என் மலர்tooltip icon

    சேலம்

    • ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.
    • மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடி தண்ணீர் இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டு மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடி தண்ணீர் இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மும்முரமாக மேற்கொள்ளப் பட்டது. தற்போது குறுவை சாகுபடி அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விடவில்லை. இதனால் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு (12-ந்தேதி வரை) தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட பிறகும் உரிய தண்ணீரை தரவில்லை.

    இதனால் மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்த பிறகும் அதை கர்நாடக அரசு ஏற்க மறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கூறி விட்டது.

    இதனிடையே பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து 800 கன அடிக்கும் குறைவாக அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 507 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பாசனத்திற்காக 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 45.01 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 44.06 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் குறைந்து 43.11 அடியானது.

    தற்போது அணையில் 13.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 5 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன் வளத்துக்கு பயன்படுத்தப்படும். நீர் திறப்பு ெதாடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 8 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து காய்ச்சல் சளித்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து காய்ச்சல் சளித்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் புதுச்சேரியில் நேற்று டெங்கு பாதிப்புக்கு 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இதை அடுத்து தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் டெங்கு காய்ச்சல் நல்ல தண்ணீரில் பரவும் என்பதால் தண்ணீரை மூடி வைத்து சுத்தமாக பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு சிறப்பு முகாம் நடத்தவும் அமைச்சர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

    அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு பாதித்தவர்கள் சிகிச்சை பெற படுக்கைகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதில் சிலருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு அதிக அளவில் இல்லை. இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 260 படுக்கைகள் நேற்று முதல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதித்தவர்களுக்கு அங்கு அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாவட்டம் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தண்ணீர் தேங்குவதை தடுக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • தமிழகம் முழுவதும் வாரந்தோறும் புதன்கிழமை களில் கிராம சுகாதார நர்சுகள் வாயிலாக கிரா மங்களுக்கே சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துப்படுகிறது.
    • குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மிஷன் இந்திரா தனுஷ் எனும் திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஒரு வார காலம் வீடு தேடி சென்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    வாழப்பாடி:

    தமிழகம் முழுவதும் வாரந்தோறும் புதன்கிழமை களில் கிராம சுகாதார நர்சுகள் வாயிலாக கிரா மங்களுக்கே சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துப்படுகிறது. இதில், பல்வேறு காரணங்களால் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மிஷன் இந்திரா தனுஷ் எனும் திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஒரு வார காலம் வீடு தேடி சென்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    இதனையடுத்து தற்போது கடந்த 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும், அக்டோபர் 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையிலும் இத்திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் இம்மாதத்திற்கான குழந்தை களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார்.

    சமுதாய சுகாதார நர்சு சிவகாமி திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.

    ஆத்தூர் சுகாதார மாவட்ட தாய்-சேய் நல அலுவலர் ரேவதி விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் ரமா பிரியா, பிரியதர்ஷினி, நர்சுகள் சுதா, தீபா, மருந்தா ளுனர் முருகபிரகாஷ் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக நர்சு சாந்தி நன்றி கூறினார்.

    • சேலம் மாவட்டம் பழைய பஸ் நிலையம் சிட்டு கோவில் தெரு, கல்லாங்குத்து மற்றும் சேலம் புதிய பஸ் நிலையம் வீரபாண்டியார் நகர் பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • ஆய்வின் போது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் எவரும் பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.

    சேலம்:

    சென்னை முதன்மை செயலாளரும் தொழிலாளர் ஆணையாளருமான அதுல் ஆனந்த் அறிவுரைக்கிணங்க கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி மற்றும் சேலம், தொழிலாளர் இணை ஆணையர் புனிதவதி ஆகியோரின் உத்தரவின்பேரில் சேலம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம) கிருஷ்ணவேணி தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் தொழிலாளர் துறை சார்ந்த தொழிலாளர் துணை ஆய்வாளர், 1ம் வட்டம், சேலம் மற்றும் சேலம் 1, 2, 3, 4, 5, 6ம் வட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், மேட்டூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் ஆத்தூர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகியோரால் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரினம் பருவத்தினர் (தடை செய்தல் மற்றும் ஒழுங்கு படுத்துதல்) சட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் பழைய பஸ் நிலையம் சிட்டு கோவில் தெரு, கல்லாங்குத்து மற்றும் சேலம் புதிய பஸ் நிலையம் வீரபாண்டியார் நகர் பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த கூட்டாய்வின்போது மின்னணு மற்றும் மின்சாதனப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பழுது பார்க்கும் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் வளரிளம் பருவத்தினர் தொடர்பாக கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் எவரும் பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.

    மேற்கண்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு நிறுவனத்திலும் பணியமர்த்த கூடாது என்றும் மற்றும் 14 வயதுக்கு மேல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்தவொரு பணியிலும் அமர்த்துவது குற்றமாகும் என்றும், அவ்வாறு பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களின் உரிமையாளர் மீது 6 மாத காலம் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டது.

    மேலும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 14 வயதுக்குட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமென்றும், குழந்தை தொழிலாளர்களை அனைத்து பணிகளிலும், வளரிளப் பருவத்தினரை அபாயகரமான பணிகளிலும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் www.pencil.gov.in இணையதளத்திலும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800 4252 650 மற்றும் 155214 ஆகிய எண்களிலும் புகார் அளிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பொ.கிருஷ்ணவேணி தெரிவித்தார்.

    • சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை 15-ந் தேதி முதல் 19 -ந் தேதி வரை பயணிகள் தேவைக்கேற்ப 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
    • பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்யும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    சேலம்:

    வார இறுதி நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை 15-ந் தேதி முதல் 19 -ந் தேதி வரை பயணிகள் தேவைக்கேற்ப 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி சேலம் புறநகர் பஸ் நிலையம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை திருப்பூர் திருவண்ணாமலை சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூர், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூர், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மற்றும் மதுரை, நாமக்கலில் இருந்து சென்னை, திருச்சியில் இருந்து ஓசூர், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு, ஓசூரில் இருந்து சேலம் புதுச்சேரி கடலூர், சேலத்தில் இருந்து சிதம்பரம் காஞ்சிபுரம், ஈரோட்டில் இருந்து பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பாதுகாப்பாக பயணம் செய்யும்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இது தவிர அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும் இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    • ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பஸ்சில் இருந்து இறங்கிய 5 பேரிடமும், பஸ் ஏறிய 7 பேரிடமும் ஒரே நேரத்தில் செல்போன்கள் திருட்டு நடந்துள்ளது. 3 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஓமலூர் பஸ் நிலையம் பல்வேறு பெரு நகரங்களின் இணைப்பு நகராக இருப்பதால் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஓமலூரில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் செல்வதற்காக பஸ் நிலையத்தில் மக்கள் பலரும் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த தனியார் பஸ்சில் இருந்து பலரும் இறங்கி ஏறினார்.

    கூட்டல் நெரிசல்

    இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் இருந்து இறங்கிய 5 பேரிடமும், பஸ் ஏறிய 7 பேரிடமும் ஒரே நேரத்தில் செல்போன்கள் திருட்டு நடந்துள்ளது. 3 பேர் கொண்ட கும்பல் இந்த திருட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதனிடையே செல்போன் திருடப்படு வதை உணர்ந்த ஒருவர் மட்டும் தன்னிடம் செல்போன் திருடிய ஒரு வாலிபரை விரட்டினார். மேலும் செல்போன் திருடிகொண்டு போகிறான் பிடியுங்கள் என்று கத்தியபடியே சென்றுள்ளார்.

    போலீசில் ஒப்படைப்பு

    இதைகேட்ட பஸ் பயணிகள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதற்குள் அந்த வாலிபர் திருடிய செல்போன்களை மற்ற 2 நபர்களிடம் கொடுத்துவிட்டதாக தெரிகிறது. அவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

    இதனிடையே பிடிபட்ட வாலிபரை ஓமலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அதன் பிறகு தான் தங்களது செல்போனை காணவில்லை என மொத்தம் 12 பேர் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிடிபட்ட வாலிபரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தப்பியோடிய 2 பேர் குறித்தும் விசாரணை நடத்திய போலீசார் அவர்களையும் தேடி வருகின்றனர்.A

    • கிருஷ்ணமூர்த்தி (40), பள்ளப்பட்டியை சேர்ந்தவர் பிரபு (29) இருவரும் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர்.
    • திருடி வந்த தங்க மோதிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை விற்ற பணத்தை பங்கு பிரித்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி களர்காட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (40), பள்ளப்பட்டியை சேர்ந்தவர் பிரபு (29) இருவரும் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர்.

    பங்கு

    இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நெல்லைக்கு வேலைக்கு சென்ற அவர்கள் அங்கு தங்க மோதிரம், வெள்ளி பொருட்களை திருடிவிட்டு சேலம் வந்தனர். இருவரும் நேற்று புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டு 5 ரோட்டில் உள்ள அர்த்தநாரி கவுண்டர் தெரு பகுதியில் உள்ள முட்புதரில் திருடி வந்த தங்க மோதிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை விற்ற பணத்தை பங்கு பிரித்தனர்.

    அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போதை தலைக்கேறிய நிலையில் பிரபு, கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்த பணத்தை கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை, பிரபு கட்டையால் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் பிரபுவை கைது செய்தனர். தொடர்ந்து பிரபு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    2 பேரும் பல்வேறு பகுதிகளுக்கு ஒன்றாக வேலைக்கு செல்வோம், இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருநெல்வேலிக்கு வேலைக்கு சென்றோம்.

    அங்கு ஒரு வீட்டில் வேலை செய்த போது திருடிய பொருட்களை சேலத்துக்கு கொண்டு வந்தோம் . அதனை விற்று சரியாக பங்கு தராததால் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டேன். இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து நான் கட்டையால் கிருஷ்ணமூர்த்தியை தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் இன்று சிறையில் அடைக்கிறார்கள்.

    • குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து 1320 மெ.டன் கிரிப்கோ யூரியா உர மூட்டைகள் ரெயில் மூலம் செவ்வாய்பேட்டை ரெயில்வே கூட்ஸ் செட்டிற்கு வரப்பெற்றது.
    • இந்த யூரியா சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

    சேலம்:

    குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து 1320 மெ.டன் கிரிப்கோ யூரியா உர மூட்டைகள் ரெயில் மூலம் செவ்வாய்பேட்டை ரெயில்வே கூட்ஸ் செட்டிற்கு வரப்பெற்றது.

    இந்த யூரியா சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 800 மெ.டன் யூரியா வழங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 1587 மெ.டன் யூரியாவும், பொட்டாஷ் 544 மெ.டன், டி.ஏ.பி உரம் 890 மெ.டன், காம்ப்ளக்ஸ் உரம் 1591 மெ.டன் ஆக மொத்தம் 4612 மெ.டன் உரம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தற்போது போதுமான அளவு இருப்பு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உரத்தினை பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • சேலம் ஊரக குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவி களுக்கான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
    • கிளேஸ் ஸ்புரூக்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் 2 நாட்கள் நடை பெற்றது.

    கருப்பூர்:

    தமிழ்நாடு அரசின் பள்ளி துறை சார்பில் சேலம் ஊரக குறுவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவி களுக்கான குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

    இதன் இறுதிப்போட்டி சேலம் அழகாபுரம் நகர மலை அடிவாரத்தில் உள்ள கிளேஸ் ஸ்புரூக்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் 2 நாட்கள் நடை பெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த

    900-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர்.

    அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஓட்டப்பந்தயம், தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் கோமதி ராணி, அனைவரையும் வரவேற்று மாணவர்கள் ஏற்றி வந்த ஜோதியை பெற்றுக் கொண்டார். கிளேஸ் ஸ்புரூக் மெட்ரிக் பள்ளி செயலாளர் பால சுப்பிரமணியம், தலைமை தாங்கினார்.

    பள்ளி தாளாளர் சுப்பிர மணியம், மாவட்ட விளை யாட்டு துறை ஆய்வாளர் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சுழல் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

    விழாவில் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • புதிய பஸ் நிலைய பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
    • இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பள்ளப்பட்டி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (70). இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.
    • கடந்த 3-ந் தேதி அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து அவர் வெளியே வந்தார். அப்போது திடீரென அவர் கால் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (70). இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். கடந்த 3-ந் தேதி அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து அவர் வெளியே வந்தார். அப்போது திடீரென அவர் கால் தவறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி ஜெயராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது.
    • பொது ஏலத்தில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் விற்பனையானது.

    எடப்பாடி:

    கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் விற்பனையானது. இதில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,525 முதல் ரூ.7,777 வரை விற்பனையானது. இதேபோல் இரண்டாம் ரக தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.4,300 முதல் ரூ.7,325 வரை விலை போனது. காங்கேயம், தாராபுரம், ஊத்துக்குளி, திருப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த வியாபாரிகள் தேங்காய் பருப்பினை அதிக அளவில் மொத்த கொள்முதல் செய்தனர்.

    ×