என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்புவனத்தில் நடுரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான மாடுகள் பகல் நேரங்களிலிலும் இரவிலும் சாலையில் சுற்றித்திரிகின்றன. வீடுகளில் மாடுவளர்ப்பவர்கள் பால் கறக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மாடுகளை ரோட்டில் விட்டுவிடுகின்றனர். இந்த மாடுகள் பல நேரங்களில் ரோடுகளை மறித்து நின்று தங்களுக்குள் முட்டிக்கொண்டு சண்டையிடுகின்றன. 

    சாலைகளில் மாடுகள் படுத்துக் கொள்வதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்கள் மாடுகளின் மீது மோதி காயமடையும் சம்பவங்களும், உயிர்ப்பலி ஆபத்தும் உள்ளன. 

    ரோட்டில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடமும்,  மாவட்ட நிர்வாகத்திடமும் திருப்புவனம் பகுதி பொது மக்கள் வலியுறுத்தியும் இதுவரை எந்த ஒரு நடவடிக் கையும் எடுக்கப்பட வில்லை. 

    இந்தநிலையில் திருப்புவனம் நகரில் சுற்றித்திரிந்த இரு மாடுகள் தங்களுக்குள் முட்டிக்கொண்டு சாலையை மறித்துக்கொண்டு சண்டையிட்டன. சண்டையிட்டபடி இந்த மாடுகள் வீதிகளில் இருந்த கடைகள் புகுந்து  அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தின. 

    இதனால் கடைகளில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்து ஓடினர். சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை இந்த மாடுகள் கீழே தள்ளின. இதனால் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டது. 

    சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை மாடுகள் முட்டி கீழே தள்ளின. சிலரை இந்த மாடுகள் சண்டையிட்டவாறு விரட்டி சென்றதைப் பார்த்து பொதுமக்கள், மாணவ&மாணவிகள்  மிரண்டு ஓடினர். அதன்பின் சிலர் மாடுகளை விரட்டியடித் தனர். ஆனாலும் மாடுகள் தனித்தனியாக ரோட்டில் சென்ற மக்களை விரட்டிச்சென்றன.  மாடுகள் சண்டை போட்டுக்கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

     எனவே பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமும் திருப்புவனம் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
    காரைக்குடியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு வழங்க 35 பொதுநலச்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
    காரைக்குடி

    காரைக்குடியை புதிய மாவட்டமாக அமைத்து தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்க 35பொதுநலச்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

    காரைக்குடி, தொழில் வணிகக்கழகம், ரோட்டரி சங்கம், லயன்ஸ் கிளப், ஒய்ஸ் மென் கிளப், முன்னாள் ராணுவத்தினர் சங்கம், அச்சகப் பணியாளர் கள், ரெடிமேட் வணிகர் கள், சிவில் இஞ்சினியர்ஸ் அசோசியேசன், ஜவுளி வணிகர்கள், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள், மருந்து வணிகர்கள் சங்கம் உட்பட 35பொதுநல சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

    இந்த கூட்டத்தில் காரைக்குடி வளர்ச்சி குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து தொழில் வணிக கழகதலைவர் சாமி. திராவிடமணி செயலாளர் கண்ணப்பன் கூறியதாவது:-

    தனியாக புதிய மாவட்டம் அமைத்திட அனைத்து தகுதியும் அரசு விதிகளுக்குரிய தன்மையும் காரைக்குடி பகுதியில் இருக்கிறது.கடந்த 1985ம் ஆண்டில் இருந்து புதிய மாவட்டமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு வருகின்றனர்.

    மாவட்ட தலைநகருக்கான அரசின் பல்வேறு நலத் திட்டஙகள் கிடைக்காமல் உள்ளது. எனவே இந்த கோரிக்கைகளை முதலமைச்சரிடம் நேரில் சென்று வழங்க தீர்மானிக் கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போர் நடக்கும்போது வகுப்புகள் வழக்கம் போல் நடந்து வந்தன.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சமூக சேவை ஆற்றும் செர்டு தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் செர்டு பாண்டி, இவரது மனைவி போதும் பொண்ணு. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இரண்டு மகள்களும் உக்ரைன் நாட்டில் மருத்துவக் கல்வி படிக்கிறார்கள்.

    மூத்தமகள் படித்து முடித்து தற்போது பயிற்சி பெற்று வருகிறார். 2-வது மகள் பார்கவி உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரத்தில் உள்ள நேசனல் மெடிக்கல் யுனிவர் சிட்டியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய அவர் கூறியதாவது:-

    உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போர் நடக்கும்போது வகுப்புகள் வழக்கம் போல் நடந்து வந்தன. திடீரென்று ஒரு நாள் வகுப்புக்கு வந்த பேராசிரியர் இனிமேல் வகுப்புகள் நடைபெறாது. பாதுகாப்பான பகுதியில் தங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

    ஏ.டி.எம். செயல்படவில்லை. பிரட் மட்டும் கிடைத்தது. நாங்கள் தங்கியிருக்கும் பகுதியில் இருந்து ரெயில் நிலையம் வருவதற்கு ரூ.30 ஆயிரம் கார் வாடகை கொடுத்து வந்தோம். ரெயில் நிலையத்தில் இருக்கையை பிடித்து கொடுக்க ரூ.60 ஆயிரம் கேட்டார்கள். பின் தூதரகத்தில் கிளிய ரன்ஸ் சான்றிதழ் பெற நாள் கணக்கில் காத்து கிடந்தோம்.அதன்பின் போலந்து விமான நிலையத்திலிருந்து இந்தியா திரும்பினேன்.

    உக்ரைனில் இருந்து கட்டணமின்றி அழைத்து வந்ததற்கு பிரதமருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உக்ரைன் நாட்டில் போர் பதட்டத்தில் குண்டுமழைகளுக்கு மத்தியில் பரிதவித்து நின்ற தமிழ்மாணவர்களோடு பேசி தைரியம் ஏற்படுத்தியது மறக்கமுடியாத நன்றி நிகழ்வாகும்.

    மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெடிகுண்டு வீசியதால் கட்டிடம் இடிந்து தரை மட்டமாகிவிட்டது.ரெயிலில் வந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு புகையை பார்த்தோம். லட்சம் லட்சமாக செலவு செய்து பெற்றோர் மருத்துவம் படிக்க அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு போர் காரணமாக படிப்பை முடிக்காமல் பாதியிலேயே திரும்பி உள்ளோம். முழுமையடையாமால் உள்ளோம். படிப்பை முழுமையாக முடிக்க மத்திய, மாநில அரசுகள் வழிகாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிங்கம்புணரி அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தேசியக்கொடி வர்ணம் பூசப்பட்டுள்ளது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம், கே.நெடுவயல் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யாபட்டி, பண்ணைபட்டி, காயாம்பட்டி, மேலான்தெரு, வெள்ளையங்குடிபட்டி, பழைய நெடுவயல், ஆகிய பகுதிகளில் சுமார் 8 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. 

    இதில் இருந்து நாள்தோறும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், மாவட்ட நிர்வாகத்தில் இருந்து புதிய நீர்த்தேக்க தொட்டிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. 

    அந்த நீர்த்தேக்க தொட்டிக்கு கிராம மக்களிடையே தேசப் பற்றையும், ஒற்றுமையை உருவாக்கும் வகையில் தேசியக் கொடியில் உள்ள மூவர்ணத்தை பூசி பஞ்சாயத்து தலைவர் நடவடிக்கை எடுத்தார். 

    இதுகுறித்து அவர் கூறுகையில், பலதரப்பட்ட சமுதாய மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளான சாலைவசதி, தண்ணீர், மின்சாரம் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருதல் என்பதோடு மட்டும் நின்று விடாமல் அவர்களுக்கு மத்தியில் நாட்டுப்பற்றையும், தேச ஒற்றுமை உணர் வையும் ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக நம் நாட்டின் தேசிய கொடியின் வர்ணத்தை இந்த நீர்த்தேக்க தொட்டியில் ஏற்படுத்தி உள்ளேன். 

    இன்னும் ஊராட்சிக்கு உட்பட்ட அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் இதேபோன்று வர்ணங்களை பூசி கிராமமக்களிடையே மதசார்பற்ற சமுதாய ஒற்று மையை ஏற்படுத்துவதே எனது நோக்கமாகும் என்றார்.  சிவகங்கை மாவட்டத்தில் எத்தனையோ ஊராட்சிகள் இருந்தாலும், ஒரு முன்மாதிரி ஊராட்சியாக நாட்டுப்பற்றை பறைசாற்றும் வகையில் ஊராட்சி மன்ற தலைவரின் இத்தகைய முயற்சி வியக்கத்தக்கது என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வருகிற 13ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    சிவகங்கை

    சிவகங்கை  மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றின் சார்பில் வருகிற 11ந்தேதி(வெள்ளிக் கிழமை) காலை 9மணி முதல் மாலை 3மணி வரை காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதில் 80க்கும் மேற்பட்ட தனியார்  நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடுநர்களை தேர்வு செய்கின்றன.  8&ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் -முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். 

     வேலைநாடுநர்கள் தங்களுடைய பயோடேட்டா (சுயவிவர குறிப்பு), பாஸ்போர்ட் புகைப்படம்,  அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும்  ஆதார் அட்டை நகல் ஆகியவைகளுடன் கலந்து கொள்ள வேண்டும்.   

    மேலும் தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணைய தளமான tnprivatejobs.comல் வேலைநாடுநர்கள்  சுய விவரங்களை பதிவு செய்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 

    முகாம் குறித்த தகவல்களை 04575-240435 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு  தெரிந்து கொள்ளலாம்.

    சிவகங்கை மாவட்டம் கண்டராமாணிக்கம் அருகே அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள  கண்டராமாணிக்கத்தில் சுப்பிரமணியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. 

    இதற்காக நமக்கு நாமே திட்டத்தில் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில்  கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன் னிலையில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.

    இந்த நிகழ்வில் திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, சேது பாஸ்கரா கல்வி குழுமங்களின் நிறுவனர் சேதுகுமணன், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள்,  அதிகாரிகள், தி.மு.க. ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    மானாமதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.16.85 கோடியில் தடுப்பணை கட்டப்படுகிறது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.16கோடியில் தடுப்பணை கட்டும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கிவைத்தார். சருகணியாரு வடிநில உபகோட்டத்தை சேர்ந்த மானாமதுரை நகர்ப் பகுதியை ஒட்டியுள்ள  வைகை ஆற்றின் குறுக்கே ரூ 16.85கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் திட்டத்துக்கான பூமிபூஜை விழா நடந்தது. 

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் பூமி பூஜையில் பங்கேற்று  தடுப்பணை கட்டும் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

    விழாவில் மானாமதுரை நகராட்சித்தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ.  எஸ். மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் லதா, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு)அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    தடுப்பணைத் திட்டம் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், மானாமதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதன் மூலம் கீழப்பசலை, சங்கமங்கலம், ஆதனூர், மேலப்பசலை ஆகிய கண்மாய்களுக்கான விவசாய நிலங்கள் பயனடையும். 

    செய்களத்தூர், கால்பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ள  பாசனக்கிணறுகள் உள்ளிட்ட குடிநீர் ஆதார மோட்டார் கிணறுகளும் பயன்பெறும். இந்த தடுப்பணை மூலம் மேற்கண்ட கண்மாய்கள் மற்றும் பாசனக் கிணறு களால் 1700 ஏக்கர் விவசாயநிலங்கள் பயன்பெறும். 

    மதுரை மாவட்டம்  விரகனூர் மதகு அணையில் இருந்து மானாமதுரை வரை மேலும் பல இடங்களில் தடுப்பணை கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும்  விரைவில் தொடங்கும் என்றார்.
    மானாமதுரை-விருதுநகர் இடையே மின்சார பாதையில் அதிவேகரெயில் சோதனைஓட்டம் நடந்தது.
    மானாமதுரை

    மானாமதுரையில் இருந்து நரிக்குடி, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் வரை ரெயில்பாதை மின்மயமாக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து மத்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய் தலைமையிலான பொறியாளர்கள் குழு  இந்த வழித்தடத்தில் சோதனை ரெயிலை இயக்கி ஆய்வு செய்தது.

    விருதுநகரில் இருந்து புறப்பட்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட சோதனை ரெயில் பிற்பகல் மானாமதுரை வந்தடைந்தது. விருதுநகர், அருப்புக்கோட்டை, நரிக்குடி உள்ளிட்ட ரெயில்நிலையங்களில் லெவல் கிராசிங்குகள், சிக்னல்கள் ஆகியவற்றையும், மின் வழித்தடத்தையும் குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அதன் பின்னர் மானாமதுரைக்கு ஆய்வுக்குழுவினர் வந்துசேர்ந்தனர். அதைத்தொடர்ந்து சோதனை ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு அதிவேக சோதனை ரெயில் கிளம்பியது. இந்த ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர்குமார்ராய் உள்ளிட்ட பொறியாளர் குழுவினர் இருந்தனர். 

    முன்னதாக அதிவேக ரெயிலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஊழியர்கள், மின்வழித்தடம் அமைத்த நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.
    தரமுத்திரையை பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் தேசிய மற்றும் உலக  நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். விழாவில், அவர் பேசியதாவது:

    1986ம் ஆண்டு டிசம்பர் 24ந்தேதி நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை நினைவு கூறுவதற்காவே  ஆண்டுதோறும் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  நுகர்வோர் பாதுகாப்பு  சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் விற்பவரின் கடமைதான் அனைத்தும் என்றும், வாங்குபவருக்கு அதில் குறைகள் இருந்தால் புகார் அளிக்கவும் மற்றும் நிவாரணம் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

    பொருட்களை வாங்கும் ஒவ்வொருவரும் நுகர்வோர்களாவர். மக்கள் விழிப்புணர்வுடன் பொருட்களை வாங்கும்போது பொருட்களின் தரம், எடை மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் இருக்கிறதா என்பதை அறிந்து வாங்க வேண்டும். 

    தரமற்ற, எடைக்குறைவு, மற்றும் போலியான பொருட்களை வாங்குவதையும், போலி விளம்பரத்தை பார்த்து ஏமாந்து தரமற்ற பொருட்களை வாங்குவதையும் நுகர்வோர் ஆகிய பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.  போலி விளம்பரங்களை பார்த்து ஏமாறாமல், தெளிவான சிந்தனையுடனும், எச்சரிக்கையுடனும், தரமுத்திரையினை பார்த்து பொருட்களை வாங்கிட வேண்டும். 

    எந்தவித தகவலும் அச்சிடப்படாத பொட்டல பொருட்களை வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். விலை அதிகமாக இருந்தால் அது தரமான பொருட்கள் என்றும், விலை குறைவாக இருந்தால் தரமற்ற பொருட்கள் என்ற எண்ணத்தை முற்றிலும் மாற்ற வேண்டும்.

    உணவு மற்றும் மருந்து பொருட்களில் கலாவதி தேதி, சரியான விலை, அங்கீகரிக்கப்பட்ட முத்திரை உள்ளிட்ட விபரங்களை கவனமுடன் சரிபார்த்து வாங்கவேண்டும்.  பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.

    விழாவையொட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சவுந்தரராஜன், துணை இயக்குநர் (சுகாதாரம்) ராம்கணேஷ், உதவி ஆணையர் (தொழிலாளர் நலத்துறை) ராஜ்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரத்தினவேல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மங்களநாதன், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர்  பிரபாவதி மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு கழக பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ&மாணவிகள் கலந்து கொண்டனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் 18 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம்,  ஓக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் 23வது  கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.

    முகாம்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருகை தந்தவர்களின் எண்ணிக்கை, கொரோனா தடுப்பூசி முதல் தவணை, 2ம் தவணை செலுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மற்றும் தடுப்பூசி மருந்துகள் இருப்பு குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்திட கொரோனா தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை கருத்தில் கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணியினை மாநிலம் முழுவதும் துரிதப்படுத்தி, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 18 லட்சத்து 21 ஆயிரத்து 83 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

    மாவட்டத்தில் 23வது  கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, மாவட்டம் முழுவதும்  700 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 78,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 45,500 கோவாக்சின் தடுப்பூசிகள் என மொத்தம் 1,23,500 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 

    கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நம்மையும், நம்மை சார்ந்தவர்களையும் பா காத்திட முடியும். எனவே, 18வயதிற்கு மேற்பட்ட, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களும், 2ம் தவணை தடுப்பூசி செலுத்தக்கூடியவர்களும் தங்களது பகுதிகளில் நடைபெற்று வரும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரம்) ராம்கணேஸ், சிவகங்கை வட்டாட்சியர்தங்கமணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    தேவகோட்டையில் 2 வீடுகளில் துணிகர கொள்ளை சம்பவம் நடந்தது.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணா சாலை வடக்கு வீதியில் வசிப்பவர் அருள்தாஸ் (வயது 55). இவரது மனைவி சகாயராணி. இவர்களுக்கு பிரதீப் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். பிரதீப் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார் 

    இவரை பார்ப்பதற்காக அருள்தாஸ் சகாயராணி இருவரும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சென்றுவிட்டார். இன்று காலை சகாயராணி வீட்டு கதவு திறந்திருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

     அருள்தாஸ் உறவினர்கள் சென்று பார்த்தபோது அறையில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த ரூ. 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி கொலுசுகள் எல்.இ.டி. டிவி திருடப்பட்டு இருந்தது.

     இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கொள்ளை நடத்த வீட்டின் அருகே வசிப்பவர் கோவிந்தசாமி (70). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் குமரேசன் சிங்கப்பூரிலும், இரண்டாவது மகன் தமிழ் வாகனன் பெங்களூருவில் மெட்டல் தொழில் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கோவிந்தசாமி பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் அவரது வீட்டில் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து அறிந்த போலீஸ் துணை கண்காணிப்பாளர் ரமேஷ், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிவகங்கை தடவியல் நிபுணர் குழுவினர் 2 வீடுகளிலும் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

    தேவகோட்டை நகரில் அண்ணா சாலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் டி.சி.பி. லிமிடெட் தொழிற்சாலையில் 51வது தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. பாதுகாப்பு அதிகாரி தமிழரசு வரவேற்றார். 

    பொது மேலாளர் கணேஷ் தலைமை தாங்கினார். உதவி பொது மேலாளர் பாலசுந்தரம், தொழிற்சாலை மருத்துவர் தயாளன், துணை மேலாளர்கள் மதியழகன், கார்த்திக், சந்திரசேகர் ஆகியோர் பேசினர். 

    துணை மேலாளர் சிவகுமார் பாதுகாப்பு தின உறுதிமொழி வசிக்க, அனைத்து தொழிலாளர்களும் திரும்ப கூறி எடுத்துக் கொண்டனர்.  

    பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு தின நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. துணை மேலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். 
    ×