என் மலர்tooltip icon

    சேலம்

    • அ.தி.மு.க. எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
    • 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி என்றால் அ.தி.மு.க. தான்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றிய, பேரூர் அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    நீங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை வீடு வீடாக ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து எடுத்து சொன்னதின் விளைவு 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் 94 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்றோம். அதேபோல் சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளில் நாம் வென்றோம்.

    இன்றைக்கு துணை முதலமைச்சர் பேசுகிறார். இது பைனல் மேட்ச் இல்ல என அவர் சொன்னார். அடுத்து வரும் தேர்தல்தான் உண்மையான தேர்தல் என்றார். அந்த பைனல் மேட்ச்-ல் நாம் தான் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். விளையாட்டை ஆரம்பிச்சுட்டீங்க. அந்த விளையாட்டு வெற்றியினுடைய கோப்பையை அ.தி.மு.க. தான் பெறும்.

    வலிமையான அ.தி.மு.க.வை வேண்டும் என்றே திட்டமிட்டு தி.மு.க. இன்றைக்கு நம்மை வீழ்த்த நினைக்கின்றார்கள். ஒருபோதும் நடக்காது. ஏனென்று சொன்னால் மக்கள் சக்தி எங்களிடம் உள்ளது. அவர்கள் கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். தி.மு.க. பலமில்லை. கூட்டணி பலத்தை தான் தி.மு.க. நம்புகிறது.

    கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் தி.மு.க.வில் நிறைய கூட்டணி கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தி.மு.க.வை பிடித்து கொண்டிருக்கிறார்கள். இதில் மேலே இருக்கிற கூட்டணி கட்சி தலைவர் கையை விட்டால் கடைசியில் இருக்கிற தி.மு.க.வின் கதி என்னாவது? அப்படித்தான் தி.மு.க.வின் நிலை இன்றைக்கு நிலவுகிறது.

    கூட்டணி கட்சிகாரர் கைவிட்டால் தி.மு.க. வீழ்ந்து போய் விடும். ஆனால் அ.தி.மு.க. அப்படி இல்லை. வெற்றி, தோல்வி மாறி மாறி சந்தித்த கட்சி அ.தி.மு.க. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர வெற்றி கிடையாது. எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தர தோல்வி கிடையாது. சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வெற்றி, தோல்வி அமைவது இயற்கை. அதை நாம் தமிழகத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

    அ.தி.மு.க. கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை 11 சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. அதில் 7 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று இருக்கின்றது.

    அ.தி.மு.க. எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். 7 சட்டமன்ற தேர்தல்கள் வெற்றி பெற்ற காரணத்தினால் தான் இன்றைக்கு தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருப்பதற்கு அடித்தளம் அமைத்தது அ.தி.மு.க. அரசாங்கம்.

    அதுமட்டுமல்ல 30 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சி என்றால் அ.தி.மு.க. தான். 30 ஆண்டு கால ஆட்சியில் அ.தி.மு.க. ஆண்ட காரணத்தில் தான் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்தி அதனால் மக்களுக்கு நன்மை கிடைத்தது. அதனால் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்ற பெயரை பெறுவதற்கு அடித்தளமாக விளங்கியது அ.தி.மு.க. அரசாங்கம்.

    தி.மு.க. அப்படி ஏதாவது சொல்ல முடியுமா? தி.மு.க. என்றால் ஊழல். ஊழல் என்றால் தி.மு.க. அதுதான் தி.மு.க.வுக்கு அடையாளம். 41 மாத ஆட்சி காலத்தில் என்ன சாதனை செய்தீர்கள்?

    அ.தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டன் உயர்ந்த நிலைக்கு வர முடியும். உயர்ந்த பதவிக்கு தொண்டன் வரக்கூடிய கட்சி அ.தி.மு.க. வேறு எந்த கட்சியிலாவது முடியுமா?. உங்களுடன் கிளை கழக செயலாளராக பணியை தொடங்கி உங்களுடைய பேராதரவினால் படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு கழகத்தின் பொதுச் செயலாளராக உங்கள் முன் நிற்கிறேன் என்று சொன்னால் உங்களுடைய உழைப்பு, ஆதரவு. அத்தனை பேரும் எந்தஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தீர்கள். அதனால் இன்றைக்கு எடப்பாடி தொகுதி அ.தி.மு.க.வின் இரும்பு கோட்டையாக, எக்கு கோட்டையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டெல்டா மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அங்கு தண்ணீர் தேவை குறைந்து உள்ளது.
    • மேட்டூர் அணையில் தற்போது 62.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் டெல்டா மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் அங்கு தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீரும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு விடிய விடிய தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று வினாடிக்கு 15 ஆயிரத்து 929 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 18 ஆயிரத்து 94 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. இதே போல் காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக உயர்ந்தது. அணையில் தற்போது 62.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
    • வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விடுமுறை தினத்தையொட்டி ஏரியில் குளிக்க வந்தபோது, 2 பெண்கள், ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளனர். அதன்படி, ரேவதி, சிவஸ்ரீ, திர்ய தர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துணி துவைத்து முடித்த பிறகு 3 பேரும் தண்ணீரில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
    • ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவலிங்கம். இவருடைய மகள் ரேவதி (வயது 20), மகன் சிவஸ்ரீ (10).

    அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகள் திவ்யதர்ஷினி (14). இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் உள்ள கொத்தி குட்டை ஏரியில் இன்று காலை துணிகள் துவைக்க சென்றனர். துணி துவைத்து முடித்த பிறகு 3 பேரும் தண்ணீரில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற 3 பேரும் நீச்சல் தெரியாததால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.

    3 பேரும் நீரில் மூழ்கியதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஏரியில் இறங்கி தேடினர். இருப்பினும் காப்பாற்ற முடியவில்லை. 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் உடலை ஏரியில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுததை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது.

    இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி போலீசார், குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரிதே பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதும் ஒரு வாரத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
    • கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குவதுடன் பல்வேறு தேர்தல் வியூகங்களையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.

    சென்னை:

    2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள்தான் உள்ளன.

    இந்த தேர்தலுக்கு வியூகம் வகுக்க தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவில் துணை முதலமைச்சரான இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணி வாரியாக மாநில நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வந்தனர். இதில் எடுக்கப்படும் விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்தது போல் இப்போது சட்டசபை பொதுத்தேர்தலுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதும் ஒரு வாரத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

    அதில் பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிய பொறுப்பாளர்களில் பலரை மாற்றி விட்டு அந்த தொகுதிகளுக்கு வேறு புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதில் இளைஞரணி மாநில துணைச்செயலாளர்கள் 7 பேருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பதவியும், இளைஞரணி அமைப்பாளர்கள் 22 பேருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பதவியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர பெண்களுக்கும் தொகுதி பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதியை மேற்பார்வையிட விருகம்பாக்கம் மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் தொகுதியில் என்ன நடக்கிறது என்பதை கட்சித் தலைமைக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.

    வாக்குச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பி.எல்.ஏ.2 நிர்வாகிகளும், அவர்களுடன் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் சரிவர பணியாற்றுகிறார்களா? என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர். இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையையும் கவனிக்கின்றனர்.

    இவை அனைத்தும் உதயநிதியின் ஆலோசனையின் பேரில் நடைபெற்று வருகிறது.

    இப்போது நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களில் பலர் வயதில் குறைந்தவர்களாக துடிப்பானவர் ளாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதால் கட்சி பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இப்போது ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி உள்ளார்.

    அந்த வகையில் சேலத்தில் இன்று மாலை கருப்பூரில் உள்ள தீர்த்தமலை கவுண்டர் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் ஜோயல், சீனிவாசன், இன்பாரகு, இளையராஜா, அப்துல்மாலிக், கோல்டு பிரகாஷ், பிரபு, ராஜா, ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    துணை முதலமைச்சரான பின்னர் முதன்முதலாக இன்று நடைபெறும் இந்த இளைஞரணி கூட்டம் "களத்தில் இளைஞர் அணி" என்ற நோக்கில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் இளைஞரணியின் செயல்பாடுகளை தற்போதே தீவிரப்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞரணியினர் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

    மேலும் தமிழகம் முழுவதும் இளைஞர்களை கவரும் வகையில், திறக்கப்படாமல் உள்ள கலைஞர் நூலகங்களை திறப்பது, எனது உயிரினும் மேலான இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பரிசளிப்பு விழா நடத்துவது, இளைஞர் அணியின் மூலம் சமூக வலை தள பயிற்சிகளை சிறப்பாக நடத்தி வாக்காளர்களை கவருவது, நகர, பகுதி, பேரூர்களுக்கு திறமையான புதிய நிர்வாகிகளை அறிவித்தல் உள்பட பல்வேறு பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    மேலும் இந்த கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு இளைஞரணி நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனிதனியாக போட்டோ எடுத்து கொள்கிறார்.

    இந்த கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குவதுடன் பல்வேறு தேர்தல் வியூகங்களையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.

    இளைஞரணி நிர்வாகிகள் ஐ.டி.விங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் சமூக வலைதள பதிவில் அவ்வப்போது எவ்வாறு பதிவுகள் போட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட உள்ளார்.

    வருகிற சட்டசபை தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மூத்த அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசும் போது தேர்தலில் தனக்கு சீட் கிடைக்குமா? கிடைக்காதோ? என்று பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நான் கடந்த 20 வருடத்துக்கு முன்னாடியே சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி 5 வருடத்து வரும் போகும்.
    • பொதுச்செயலாளர் என்பது முகவரி தான்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

    வருகிற வழிகளில் எல்லாம் வைக்கப்பட்ட பேனர் மற்றும் வரவேற்பு சிறப்பாக இருந்தது. ஆனால் அதில் ஒன்றில் நிரந்தர பொதுச்செயலாளர் என்று போடப்பட்டு இருந்தது. தலைவர் எனக்கு பொதுச்செயலாளர் பதவி மட்டும் கொடுத்து இருக்கார்.

    அது நிரந்தரமா இல்லையா என்பதை முடிவு பண்ண வேண்டியது நமது தலைவர் தளபதி தான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நான் கடந்த 20 வருடத்துக்கு முன்னாடியே சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி 5 வருடத்து வரும் போகும். தளபதியோட ரசிகன் என்ற பதவி கடைசி காலம் வரைக்கும் என்று நான் சொன்னேன். அந்த பதவி தான் இன்று என்னை இந்த இடத்தில் தளபதி நிறுத்தி இருக்கிறார். அதனால தயவு செய்து பொதுச்செயலாளர் என்பது முகவரி தான். எப்பவும் நம்ம எல்லாரும் தளபதிக்கு கீழ தளபதி தொண்டனாகவும், தோழனாகவும் கடைசி காலவரைக்கும் நாம் இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    • முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாளை காலை ஆலோசனை நடைபெற உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கு மிக பிரமாண்டமான மாநாட்டு மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    கனமழை காரணமாக தாமதமான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

    தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    ஏற்கனவே 33 நிபந்தனைகளில், 17ஐ கட்டாயம் கடைபிடிக்க அறிவுறுத்திய போலீசார், மீண்டும் 5 கேள்விகள் எழுப்பி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு குறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாளை காலை ஆலோசனை நடைபெற உள்ளது.

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஒருங்கிணைப்புக் குழு தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.

    • கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
    • கர்நாடக- தமிழக எல்லையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதுபோல் கர்நாடக- தமிழக எல்லையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,531 கன அடியாக இருந்தது. இதையடுத்து நேற்று நேற்று காலை நீர்வரத்து 16,196 கன அடியாக அதிகரித்தது.

    தொடர்ந்து இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 19,495 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று 92 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 93.35 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 56.56 டி.எம்.சி. உள்ளது.

    • மாணவிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (22), இவர் சேலம் டவுன் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வீரமணி 16 வயதான பிளஸ்-1 மாணவியை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி வீட்டில் இருந்தவர்களிடம் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி விட்டு வெளியில் சென்றார். அப்போது அந்த மாணவியை வீரமணி தனது மோட்டார் சைக்கிளில் கொல்லி மலைக்கு சுற்றுலா அழைத்து சென்றார். அவருடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வீரமணியின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் கவியரசன் (20), அக்பர் (20) ஆகியோரும் சென்றனர்.

    பின்னர் அங்கு அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றி பார்த்தனர். தொடர்ந்து கொல்லி மலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து அந்த மாணவியுடன் வீரமணி தங்கினார். பின்னர் அந்த மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து வீட்டில் இறக்கி விட்டு சென்றார்.

    இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் வீரமணி தன்னை கொல்லிமலைக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதன் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் கலைவாணி மாணவியை கொல்லிமலைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பலாத்காரம் செய்த வீரமணி மற்றும் உடந்தையாக இருந்த கவியரசன், அக்பர் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். பின்னர் 3 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மாணவிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.
    • ஏற்காடு மஞ்சகுட்டை கிராமம் செல்லும் மலைப்பாதையில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் முழுவதும் சாரல் மழையாக நீடித்தது.

    குறிப்பாக சேலம் மாநகரில் நேற்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்த படி இருந்தது. இரவில் மழை குறைந்தது. குறிப்பாக மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான வீரகனூர், கரியகோவில் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வயல்வெளிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் விவசாய பயிர்களும் செழித்து வளரும் நிலையில், கால்நடைகளுக்கும் தேவையான தீவணங்கள் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மழையை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். நேற்று பெய்த தொடர் மழையை யொட்டி சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை முதல் இரவு முழுவதும் மழை பெய்தது.

    இந்நிலையில் இன்று காலை ஏற்காடு மஞ்சகுட்டை கிராமம் செல்லும் மலைப்பாதையில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தது.

    இதில் மின்கம்பம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் மின்சார கம்பிகளும் சாலையில் விழுந்தது. மரம் சாலையின் குறுக்கே கிடந்ததால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 32 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.

    சாலையில் விழுந்த மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காப்பி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில் 28 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 16.9, ஏற்காடு 5.8, வாழப்பாடி 11.2, ஆனைமடுவு 5, ஆத்தூர் 7.8, கெங்கவல்லி 12, தம்மம்பட்டி 13, ஏத்தாப்பூர் 8.கரியகோவில் 21, நத்தக்கரை 21, சங்ககிரி 1.4, எடப்பாடி 2.4, மேட்டூர் 5.2, ஓமலூர் 19, டேனீஸ்பேட்டை 6 மி.மீ. மாவட்டம் முழுவதும் 183.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
    • பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,018 மாணவர்களும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 1,077 மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.

    கருப்பூர்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.

    அவரை சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வரவேற்றனர். இதனையடுத்து பேண்டு வாத்தியம் முழங்க கவர்னர் ஆர்.என்.ரவி, ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களுடன் விழா மேடைக்கு வந்தார்.

    இதனையடுத்து நடந்த விழாவில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். இந்தநிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    விழாவில் முதன்மை விருந்தினராக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் க.ஜ.ஸ்ரீராம் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான ஆர்.என்.ரவி முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 288 பேருக்கு பட்டச் சான்றிதழை வழங்கினார். மேலும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுநிலை மற்றும் இளங்கலைப் பாடங்களில் முதலிடம் பிடித்த 107 மாணவ மாணவிகளுக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய பட்டச் சான்றிதழை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

    பெரியார் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழாவின் வாயிலாக, மேடையில் பட்டம் பெற்ற 397 மாணவர்களுடன் சேர்த்து சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 46,365 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 1,018 மாணவர்களும், பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பயின்ற 1,077 மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.

    பட்டமளிப்பு விழாவில் பதிவாளர் பெ.விஸ்வநாதமூர்த்தி, தேர்வாணையர் எஸ்.கதிரவன், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நீர்வரத்து இன்று காலை 16,196 கன அடியாக அதிகரித்துள்ளது.
    • இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்தது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது.

    இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.

    தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    அதுேபால் கர்நாடக-தமிழக எல்லையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15,531 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 16,196 கன அடியாக அதிகரித்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வந்தது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    அதுபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடியில் இருந்து நீர் திறப்பு 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 54.96 டி.எம்.சி. உள்ளது.

    ×