என் மலர்
தென்காசி
- குற்றால அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- அருவி கரையில் அமைந்துள்ள சிறிய பாலம் பலத்த சேதமடைந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள அடவிநயினார் கோவில் அணை, குண்டாறு அணை, கருப்பாநதி அணை, கடனாநிதி அணை, ராமாநதி அணை உள்ளிட்ட அனைத்து அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ராமநதி அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் பாது காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,550 கன அடிக்கு மேல் நீரானது வெளியேற்றப்படுகிறது.
இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையானது அந்த பகுதியில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலிபெருக்கிகள் வாயிலாக ராமநதி ஆற்றுப்படுகை கரையோரம் வசித்து வரும் மக்களுக்கு தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், நீர்நிலைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை சுமார் 188 மில்லி மீட்டருக்கு மேலாக வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து உள்ளது.
அதன்படி, தென்காசி சுற்றுவட்டார பகுதியில் அதிகபட்சமாக 230 மில்லி மீட்டர் மழைப்பொழிவும், ராமநதி அணைப்பகுதியில் 238 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், குண்டாறு அணைப்பகுதியில் 208 மில்லி மீட்டர் மழைப் பொழியும், செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் 240 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், ஆய்க்குடி சுற்றுவட்டார பகுதியில் 312 மில்லி மீட்டர் மழைப் பொழிவும், சங்கரன் கோவில் சுற்றுவட்டார பகுதியில் 146 மில்லிமீட்டர் மழை பொழிவும் என ஒட்டுமொத்தமாக அதிகாலை 6 மணி வரை மாவட்டத்தில் 188 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தலமான குற்றால அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அருவி கரையில் அமைந்துள்ள சிறிய பாலம் பலத்த சேதமடைந்தது.
வெள்ள நீர் குற்றாலம் பஜார் பகுதியில் இருந்த கடைகளுக்குள் புகுந்ததால் வியாபாரிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். அதேபோன்று ஐந்தருவியிலும், பழைய குற்றால அருவியிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி அங்கு கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர்.

பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடைபாதையில் அமைந்திருக்கும் கடைகளை சூழ்ந்து வெள்ள நீர் சென்றது.
மேலும் கடுமையான மழையின் காரணமாக குளங்கள், கால்வாய்களில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. நீர் நிலைகள் வேகமாக நிரம்புவதோடு தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் குடியிருப்புகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட கலெக்டர் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் இன்று காலையில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை எனவும் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவிக்க 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண், 7790019008 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் 04633-290548 என்ற பேரிடர் மேலாண்மைத் துறையின் அவசர கால எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
- தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
- இந்த கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் பல்வேறு அருவிகள் உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் சமயங்களில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்படுவதும், நீர்வரத்து சீரானதும் குளிக்க அனுமதிக்கப்படுவதும் வழக்கம்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிக்கரை ஓரமாக யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் கனமழைபெய்து வருவதால் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது.
- ஐயப்ப பக்தர்கள் குவிந்திருந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது.
கார்த்திகை மாதம் பிறந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிவித்ததால் குற்றால அருவிகளில் புனித நீராடி சபரிமலைக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இன்று குற்றாலம் மெயின் அருவியில் சீராக விழுந்த தண்ணீரில் புனித நீராடுவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் குவிந்திருந்தனர். மெயின் அருவியில் சீராக விழும் தண்ணீரில் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர்.

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக குளித்து முடித்தவுடன் திருநீர், சந்தனம், குங்குமம் பூசி கொள்வதற்கென அருவி கரைகளை சுற்றி அமைந்துள்ள கடைகளை சேர்ந்த வியாபாரிகள் கடையின் முகப்பு பகுதியில் முகம் பார்க்கும் கண்ணாடிகளை வரிசையாக அமைத்து அதன் அருகே சிறு, சிறு கிண்ணங்களில் சந்தனம், குங்குமம், திருநீர் வரிசையாக வைத்துள்ளனர். அதனை குளித்து முடித்த ஐயப்ப பக்தர்கள் கண்ணாடி பார்த்து நெற்றியில் திருநீர், சந்தனம், குங்குமம் இட்டு கொள்கின்றனர்.
சந்தனம், குங்குமம்,திருநீறு கண்ணாடி பார்த்து பூசி கொள்வதற்கு ஒரு பக்தருக்கு ரூ.5 கட்டணமாக நிர்ணயித்து கடைக்காரர்கள் வசூல் செய்து வருகின்றனர். தற்போது குற்றாலம் மெயின் அருவி அய்யப்ப பக்தர்களின் புனித நீராடும் பகுதியாகவும், பக்தி பரவசமூட்டும் இடமாகவும் காட்சியளிக்கிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்பட்டது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று காலை முதல் மதியம் வரையில் மிதமான வெயிலாகவும், மாலையில் குற்றாலம் பகுதியில் அவ்வப்பொழுது விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இன்று காலையில் குற்றாலம் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
- சம்பவம் தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று உள்ளது.
- வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் பள்ளி மாணவ- மாணவர்களை மைதானத்தில் நிற்க வைத்து ஹாப்பி பர்த்-டே உதய் அண்ணா என்று தி.மு.க. நிர்வாகிகள் சொல்ல சொல்ல மாணவர்களும் சொல்கின்றனர். அப்போது மாணவர்கள் உதயநிதி ஸ்டாலினின் கட்சி சார்ந்த புகைப்படத்தை கையில் ஏந்தி நிற்கின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் தென்காசி மாவட்டம் ஐந்தருவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று உள்ளது.
- உண்டியல் எண்ணும் பணி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
- ரூ.17,710 திருடியதும் தெரியவந்தது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் 20-ந் தேதிக்கு மேல் கோவிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்படுவது வழக்கம். உண்டியல் எண்ணும் பணி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
இந்நிலையில் நேற்று சங்கரநாராயண சுவாமி கோவிலில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் 4 பேர் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து புறக்காவல் நிலைய போலீசார், சந்தேகத்திற்கு இடமான 4 பெண்களை பிடித்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மகளிர் காவலர்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதில் ஒருவர் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் மகேஸ்வரி (வயது 42) என்பது போலீசாரை மட்டுமல்லாது பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.
அவருடன் சிக்கியவர்கள் சங்கரன்கோவில் அருகே உள்ள கோ. மருதப்பபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமி (65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) ஆகியோர் என்பதும், 4 பேரும் ஒன்றாக இணைந்து உண்டியல் பணம் எண்ணும் போது ரூ.17 ஆயிரத்து 710-ஐ திருடியதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் உண்டியல் பணம் திருட்டில் ஈடுபட்ட தலைமை காவலர் மற்றும் 3 பெண்களை கைது செய்தனர்.
- ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.
- சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மழையின் தாக்கம் குறைந்ததால் குற்றால அருவிகளுக்கு வரும் தண்ணீரின் வரத்தும் சீரானது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று காலை முதல் மிதமான வெயில் அடித்த தால் அருவி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மட்டும் இன்றி ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அலைமோதியது.
விடுமுறை தினங்களை கருத்தில் கொண்டு சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலர் குற்றால அருவிகளில் நீராடி குற்றாலநாதர் கோவில் மற்றும் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து சபரிமலைக்கு சென்றனர்.
மெயின் அருவி பகுதியில் இன்று காலை முதலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.
- கடந்த 20-ந்தேதி கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
- அதை ஈடு செய்யும் வகையில் இன்ற பள்ளி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 20-ந்தேதி மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஈடு செய்யும் வகையில் இன்று (23-ந்தேதி) பள்ளி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், சரிபார்ப்பு முகாம் நடைபெற உள்ளதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் தடை நீடிப்பு.
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை.
தென்காசி:
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நேற்று குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போதும் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் 2-வது நாளாக இன்றும் குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடையானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
அருவிகளில் நீர்வரத்து சீரான பின்னர் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வழக்கம்போல் அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.
- அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி ,பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிப்பதற்கு போலீ சார் தடைவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், மழை காரணமாக இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
- பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை.
தென்காசி அரசு மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்த இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் தனது கையில் அடிப்பட்டது போல கட்டுபோட்டுக் கொண்டு பிராங்க் வீடியோ பதிவு செய்துள்ளார்.
இந்த பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்து வெளியிட்ட செங்கோட்டையை சேர்ந்த பீர் முகம்மது, சேக் முகம்மது ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும், பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- திருமண பிளக்ஸ் போர்டு வைப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியில் நேற்று திருமண நிகழ்ச்சி நடந்தது.
அப்போது காசி மேஜர் புரம் முத்துராமலிங்கனார் தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பட்டுராஜ் (வயது 27) என்பவருக்கும், மற்றொரு பிரிவினருக்கும் இடையே திருமண பிளக்ஸ் போர்டு வைப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பட்டுராஜிக்கு மர்ம நபர்கள் போன் செய்து வெளியே அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டை விட்டு வெளியில் வந்த பட்டுராஜை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே பட்டுராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதை தடுக்க சென்ற காசிமேஜர்புரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது மகன் அருண் (21) என்பவருக்கும் கைகளில் சரமாரி வெட்டு விழுந்தது. இதில் அருண் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனடியாக அருணை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அருண் அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றாலம் போலீசார், கொலை செய்யப்பட்டபட்டு ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றாலம் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட பட்டுராஜிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 ½ வயதில் குழந்தை உள்ளனர்.






