என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poovanthi kanmaay"

    பூவந்தி கண்மாயை நம்பி சுற்று வட்டாரத்தில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள கண்மாய் உள்ளது.

    இந்த கண்மாயை நம்பி சுற்று வட்டாரத்தில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

    தற்போது பெய்து வரும் தொடர் மழையால் 15 வருடங்களுக்கு பிறகு இந்த கண்மாய் நிரம்பி உள்ளது. இதனால் தண்ணீர் நிறைந்து அருவிபோல் மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பூவந்தி கண்மாயை தூர்வாராமல் இருப்பதால் தண்ணீர் கொள்ளளவு மிகவும் குறைவாக உள்ளது. 2 போகம் விளையக்கூடிய கண்மாய் தூர்வாரப்படாமல் இருப்பதால் ஒரு போகம் மட்டுமே விளையக்கூடிய அளவுக்கு தண்ணீர் உள்ளது. ஆகவே இந்த கண்ணமாயை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போது கண்மாயில் நீர் உள்ளதை பார்த்து விவசாயிகள் பாசன பணிகளை தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் கூட்டுறவு சங்கத்தில் கடன்வாங்க விவசாயிகளுக்கு வி.ஏ.ஓ.க்கள் அடங்கல் சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள். விதைத்த பயிர் வெளியே வந்தால்தான் சான்றிதழ் தரப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் கூட்டுறவு சொசைட்டியினர் குறித்த காலத்துக்குள் நீங்கள் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கடன் வழங்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள்.

    விவசாயிகள் தரப்பில் இருந்து கூட்டுறவு சொசைட்டியில் கடன் வழங்குவதற்கான காலத்தை நீட்டித்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 15 வருடம் கழித்து பூவந்தி கண்மாய் நிரம்பி உள்ளது சந்தோ‌ஷமாக இருக்கிறது.

    தற்போதுதான் விவசாயத்தை தொடங்கியுள்ளோம். அதனால் கூட்டுறவு கடன் வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும். மேலும் கண்மாயை முறைப்படி தூர்வார வேண்டும் என்றனர்.
    ×