என் மலர்
சிவகங்கை

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்களுக்கு உரிய தபால் வாக்கு செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போலீசார் அனைவரும் ஒரே நாளில் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்தார்.
அதன்படி காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு அந்தந்த ஊர்களில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் நடந்த வாக்குப்பதிவை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், போலீசாருக்கு தபால் வாக்கு அளிப்பதற்காக படிவங்கள் தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி வழங்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில் தேர்தல் வகுப்பு நடக்கும் இடத்தில் அலுவலர்கள் தபால் வாக்கு அளித்து வருகின்றனர். போலீசார் வாக்களிக்க அந்தந்த தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு சிவகங்கை தாசில்தார் அலுவலகத்தில் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்த 735 போலீசார் தபால் ஓட்டு போட்டனர். காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு காரைக்குடியில் எல்.சி.டி.பழனியப்பா செட்டியார் கலையரங்கில் விண்ணப்பித்த 351 போலீசார் தபால் ஓட்டு போட்டனர்.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு திருப்பத்தூர் பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 156 போலீசார் தபால் ஓட்டும், மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதிக்கு மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 711 போலீசாரும் தபால் வாக்கு அளித்தனர். இது தவிர வெளிமாவட்டத்தில் இருந்து இங்கு பணிபுரியும் 474 போலீசார் அந்தந்த தொகுதிகளுக்கு அஞ்சல்வழியாக தபால் ஓட்டு போடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் 2 ஆயிரம் போலீசார் தபால் ஓட்டு போட்டு உள்ளனர்.
இ்வ்வாறு அவர் கூறினார்.
இதில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கழுவன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தா்மலிங்கம், தாசில்தார் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை:
தமிழகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் முககவசம், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதால் கொரோனா வேகமாக பரவி வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். தேவகோட்டை ராம்நகர், கருதா ஊரணி ஆகிய பகுதிகளில் 5-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் தொற்று அறிகுறி உள்ள 20-க்கும் மேற்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியில் வரக்கூடாது என்றும், மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் இப்பகுதிக்கு செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கிடையில் தேவகோட்டை மாவட்ட உணவு திட பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி, தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலகர் செல்வக்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு (வயது 65). இவரது மனைவி ராஜகுமாரி (60).
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஸ்டீபன் (38) ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மனைவியும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது.
கணவர் ராணுவத்தில் இருந்ததால், சினேகா தனது குழந்தையுடன், கணவர் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி இரவு வீட்டில் ராஜகுமாரி, மருமகள் சினேகா, 7 மாத குழந்தை ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த கொள்ளை கும்பல் வீட்டுக்கதவை உடைத்து திருட முயன்றனர்.
சத்தம் கேட்டு எழுந்த ராஜகுமாரி, கொள்ளையை தடுக்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ராஜகுமாரியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது.
இதை பார்த்த மருமகள் சினேகாவும் கூச்சலிட முயன்றார். அவரையும் அந்த கும்பல் சுத்தியலால் தாக்கி கொலை செய்தது. பின்னர் குழந்தையை மட்டும் விட்டுவிட்டு, வீட்டில் இருந்த பணம், நகையை கொள்ளையடித்து கொண்டு அந்த கும்பல் தப்பியது.
தீரன் பட பாணியில் நடந்த இந்த கொலை சம்பவம் சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டங்களை நடத்தினர். இந்த கொலை குறித்து காளையார்கோவில் போலீசாரும் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். தனிப்படையும் அமைக்கப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதற்கிடையில் சட்டமன்ற தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டம், முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சம்பவத்தன்று காளையார் கோவில் அருகே மறவமங்கலம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனை செய்தபோது ஆயுதங்கள் இருந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் பட்டுக்கோட்டை ஆற்றாங்கரையை சேர்ந்த முத்து முருகன் (வயது 42) என்பது தெரியவந்தது.
எதற்காக சிவகங்கையில் சுற்றிதிரிவது என கேட்டபோது உரிய பதில் இல்லை. இதையடுத்து உயர் அதிகாரிகள் முத்து முருகனிடம் சிறப்பாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஜூலை மாதம் முடுக்கூரணியில் மாமியார், மருமகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தது தானும், தன் கூட்டாளிகளும் என ஒப்புக்கொண்டார். இதையடுத்து முத்து முருகன் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின்படி தேனி மாவட்டம் அரண்மனை புதூரை சேர்ந்த செல்வராஜ் மகன் செல்லமுத்து (26), தூத்துக் குடி மாவட்டம், நாசரேத்தை சேர்ந்த பூச்சிக்கண்ணன் (26), காளையார் கோவில் பெரிய கண்ணனூரை சேர்ந்த வேணுகோபால் (46), ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ராஜகோபால கிருஷ்ணன் (33), பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த முகேஷ்ராஜா (33) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இதில் வேணுகோபாலின் தம்பி ராஜசேகர் என்பவரும் ஈடுபட்டு உள்ளார். ஆனால் அவர் ஒரு கொள்ளை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை போலீசார் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
கைதான கும்பல், கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். பூட்டியிருக்கும் வீடு, முதியவர்கள், பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இந்த கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. நகை, பணத்தை கொள்ளையடிக்க சென்ற இடத்தில் கூச்சலிட்டு தடுக்க முயன்றதால் ராஜகுமாரி, அவரது மருமகள் சினேகாவை இந்த கும்பல் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.
கைதான கும்பலிடம் இருந்து நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் எந்தெந்த இடத்தில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.
அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக தொடர்ந்து செய்து வரும் பிரசாரத்தால் எனக்கு தொண்டை கட்டிவிட்டது. அதனால் சரியாக பேச முடியவில்லை. இருப்பினும் முடிந்த அளவு பேசுகிறேன். நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு பேச்சை தொடர்ந்தார்.
அ.தி.மு.க. ஆட்சி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த ஆட்சி எதுவும் செய்யவில்லை என அவதூறு பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு பொய்யை தவிர வேறு எதுவும் தெரியாது.
உலகிலேயே பொய் பேசுபவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்றால் மு.க.ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும்.
அவர் எங்கள் மீது கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து பதில் கூற நான் தயாராக இருக்கிறேன். அவர் தயார்தானா? இதே திருப்பத்தூரில் மேடை அமைத்து விவாதிக்க தயாராக உள்ளேன். இரு தரப்பையும் கேட்டு மக்கள் தீர்ப்பளிக்கட்டும். மக்கள் தான் நீதிபதிகள். மக்கள் தீர்ப்பே... (மகேசன் தீர்ப்பு என பொதுமக்கள் கூறினர்.)
மக்கள் இறுதி தீர்ப்பு கூறட்டும். தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிப்பார்கள். மு.க.ஸ்டாலினின் முதல்- அமைச்சர் பகல் கனவு ஒருநாளும் பலிக்காது.
நான் விவசாயம் செய்வதால் விவசாயி என கூறி வருகிறேன். ஆனால் இது ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. விவசாயிகளை பற்றி கொச்சைப்படுத்தி பேசுகிறார். அவதூறாக பேசுகிறார். நான் விவசாயி என்பதில் உனக்கு என்ன கஷ்டம்? ஏன் கோபம் வருகிறது?
அ.தி.மு.க. அமைத்திருப்பது வெற்றி கூட்டணி. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம் வந்து விடும். யாரும் வியாபாரம் செய்ய முடியாது. ஓட்டையும் போட்டு அடியும் வாங்கணுமா? இது தேவையா நமக்கு?
ஆட்சி அதிகாரம் இல்லாத போதே தி.மு.க.வினர் அட்டூழியம் செய்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா?
புரட்சித்தலைவி அம்மா வழியில் அவரது அரசு சட்டம்-ஒழுங்கை பேணி காத்து வருகிறது. இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கை சீராக வைத்திருப்பதில் நம்பர் 1 மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
இந்த நிலை தொடர வருகிற சட்டமன்ற தேர்தல் மூலம் தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இதற்காக உங்களது வாக்குகளை அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இந்திய அளவில் நீர் மேலாண்மைக்கு தமிழகம் தற்போது விருது பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியில் எந்த விருதும் பெற்றது கிடையாது.
கல்வியிலும் அ.தி.மு.க. அரசு சாதனை படைத்து வருகிறது. தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எல்லா துறைகளிலும் அ.தி.மு.க. அரசு சாதனைகளை படைத்துள்ளது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் ஊழல் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆட்சியில் இருந்த 13 முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்கள் வாய்தா வாங்கி வருகின்றனர்.
ஊழல் செய்த கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டுமா? ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி. ஊழல் என்றால் தி.மு.க., தி.மு.க. என்றால் ஊழல்.
எங்களுக்கு மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. தற்போது தி.மு.க.வில் வாரிசு அரசியலாக உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளார். அவருக்கு தி.மு.க. பெருந்தலைவர்கள் தலையாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலைகள் மாற வருகிற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சிவகங்கை தொகுதியில் சண்முகராஜா கலையரங்கம் முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்துள்ளது. தி.மு.க. எந்த திட்டமும் தந்ததில்லை. நான் விவசாயி என்று கூறினால் மு.க.ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது.
நான் அவருக்கு சவால் விடுக்கிறேன். நானும், மண்வெட்டு எடுத்து வருகிறேன். அவரும் மண்வெட்டு எடுத்து வரட்டும். இருவரும் வேலை செய்வோம். மக்கள் முடிவு செய்வார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்படும் என மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்ததா? அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதா? என்பதை பொது மேடையில் விவாதிக்க நான் தயார். ஸ்டாலின் தயாரா?.
சிவகங்கை மாவட்டத்தில் அரசு சட்டக்கல்லூரி கொண்டு வரப்படும். புறவழிச்சாலை அமைக்கப்படும். எண்ணற்ற திட்டங்கள் கிடைக்க அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும். எனக்கு தொண்டை வலி உள்ளது. அதை பற்றி எனக்கு கவலை இல்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையவும், மக்களுக்காகவும் எனது உயிரை கொடுக்கவும் தயாராக உள்ளேன்.
உயிரை கொடுத்தாவது அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்வேன். அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சட்டமன்ற தேர்தலயொட்டி பணப்பட்டு வாடாவை சிவகங்கை மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகினறனர்.
அதன்படி நேற்று இரவு சிவகங்கை அருகே தாயமங்கலம் ரோட்டில் பறக்கும் படை அதிகாரி அசோக்குமார் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பால சுப்பிரமணியம், சந்தன குமார், ஜீவா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் பால சுப்பிரமணியம், சந்தன குமார், ஜீவா ஆகிய 3 பேர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றும், இன்றும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் போராட்டம் நடத்தப்போவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை முதல்-அமைச்சர் காரைக்குடிக்கு வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் நடிகர் கருணாஸ் சிவகங்கை அருகே பனங்காடி கிராமத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் இருப்பதாக சிவகங்கை நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று கருணாசை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தனர்.
இதனை அறிந்து அவரது ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர். ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.






