search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sold at Rs.800/kg"

    • நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
    • இதேபோல் பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைவீதி உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சேலம்:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பலர் வீட்டில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம்.

    அப்போது விநாயகருக்கு எருக்கம் பூ, அருகம்புல் மாலையிட்டு, சுண்டல், கொழுக்கட்டை, பொரி, தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை படைத்து வழிபடுவார்கள்.

    விநாயகர் சிலைகள்

    இதையொட்டி இன்று காலை முதலே சேலம் கடைவீதி, ஆற்றோரம் காய்கறி மார்க்கெட், பட்டைக்கோவில், ஆனந்தா காய்மார்க்கெட், சாலையோர கடைகள் மற்றும் அனைத்து உழவர் சந்தைகளிலும் எருக்கம் பூ மாலை, அருகம்புல், விநாயகர் சிலைகள் மீது வைக்கப்படும் அலங்கார குடைகள் மற்றும் தேங்காய், பழங்கள், பூக்கள் ஆகியவை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன.

    வீடுகளில் வைத்து வழிபடும் சிறிய விநாயகர் சிலை முதல் பெரிய அளவிலான, பல்வேறு வடிவ சிலைகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. சிலைகளின் அளவிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனால் இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் குவிந்து ஆர்வமுடன் சிலைகளை வாங்கி செல்கின்றனர். பெரிய அளவிலான சிலைகளை மினி டெம்போ உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி தங்கள் பகுதிகளில் வைத்து வழிபட கொண்டு சென்றனர்.

    பூஜை பொருட்கள்

    இதேபோல் பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைவீதி உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பூஜைக்கு தேவையான பொருட்களான வெற்றிலை, பாக்கு, இலை, மஞ்சள், குங்குமம், சந்தனம், கற்பூரம், அருகம்புல், விநாயகருக்கு உடுத்துவதற்கு பட்டு துணி, அலங்கார குடைகள் எருக்கம் பூ மாலை உள்ளிட்டவையும் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பிரசாதம் செய்வதற்கான பொருட்கள், பொரி, கடலை, வெல்லம் போன்ற பொருட்களை வாங்கவும் மார்க்கெட்டுகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

    இது மட்டுமின்றி பூக்கள், தேங்காய், வாழை தார் உள்ளிட்டவையும் வாங்கி வருகின்றனர். இதனால் அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்து உள்ளது.

    மல்லிகை கிலோ ரூ.1200

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் சாமந்தி, சம்மங்கி, ரோஜா, மல்லிகை, முல்லை, அரளி உள்ளிட்ட பூ வகைகள் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை சூடுபிடித்துள்ளது. இங்குமல்லிகை-ரூ.800, முல்லை-ரூ.500, ஜாதிமல்லி-ரூ.280, காக்கட்டான்-ரூ.360, கலர் காக்கட்டான்-ரூ.360, மலைக்காக்கட்டான்-ரூ.360, அரளி-ரூ.140, வெள்ளைஅரளி -ரூ.150, மஞ்சள் அரளி -ரூ.150, செவ்வரளி -ரூ.200, ஐ.செவ்வரளி -ரூ.150, நந்தியாவட்டம் -ரூ.150, சி.நந்தியாவட்டம் -ரூ.300, சம்மங்கி -ரூ.140, சாதா சம்மங்கி -ரூ.140-க்கு விற்கப்பட்டது.

    இதேபோல் ஆப்பிள்-ரூ.250, சாத்துக்குடி-ரூ.80, ஆரஞ்சு-ரூ.250, மாதுளை-ரூ.200, திராட்சை ரூ.100-க்கு விற்கப்பட்டது. இவை தவிர பேரிக்காய், கொய்யா சோளம் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

    ×