என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,244 கன அடியாக அதிகரிப்பு
- காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
- டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது.
சேலம்:
மேட்டூர் அணை தமிழகத்தின் பல மாவட்டங்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
மேட்டூர் அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா, குறுவை, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டு மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடி தண்ணீர் இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது.
தற்போது குறுவை பயிர் அறுவடை செய்யும் தருவாயில் உள்ளதால் கடந்த சில நாட்களாக அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய உரிய தண்ணீரை வழங்கவில்லை. சமீப காலமாக தமிழக எல்லையில் பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.
நேற்று காலையில் 2,047 கன அடியாக இருந்த நீர்வரத்து சற்று அதிகரித்து இன்று காலையில் 2,244 கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலையில் 41.76 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 41.05 அடியாக சரிந்தது. அணையில் 12.6 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும்.
நீர் திறப்பு தொடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 6 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும் என தெரிகிறது. இதனால் மேட்டூர் அணையை நம்பி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.






