என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு- 21 ஏரிகள் முழுமையாக நிரம்பின
- சேலம் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 106 ஏரிகள் உள்ளன.
- 41 ஏரிகள் நீர்வரத்தின்றி குட்டை போல காட்சி அளிக்கிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது.
குறிப்பாக தம்மம்பட்டி, வீரகனூர், ஆனைமடுவு, ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 12 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 1.7, ஏற்காடு 7.4, வாழப்பாடி 1.4, ஆனைமடுவு 8, ஆத்தூர் 1.8, கரியகோவில் 5, வீரகனூர் 10, நத்தக்கரை 1, சங்ககிரி 6, மேட்டூர் 2.2, மி.மீ. என மாவட்டம் முழுவதும் 56.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் ஏற்கனவே தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழையும் தொடர்ந்து பெய்வதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 106 ஏரிகள் உள்ளன. இந்த ஏரியில் தேக்கப்படும் 1750 மில்லியன் கன அடி நீரை பயன்படுத்தி 22 ஆயிரத்து 56 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
நீர்வளத்துறையின் புள்ளி விவரப்படி 12 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாக நீர் இருப்பு உள்ளது. 9 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் மேலும், 6 ஏரிகள் 50 சதவீதத்திற்கும் மேலும் நிரம்பி உள்ளது. 17 ஏரிகளில் 75 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. 21 ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறும் நிலையில் உள்ளது. 41 ஏரிகள் நீர்வரத்தின்றி குட்டை போல காட்சி அளிக்கிறது.
இதில் சரபங்கா உட்கோட்டத்தில் உள்ள 37 ஏரிகளில் கன்னங்குறிச்சி புது ஏரி, வீராணம் ஏரி, காமலாபுரம் பெரிய ஏரி, சின்ன ஏரி, பூலாவாரி ஏரி, மானாத்தாள் ஏரி, டி.மாரமங்கலம் ஏரி, பேரியோரிப்பட்டி ஏரி, தாரமங்கலம் ஏரி, குளத்தாம்பட்டி ஏரி ஆகிய 10 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. இதே போல 8 ஏரிகள் 75 சதவீதமும், 3 ஏரிகள் 50 சதவீதமும், 6 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. 10 ஏரிகள் நீர்வரத்தின்றி குட்டை போல காட்சி அளிக்கின்றன.
சரபங்கா ஆத்தூர் உப கோட்டத்தில் மொத்தம் உள்ள 51 ஏரிகளில் அம்மாபாளையம் முட்டல் ஏரி, அபிநவம் எரி, ஜங்கமசமுத்திரம் ஏரி, செந்தாரப்பட்டி ஏரி, ஆத்தூர் புது ஏரி, புத்திரகவுண்டம்பாளையம் ஏரி, கல்லேரிப்பட்டி ஏரி, சின்னசமுத்திரம் ஏரி ஆகிய 8 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. 5 ஏரிகள் 75 சதவீதமும், 1 ஏரி 50 சதவீதமும் தண்ணீர் நிரம்பி உள்ளது. 28 ஏரிகள் நீர்வரத்தின்றி குட்டை போல காட்சி அளிக்கின்றன.
மேட்டூர் உப கோட்டத்தில் உள்ள 18 ஏரிகளில் 3 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. 4 ஏரிகள் 75 சதவீதமும், 2 ஏரிகள் 50 சதவீதமும், 2 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு கூடுதலாகவும், 4 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் கு றைவாகவும் நீர் இருப்பு உள்ளது. 3 ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு உள்ளன.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை நடப்பாண்டில் சராசரிக்கும் கூடுதலாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழைக்காலம் டிசம்பர் வரை நீடிக்கும் என்பதால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது.
ஆனால் தற்போது வரை நீர்வரத்து இல்லாத ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பும் வகையில் ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை விரைந்து தூர்வாரி ஏரிகள் நிரம்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்பது விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.






