என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்புவனம் அருகே பந்தல் அமைப்பாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்புவனம்:

    மதுரை மாவட்டம், சிலைமான் அருகே புளியங்குளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 53). இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்த டி.அதிகரை கிராமத்தில் பந்தல் அமைக்க முருகன் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் முருகனை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பூவந்தி போலீசார் முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த மர்ம ஆசாமிகள் யார்? கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    நாகூரில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகூர் அலங்கார வாசல் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், நாகூர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது 34) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து யூசுப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டை பறிமுதல் செய்தனர்.
    திருப்பத்தூர் அருகே முயல் வேட்டையாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வனப் பகுதிகளில் முயல்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனச்சரகர் மதிவாணன் தலைமையில் வனவர்கள் திருப்பதி ராஜன், பிரகாஷ், உதயகுமார், மலைச்சாமி, சாமிகண்ணு, சுந்தர், வனக்காப்பாளர்கள் சதீஷ்குமார், வீரையா, கண்ணபிரான், செல்வம் வனக்காவலர்கள் கோபுரபாண்டி, மாரியப்பன், வாசுகி, சின்னப்பன் உள்ளிட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    நாச்சியாபுரம் அருகே உள்ள இளங்குடியில் முயல் வேட்டையாட முயன்றதாக கூறி இளங்குடியைச் சேர்ந்த கருப்பையா (வயது 39) என்பவரை கைது செய்தனர்.

    அதே போன்று நேமத்தன் பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு (33), மலைச்சாமி (49) ஆகியோரும் பைக்குடிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் (39), ராஜா (33), தனுஷ் (17) ஆகியோரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    திருப்பத்தூர் வனச்சரக பகுதிகளில் முயல்களை வேட்டையாட முயன்றதாக வன உயிரின குற்றப் பிரிவின் கீழ், 6 பேர் மீது வனச்சரகர் மதிவாணன் வழக்குப்பதிவு செய்தார்.

    2 தினங்களுக்கு முன்பு கீழச்சிவல்பட்டி அருகே 17 மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் கோரிக்கை விடுத்தனர்.

    விண்வெளி பயணம் நிறைய சவால்கள் நிறைந்தது என்றும் இது தாங்கள் சந்திக்கும் மற்றும் கவனித்துக் கொள்ளும் விஷயம் என்றும் பூமிக்கு திரும்பிய மேகன் மெக்ஆர்தர் கூறினார்.
    வாஷிங்டன்:

    சர்வதேச விண்வெளி மையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் கனடா ஆகியவை இணைந்து அமைத்துள்ளன. அங்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    விண்வெளி மையத்துக்கு அனுப்பப்படும் வீரர்கள் 3 முதல் 6 மாதங்கள் அங்கு தங்கிருந்து ஆய்வு செய்து விட்டு திரும்புவார்கள். சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்க வீராங்கனை மேகன் மெக்ஆர்தர், பிரான்ஸ் வீரர் தாமஸ் பெஸ்குவெட் உள்பட 3 விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். அப்போது விண்கலத்தில் இருந்த கழிவறை உடைந்தது. அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    கழிவறையில் கசிவு ஏற்பட்டதால் அதனை சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் 3 விண்வெளி வீரர்களும் டயப்பர்களை பயன்படுத்தினார்கள். இதனால் சுமார் 20 மணி நேரம் அவர்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

    இது குறித்து பூமிக்கு திரும்பிய மேகன் மெக்ஆர்தர் கூறும்போது, ‘விண்வெளி பயணம் சவால்கள் நிறைந்தது. இது எங்கள் பணியில் நாங்கள் சந்திக்கும் மற்றும் கவனித்துக் கொள்ளும் ஒன்று. எனவே நாங்கள் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை’ என்றார்.

    பூவந்தி கண்மாயை நம்பி சுற்று வட்டாரத்தில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள கண்மாய் உள்ளது.

    இந்த கண்மாயை நம்பி சுற்று வட்டாரத்தில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

    தற்போது பெய்து வரும் தொடர் மழையால் 15 வருடங்களுக்கு பிறகு இந்த கண்மாய் நிரம்பி உள்ளது. இதனால் தண்ணீர் நிறைந்து அருவிபோல் மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பூவந்தி கண்மாயை தூர்வாராமல் இருப்பதால் தண்ணீர் கொள்ளளவு மிகவும் குறைவாக உள்ளது. 2 போகம் விளையக்கூடிய கண்மாய் தூர்வாரப்படாமல் இருப்பதால் ஒரு போகம் மட்டுமே விளையக்கூடிய அளவுக்கு தண்ணீர் உள்ளது. ஆகவே இந்த கண்ணமாயை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போது கண்மாயில் நீர் உள்ளதை பார்த்து விவசாயிகள் பாசன பணிகளை தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் கூட்டுறவு சங்கத்தில் கடன்வாங்க விவசாயிகளுக்கு வி.ஏ.ஓ.க்கள் அடங்கல் சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள். விதைத்த பயிர் வெளியே வந்தால்தான் சான்றிதழ் தரப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் கூட்டுறவு சொசைட்டியினர் குறித்த காலத்துக்குள் நீங்கள் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கடன் வழங்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள்.

    விவசாயிகள் தரப்பில் இருந்து கூட்டுறவு சொசைட்டியில் கடன் வழங்குவதற்கான காலத்தை நீட்டித்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 15 வருடம் கழித்து பூவந்தி கண்மாய் நிரம்பி உள்ளது சந்தோ‌ஷமாக இருக்கிறது.

    தற்போதுதான் விவசாயத்தை தொடங்கியுள்ளோம். அதனால் கூட்டுறவு கடன் வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும். மேலும் கண்மாயை முறைப்படி தூர்வார வேண்டும் என்றனர்.
    3 பயணிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் தராதது மற்றும் மதுபோதையில் பணியாற்றிய அரசு பஸ் கண்டக்டரை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள அழகம்மாள்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 55). அரசு பஸ் நடத்துனராக உள்ளார்.

    இவர் பணிக்கு செல்லும் போதெல்லாம் குடித்துவிட்டு போதையில் செல்வதாகவும், பஸ் பயணிகளிடம் தகராறு செய்வதாகவும் போக்குவரத்து மேலாளருக்கு அடிக்கடி புகார் வந்தது.

    இந்நிலையில் நேற்று ஆலங்குளம் பஸ் நிலையத்தில் ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், வேலாயுதம் ஆகியோர் டிக்கெட்டுகளை பரிசோதித்துக் கொண்டு இருந்தனர். அப்போது முருகன் பணியாற்றும் பஸ் வந்தது. அதனை நிறுத்தி பயணிகளிடம் அவர்கள் டிக்கெட்டை வாங்கி சோதனை செய்தனர்.

    அப்போது அதில் 3 பயணிகளிடம் டிக்கெட் இல்லை. இதுகுறித்து விசாரித்தபோது அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முருகன் டிக்கெட் வழங்காமல் இருந்ததும், அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து முருகனை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவரை ‘சஸ்பெண்டு’ செய்து போக்குவத்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    விதிமுறைகளை மீறி தேவர் குருபூஜைக்கு சென்ற 105 இருசக்கர வாகனங்கள் உள்பட 106 வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் குருபூஜை விழாவையொட்டி மாவட்ட நிர்வாகத்தினால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தடை உத்தரவை மீறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.

    மேலும் சிவகங்கை பஸ் நிறுத்தம் அருகே அரசு கண்ணாடியை உடைத்தவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதேபோல கடந்த 30-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜை விழாவிற்கு விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனத்தில் சென்ற 105 இருசக்கர வாகனங்கள், ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    கவனக்குறைவாக எல்லையை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு சென்ற இந்தியரை மனிதாபிமான அடிப்படையில் திருப்பி அனுப்பினர்.
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் காங்ரியன் கிராமத்தைச் சேர்ந்த சாயிப் தீன் (வயது 35) என்பவர் கடந்த 2018ம் ஆண்டு கவனக்குறைவாக எல்லையை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைப்பிடித்தது. 

    இந்நிலையில், அவரை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து திருப்பி அனுப்பி உள்ளனர். சாயிப் தீனை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அழைத்து வந்து, பூஞ்ச்-ராவல்கோட் கிராசிங் பாயிண்டில் உள்ள இந்திய  ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

    மனிதாபிமான அடிப்படையில் சாயிப் தீன் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சிவகங்கையில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை நகர் பகுதியில் மின்மாற்றி பராமரிப்பு மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(திங்கட்கிழமை) காலை 8 மணி வரை 10 மணிவரை சிவகங்கை நகர் பஸ் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் தடைப்படும்.இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற் பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை மாவட்டத்தில் வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் இருசக்கர வாகன திருட்டுகளில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையில் ஏட்டுகள் சரவணன், முத்துப்பாண்டி, காளீஸ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் ஏற்கனவே வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 11 மோட்டார்சைக்கிளை கைப்பற்றினார்கள். இந்த தனிப்படையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டு வந்த சிவகங்கை அடுத்த பில்லூர் அலுபிள்ளைதாங்கி பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற முத்துப்பாண்டி (வயது 25) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 2 வாள், மற்றும் 1½ கிலோ கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டன.
    சாதி சான்றிதழ் கோரி காட்டு நாயக்கர் இன மக்கள் சிவகங்கை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு பாம்புகளுடன் வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    மானாமதுரை, பர்மா காலனி காட்டு நாயக்கர் குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 100 ஆண்டு களுக்கு முன்பு மலை பகுதிகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர்கள். இவர்கள் தற்சமயம் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

    இவர்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க செல்லும் போது சாதி சான்றிதழ் கேட்பதால் பள்ளிகளில் சேர முடியாமல் தவிக்கின்றனர். எனவே அவர்கள் மேல்படிப்புகள் வரை தொடரவும் இட ஒதுக்கீடை பெறவும் சாதி சான்றிதழ் தரக்கோரியும் கடந்த பல ஆண்டுகளாக அரசிடம் மனு அளித்து வருகின்றனர்.

    ஆனால் இவர்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ் வழங்கப்பட வில்லையாம். இதனால் நேற்று அவர்கள் சிவகங்கை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சாதி சான்றிதழ்வழங்க கோரி பாம்புகளுடன் வந்தனர். அலுவலக வாசலில் பாம்புகளை வெளியேவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் முத்துக்கழுவன் அவர்களை அழைத்து சாதி சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு சாராயம் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் மூலம் பொதுமக்களுக்கான சாராயம் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.

    விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது:-

    தமிழக அரசு உத்தரவிற்கிணங்க, ஒவ்வொரு ஆண்டும் ஒருவாரகாலத்திற்கு பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களிடம் சாராயம் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள், அதனால் குடும்ப பொருளாதாரம் பின்னடைவு என எண்ணற்ற விளைவுகள் உள்ளதை எடுத்துச்சொல்லும் விதமாக கலைக்குழுக்கள் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் நாடகம் வடிவிலும், பாடல் வடிவிலும் விழிப்புணர்வு மேற்கொள்ளும் பணி நடைபெறுகிறது.

    அதிகஅளவு பொதுமக்கள் கூடுமிடங்கள், பஸ்நிலையங்கள், வாரச்சந்தை வளாகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. அதற்கு ஏற்ப பொதுமக்கள் சாராயம் மற்றும் மது அருந்து வதால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து அவற்றை தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு தனக்குள்ளது என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். பின்னர், அங்குள்ள பொது மக்களிடம் விழிப்புணர்வு குறித்த துண்டுப்பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை உதவி ஆணையர் சிந்து, வட்டாட்சியர் தர்மலிங்கம், கோட்ட ஆய அலுவலர் கண்ணன், தொண்டு நிறுவனத்தலைவர் வீனஸ் பூமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×