search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காளையார்கோவிலில் ஒரு ரோட்டோர கடையில் சரத்குமார் டீ குடித்த போது எடுத்த படம்.
    X
    காளையார்கோவிலில் ஒரு ரோட்டோர கடையில் சரத்குமார் டீ குடித்த போது எடுத்த படம்.

    திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியல் ஏற்படுத்த மக்கள் அணிதிரள வேண்டும்- சரத்குமார் பேச்சு

    “ திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியல் ஏற்படுத்த மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும்” என்று சிவகங்கை மாவட்ட பிரசாரத்தில் சரத்குமார் பேசினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை சட்டசபை தொகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் ஜோசப், மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று சிவகங்கை நகர் அரண்மனை வாசலில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலக நாயகனும் சரி, நானும் சரி. உழைப்பால் உயர்ந்தவர்கள். இத்தனை ஆண்டுகள் ஆன பின்னரும் ஓட்டுக்கு பணம் கொடுத்தால்தான் வாக்களிப்பார்கள் என்றால் மக்களின் பொருளாதாரம் உயரவில்லை என்று தானே அர்த்தம். நாங்கள் மக்களை நேரடியாக சென்று சந்தித்து சேவை செய்பவர்களைத்தான் வேட்பாளர்களாக களத்தில் நிறுத்தி உள்ளோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி காட்டுகிறோம்.

    தற்போதுள்ள அரசியல் களத்தை பாருங்கள். திட்டங்களை வைத்து பேசுகிறார்களா? மத்திய அமைச்சராக பதவி வகித்த ஒருவர், முதல்-அமைச்சரின் பிறப்பை பற்றி விமர்சிக்கிறார்.

    ஒரு அமைச்சர் பேசுகிறார் என் முடியை பாருங்கள். நான் எப்படி சிலிர்த்து கொண்டு பேசுகிறேன். அவர் டோப்பா முடியுடன் பேசுகிறார், என்று கூறுகிறார். உங்களிடம் ஒன்றே ஒன்று தான் கேட்டுக்கொள்கிறேன்.

    ஓட்டுக்காக கொடுக்கின்ற பணத்தை தூக்கி எறியுங்கள். துச்சமாக நினையுங்கள். உழைத்து சம்பாத்தியுங்கள். அதில் உள்ள மகிழ்ச்சி எதிலும் இருக்காது.

    இவ்வாறு அவர் பேசிார்.

    பிரசாரத்தின் போது வேட்பாளர் ஜோசப், மக்கள் நீதி மய்ய வடக்கு மாவட்ட தலைவர் வரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கல்லல் பகுதியில் சரத்குமார் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    வெள்ளையனே வெளியேறு என்று குரல் கொடுத்த போது இந்திய மக்கள் அனைவரும் திரண்டது போல், திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியல் எற்படுத்த மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும். தற்போது சட்டமன்ற வேட்பாளர்கள் ரூ.10 கோடி வரை செலவு செய்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் என்றால் தொகுதிக்கு ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். நல்லாட்சி தருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகங்கை தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு சரத்குமார் முதுகுளத்தூர் புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் காளையார்கோவிலில் ரோட்டோரம் உள்ள டீக்கடையில் டீ குடித்தார்
    Next Story
    ×