search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Margazhi"

    • சங்கசூடனை யாராலும் வெல்ல முடியவில்லை.
    • கற்புக்கரசி கணவன் சொல்லை மீறி எந்த செயலும் செய்யாதவள்.

    முன்னொரு காலத்தில் சங்கசூடன் என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவன் அருந்தவம் பல புரிந்து வரங்கள் பல பெற்றிருந்தான். அந்த வர பலத்தால் அவன் பல கொடுமைகளை செய்து வந்தான். குழந்தைகளை மிதித்தும். குணசீலர்களை கொடுமை படுத்தியும், யாகங்களை சிதைத்தும், பெண்களின் கர்ப்பை சூறையாடியும் களியாட்டம் போட்டு வந்தான்.

    அவனது கொடுமைகளை தாங்க முடியாமல் மண்ணவரும், விண்ணவரும்பெரும் துயரம் அடைந்தனர். சங்கசூடனை அழிக்க வழிதெரியாமல் திணறினார்கள். கடைசியாக அவர்கள் மும்மூர்த்திகளிடம் சென்று தங்கள் குறைகளை முறையிட்டார்கள். அதனால் கோபமடைந்த மும்மூர்த்திகளுக்கும் சங்கசூடனுக்கும் யுத்தம் நடந்தது. ஆனால் சங்கசூடனை யாராலும் வெல்ல முடியவில்லை.

    அதற்கு காரணம் அவன் கடுந்தவம் புரிந்து அதன் பயனாய் பெற்று தன் கழுத்தில் அணிந்திருந்த ஸ்ரீகிருஷ்ண கவசம் ஆகும். அந்த கவசம் அவன் கழுத்தில் இருக்கும் வரை அவனை யாராலும் வெல்லவோ, அழிக்கவோ முடியாது என்று மும் மூர்த்திகளும் உணர்ந்தனர். சங்கசூடனின் மனைவி துளசி மகா பதி விரதை, கற்புக்கரசி கணவன் சொல்லை மீறி எந்த செயலும் செய்யாதவள்.

    அழகு, அன்பு, கருணை, அனைத்தும் நிறைந்தவள். அவளின் கற்பின் திறன் கணவனுக்கு அரணாக விளங்கியது. துளசியின் கற்பின் மகிமையை உணர்ந்த பரந்தாமன் கற்பினுக்கு அரணாக விளங்கும் துளசியை புகழ்ந்து தோத்திரம் சொல்வதை தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்.

    பிறகு 10 தோத்திரங்களால் பகவான் துளசியை புகழ்ந்துரைத்து துதித்தார். வைகுந்த வாசனே தன்னை துதித்ததை எண்ணி துளசி தன்னை மறந்தாள். நெஞ்சம் நெகிழ்ந்தாள் மிகவும் மகிழ்ந்தாள். அன்பை பொழிந்தாள். அவரை வாயார போற்றிப் பாடினாள். ஆடினாள்.

    கற்புக்கனலாக நின்ற அவளை நாராயணர் ஆதரவாகப் பார்த்து வேண்டிய வரங்களைக் கேள் என்றார். அதற்கு அவள் மீண்டும் பிறவா வரமும், பிறந்தால் நாராயணரை மறவா மனமும் வேண்டும் என்றால் பிறகு ஸ்ரீமஹா விஷ்ணுவின் பாதார விந்தங்களில் பணிந்தாள். அவளது உயிர் மகா விஷ்ணு வின் பாதங்களில் ஒளி வடிவாக சென்றடைந்தது. அவளது உடல் கண்டகி என்னும் நதியாக மாறியது.

    அவளது கேசம் துளசி செடியாக துளசி வசமானது. ஸ்ரீமகா விஷ்ணு அந்த துளசியை மாலையாக்கி அணிந்து துவளத்தகமாக்க காட்சி அளிப்பவர் ஆனார். மனைவியை பிரிந்த சங்க சூடன் சக்தி அற்றவனாக மாறினான். அவன் முற்பகலில் செய்த கொடுமைகளே பிற்பகலில் அவன் அழிவிற்கு வழி வகுத்தன. அவனை ஸ்ரீ மகாவிஷ்ணு எளிதில் வதம் செய்து எல்லோருக்கும் மங்கலங்கள் தந்தருளினார்.

    ஸ்ரீதேவியின் ஓர் அங்கம் பூவுலகில் தங்கி தம் மக்களின் உடற்பிணி உள்ளப்பிணி ஆகிய பிணிகளைப் போக்கி, பேரின்ப வாழ்வளிக்க எடுத்த வடிவமே ஸ்ரீ துளசி.

    சாதாரணமாக காண்பவர்களுக்கு செடியின் உருவமாகவும், பிணிகளைத் தீர்க்கும் மருந்து செடியாகவும் தெரிவாள். ஆனால் தெய்வீக நோக்குடன் காணும்போது உலகத்தை விளங்க வைக்கும் மகாலட்சுமியின் உருவமாக காட்சியளிக்கிறாள் ஸ்ரீ துளசி மாதா. ஸ்ரீ மகாலட்சுமியே இந்த துளசி செடியாய் மாறி ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கு மிகவும் விருப்பமுள்ள மலராக விளங்குகிறார்.

    துளசி இல்லாத பூஜையை மகா விஷ்ணு ஏற்றுக்கொள்வதில்லை. திருத்துழாய் என்ற பெயரில் பெருமாள் கோவில்களில் சிறந்த பூஜை பொருளாக விளங்குவது இந்த துளசியே. துளசி உள்ள இடத்தில் ஸ்ரீமகா விஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார். துளசியினால் விஷ்ணுவை பூஜித்தால் ஆயிரம் பால் குடங்கள் கொண்டு அபிஷேகம் செய்த மனமகிழ்ச்சியை ஸ்ரீமகா விஷ்ணு அடைகிறார்.

    கடைசி காலத்தில் துளசி தீர்த்தம் உட்கொண்டால் பிறவி நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும். துளசியினால் ஸ்ரீமகா விஷ்ணுவை மட்டுமின்றி ஸ்ரீ மகா தேவனையும் அர்ச் சிக்க லாம். ஏனெனில் அவர் ஸ்ரீ சங்கர நாராயணராக இருக்கிறார்.

    இத்தகைய மகிமை வாய்ந்த ஸ்ரீ துளசியை நம் வீடுகளில் அழகிய மாடங்களில் வளர்த்து பக்தி சிரத்தையுடன் பூஜித்தால் வாழ்க்கையில் சர்வ மங்கலங்களையும் பெறலாம். கன்னிப்பெண்கள் பூஜித்தால் நல்ல கணவனை பெறுவார்கள். சுமங்கலிகள் பூஜித்தால் தீர்க்க சவுமாங்கல்யம்தையும் சகல சவுபாக்கியங்களையும் பெறுவார்கள் இவ்வளவு பெருமை வாய்ந்த துளசி சரித்திரத்தை மனமுவந்து படிப்பவருக்கும் படிப்பதை கேட்ப வருக்கும் ஸ்ரீ துளசி மாதாவின் பெரும் கருணையும் ஸ்ரீமகா விஷ்ணுவின் பரிபூரண அருளும் கிடைக்கும்.

    • மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள்.

    மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம்.

    உடலாலும், உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியி ருப்பதே உபவாசம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி) இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு மறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது.

    குளிர்ந்த வயிறை சுத்தமாக்குகிறது. இந்நாளில் துளசி இலை பறிக்கக் கூடாது. தேவையானதை முதல் நாளே பறித்து வைத்து விட வேண்டும். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும்.

    • மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பர விழா நடந்தது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பர விழா நடந்தது. உலக ஜீவராசிகளுக்கு சிவபெருமான் படியளந்த நாளாக கருதப்படும் மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி நாளை முன்னிட்டு கோவில் முன் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் பிரியாவிடை சமேதமாக சோமநாதர் சுவாமியும், மற்றொரு ரிஷப வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று முடிந்து பெரிய சப்பரத் தேரில் சோமநாதர் சுவாமியும், சிறிய சப்பரத்தில் ஆனந்தவல்லி அம்மனும் எழுந்தருளினர். கைலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க இரு சப்பரங்களும் புறப்பட்டு கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தன. ஏராளமான பக்தர்கள் சப்பரத்திற்கு முன்னும், பின்னும் அரிசிகளை தூவிச் சென்றனர். அஷ்டமி சப்பர விழாவிற்கான பூஜைகளை தெய்வசிகாமணி என்ற சர்க்கரைப் பட்டர், ராஜேஷ் பட்டர், சோமாஸ் கந்தன் பட்டர், குமார் பட்டர்ஆகியோர் நடத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • உடல், உள்ளத்தை நல்லவிதமாக ஆக்குவதற்கு உரிய மாதம் மார்கழி.
    • அனைத்து கோவில்களிலும் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணியளவில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    திருப்பூர் : 

    உடல், உள்ளத்தை நல்லவிதமாக ஆக்குவதற்கு உரிய மாதம் மார்கழி. ஆண்டாள் பிறந்த நாள், திருமாங்கல்ய நோன்பு, ஆருத்ரா மஹா தரிசனம், வைகுண்ட ஏகாதசி என விசேஷ நாட்கள் இம்மாதத்தில் தான் இடம் பெறும்.அனைத்து கோவில்களிலும் மார்கழி மாதம் அதிகாலை நேரத்தில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை, உற்சவர் திருவீதியுலா, பக்தி பாடல்கள் பாராயணம், சிவாலயங்களில் தேவாரம், திருவாசகம் முற்றோதல், வைணவ தலங்களில் திருப்பாவை, திருவெம்பாவை இசைத்தல் என பக்தி மணம் கமழும். பிரசித்தி பெற்ற கோவில்களில் தொடர் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். நேற்று மார்கழி மாதம் பிறப்பையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் பெண்கள் வீட்டு வாசலில் மாக்கோலம், பொடிக்கோலம் போட்டு, மஞ்சள், மாட்டு சாணம் ஆகியவற்றில் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் மீது பூக்கள் வைத்தும், அகல் விளக்குகள் வைத்தும் வழிபட தொடங்கி உள்ளனர்.

    திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில், வீரராகவ பெருமாள் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், திருப்பூர் அய்யப்பன் கோவில், குருவாயூரப்பன் கோவில், திருப்பூர் - திருப்பதி கோவில், கோட்டை மாரியம்மன், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், சுக்ரீஸ்வரர் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணியளவில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    அவிநாசி, திருப்பூரில் சிவனடியார் திருக்கூட்டத்தினர் ரத வீதிகளில் வலம் வந்து திருவெம்பாவை, திருப்பாவை, தேவாரம், நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகியவற்றை பாடி வழிபடுகின்றனர்.

    மார்கழி மாத சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கடைகளில் பூஜை பொருட்கள், நைவேத்யம் மற்றும் அபிேஷக பொருட்கள், பிரசாதம் செய்து வழங்க சுண்டல், பொங்கல், சாத வகைகளுக்கான பொருள் வகைகள், பூ, மாலை ரகங்கள், கோலம் போடப் பயன்படுத்தும் வெள்ளை மற்றும் வண்ண கோலப் பொடிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.  

    • மார்கழி மாதம் முழுவதும் வண்ண கோலமிட்டு அந்த பகுதியே பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் சிவன், முருகன், பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகளும் சிறுவர், சிறுமியரின் பஜனைகளும் நடைபெறுவது வழக்கம்.
    • சேலத்தில் பக்தர்கள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து நீராடி கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலானோர் அதிகாலையிலேயே அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    சேலம்:

    மார்கழி மாதம் பிறந்து விட்டால் வீடுகளில் பெண்கள் சூரியன் உதிக்கும் முன் கண் விழித்து குளிர்ந்த நீரில் நீராடி கோலத்தால் வாசலை அலங்கரித்து அன்றைய பொழுதை இனிதே வரவேற்கத்தொடங்கி விடுவர்.

    அவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் இணைந்து வண்ணமயமான கோலங்களை இட்டு மகிழ்வர். கோலங்களில் புள்ளி வைத்து போடும் கோலம், ரங்கோலி, சிக்குக்–கலம், உருவ கோலம் இன்னும் பல வகையான கோலங்கள் உள்ளன.

    மார்கழி மாதம் முழுவதும் வண்ண கோலமிட்டு அந்த பகுதியே பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். மேலும் சிவன், முருகன், பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகளும் சிறுவர், சிறுமியரின் பஜனைகளும் நடைபெறுவது வழக்கம். இன்று மார்கழி பிறப்பை முன்னிட்டு சேலம், நாமக்கல் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    சேலத்தில் பக்தர்கள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து நீராடி கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலானோர் அதிகாலையிலேயே அருகில் உள்ள சிவன், பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    திறந்த வெளியில் நடமாடுவதால் காற்றில் உள்ள ஓசோன் உடலில் படிவதால் உடல் ஆரோக்கியம் தரும் என்பதால், அதிகாலையில் எழுந்து வீதிகளில் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி சென்றனர். பெண்கள் அதிகாலையில் எழுந்து வீதியில் கோலமிட தொடங்கினர். சேலம் டவுன், பட்டைகோவில் பகுதி, அம்மாபேட்டை, கருங்கல்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மார்கழி பஜனை குழுவினர் அதிகாலை வேளையில் கடுங்குளிரையும் பொருட்ப–டுத்தாமல் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி சென்றதை காண முடிந்தது. மார்கழி மாதம் முடிய பஜனை குழுவினரின் பாடல் பணி தொடரும். மார்கழி பிறப்பையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவில்,

    சேலம் சுகவனேசுவரர் கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், சின்னத்திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலை வேளையிலேயே பக்தர்கள் வழிபாட்டுக்கு சென்றனர். சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் பெண்கள் அதிகாலையில் பாவை நோம்பு கடைபிடித்தனர். அங்கு கோவிலில் விளக்கேற்றி வழிபட்டனர். மேலும், பல கோவில்களிலும் விளக்கேற்றி பெண்கள் வழிபட்டனர்.

    இதேபோல நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நரசிம்ம மூர்த்தி கோவில், ஆஞ்சநேயர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநா–ரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அதிகாலையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    ×