என் மலர்
திருநெல்வேலி
- கடந்த 1-ந் தேதி இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்.
- பஞ்சள், தோமையார்புரம் உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் பாரம்பரிய முறையில் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நெல்லை மாவட்ட கடல் பகுதியில் மீன்பிடித்து செல்வதாகவும், அப்போது நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகளும், மீன்பிடி உபகரணங்கள், படகுகள் சேதம் அடைவதாக புகார் எழுந்து வந்தது.
கடந்த 1-ந் தேதி இடிந்த கரையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது குமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இடிந்தகரை நாட்டுப் படகு மீது மோதியதில் 2 மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் நாட்டுப் படகு மீது மோதிய விசைப்படகு மீனவர்களை கைது செய்ய வேண்டும், விசைப்படகின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களிடையே மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் வள்ளியூரில் இன்று பேச்சவார்த்தை நடைபெறுகிறது.
- விக்ரமன் மகளுக்கு இன்று காலை அவரது வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
- இன்று காலை 8 மணிக்கு விக்ரம் வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு திருமண பந்தலில் தீப்பொறிகள் விழுந்தது.
நெல்லை:
நெல்லை பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் விக்ரமன். இவரது மகளுக்கு இன்று காலை அவரது வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு ஓலை பந்தல் போடப்பட்டது.
திடீர் தீ விபத்து
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு விக்ரம் வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு திருமண பந்தலில் தீப்பொறிகள் விழுந்தது. இதனால் பந்தல் முழுவதும் தீ பற்றி எரிந்தது.
உடனடியாக வீட்டி லிருந்த மணமகன் மற்றும் மணமகள், உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருமண பந்தல் எரிந்து நாசம்
இது குறித்து பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும் திருமண பந்தல் தீயில் எரிந்து நாசமானது.
இது தொடர்பாக அப்பகுதி நரிக்குறவர் காலனி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய மின் வயர்கள் பொருத்தப்படவில்லை. எனவே இன்று காலை மின் விபத்து ஏற்பட்டு பந்தல் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது.
எனவே உடனே எங்கள் பகுதியில் பழைய மின் வயர்களை மாற்றி புதிய மின் வயர்கள் பொருத்த வேண்டும் எனக் கூறினர்.
- தருண் டவுன் சாப்டர் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
- இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தருண், திடீரென அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை டவுன் தைக்கா தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு தருண்(வயது 13) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
தற்கொலை
இதில் மகள் கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தருண் டவுன் சாப்டர் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்கேல்ராஜ் இறந்துவிட்டார்.
இதனால் மேரி தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தருண், திடீரென அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனே அவரது பெற்றோர் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொ டர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் தருண் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தினர்.
நேற்று தருணுக்கும், அவரது சகோதரிக்கும் இடையே செல்போன் பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த தருண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நெல்லை மற்றும் 9 தாலுகாவில் நடத்தப்பட உள்ளது.
- சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை நெல்லை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு தொடங்கி வைக்க உள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பு நீதிபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2023-ம் ஆண்டில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கிற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் வருகிற 11-ந்தேதி (சனிக் கிழமை) நடத்த சென்னை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டின் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கிற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் வருகிற 11-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நெல்லை மற்றும் 9 தாலுகாவில் நடத்தப்பட உள்ளது.
இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்து கொள்ளப்படு கின்றன.
மேலும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத் தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணிக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கிற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை நெல்லை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான குமரகுரு தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் ரசூல் மைதீன் தலைமை தாங்கினார்.
- மாநகர மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அதானிக்கு மத்திய அரசு துணை போவதாக கூறி மேலப்பாளையம் மண்டலத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல தலைவர் ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். மேலப் பாளையம் ரவுண் டானா சிக்னல் அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் மஹேந்திர பாண்டியன், பாளை மண்டல தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், பரணி இசக்கி, சொக்கலிங்க குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வாழை பயிரிடப்பட்டு வருகிறது.
- நாங்குநேரி அருகே ராஜாக்கள்மங்கலம் ஊராட்சியில் திருமதி வாழை நார் உற்பத்தி நிறுவனத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வாழை பயிரிடப்பட்டு வருகிறது.
வாழைக்குலை அறுவடை க்கு பின்னர் வீணாகும் வாழை மரத்தில் உள்ள வாழை நார் மூலம் அழகு சாதன பொருட்கள் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு பயிற்சி கொடுத்து அந்த பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் கோடகநல்லூர், சுத்தமல்லி, மானூர் ஆகிய பகுதிகளில் 190 மகளிர் பணிபுரியும் விதமாக 3 வாழை நார் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சுய உதவிக்குழுக்கள் வணிக நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை லாபம் ஈட்டி உள்ளது. இந்நிலையில் நாங்குநேரி அருகே ராஜாக்கள்மங்கலம் ஊராட்சியில் திருமதி வாழை நார் உற்பத்தி நிறுவனத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள 50 சுய உதவி குழு பெண்களுக்கு முதல் கட்டமாக 45 நாட்கள் பயிற்சி கொடுக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின் திருமதி வாழைநார் உற்பத்தி நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வாழை நார் அழகு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டது.
- பாளை பஸ் நிலையம் அருகே உள்ள ஒய்.எம்.சி.ஏ. தொண்டு நிறுவனம் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி இணைந்து சாலை பாதுகாப்பு பேரணியை இன்று நடத்தியது.
- சாலை விபத்து என்பது ஒரு சில நொடிகளிலேயே நடந்து விடுகிறது.
நெல்லை:
பாளை பஸ் நிலையம் அருகே உள்ள ஒய்.எம்.சி.ஏ. தொண்டு நிறுவனம் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி இணைந்து சாலை பாது காப்பு பேரணியை இன்று நடத்தியது.
விழிப்புணர்வு பேரணி
மகளிர் தினத்தையொட்டி நடந்த இந்த விழிப்புணர்வு பேரணியை லோக் அதாலெத் மாவட்ட நீதிபதி சமீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
சாலை விபத்து என்பது ஒரு சில நொடிகளிலேயே நடந்து விடுகிறது. ஆனால் அதன் பாதிப்பு என்பது நீண்ட காலம் தொடரக்கூடியது. சாலை விபத்துகளில் இளம் வயதினர் உயிரிழப்பது அவர்களது பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.
தற்போது இருசக்கர வாகனங்கள் மூலமாக ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளது. இளம் வயதினர் பலர் சாலையின் நடுவே மோட்டார் சைக்கிள் களை வேகமாக ஓட்டி செல்கின்றனர். இதனை தவிர்க்க வேண்டும்.
கவனம் தேவை
பல நேரங்களில் பெரிய வாகனங்களின் மீது மோட்டார் சைக்கிள்கள் மோதும் போது சிறிய வாகனங்களுக்கு தான் சேதம் அதிகமாகிறது. எனவே அதிக கவனம் தேவை. பெண்கள் உள்பட அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் சாலை விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேரணியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.
பேரணியானது தொண்டு நிறுவனத்தில் தொடங்கி ஐகிரவுண்டு சாலை வழியாக பாளை பஸ் நிலையம் வந்தடைந்து அங்கிருந்து மீண்டும் தொண்டு நிறுவ னத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.
- நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை 121 கிலோ மீட்டர் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்து இருந்தது.
- நெல்லையில் இருந்து இன்று காலை 10.20 மணிக்கு அதிவேக ரெயிலானது புறப்பட்டு தென்காசி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது.
நெல்லை:
சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுக்கு தென்மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.
தென்னக ரெயில்வேயில் அதிக அளவு வருவாயை கொடுக்கும் வழித்தடங்கள் கொண்டதாக இந்த வழித்தடம் உள்ளது. ஆனால் சிக்னல்களுக்காக பெரும்பாலான ரெயில் நிலையங்களில் ரெயில்கள் மணிக்கணக்கில் காத்து நின்று செல்வதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
இதன் காரணமாக நெல்லை-தென்காசி, திருச்செந்தூர் உள்ளிட்ட வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகளுடன், பாதைகள் பலப்படுத்தப்பட்டு வேகம் அதிகரிக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் குறிப்பாக 64 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடம் 2012-ல் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் தற்போது வரை 70 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே அந்த பாதையில் ரெயில்கள் இயங்கி வருகிறது.
அதன் வேகத்தை அதிகரிக்கும் வகையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை 121 கிலோ மீட்டர் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்து இருந்தது.
அதன்படி நெல்லையில் இருந்து இன்று காலை 10.20 மணிக்கு அதிவேக ரெயிலானது புறப்பட்டு தென்காசி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது.
மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து புறப்பட இருந்த இந்த ரெயில் சோதனை ரத்து செய்யப்பட்டது. அதிவேக சோதனை ஓட்டத்திற்கு பிறகு நெல்லை-தென்காசி வழித்தடத்தில் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டால் அந்த வழியாக சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில் பயண நேரம் குறையும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 12-ந்தேதி நடக்கிறது.
- தேரோட்டம் 17-ந்தேதி நடக்கிறது.
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அழகியநம்பிராயர் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. ராமானுஜ ஜீயர் முன்னிலையில் கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக கொடி பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு தினமும் யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம், காலை மற்றும் இரவில் அழகியநம்பிராயர் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி 5-ம் நாளான வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று இரவில் 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். மறுநாள் அதிகாலையில் நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு திருக்காட்சி கொடுக்கின்றனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை ஜீயர் மடத்தின் பவர் ஏஜெண்டு பரமசிவன் தலைமையில் கோவில் ஊழியர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
- முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் இருந்தே ஏராளமான பயணிகள் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர்.
- பெரும்பாலான தேதிகளில் சில மணி நேரத்திலேயே டிக்கெட் முழுமையாக விற்று தீர்ந்து விட்டன.
நெல்லை:
சென்னையில் இருந்து ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தென் மாவட்டங்களுக்கு கோடைகால சிறப்பு ரெயில் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு வருகிற ஏப்ரல் மாதம் முதல் தொடர்ச்சியாக 13 வாரங்கள் தாம்பரம்-நெல்லை இடையே கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் இருந்தே ஏராளமான பயணிகள் ஆர்வமுடன் முன்பதிவு செய்தனர். இதில் பெரும்பாலான தேதிகளில் சில மணி நேரத்திலேயே டிக்கெட் முழுமையாக விற்று தீர்ந்து விட்டன.
இந்த ரெயிலானது ஏப்ரல் 2, 9, 16, 23-ந்தேதிகளிலும், மே 7, 14, 21, 28-ந்தேதிகளிலும், ஜூன் 4, 11, 18, 25-ந்தேதிகளிலும் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 7.20 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இதே போல் மறுமார்க்கமாக வருகிற ஏப்ரல் மாதம் 3, 10, 17, 24-ந்தேதிகளிலும், மே 8, 15, 22, 29-ந்தேதிகளிலும், ஜூன் 5, 12, 19, 26-ந்தேதிகளிலும், வரும் அனைத்து திங்கட்கிழமைகளிலும் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு நெல்லை வந்தடையும்.
இந்த ரெயிலானது சேரன்மகாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பெண் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை பரிசளித்தார்.
- இனிமேல் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவேன் என்று அந்த பெண் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார்
நெல்லை:
மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நெல்லை மாநகர காவல் துறை சார்பில் பெண் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கும் நிகழ்ச்சி பாளை காந்தி மார்க்கெட் அருகில் நடைபெற்றது. இதில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் ( கிழக்கு) சீனிவாசன் கலந்துகொண்டு அந்த வழியாக வந்த பெண் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகங்களை பரிசளித்து அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார். இதற்காக பெண்கள் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது அங்கு வந்த பெண் வாகன ஓட்டி ஒருவர் தலையில் ஹெல்மெட் அணியாமல் இருந்தார். அவரை தடுத்து நிறுத்திய துணை கமிஷனர் சீனிவாசன் திருக்குறள் புத்தகம் வழங்கியது மட்டும் இல்லாமல் இனிமேல் ஹெல்மெட் அணிந்து வருவேன் என்று பேப்பரில் எழுதி தரும்படி நூதன முறையில் எச்சரிக்கையும் விடுத்தார். அந்த பெண்ணும் பேப்பரில் இனிமேல் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டுவேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்
- மத்திய அரசை கண்டித்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.
இதில் நஷ்டத்தில் இயங்கிவரும் அதானி குழுத்திற்கு மத்திய அரசின் நிறுவன பங்குகளை விற்கக்கூடாது, அரசு முதலீடுகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர்கள் கெங்கராஜ், அய்யப்பன், மகேந்திர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்ககுமார், பரணிஇசக்கி, ராஜேஷ்முருகன் உளள்பட பலர் கலந்து கொண்டனர்.






