எம்எல்ஏ, மன்றத்தலைவர் கவிதா பாண்டியன் ஆகியோர் விலையில்லா வேட்டி சேலை வழங்கினர்.

    இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார், வி.ஏ.ஓ.க்கள் முருகானந்தம், தினேஷ்குமார், உயரதிகாரிகள், முதியோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நம்பிக்கை மனநல காப்பகத்தில் மனநல மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நாளுக்குநாள் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆண், பெண் அதிகமாக சுற்றி வருகிறார்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் மனநல மறுவாழ்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி சமூகப் பணித்துறை மாணவி ஆர்த்தி வரவேற்று பேசினார்.

    திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினர் எழிலரசன் முன்னிலை வகித்தார். திருத்துறைப்பூண்டி நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையேற்று மனநலத்தை பற்றியும் மறுவாழ்வு சிகிச்சை பற்றியும் நம்பிக்கை மனநல காப்பக சேவைகள் அனைத்தையும் படும் சிரமங்களையும் விவரமாக எடுத்துக் கூறி தலைமை உரையாற்றினார் .

    வழக்கறிஞர் கதா க. அரசு தாயுமானவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நம்பிக்கை மனநலக் காப்பகத்தின் சிறப்பான சேவைகளையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அணுகுதல், கண்காணித்தல், வழிபடுத்துதல், ஆற்றப்படுத்துதல், மறுவாழ்வு செய்தல், மன சிகிச்சை அளித்தல் போன்றவற்றை எடுத்துக் கூறினார்.

    நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சௌந்தரராஜன், நாளுக்கு நாள் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆண், பெண் அதிகமாக சுற்றி வருகிறார்கள்.

    அவர்களை மீட்டெடுத்தல், பாதுகாப்பு கொடுத்தல், உணவளித்தல்,

    மனநல சிகிச்சை அளித்தல் ஆற்றப்படுதல் குடும்பத்துடன் சேர்த்து வைத்தல் போன்றவற்றை விவரித்தார்.

    நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் தன்னார்வலர்கள் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    சமூகப் பணி ஆர்த்தி பயனுள்ள நூல்களையும் பூக்கன்றுகளையும் கொடுத்து வாழ்த்து பெற்றார்.

    நம்பிக்கை மனநல காப்பக பணியாளர்கள் கோகிலா, சுபா, சக்தி பிரியா, சரவணன், சங்கர், செவிலியர் சுதா, வள்ளி கலந்து கொண்டனர்.

    முடிவில் நம்பிக்கை தொண்டு நிறுவன திட்ட மேலாளர் விஜயா நம்பிக்கை மனநல காப்பகத்தை பற்றியும் பணியாளர்களையும் சமூக பணியில் முதுகலை பட்டம் பெரும் ஆர்த்தியை பற்றியும் எடுத்துக் கூறினார்.

    • இந்தியாவிலேயே முதன்முதலில் மன்னார்குடியில் தொடங்கப்பட்ட முதல் நடமாடும் நூலகம்.
    • 91 ஆம் ஆண்டின் நிறைவு விழா மன்னார்குடி வ.உ.சி சாலையிலுள்ள அரசு கிளை நூலகத்தில் நடைபெற்றன.

    மன்னார்குடி:

    இந்தியாவிலேயே முதன்முதலில் மன்னார்குடியில தொடங்கப்பட்ட முதல் நடமாடும் நூலகத்தின் 91 ஆம் ஆண்டின் நிறைவு விழா மன்னார்குடி வ.உ.சி சாலையிலுள்ள அரசு கிளை நூலகத்தில் நடைபெற்றன.

    நூலகர் அன்பரசு தலைமை வகித்தார்.

    கூத்தாநல்லூர் கிளை நூகர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.

    தமிழக தமிழறிஞர்களின் மாவட்ட தலைவர் புரவலர் முனைவர் இருளப்பன் நடமாடும் நூலகத்தை உருவாக்கிய பொறியாளர் எஸ்.வி. கனகசபைபிள்ளை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் நூலக பணியாளர் சமூக ஆர்வலர் சரவணகுமார், போட்டி தேர்வு பயிற்சி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவர் அஜித் நன்றி கூறினார்.

    • கால்நடை நோய் புலனாய்வு பிரிவு புதிய கட்டடம் முதல-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • கால்நடைகளில் நோய் மாதிரி பொருட்களை சேகரித்து தடுப்பூசி அல்லது சிகிச்சை நடத்தப்பட்டன.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவு புதிய கட்டடம் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    இக்கால்நடை நோய் புலனாய்வு பிரிவகத்தின் மூலம் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து நகர்புற, கிராமப்புற பகுதிகளில் பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டுவரும் அனைத்துவகை கால்நடைகளும் எவ்வித நோய் தொற்று ஏதும் வராமலும், பரவாமலும் இருக்க அவ்வபோது கால்நடைகளில் நோய் மாதிரி பொருட்களை சேகரித்து ஆய்விடப்பட்டு ஆய்வின் முடிவின்படி தடுப்பூசி அல்லது சிகிச்சை முகாம்கள் நடத்தப்படும்.

    இக்கட்டடமானது, 3 ஆயிரத்து 761 சதுர அடி பரப்பளவில்; அலுவலக அறை, ஆய்வகம், இருப்பு அறை, உதவி இயக்குநர் அறை, கால்நடை மருத்துவர் அறை, கழிவறைகள் ஆகிய வசதிகளுடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

    இப்பிரிவகத்தினை மாவட்ட கலெக்டர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர். தொடர்ந்து, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், கொரடாச்சேரி பேரூராட்சி தலைவர் கலைசெல்வி செல்வகுமார், பேரூராட்சி துணைத்தலைவர் தளபதி உதவி இயக்குநர்கள் ஈஸ்வரன், சபாபதி, கால்நடை நோய் புலனாய்வு பிரிவக உதவி இயக்குநர் சுவாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • அதிமுக சார்பில் கட்சியின் தொடங்கி 50ம் ஆண்டு பொன்விழா நிறைவையும், 51ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் மீண்டும் அதிமுக வெற்றி நடை போடும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் தொடங்கி 50ம் ஆண்டு பொன்விழா நிறைவையும், 51ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருவாரூரில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி வரவேற்றார்.

    தலைமை கழக பேச்சாளர்கள் இடி முழக்கம் இளமுருகன், தீப்பொறி ராமலிங்கம் ஆகியோர் கட்சியின் வரலாறு தொடர்பாக விளக்க உரையாற்றினார்கள்.

    முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்எல்ஏ பேசியபோது கூறியதாவது, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்டிக் காத்து வருகிறார்.

    கட்சியின் பொன்விழா என்று நினைவாக இந்த கூட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் மீண்டும் அதிமுக வெற்றி நடை போடும்.

    விரைவில் தமிழகத்தின் ஆட்சியைப் கைப்பற்றும். இவ்வாறு கூறினார்.

    நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்பு செயலாளர் சிவா.இராஜமாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், திருவாரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் எஸ்.கலியபெருமாள், மாவட்ட கழகப் பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரயில் பாஸ்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.ஆர்.பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் பி.கே.யூ.மணிகண்டன், செந்தில் வேல், திருவாரூர் மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் கூரியர் மதி, திருவாரூர் மாவட்ட ஒன்றிய துணைத் உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொன்விழா என்று நினைவாக ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    • நம்பிக்கை மனநல காப்பகத்தில் தங்கி உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • புதிய ஆடைகள் , இனிப்பு மற்றும் பட்டாசுகள் டெல்டா ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வழங்கினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி கீழ வீதியில் இயங்கி வரும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் தங்கி உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய ஆடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுகள் டெல்டா ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்விற்கு தலைவர்ரமேஷ் தலைமை தாங்கினார்.

    மண்டலம் 25 உதவி ஆளுநர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

    டெல்டா ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகளை வாழ்த்தி நம்பிக்கை மனநல காப்பக சேர்மன் சௌந்தர்ராஜன், அவரது துணைவியார் காப்பகத்தின் துணை சேர்மன் விஜயா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி டெல்டா ரோட்டரி உறுப்பினர்களை கௌரவித்தனர்.

    முடிவில் செயலாளர் ராஜதுரை நன்றி கூறினார்.

    இந்த தீபாவளி சிறப்பு புத்தாடை வழங்கும் ஏற்பாட்டினை பொருளாளர் அகிலன், உடனடி முன்னாள் தலைவர் காளிதாஸ் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மனநல காப்பகத்தில் உள்ளவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    • மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு வருகின்றது.
    • நடவடிக்கை எடுக்காததால் அந்த வார்டு பொதுமக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி, 14-வது வார்டுக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் முறையான வடிகால் அமைக்கப்படாத காரணத்தினால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் தண்ணீர் தேங்கி, பொதுமக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு வருகின்றது.

    இது சம்பந்தமாக முதல் மன்ற கூட்டத்திலேயே எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 14-வது வார்டு உறுப்பினர்ஜகபர் அலி கோரிக்கை வைத்து, பேரூராட்சி மன்றத்தின் 27-வது தீர்மானமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மழைக்காலம் நெருங்குவதை கருத்தில் கொண்டு இரண்டு மாதங்களுக்கு முன்னரே 14-வது வார்டு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

    இருந்தாலும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அந்த வார்டு பொதுமக்கள் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர், பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொரடாச்சேரி ஒன்றியம் கிளையின் சார்பில் துளிர் வினாடி-வினா போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொரடாச்சேரி ஒன்றியம் கிளையின் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி நடைபெற்றது.

    அறிவியல் இயக்க கொரடாச்சேரி கிளையின் தலைவர் ச.பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் ப.குமார் வரவேற்புரை ஆற்றினார்.

    சிறப்பு அழைப்பாளர்–களாக வட்டாரக்கல்வி அலுவலர்கள் விமலா, சுமதி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் யு.எஸ். பொன்முடி, மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம், துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே சரவணராஜன், மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.முடிவில் பொருளாளர் ஜெயசங்கர் நன்றி கூறினார். கொரடாச்சேரி ஒன்றிய அளவில் துளிர் வினாடி வினா போட்டியில் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு பிரிவில் அபிவிருத்திஸ்வரம் நடுநிலைப் பள்ளி முதலிடமும்.

    மேலராதா நல்லூர் நடுநிலைப் பள்ளி இரண்டாமிடமும், திருவிடவாசல் நடுநிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றுள்ளன.

    9 மற்றும் 10-ம் வகுப்பு பிரிவில் கண்கொடுத்தவனிதம் உயர்நிலைப் பள்ளி முதலிடமும் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றுள்ளன.

    11 மற்றும் 12-ம் வகுப்பு பிரிவில் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடமும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் பெற்றுள்ளன.

    • காசோலையை வங்கியில் செல்வராஜ் செலுத்தியபோது பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துவிட்டது.
    • 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 82).விவசாயி.

    இவரிடம் மன்னார்குடி நியூ பைபாஸ் ரோடு புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஓட்டல் தொழில் செய்து வரும் சத்தியமூர்த்தி (வயது 55) என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு ரூ 4 லட்சம் செல்வராஜ் கடன் வாங்கி உள்ளார்.

    கடனை செல்வராஜ் திருப்பி கேட்ட பொழுது சத்தியமூர்த்தி கடன் தொகைக்காக காசோலை வழங்கியுள்ளார்.

    காசோலையை வங்கியில் செல்வராஜ் செலுத்தியபோது பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்துவிட்டது.

    இதனை அடுத்து மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1 -ல் செல்வராஜ் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நேற்று முன்தினம் முன்னாடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட சத்தியமூர்த்தி கடன்தொகையில் இரு மடங்கு தொகையான ரூ 8 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும்.

    மற்றும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

    ×