என் மலர்
திருவாரூர்
- வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக எந்நேரமும் ஆடுகள்மாடுகள் சுற்றித் திரிகின்றன.
- குடிநீர், தெருவிளக்கு போன்ற பிரச்சினைக்கு தீர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி, நகராட்சி 19 வது வார்டில் பகுதி சபை கூட்டம் நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது
இதில் நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன், நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ்நகர மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர்கள், வார்டு பொறுப்பாளர்கள் அனைத்து கட்சியை சேர்ந்த வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 19-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் கூறுகையில் சாலைகளில் பொதும க்களுக்கும்,வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக எந்நேரமும் ஆடுகள்மாடுகள் சுற்றித் திரிகின்றன.
இதனை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் 19-வது வார்டில் அனைத்து அடிப்படை வசதிகளையும் முறையாக, உடனடியாக செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஜவுளி கடை தெரு, பாரதியார் தெரு, வேதை தெருவில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகளை தெரிவித்தனர்
அப்போது நகரசபை தலைவர் கவிதா பாண்டியன் பொதுமக்களின் கோரிக்கையை மனுக்களாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மற்றும் பிடாரி குளம், தச்சங்குளத்சுதை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொ ள்ளப்பட்டது. இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- கல்லறை தோட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது
- இறந்த தாய், தந்தை, உறவினர், நண்பர்களின் கல்லறைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி மாதா கோவில் தெரு கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாளையொட்டி கிறித்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை செலாஸ்டின் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பின்னர் ஆலய வளாகத்தில் இருந்த கல்லறைகள் மற்றும் அருகிலிருந்த கல்லறை தோட்டத்தில் உள்ள அனைத்து கல்லறைகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது.
- பயிர் காப்பீடு கட்டிய அனைவருக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.
- பயிர் காப்பீடு கிடைக்க கலெக்டரிடம் பேசி முயற்சி செய்கிறோம்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில்தமிழ்நாடு விவசாய சங்கம் சிபிஐ, தமிழ்நாடு விவசாய சங்கம் சிபிஎம் இணைந்து, பயிர் காப்பீடு கட்டிய அனை வருக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்தினுடைய சமாதான கூட்டம் வலங்கைமான் வட்டாட்சியர் சந்தன கோபாலகிருஷ்ணன் தலைமை நடைபெற்றது.
இந்த சமாதான கூட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ஜெயசீலன் வட்டார புள்ளியல் துறை அலுவலர் சுரேஷ்குமார், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் ரங்கராஜன், (சி பி ஐ) தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் கலியபெருமாள் (சி பி எம்) இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் சின்ன ராஜா, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் கலியபெருமாள், இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் பயிர் காப்பீடு கிடைக்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி முயற்சி செய்கிறோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் சமாதான கூட்டம் நிறைவுற்றது.
- சாமி தரிசனம் முடித்து திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி காரில் சென்றுள்ளனர்.
- கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓரத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
திருவாரூர்:
சென்னை கிழக்கு தாம்பரம் வால்மீகி தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 71). இவரது மனைவி பானுமதி (67). கணேசன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர்களது மகன் சாமிநாதன் (37), அவரது மனைவி லெட்சுமி (35). சாமிநாதன் சென்னையில் சொந்த தொழில் செய்து வருகிறார்.
சாமிநாதன் குழந்தை லட்சுமி நாராயணன் (வயது 1) ஆகியோர் சென்னையில் இருந்து திருவாரூரில் உள்ள குலதெய்வ கோவிலிலுக்கு காரில் வந்துள்ளனர்.
தரிசனம் முடித்து திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி காரில் சென்றுள்ளனர். காரை சாமிநாதன் ஒட்டி வந்துள்ளார். அப்போது விசலூர் என்கிற இடத்தில் கார் சென்ற போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கும், நன்னிலம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் குளத்தில் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்த போதும் கணேசன், பானுமதி, சாமிநாதன், ஒரு வயது குழந்தையான லட்சுமிநாராயணன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
லட்சுமி மட்டும் உயிருடன் இருந்த நிலையில் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நன்னிலம் காவல் –துறையினர் உயிரிழந்த நால்வரின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து காவல்–துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.
- பயிர் காப்பீட்டு தொகை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழை பாதிப்பு ஏற்படும் இடங்களில் வருவாய் துறை, காவல் துறை பொதுப்பணித்து–றையினருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்யத் தொடங்கியுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ஈரப்பதம் காரணமாக நெல்லை விற்க முடியாத சூழ்நிலையில் விவசாயிகள் சிக்கி தவித்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்
அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் உலர்த்தும் வசதியை தமிழக அரசே ஏற்பாடு செய்து தர வேண்டும் 2021-22ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகளை விவ சாயிகள் சந்தித்துள்ளனர்.
தமிழக அரசு உரிய முறையில் கண்காணித்து அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு நிலுவை தொகையை கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நகர்மன்ற தலைவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.
- நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்ல உறுதி எடுப்போம்.
திருத்துறைப்பூண்டி:
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம், திருத்துறைப்பூண்டி நகராட்சி இணைந்து தேசிய ஒற்றுமை தின பேரணி மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஒற்றுமை தினத்தில் நாம் அனைவரும் விருப்பு வெறுப்புகளை கடந்து முன்னேற்ற பாதையில் செல்ல உறுதி எடுப்போம் என்றார்.
நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் சிற்றரசு, நகராட்சி அலுவலர்கள், மக்கள் கல்வி நிறுவன திட்ட அலுவலர் திருலோகசந்தர், அலுவலர் கனகதுர்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு.
- இறுதியாக மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நீடாமங்கலம்:
நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனை வளாகத்தில், திருநறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, "பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள்" குறித்த விழிப்புணர்வு மற்றும் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாச்சியார் கோவில் அரசு மருத்துவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் ஜெயந்தி, நாச்சியார் கோவில் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி, திருநறையூர் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியாக மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி திருநறையூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேரணி முடிவுற்றது.
- கைப்பந்து வீரரான சுவேதன் படிப்பிலும் சிறந்து விளங்குபவர்.
- டிராக்டர் பின்னோக்கி வந்ததில் சுவேதன் மீறி ஏறி இறங்கியது.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே உள்ள கீழ நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த உதயசூரியன்- வனிதா தம்பதியினரின் இரண்டாவது மகன் சுவேதன் (வயது 14).
இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கைப்பந்து வீரரான சுவேதன் படிப்பிலும் சிறந்து விளங்குபவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுவேதன் வீட்டில் இருந்த நெல் மூட்டை ஏற்றிய டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கீழநெம்மேலி பாலத்தில் டிராக்டரை நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதற்காக கீழே இறங்கினார்.
அப்போது பாலத்தின் இறக்கம் என்பதாலும் பிரேக்கை சரியாக பயன்படுத்தாத காரணத்தினாலும் டிராக்டர் பின்னோக்கி வந்ததில் சுவேதன் மீறி ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுவேதன் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வடுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடவு பணிகளை முடித்து விட விவசாயிகள் கூடுதல் வேகம் காட்டி வருகின்றனர்.
- விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.
திருவாரூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
குறுவை சாகுபடி முடிந்து, சம்பா நெல் சாகுபடி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மேலும் தாளடி நெல் சாகுபடியினையும் விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
தற்போது பருவ மழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதற்குள் நடவுப் பணிகளை முடித்து விட விவசாயிகள் கூடுதல் வேகம் காட்டி வருகின்றனர்.
மழை பெய்ய தொடங்கி விட்டால் சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும்.
இதனை கருத்தில் கொண்டு பருவமழை தீவிரமடைவதற்குள் நடவு பணிகளை முடித்து விட வேண்டும் என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுவரை பணிகள் நடைபெறாமல் உள்ள சம்பா நெல் வயல்களில் நடவுப் பணிகள் வேகம் எடுத்துள்ளது.
கூடுதல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி நடவுப் பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்.
இதுபோல் தாளடி நெல் விவசாயத்திற்கு வயல்களை தயார் செய்யும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு தொடர்ந்து வயல்வெளிகளில் தண்ணீர் பாசனம் நடைபெற்று வருகிறது.
இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் குறுவை நெல் சாகுபடியை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பா நெல் சாகுபடியிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஆறுகளில் தண்ணீர் வருவதோடு பருவமழையும் சரிவர பெய்யும் என்பதால் விவசாயிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு நெல் சாகுபடியினை, இயற்கையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நெல் சாகுபடி பணிகள் தடையின்றி நடைபெற தேவையான உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவைகளையும் இருப்பில் வைத்து வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொசு ஒழிப்பு மருந்துகள் கலக்கப்பட்டு புகைபரப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கள் அழிக்கும் பணி நடைபெற்றது.
- மழைநீர் தேங்காமல் வடிகட்டும் பணி, சாக்கடை நீர் வழித்தடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.
திருவாரூர்:
வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு நோய்த்தொற்று ஏற்படுத்தக்கூடிய டெங்கு கொசு பரவுதலை தடுத்தல், மழைநீர் தேங்காமல் வடிய வைத்தல் உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு தீவிரப் படுத்தியுள்ளது.
அந்த வகையில் திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக கொசு ஒழிப்பு மருந்துகள் கலக்கப்பட்டு புகைபரப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கள் அழிக்கும் பணி நடைபெற்றது.
பெருந்தரக்குடி ஊராட்சியில் பெருந்தரக்குடி, குளிக்கரை, மேம்பாலம், சார்வன் ஆகிய இடங்களில் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் பணி நடைபெற்றது.
இப்பணியினை ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்காணித்து ஆலோசனை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து மழைநீர் தேங்காமல் வடிகட்டும் பணி, சாக்கடை நீர் வழித்தடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இதுபோல் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- மீன் குஞ்சுகளள் 3 டன் எடையுள்ளதாகவும், 5 லட்சம் மதிப்புள்ளதாகவும் இருக்கும்.
- மர்ம நபர்கள் குளத்தில் விஷத்தை கலந்துள்ளார்களா?
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட எருக்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் அசோகன்.
இவர் திருவள்ளூர் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பதிவாளர்.
இவருக்கு அருகில் உள்ள பருத்தியூர் கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் மீன் பண்ணை அமைந்துள்ளது.
இதில் குளங்களை அமைத்து மீன் வளர்ப்பில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் அசோகன் மீன் பண்ணைக்கு சென்று பார்த்தபோது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் வளர்க்கப்பட்ட கட்லா, ரோகு, மிருகுளா போன்ற மீன்கள் செத்து மிதந்துள்ளன.
இந்த குளத்தில் 5000? மீன் குஞ்சுகளை அவர் வளர்த்து வந்ததாகவும் அவை 3 டன் எடையுள்ளதாகவும் 5 லட்சம் மதிப்புள்ளதாகவும் இருக்கும் என்று கூறப்படு கிறது.
இது குறித்து அசோகன் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி அந்த குளத்தில் மிதந்த மீன் மற்றும் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆய்வுக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் மர்ம நபர்கள் இந்த குளத்தில் விஷத்தை கலந்துள்ளார்களா அல்லது வேறு ஏதும் காரணத்தினால் மீன்கள் இறந்தனவா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- சோதனையின் போது ரிஸ்வானுக்கு ஏதாவது இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், ஏதாவது தடயங்கள் உள்ளதா? எனவும் சோதனை நடத்தினர்.
- வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கியும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
முத்துப்பேட்டை:
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இது தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீடுகளில் அந்தந்த மாவட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, அனந்தபத்மநாதன், உதயா, ஹேமலதா மற்றும் போலீசார் அரசகுளம் தெற்கு கரை பகுதியில் உள்ள ரிஸ்வான் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது ரிஸ்வானுக்கு ஏதாவது இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், ஏதாவது தடயங்கள் உள்ளதா? எனவும் சோதனை நடத்தினர். மேலும் வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கியும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட போலீசார் இந்நியாஸ், சாஜித், அசாருதீன் ஆகிய 3 பேரின் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்தது.
தொடர்ந்து 4 பேர் வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று சோதனை செய்யப்பட்ட ரிஸ்வான் உள்பட 4 பேரின் வீடுகளிலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து ஒரு இயக்கத்துடன் தொடர்புஉள்ளதாக கூறி கைது செய்ததும், பின்னர் அவர்கள் விடுதலை ஆனதும் குறிப்பிடத்தக்கது.






