என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சிவகங்கை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ரேசன் கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சிவகங்கை மாவட்டத்தில் 660 முழுநேரம் மற்றும் 204 பகுதிநேர நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை நகரில் உள்ள கடை எண்:1, ஓ.புதூர், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மல்லாக்கோட்டை, திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட சுள்ள ங்குடி ஆகியப்பகுதிகளில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடைகளை, கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் தமிழக அரசால் வழங்கப்படும் குடிமைப்பொருட்கள் அனைத்தும் நியாய விலைக்கடைகளின் மூலம் முறையாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் 660 முழுநேரம் மற்றும் 204 பகுதிநேர நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 4 லட்சத்து 20ஆயிரத்து 792 குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.

    மாவட்டம் முழுவதும் அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேச ன்கடைகளின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிமைப்பொருட்களின் எண்ணிக்கை, பொருட்கள் வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை. மீதமுள்ள பொருட்களின் இருப்பு, அரிசி மற்றும் பொருட்களின் தரம், எடையளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து, மாதந்தோறும் ஆய்வுகள் செய்யப்பட்டு, நியாய விலைக்கடைகளுக்கு வருகை தரும் குடும்ப அட்டைதாரர்களிடம் பொருட்களின் தரம் மற்றும் நியாய விலைக்கடையின் செயல்பாடுகள் தொடர்பாக பொது மக்களிடம் கேட்டு அறியப்பட்டு வருகிறது.

    இதில் ஏதேனும் குறைகள் இருப்பின், அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கலெக்டர் மேகநாதரெட்டி சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மல்லாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென்று ஆய்வு செய்தார். உள்நோயா ளிகள், வெளி நோயாளிகள், மகப்பேறு சிகிச்சை, குழந்தைகள் நலப்பிரிவுகள், மருந்துகள் இருப்பு விபரம் மற்றும் இருப்பு மருத்துவ உபகரணங்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருத்து வமனைக்கு வருகை புரியும் நோயாளிகளின் சராசரியான எண்ணிக்கை, முதலமைச்சரின் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் பெற்று பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து, ஆகியவை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்து, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வுகளின் போது மாவட்ட கூட்டு றவுச் சங்கங்களின் இணைப்ப திவாளர் கோ.ஜீனு, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் துணை இயக்குநர் (சுகாதா ரப்பணிகள்) விஜய்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பர விழா நடந்தது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பர விழா நடந்தது. உலக ஜீவராசிகளுக்கு சிவபெருமான் படியளந்த நாளாக கருதப்படும் மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி நாளை முன்னிட்டு கோவில் முன் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் பிரியாவிடை சமேதமாக சோமநாதர் சுவாமியும், மற்றொரு ரிஷப வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று முடிந்து பெரிய சப்பரத் தேரில் சோமநாதர் சுவாமியும், சிறிய சப்பரத்தில் ஆனந்தவல்லி அம்மனும் எழுந்தருளினர். கைலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க இரு சப்பரங்களும் புறப்பட்டு கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தன. ஏராளமான பக்தர்கள் சப்பரத்திற்கு முன்னும், பின்னும் அரிசிகளை தூவிச் சென்றனர். அஷ்டமி சப்பர விழாவிற்கான பூஜைகளை தெய்வசிகாமணி என்ற சர்க்கரைப் பட்டர், ராஜேஷ் பட்டர், சோமாஸ் கந்தன் பட்டர், குமார் பட்டர்ஆகியோர் நடத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது.
    • நடமாடும் நவீன தள்ளுவண்டிகளை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் வழங்கினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் காய்கறி, பூ, பழங்கள், இளநீர், டீக்கடை போன்றவற்றை சுமார் 30-க்கும் மேற்பட்டோர் சாலையோரத்தில் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களை நகராட்சி நிர்வாகம் கொரோனா கால கட்டத்தில் ஆய்வு செய்தனர். இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    இவர்கள் வியாபாரத்தை சிரமமில்லாமல் செய்ய தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நகர் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.24 லட்சம் மதிப்பிலான நடமாடும் நவீன தள்ளுவண்டிகளை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் வழங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், ஆணையாளர் சாந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • இளையான்குடி யூனியனில் வறட்சி நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன் சிறப்புரையாற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் பேரூர் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. மூத்த உறுப்பினர் புக்குளி முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளரும் இளையான்குடி பேரூராட்சி தலைவருமான நஜூமுதீன் முன்னிலை வகித்தார். தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன் சிறப்புரையாற்றினார்.

    தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, இளையான்குடி வடக்கு ஒன்றியம் முழுவதும் வாக்குச்சாவடி குழு அமைப்பது, தி.மு.க.வின் அனைத்து சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிப்பது, இளையான்குடி யூனியனில் பருவமழை பொய்த்ததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து வறட்சி நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. மாவட்ட விவசாய அணி காளிமுத்து, மாணவரணி சந்திரசேகர் தொண்டரணி புலிக்குட்டி, கூட்டுறவு சங்கத் தலைவர் சுப. தமிழரசன், ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன், நிர்வாகிகள் சாரதி என்ற சாருஹாசன், உதயசூரியன், தட்சிணாமூர்த்தி, சிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் காட்டாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் அடிக்கடி மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூர் அருகில் ஆத்தங்கரைப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    அ.காளாப்பூரில் இருந்து ஆத்தங்கரைப்பட்டி செல்ல பாலாற்றின் குறுக்கே தரைப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த தரைபாலம் வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்கள், கார்களில் கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

    சில வாரங்களாக திண்டுக்கல் கரந்தமலை பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாகவும், சிங்கம்புணரியில் பெய்த கனமழை காரணமாகவும், பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அ.காளா ப்பூர் தடுப்பணையில் தண்ணீர் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேலும் அ.காளாப்பூர்- ஆத்தங்கரைப்பட்டி தரைப்பாலம் பாலாற்றின் வெள்ளத்தால் மூழ்கியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து தடைபட்டது.இதனால் அபாயம் அறியாமல் இந்த தரைப்பாலத்தின் வழியாக இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கிராம மக்கள் வெள்ள நீரையும் பொருட்படுத்தாமல் கடந்து செல்கின்றனர்.

    ஒவ்வொரு முறையும் மழைகாலம், வடகிழக்கு பருவ மழைக்காலம், புயல் காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து தடைபடுவதால் இந்த பகுதி மக்கள் சுமார் 12 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இருசக்கர வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் தரைபாலத்தை கடந்து சென்று வருகின்றனர். ஆத்தங்கரைப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தரைப்பா லத்தை கடக்க பெற்றோருடன் சென்று வருவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இங்கு உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் திட்டத்தில் தொழில் தொடங்க சுயஉதவிக்குழுவினர், கூட்டுறவு சங்கங்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழில் வளம் பெருகு வதற்காக தமிழ்நாடு அரசு மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று,மத்திய அரசின் 60சதவீத நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் 'பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் (PMFME)" ஆகும்.

    இந்த திட்டத்தின் கீழ் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், அரிசி ஆலை, இட்லி, தோசைக்கான மாவு தயாரித்தல், மரச்செக்கு எண்ணெய், பேக்கரி பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகை தின்பண்டங்கள் தயாரித்தல், செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரித்தல் மற்றும் சாம்பார் பொடி,இட்லிப்பொடி போன்ற மசால்வகை பொடிகள் தயாரித்தல், காப்பிக் கொட்டை அரைத்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி வகைகள் பதப்படுத்தல் போன்ற தொழில்களைத் தொடங்கவும், குறுந்தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம், தொழில்நுட்ப மேம்படுத்தல், தொழில்நுட்ப ஆலோசனைகள்,திறன் மேம்பாட்டுப் பயிற்சி,திட்ட அறிக்கை தயாரிக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

    தொழில் நடத்த தேவையான உரிமங்கள், தரச்சான்றிதழ்கள் பெறவும் சந்தைப்படுத்தலை மேம்படுத்தத் தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.

    இந்த திட்டத்தின் கீழ் புதிதாகத் தொழில் தொடங்குவோர், ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு ள்ளோர் மற்றும் சுயஉதவிக்குழுவினர், கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன்பெறலாம்.

    ரூ.1 கோடி வரையிலான உணவுப் பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறத்தகுதி பெற்றவை ஆகும். திட்டத் தொகையில் 10சதவீதம் முதலீட்டாளர் பங்காகவும், 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாக் கடனாகவும் வழங்கப்படும்.

    அரசு 35சதவீதம் மானியம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கும். சுய உதவிக்குழுவினர் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும்.

    தனியான தொழில் திட்ட ங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி மட்டு மன்றி, தொகுப்புக் குழுமங்க ளுக்குத் தேவையான பொதுக் கட்டமைப்பு வசதிகள், பொது வசதியாக்க மையங்கள் ஏற்படுத்த திட்டத் தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

    தற்பொழுது இந்த திட்டம் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. உணவுப்பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை நிறுவவும், விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல் மேற்கொள்ள pmfme. mofpi. gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் பெற மாவட்ட தொழில் மையம்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,சிவகங்கை என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04575-240257, 8925533989 என்ற தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆடு திருடும் கும்பல் மீது வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாக போலீஸ் சூப்பிரண்டிடம் சிவசாமி புகார் செய்தார்.
    • கடந்த 9-ந் தேதி சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் காரில் ஆடுகளை தூக்கி சென்றுள்ளனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவர் ஊர், ஊராக சென்று ஆட்டு கிடை அமைத்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    தற்போது காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி கிராமத்தில் தற்காலிகமாக ஆட்டு கிடை அமைத்து ஆடுகளை மேய்த்து வருகிறார். இவரது ஆடுகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது.

    கடந்த 9-ந் தேதி சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் காரில் ஆடுகளை தூக்கி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவசாமி காரை விரட்டி சென்றுள்ளார். ஆனால் தடுக்க முடியாத நிலையில் அந்த பகுதிகளில் பள்ளி மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது காரின் எண் மற்றும் பதிவாகியிருந்தது.

    அதனை ஆதாரமாக கொண்டு குன்றக்குடி காவல் நிலையத்தில் சிவசாமி புகார் செய்தார்.

    புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கும் பதிவு செய்யவில்லை.

    இதையடுத்து சிவசாமி மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் மனுவை அளித்தனர்.

    • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பழமையான பெட்டி காளி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெட்டி காளியம்மன் கோவில் வீடு சேதமடைந்தது. இந்த கோவிலின் குடிமக்கள், ேகாவில் வீட்டை புதுப்பித்து கும்பாபிஷேக விழாவை நடத்தினர். கோவில் வீட்டில் பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பெரிய தேக்கு பெட்டியில் காளி வாசம் செய்வதாக ஐதீகமாகும். கும்பாபிஷேக விழாவிற்காக ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பெட்டிக்காளிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடந்தது. இதில் வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறுமிகள் மாயமானது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • சிறுமிகள் போன் செய்த தகவலை அவர்களது பெற்றோர் போலீசிடம் தெரிவித்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் இருவரின் 13 வயது மகள்கள் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அவர்கள் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர்.

    நேற்றும் சிறுமிகள் இருவரும் அவரவர் வீட்டில் தனியாக இருந்தனர். இந்நிலையில் பிற்பகலில் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சிறுமிகள் இருவரையும் காணவில்லை. அவர்களை இருவரது குடும்பத்தினரும் பல இடங்களில் தேடினர். ஆனால் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    சிறுமிகள் மாயமானது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து மாயமான சிறுமிகளை கண்டுபிடிக்க காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பூர்ணசந்திரபாரதி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் மாயமான சிறுமிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாயமான சிறுமிகளின் பெற்றோரின் செல்போன்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது இன்ஸ்ட்ராகிராம் வலைதளம் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த சிறுவன் ஒருவனுடன், சிறுமிகள் இருவரும் பழகி வந்தது தெரியவந்தது. இதனால் சிறுமிகள் இருவரும் தூத்துக்குடிக்கு சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர்.

    இந்த நிலையில் தேடப்பட்டு வந்த சிறுமிகளில் ஒருவர் தனது தாயின் செல்போனுக்கு நேற்று இரவு போன் செய்தார். அப்போது தாங்கள் தூத்துக்குடியில் இருப்பதாகவும், தங்களை தேட வேண்டாம் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    சிறுமிகள் போன் செய்த தகவலை அவர்களது பெற்றோர் போலீசிடம் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுமியின் தாய்க்கு அழைப்பு வந்த செல்போன் எண் சிக்னலை போலீசார் ஆராய்ந்துள்ளனர். அப்போது அந்த செல்போன் எண் தூத்துக்குடியில் இருப்பது தெரியவந்தது.

    அதுபற்றி தூத்துக்குடி இன்ஸ்பெக்டர் ஜோசுக்கு காரைக்குடி போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த செல்போன் சிக்னலை பின்பற்றி சிறுமிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தூத்துக்குடி போலீசார் களமிறங்கினர்.

    அப்போது சிறுமிகள் தூத்துக்குடி-சென்னை சாலையில் பயணித்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து எட்டயபுரம் அருகே பஸ்சில் சென்று கொண்டிருந்த சிறுமிகளை போலீசார் மீட்டனர். சிறுமிகள் மீட்கப்பட்ட தகவல் அவர்களது பெற்றோர் மற்றும் காரைக்குடி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் தூத்துக்குடி சென்றனர். சிறுமிகள் இருவருக்கும் போலீசார் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமிகளை சென்னைக்கு அழைத்து சென்ற சிறுவனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

    சிறுமிகள் மாயமான விவகாரத்தில் விரைந்து செயல்பட்டு, அவர்களை மீட்ட தனிப்படை போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

    • பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை 50 கி.மீ. தூரத்தில் உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 சந்திப்பு ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் இந்தியாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரிக்கு மானாமதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து பாதைகள் செல்கிறது.

    மதுரை-திருச்சி அகல ரெயில் பாதை அமைக்கபட்ட காலத்தில் ரெயில் சேவை நிறுத்தப்படாமல் தென்மாவட்டங்களுக்கு காரைக்குடி-மானா மதுரை சந்திப்பு வழியாகத் தான் ரெயில்கள் இயக்கப்பட்டன. மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது மானாமதுரையில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வசதி இருந்தது.

    இதுதவிர கேரளா மாநிலம் கொல்லம், பாலக்காடுக்கும் ரெயில் வசதி இருந்தது. அகல ரெயில் பாதை வந்த பிறகு பல ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

    ராமேசுவரத்தில் இருந்து மானாமதுரை , காரைக்குடி வழியாக தினசரி பகல் நேரத்தில் சென்னைக்கு ரெயில் வசதி கிடையாது. தற்போது திருச்சி வரை வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சில ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி வரை விடப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு செல்கிறது.

    காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரை 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து தற்போது ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு கன்னியாகுமரியில் இருந்து பாண்டிசேரி வரை மின் பாதை வழிதடத்தில் நேரடியாக ரெயில்கள் செல்கிறது.

    எனவே சென்னையில் இருந்து காரைக்குடி வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரை வரை இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே துறைக்கும் மதுரை, திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர்களுக்கும் மானாமதுரை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • காளையார்கோவிலில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நீட் தேர்வுக்கு விதி விலக்கு பெறுவோம் என தி.மு.க.வினர் பிரசாரம் செய்தார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கி னார். ஒன்றிய செயலா ளர்கள் சிவாஜி, ஸ்டீபன் அருள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    நீட் தேர்வுக்கு விதி விலக்கு பெறுவோம் என தி.மு.க.வினர் பிரசாரம் செய்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு எதையும் செய்யவில்லை. ஊழல் செய்யவில்லை என தற்போதுள்ள தி.மு.க. அமைச்சர்கள் சத்தியம் செய்ய தயாரா? அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ் மாவட்ட மகளிரணி செயலாளர் ஜாக்குலின், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சரவணன் மாவட்ட மகளிரணி வெண்ணிலாசசிகுமார் பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட துணை செயலாளர் சதீஸ்பாலு, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை, பாகனேரி சரவணன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் நாகராஜன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சிவக்குமார், பூமி, கவுன்சிலர் பாண்டி கண்ணன் வழக்கறிஞர் நவநிதகிருஷ்ணன் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இளையான்குடி அருகே ரூ.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அ.நெடுங்குளத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.30.92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 194 பயனாளிகளுக்கு வழங்கி னார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து அதில் உள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்க மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காமாட்சி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத்துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத்துறை, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×