என் மலர்
செய்திகள்

மதுவிலக்கு மற்றும் சாராயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
சாராயம், மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
சிவகங்கை மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு சாராயம் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் மூலம் பொதுமக்களுக்கான சாராயம் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கலெக்டர் கூறியதாவது:-
தமிழக அரசு உத்தரவிற்கிணங்க, ஒவ்வொரு ஆண்டும் ஒருவாரகாலத்திற்கு பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பொதுமக்களிடம் சாராயம் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள், அதனால் குடும்ப பொருளாதாரம் பின்னடைவு என எண்ணற்ற விளைவுகள் உள்ளதை எடுத்துச்சொல்லும் விதமாக கலைக்குழுக்கள் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் நாடகம் வடிவிலும், பாடல் வடிவிலும் விழிப்புணர்வு மேற்கொள்ளும் பணி நடைபெறுகிறது.
அதிகஅளவு பொதுமக்கள் கூடுமிடங்கள், பஸ்நிலையங்கள், வாரச்சந்தை வளாகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன. அதற்கு ஏற்ப பொதுமக்கள் சாராயம் மற்றும் மது அருந்து வதால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து அவற்றை தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், தன்னையும், தன் குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு தனக்குள்ளது என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர், அங்குள்ள பொது மக்களிடம் விழிப்புணர்வு குறித்த துண்டுப்பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை உதவி ஆணையர் சிந்து, வட்டாட்சியர் தர்மலிங்கம், கோட்ட ஆய அலுவலர் கண்ணன், தொண்டு நிறுவனத்தலைவர் வீனஸ் பூமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






