search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.ராஜா
    X
    டி.ராஜா

    தேர்தல் ஆணையம் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும்- டி.ராஜா பேட்டி

    பணம், அதிகார பலத்துக்கு இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.
    சிவகங்கை:

    இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பல நன்மைகளை தமிழ்நாட்டிற்கு பெற்றுள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு, தமிழ் மக்களுக்கு நல்லது என்று எதையாவது இந்த ஆட்சி செய்துள்ளதா?

    வேளாண் திட்டங்களை ஆதரித்து அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. அதுபோல புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து போராட, அதை விமர்சனம் செய்யக்கூட ஆற்றல் இல்லாத அரசாக அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது.
    கோப்பு படம்.
    மீனவர்கள் தற்போது மிகுந்த தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இலங்கை அரசோடு இந்திய அரசு பேசி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்று சொல்வதற்கு கூட மாநில அரசால் முடியவில்லை. இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்கு என்ன காரணம்?

    இலங்கை அரசு கச்சத்தீவை சுற்றி இருக்கக்கூடிய எல்லா கடல் பரப்பையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் இருப்பதாக கருதுகிறது.

    மீனவ தொழிலாளர்களின் உரிமை இன்று படிப்படியாக பறிபோகிறது. மாநில அரசு இதை தடுக்கவோ, அது குறித்து பேசவோ எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில்கள் நொடிந்து போயுள்ளன. அதற்கு காரணம் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகியவை தான். இதனால்தான் வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளது.

    தற்போதைய தேர்தல் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பணம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி தமிழகத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி கருதுகிறது. அதற்கு இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் தன்னுடைய முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி நியாயமான முறையில் நடுநிலையோடு தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×