என் மலர்
சிவகங்கை
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நேற்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நாளை நடக்கும் குருபூஜை விழாவில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இதற்காக அவர் இன்று பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடக்கும் அகழாய்வு பணிகளை ஆய்வு செய்ய சென்றார்.
கீழடியில் நடக்கும் 7-வது கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு அதன் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் கீழடியில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட இடங்களையும் பார்வையிட்ட அவர் அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் அகழ் வைப்பகம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.

ஆய்வை முடித்துக் கொண்ட பின் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். வழி நெடுகிலும் அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் நகரில் நடக்கும் வளர்ச்சித் திட்ட பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.
மதுரை நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் ரூ. 100 கோடி செலவில் கட்டப்பட உள்ள கலைஞர் நூலகம் அமையும் இடத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.
அதனைத் தொடர்ந்து மதுரை நகரில் பல்வேறு இடங்களில் நடக்கும் மேம்பால பணிகளை ஆய்வு செய்கிறார். அதன்பின் இரவு அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை காலை 7.30 மணிக்கு மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு மு.க.ஸ்டாலின் காரில் புறப்படுகிறார். 7.45 மணிக்கு கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து 8 மணிக்கு தெப்பக்குளம் சந்திப்பில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.
9:15 மணிக்கு பசும்பொன் சென்றடையும் மு.க.ஸ்டாலின் அங்கு குருபூஜை விழாவில் பங்கேற்று தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அவருடன் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி ஆகியோரும் மரியாதை செலுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்தபின் மதுரைக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 1.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள பாப்பாவூரணியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் அழகர் (வயது 19). இவர் கழனிவாசல் பகுதியில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை அழகர் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார். அப்போது காரைக்குடி முதல் பிட் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு அழகர் டீ குடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கால் வழுக்கியதாக தெரிகிறது.
உடனே விழாமல் இருப்பதற்காக அருகில் உள்ள மின் கம்பத்தை பிடித்துள்ளார். மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததால் அழகர் கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் விரைந்து வந்த காரைக்குடி தெற்கு போலீசார் அழகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக அழகரின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் லட்சுமணன் (வயது 48).
இவர் காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணி செய்து வந்தார். மேலும் ஓய்வு நேரத்தில் ஆடு மாடு மேய்ப்பது மற்றும் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார். இதுதவிர பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார்.
இவரிடம் சேர்வார் ஊரணி பகுதியை சேர்ந்த பிரகாஷ் மனைவி அம்சவல்லி பணம் வாங்கி உள்ளார். அதனை திருப்பி செலுத்தாததால் அம்ச வள்ளி வீட்டிற்கு சென்று லட்சுமணன் கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பணத்தை இப்போது தர முடியாது நான் தரும்போது வாங்கி கொள்ளுங்கள் என்று அம்சவல்லி கூறி உள்ளார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அம்சவல்லி, அவரது மாமனார் சரவணன் ஆகியோர் லட்சுமணனின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவியிடம், உன் கணவர் இனிமேல் பணம் கேட்டு என் வீட்டிற்கு வந்தால் நடப்பதே வேறு என்று மிரட்டி உள்ளனர்.
நேற்று இரவு கழனி வாசல் சாலையில் லட்சுமணன் சைக்கிளில் வந்தார். அப்போது அவரை 3 வாலிபர்கள் வழிமறித்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் லட்சுமணன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
இந்த சம்பவத்தின்போது அவரது மகன் குருபாண்டிக்கும் காயம் ஏற்பட்டது. அவரை மிரட்டி விட்டு கொலை கும்பல் தப்பி ஓடியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த லட்சுமணனை காப்பாற்ற முயன்றபோது அவர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.
அம்சவல்லி, சரவணனின் தூண்டுதலின்பேரில் சேர்வார் ஊரணி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் தான் லட்சுமணனை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது.
காரைக்குடி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் முத்துகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். அ.தி.மு.க. மாவட்ட பேரவை செயலாளரான இவர், சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்ட ஆவின் சேர்மனாக உள்ளார். அசோகன் தற்போது குடும்பத்துடன் தேவகோட்டையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை கல்லுவயலில் உள்ள அசோகன் வீட்டில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இனோவா கார் எரிந்து கொண்டிருந்தது.
உடனே பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீணை அணைக்க முற்பட்டனர். ஆனாலும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. அதே சமயத்தில் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்த தகவல் தேவகோட்டையில் இருந்த அசோகனுக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து பார்த்த போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் திருடு போய் இருந்தது தெரியவந்தது. மேலும் வீடு முழுவதும் ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக அமராவதிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து விட்டு காருக்கு தீ வைத்து விட்டு சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அரசியல் பழி வாங்கும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சிறுவத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. பெயிண்டரான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சீனி மகன் ராஜாங்கம் (வயது 27) என்பவர் 4-வது குற்றவாளியாக சேர்த்து தேவகோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்ககோரி ராஜாங்கம் கோர்ட்டில் மனு செய்தார். இதனை விசாரித்த கோர்ட்டு தினமும் காலை, மாலையில் திருவேகம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்துபோட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ராஜாங்கத்துக்கு ஜாமீன் வழங்கியது. இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாங்கம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ராஜாங்கம் திருமணவயல் கிராமத்தில் உள்ள ஓட்டலில் உணவு வாங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பாவன கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பிரபு (28), கோட்டூரை சேர்ந்த பூமி மகன் மணி (25) ஆகியோர் கொலை தொடர்பாக ராஜாங்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, மணி ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜாங்கத்தை சரமாரியாக குத்தினர். 11 இடங்களில் கத்திக்குத்துப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் 2 பேரும் ராஜாங்கத்தின் உடலை அங்கிருந்த புதருக்குள் போட்டுவிட்டு சென்றனர். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ராஜாங்கத்தின் உடல் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலையாளிகளை பிடிக்க தேவகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டி, மாணிக்கம் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அதே பகுதியில் பதுங்கி இருந்த பிரபுவை போலீசார் கைது செய்தனர். மணியை தேடி வருகின்றனர்.
பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று முடிந்த 7-ம் கட்ட அகழாய்வு தளத்தை தமிழக தொல்லியல் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார்.
அகழாய்வு குழிகளுக்குள் இறங்கியும் பார்வையிட்டார். அகழாய்வில் எடுக்கப்பட்ட தொன்மையான பொருட்களை பார்வையிட்டு, அதுசம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
7-ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற குழிகளை மூடிவிடாமல் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. அகழாய்வு குழிகளை திறந்த நிலையில் வைப்பது இதுவே முதன்முறை.
பழங்கால கட்டுமானங்கள், செங்கல் கட்டுமானங்களை பார்வைக்கு வைத்து பாதுகாக்க தேவையான தொழில்நுட்ப வசதிகளை மேற்கொள்ள சென்னை ஐ.ஐ.டி.யின் உதவியை கேட்க உள்ளோம்.
8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை எப்போது தொடங்குவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. அதுகுறித்து பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிங்கம்புணரி அருகே உள்ள கல்லம்பட்டி செருதப்பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து(வயது 24). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இந்தநிலையில்வைரமுத்து, தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து. திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதில் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், தனக்கு இரண்டு தடவை கருவை கலைத்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வைரமுத்து, அவரது நண்பர் சித்திரைகுமார்(21), அவரது தாயார் காசியம்மாள் (48), மாமா நொண்டிச்சாமி (35) உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் வைரமுத்துவை கைது செய்து திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






