என் மலர்
திருநெல்வேலி
- நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
- வீடுதோறும் தண்ணீர் வழங்க சபாநாயகர் அப்பாவு முதல்-அமைச்சரிடம் பேசி ரூ.605 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் அதன் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்தனர்.
தொடர்ந்து பேசிய மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
ராதாபுரம் பகுதியில் உள்ள 295 பள்ளிகளில் சபாநாயகர் அப்பாவு முயற்சியால் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப் பட்டு வருகிறது. இது நமக்கு கிடைத்த பெருமை. மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து 208 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தற்போது தெரு நல்லிகளுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப் பட்டு வருகிறது. இதன் மூலம் வீடுதோறும் தண்ணீர் வழங்க சபாநாயகர் அப்பாவு முதல்-அமைச்சரி டம் பேசி ரூ.605 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்வது.
மாவட்டத்தில் 204 பஞ்சாயத்துகள், 9 யூனியன்களுக்கு மாவட்ட பஞ்சாயத்து சார்பில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து போர் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
12 மாவட்ட கவுன்சிலர் களும் தங்களது பகுதியில் உள்ள ஒரு பஞ்சாயத்தை தேர்ந்தெடுத்து அதனை முன்மாதிரி பஞ்சாயாத்தாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
- பெண் இன்றி இங்கே எதுவும் நடக்காது என்பது தான் உண்மை.
நெல்லை:
தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
உலகம் முழுவதும் உள்ள பெண்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஆண்களுக்கு தரப்படும் மதிப்பும், மரியாதையும் எங்களுக்கும் தரப்பட வேண்டும். வேலை செய்யும் இடங்களிலும் ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெண் களுக்கு தரப்பட வேண்டும் என்று, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக பெண்கள் போராடியதன் தொடர்ச்சியாக உருவானது தான் உலக மகளிர் தினம்.
அணுவின்றி எதுவும் அசையாதோ, அதேபோல் பெண் இன்றி இங்கே எதுவும் நடக்காது என்பது தான் உண்மை. சகோதரியாக, மனைவியாக, தாயாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஆணி வேராகத் திகழ்பவர்கள் பெண்கள்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள். இது, நூற்றுக்கு நூறு உண்மை. பெண்களால் மட்டும்தான், ஒரு மிகச்சிறந்த குடும்பத்தை கட்டமைக்க முடியும். சிறந்த குடும்பங்களின் மாண்பும் பெண்களால்தான் பெருமை கொள்கிறது.
நாமும் இந்த தருணத்தில் பெண்களை போற்றி பெருமை கொள்வோம்.
இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
- ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கினார்.
- கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வள்ளியூர்:
தெற்குகள்ளிகுளம் அவர் லேடி ஆப் ஸ்னோஸ்மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். விழாவில் ஆயர் ஸ்டீபன் பேசுகையில், மாணவர்கள் தங்கள் பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோரை மதிக்க வேண்டும். கடின உழைப்பே நமது மிகப்பெரிய மூலதனம். வாழ்வில் எல்லா சூழ்நிலையிலும் மகிழ்சியாக இருக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து கரகாட்டம், தப்பாட்டம், புலியாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை ஆயர் பாராட்டி பரிசுகள் வழங்கினார். மேலும் பொதுத்தேர்வு, வருடாந்திர தேர்வுகளில் முதல் 2 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும், விடுமுறை எடுக்காமல் நூறு சதவீத பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கும், பள்ளியில் பயிலும் 8 இரட்டையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மறைமாவட்ட முதன்மைக்குரு பன்னீர் செல்வம், வடவை வட்டார முதன்மை குரு ஜான் பிரிட்டோ, தெற்கு கள்ளிகுளம் பங்குத்தந்தை ஜெரால்டு ரவி உள்பட 30-க்கும் மேற்பட்ட குருக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர், முதல்வர் மணி அந்தோணி மற்றும் ராயப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
- ராஜலிங்கம் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- பலத்த காயம் அடைந்த ராஜலிங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பணகுடி:
பணகுடி அருகே உள்ள கோவில்விளை அண்ணாநகரை சேர்ந்தவர் பொன்னுதுரை. இவரது மகன் ராஜலிங்கம்(வயது 32). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
பணகுடி அருகே உள்ள சாத்தான்குளத்தை சேர்ந்தவர் கார்த்தி(25). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கார்த்தியும், ராஜலிங்கமும் காவல்கிணறு பகுதியில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை கார்த்தி ஓட்டி வந்த நிலையில், பணகுடி நெருஞ்சிகாலனியில் நான்கு வழிச்சாலை அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பின்னால் அமர்ந்திருந்த ராஜலிங்கம் தூக்கி வீசப்பட்டார். தலையில் அவருக்கு பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். கார்த்திக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தில் உயிரிழந்த ராஜலிங்கம் உடலை அவர்கள் மீட்டு பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சில திருநங்கைகள் தங்கள் குலதெய்வத்திற்கு பொங்கல் விட முடியாத நிலை ஏற்பட்டதாக கூறி வனச்சோதனை சாவடி முன்பு பொங்கலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
- ஆத்திரமடைந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாபநாசம் வனச்சோதனை சாவடியை முற்றுகையிட்டனர்.
சிங்கை:
மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காரையார் வனப்பகுதியில் உள்ள வனப்பேச்சியம்மன் கோவிலில் கடந்த வாரம் கால்நாட்டு விழாவுடன் தொடங்கி கொடைவிழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 4 மணிக்கு மேல் வந்த பக்தர்களை வனத்துறையினர் திடீரென தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் காரையார் செல்லும் அரசு பஸ்சில் செல்ல தயாரான நிலையில் வனத்துறையினர் அதற்கும் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாபநாசம் வனச்சோதனை சாவடியை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவியது.
அங்கு நள்ளிரவு வரை போராட்டம் நடந்த நிலையில், சில திருநங்கைகள் தங்கள் குலதெய்வத்திற்கு பொங்கல் விட முடியாத நிலை ஏற்பட்டதாக கூறி வனச்சோதனை சாவடி முன்பு பொங்கலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
உடனே இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. நள்ளிரவில் சோதனை சாவடிக்கு நேரில் சென்று பக்தர்களுக்கு ஆதரவாக போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சொரிமுத்து அய்யனார் கோவிலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு மேல் அடர் வனப்பகுதி வழியாக நடந்து மட்டுமே வனப்பேச்சியம்மன் கோவிலுக்கு செல்ல முடியும். அப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி அனுமதிக்கவில்லை என தெரிவித்தனர்.
தொடர்ந்து இன்று அதிகாலை சுமார் ஒரு மணி வரை பெண், குழந்தைகள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நிலையில் முதற்கட்டமாக 2 வாகனங்களில் முக்கிய பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
- அணுமின் நிலையத்தில் வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பணிபுரிந்து வருகின்றனர்.
- போட்டியில் 2-1 என்ற கணக்கில் காவல்துறை அணி வெற்றி பெற்றது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வட மாநில புலம்பெயர் தொழி லாளர்கள் ஆயிரக்கணக்கில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
அண்மையில் திருப்பூரில் வாட்ஸ் அப்பில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி ஏற்பட்டதை தொடர்ந்து தமிழக அரசும் காவல்துறையும் இணைந்து வட மாநில தொழிலாளர்களுக்கு பாது காப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனையொட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், புலம்பெயர் தொழி லாளர்களை நேரில் சந்தித்து பாதுகாப்பு குறித்தும் அச்சம் தவிர்த்தும் அறிவுரை வழங்கினார்
இந்நிலையில் கூடங்குளத்தில் வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ் குமார் தலைமையில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பும், அச்ச உணர்வை தவிர்க்கும் விதமாக கைப்பந்து போட்டி நடத்தினர்.
இதில் காவல்துறை அணியும், வடமாநில தொழிலாளர்கள் அணியும் விளையாடின. இதில் 2-1 என்ற கணக்கில் காவல்துறை அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்ற அணிகளுக்கு டி.எஸ்.பி.யோகேஷ்குமார் பரிசுகளை வழங்கினார். பாதுகாப்பு குறித்து பேசிய கூடன்குளம் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ எந்த நேரமும் தொடர்பு கொள்ள தொடர்பு செல்போன் எண் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராதாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம், இரண்டாம் நிலை காவலர் பாலகிருஷ்ணன்,போலீஸ் ஏட்டு முத்துபாண்டி, குற்ற புலனாய்வுப் பிரிவு லிங்கசேகர், உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
- நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் கடந்த 2006-2011 மாநகராட்சி சார்பில் எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டது.
- எரிவாயு தகனமேடையில் சடலங்களை எரிப்பதற்காக ரூ.2000 வசூலிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை, பாளை ஆகிய இரட்டை நகரங்களை உள்ளடக்கியதாக நெல்லை மாநகராட்சி உள்ளது. இங்கு வசிப்போர், இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை தாமிர பரணி நதிக்கரையோரங்களில் செய்து வந்தனர்.
இதனால் ஏற்படும் சுகாதார கேடுகளை தடுக்கும் வகையில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சியின் போது அப்போதைய தச்சை மண்டல சேர்மன் சுப்பிர மணியன் முயற்சியில் மாநகராட்சி சார்பில் எரி வாயு தகனமேடை அமைக்கப்பட்டது. அங்கு காத்திருப்போர் கூடம், பூங்கா உள்ளிட்டவை தாமிர பரணி நதிக்கரையோரம் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த பலன் அடைந்து வருகின்றனர். அதனை ஒப்பந்த அடிப் படையில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர் பராமரித்து வந்தனர்.
அங்கு இறந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்காக ரூ.2000 வசூலிக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் குறைந்தது 5 முதல் 7 உடல்கள் வரை இங்கு எறியூட்டப்பட்டு வருகிறது.
பராமரிப்பு மோசம்
இங்குள்ள அதிநவீன எந்திரங்களில் 2000 பாரன்ஹீட் வெப்பம் உருவாக்கி சுமார் 1 மணி நேரத்தில் சடலங்களை எரித்து வந்தனர். இந்நிலையில் இந்த எரிவாயு தகன மேடையில் சடலங் களை எரியூட்டுவதற்கு ரூ.2000 மட்டுமல்லாமல், கூடுதலாக வும் ரூ.2 ஆயிரம் பணம் வசூலிக்கப்படுவதாக இறந்த வர்களின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நேற்று கூட ஒரு சடலத்தை எரிப்பதற்கு கூடு தலாக பணம் கேட்டதாக கூறி அங்கே இறந்தவர்களின் உறவினர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தியான மண்டபம் போல் செயல்பட்ட இந்த எரிவாயு தகன மேடையில் பூங்காக்கள் சிதிலமடைந்து உள்ளது. அங்கு காம்பவுண்டு சுவர்கள் இடிந்த நிலையில் காணப்படுவதால் அதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கூடுதல் கட்டணம் வசூலிக் கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநகராட்சி கமிஷனருக்கு மாநகர பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாளை பெருமாள்புரம் அப்பல்லோ காலனியை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
- ஸ்டூடியோவில் வேலை பார்த்த ஒரு சிறுமியிடம் முகம்மது இஸ்மாயில் சில்மிஷம் செய்துள்ளார்.
நெல்லை:
பாளை பெருமாள்புரம் அப்பல்லோ காலனியை சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில் (வயது57). இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஸ்டூடியோவில் வேலை பார்த்த ஒரு சிறுமியிடம் முகம்மது இஸ்மாயில் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவரை கண்டிக்கவே முகம்மது இஸ்மாயில் சிறுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அவர்கள் பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து முகம்மது இஸ்மாயிலை கைது செய்தனர்.
- நில உரிமையாளர்கள் தங்களது ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
- 15-ந்தேதி மேலச்செவல் உள்ளிட்ட ஊர்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நில உரிமையாளருக்கு இழப்பீடு
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் நில உரிமையாளர்கள் தங்களது பட்டா நகல், வில்லங்கச் சான்று, கிரைய ஆவணம், மூல ஆவணம், வாரிசு அடிப்படையில் பெற்ற நிலமெனில் இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
சிறப்பு முகாம்கள்
இன்று (செவ்வாய்க்கிழமை) கொழுமடை, தோட்டாக்குடி, தருவை, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய ஊர்களில் முகாம் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) புதுக்குடி, மேலத்திடியூர், கஸ்தூரிரங்கபுரம் ஆகிய ஊர்களிலும், 9-ந் தேதி கேசவசமுத்திரம், அ.சாத்தான்குளம், புதுக்குளம், காடன்குளம், திருமலாபுரம், விஜயநாராயணம் பகுதி-1, உறுமன்குளம் ஆகிய கிராமங்களிலும், 10-ந் தேதி பத்தமடை, கோவன்குளத்திலும் முகாம்கள் நடைபெறுகின்றன.
13-ந்தேதி பிரான்சேரி, குறவர்குளம், திருவெம்பலாபுரம், 14-ந்தேதி தெற்கு வீரவநல்லூர் பகுதி -2, பருத்திப்பாடு, செங்குளம், முனைஞ்சிப்பட்டி.
மூலைக்கரைப்பட்டி- விஜயநாராயணம்
15-ந்தேதி மேலச்செவல், பொன்னாக்குடி, இலங்குளம், 16-ந்தேதி புதுக்குடி, ஆழ்வானேரி, தருவை, ராமகிருஷ்ணாபுரம், விஜயநாராயணம், உறுமன்குளம், 17-ந்தேதி தெற்கு வீரவநல்லூர் பகுதி -1, மூலைக்கரைப்பட்டி, மேலத்திடியூர், கோவன்குளம் ஆகிய ஊர்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
20-ந்தேதி கொழுமடை, தோட்டாக்குடி, புதுக்குளம் திருவலாபுரம் 21-ந் தேதி பிரான்சேரி, அ.சாத்தான்குளம், குறவர்குளம், காடன்குளம், திருவெம்பலாபுரம், விஜயநாராயணம் பகுதி -1, கஸ்தூரிரங்கபுரம்,
23-ந்தேதி பத்தமடை, பருத்திப்பாடு, ராமகிருஷ்ணாபுரம், விஜயநாராயணம் பகுதி-1, இலங்குளம், தெற்கு வீரவநல்லூர் -2 ஆகிய ஊர்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சிலிண்டர் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை எட்டயபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் ஒட்டி வந்தார்.
- விபத்தில் 2 லாரி டிரைவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
வள்ளியூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டம் கூடங்குளத்திற்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமான கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை எட்டயபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் ஒட்டி வந்தார்.
அந்த லாரியின் பின்னால் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மற்றொறு லாரி வந்துள்ளது. இதனை மேலசேவலை சேர்ந்த நீலகண்டன் என்பவர் ஓட்டி வந்தார்.
வள்ளியூர் கோவனேரி நான்கு வழி சாலை அருகே வந்த பொழுது முன்னால் சென்ற சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி மீது பின்னால் வந்த சிமெண்ட் ஏற்றி வந்த லாரி அதி வேகமாக மோதியது.
இதில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் அனைத்தும் சாலையில் விழுந்து சிதறியது. தகவல் அறிந்த வள்ளியூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிதறிய சிலிண்டர்களை அப்புறப்படுத்தி லாரியையும் அங்கிருந்து அகற்றினர்.
இந்த விபத்தில் 2 லாரி டிரைவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+3
- குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் என வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர், பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமையிலான பா.ஜனதாவினர், முருகானந்தம் தலைமையிலான இந்து முன்னணியினரும் கருத்து தெரிவித்தனர்.
- வியனரசு தலைமையிலான தமிழ் தேச தன்னுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கருத்து கூறினர்.
நெல்லை:
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் பாளையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்களான குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளார், சுகிசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இந்து ஆர்வலர்கள், சிவனடியார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கிய உடன் சிலர் மேடை அருகே சென்று அறநிலையத்துறை கூட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில் இந்து கடவுள்கள் படம் இடம்பெறவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்து கடவுள்கள் படம் மாட்டப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் கூச்சலிட்டனர். அப்போது தமிழ் பாடல்களை சேர்ப்பது தொடர்பாக குழு உறுப்பினர் சுகிசிவம் பேசிய கருத்துக்கு சிவனடியார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் என வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர், பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமையிலான பா.ஜனதாவினர், முருகானந்தம் தலைமையிலான இந்து முன்னணியினரும் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் வியனரசு தலைமையிலான தமிழ் தேச தன்னுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கருத்து கூறினர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவரையொருவர் தாக்க முற்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து மாநகர துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- செந்தில்குமார் வீட்டின் அருகே உள்ள விவசாயி அருண்குமார் என்பவரது வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தது.
- 2 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக தீயில் கருகி நாசமாயின.
பணகுடி:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள காரியாகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இன்று அதிகாலையில் காரியாகுளத்தில் உள்ள இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார், மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்.
இதேபோன்று செந்தில்குமார் வீட்டின் அருகே உள்ள விவசாயி அருண்குமார் என்பவரது வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக தீயில் கருகி நாசமாயின. கார் பாதி எரிந்து கருகியது. இது குறித்து அருண்குமார் அளித்த புகார் அளித்தார்.
அதன் பேரில் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து சென்றனரா? அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






