என் மலர்
சேலம்
- நங்கவள்ளி அரசு நடுநிலை பள்ளி எதிரே ஒரு பேக்கரி உள்ளது. தனது மகள் வித்யாஸ்ரீ (2) பிறந்த நாளை கொண்டாட இந்த பேக்கிரியில் இருந்து கேக் வாங்கி சென்றுள்ளனர்.
- வீட்டிற்கு சென்று உறவினர்களுடன் கேக் வெட்டி அனைவரும் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் வித்யாஸ்ரீ (2) உட்பட 5 சிறுவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி அரசு நடுநிலை பள்ளி எதிரே ஒரு பேக்கரி உள்ளது. இந்த பேக்கரியில் பள்ளி மாணவ, மாணவிகள் நாள்தோறும் பல்வேறு தின்பண்டங்களை வாங்கி சுவைத்து செல்வர்.
பிறந்தநாள் கேக்
இந்த நிலையில் நேற்று இரவு நங்கவள்ளி கரட்டுபட்டியை சேர்ந்த சாந்தி என்பவர் தனது மகள் வித்யாஸ்ரீ (2) பிறந்த நாளை கொண்டாட இந்த பேக்கிரியில் இருந்து கேக் வாங்கி சென்றுள்ளனர்.
வீட்டிற்கு சென்று உறவினர்களுடன் கேக் வெட்டி அனைவரும் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் வித்யாஸ்ரீ (2) உட்பட 5 சிறுவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
முற்றுகை
இதனிடையே கேக்கை பரிசோதித்துப் பார்த்தபோது துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சம்பந்தபட்ட கடையை பாதிக்கப்பட்டவர்களின் ஊழியர்கள் முற்றுகையிட்டு கடை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
கடை உரிமையாளர்
மேலும் இது தொடர்பாக நங்கவள்ளி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பேக்கரி உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விரைந்து வந்து கடையில் சோதனை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக பேக்கரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நங்கவள்ளி வட்டாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கண்காணிப்பு இல்லாத காரணத்தால் பெரும்பாலான கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். எனவே இப்பகுதிகளில் தொடர் சோதனை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- வாழப்பாடி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்களுக்கு சான்றிதழ்களும், உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூரில் அயோத்தி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் வாழப்பாடி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரபாவதி, வீரபாண்டி களஞ்சியம் கூட்டமைப்பு நிர்வாகி சிவராணி, அயோத்தி பெண்கள் கூட்டமைப்பு முதன்மை செயல் அலுவலர் மேரிஸ்டெல்லா, வாழப்பாடி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் விஷ்ணுபிரியா ஆகியோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், பொருளாதார மேம்பட்டிற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்களுக்கு சான்றிதழ்களும், உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.
- 40 விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ், சிறுதானிய சாகுபடி முறை குறித்த பயிற்சி நடைபெற்றது.
- இப்பயிற்சிக்கு, வேளாண்மை அலுவலர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம் நெய்யமலை கிராமத்தைச் சேர்ந்த 40 விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் கீழ், சிறுதானிய சாகுபடி முறை குறித்த பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு, வேளாண்மை அலுவலர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பூச்சியியல்துறை இணை பேராசிரியர் சரவணன், வேளாண்மை உதவி அலுவலர் கார்த்திக், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோகிலப்பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா ஆகியோர் விவசாயிகளுக்கு, செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரக்கல் பேரூராட்சி 7-வது வார்டு சக்தி நகர் பகுதியில் 15-வது மானிய திட்டத்தின் கீழ் ரூ.11.30 லட்சம் செலவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு சுற்று சுவர் கட்டும் பணி மற்றும் 9-வது வார்டு சுப்பிரமணியநகர் பகுதியில் ரூ.1.73 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
இவ்விரு நிகழ்ச்சிகளையும் பேரூராட்சி தலைவர் தெய்வானைஸ்ரீ ரவிச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் பேரூராட்சி செயல் அலுவலர் மூவேந்தர பாண்டியன், துணை சேர்மன் வெங்கடேஷ், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலமுரளி, அர்த்தநாரீஸ்வரன், ரமேஷ்வரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
- ஏ.டி.எம். கார்டை பிடுங்கி அதில் இருந்து 35 ஆயிரம் பணத்தை திருநங்கை எடுத்து கொண்டார்.
- விசாரணை முடிவில் திருநங்கை கைது செய்யபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
சேலம்:
சென்னையில் இருந்து 45 வயதுடைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் நேற்றிரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் குடிபோதையில் இருந்த நிலையில் பஸ் நிலையத்தின் முன் பகுதியில் வந்த போது திருநங்கை ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்தார்.
தொடர்ந்து 2 பேரும் ஆட்டோவில் சேலம் 5 ரோடு பகுதிக்கு சென்றனர். பின்னர் திருநங்கை அந்த நபரிடம் பணம் கேட்டார். ஆனால் அந்த நபர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பிடுங்கி அதில் இருந்து 35 ஆயிரம் பணத்தை திருநங்கை எடுத்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் திருநங்கை கைது செய்யபடுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
- எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது.
- கர்நாடகத்தின் நிலையை ரஜினிகாந்த் எடுத்துக் கூற வேண்டும்.
பெங்களூரு:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த முழு அடைப்புக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட சங்கங்கள் ஆதரவு வழங்கியுள்ளன. இதனால் தலைநகர் பெங்களூரு மீண்டும் முடங்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள முதல்-மந்திரி சித்தராமையாவின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் கூறுகையில், 'எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது. இதை கண்டித்து 29-ந்தேதி (நாளை) கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்துகிறோம். கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்துகிறோம். நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரு வந்து செல்கிறார். அவா் இங்கு இருந்தபோது காவிரி நீர் குடித்துள்ளார். அதனால் அவர் காவிரி பிரச்சனையில், கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தின் நிலையை எடுத்துக் கூற வேண்டும். இல்லாவிட்டால் அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம்' என்றார்.
- மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தொடங்கும் முன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட அரசியில் கட்சியினர் போட்டி போட்டு மேடை மீது ஏறினர்.
- பா.ம.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன் லேசான காயத்துடன் தப்பினார்.
சேலம்:
சேலம் சித்தர்கோவில் அருகே உள்ள முருங்கப்பட்டியில் மக்கள் சந்திப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது.
இந்த முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற நல உதவிகள் வழங்க 2 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டது. கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்த விழாவில் எம்.பி. பார்த்திபன், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. ராஜமுத்து, டி.ஆர்.ஓ. மேனகா மற்றும் அதிகாரிகள் மேடையில் இருந்தனர்.
மக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வு தொடங்கும் முன் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் உள்பட அரசியில் கட்சியினர் போட்டி போட்டு மேடை மீது ஏறினர். இதில் பாரம் தாங்காமல் மேடை சரிந்தது. நிலைகுலைந்த கலெக்டர் கார்மேகம் மேடையில் அப்படியே அமர்ந்து விட்டார்.
பா.ம.க. ஒன்றிய செயலாளர் அறிவழகன் லேசான காயத்துடன் தப்பினார். மேடை 2 அடி உயரம் என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அந்த மேடையிலையே விழா நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் மேடை சரிவு எதிரொலியாக முருங்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கண்ணனை சஸ்பெண்டு செய்து சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிரநாதன் உத்தரவிட்டார்.
இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க சேலம் மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், கலெக்டர் உத்தரவு படி கண்ணனை சஸ்பெண்டு செய்தது ஏற்புடையது அல்ல, வருகிற 30-ந் தேதிக்குள் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யாவிட்டால் கலெக்டரை சந்தித்து முறையிடுவோம், அதன்பிறகும் இசைவு தெரிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
- மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- போலி லிங்குகளை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாரமங்கலத்துப் பட்டியை சேர்ந்தவர் 31 வயது வாலிபர், இவருக்கு கடந்த 12-ந்தேதி டெலிகிராம் மூலம் மர்ம நபர் அறிமுகமாகி பேசினார்.
அப்போது அவர் அனுப்பும் செயலியை பதிவிறக்கி விவரங்களை பூர்த்தி செய்தால் இரட்டிப்பு பணம் பெறலாம் என தெரிவித்தார். இதனை நம்பிய அந்த வாலிபர் தனது விவரங்களை தெரிவித்து ரூ.39.38 லட்சத்தை மர்ம நபர் பதிவிட்டு வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்தார்.
பணம் சென்றடைந்ததும் மர்ம நபரின் டெலிகிராம் வெப்சைட் லிங்க் அனைத்தும் முடக்கப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் குஜராத், அசாம் மாநிலங்களை சேர்ந்த மோசடி கும்பல்களின் வங்கி கணக்குகளுக்கு பணம் சென்றடைந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது போல போலி லிங்குகளை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பூசாரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊர்பொதுமக்கள் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாநகர நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் போலீஸ் ஏட்டு முருகனை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.
சேலம்:
தாரமங்கலம் அருகே ஓலைப்பட்டி காட்டுவளவு பரியம்பட்டி கிராமத்தில் முனியப்பன் கோவிலில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கோவில் பூசாரியாக ரமேஷ் (வயது 45) என்பவர் உள்ளார். கோவிலில் நடக்கும் பணிகள் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சேலம் மாநகர போலீஸ் துறையில் பணிபுரியும் போலீஸ் ஏட்டு முருகன் தரப்பினருக்கும், பூசாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் பூசாரி ரமேசை ஆயுதங்களால் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே பூசாரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊர்பொதுமக்கள் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் ஏட்டு முருகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மாநகர நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் போலீஸ் ஏட்டு முருகனை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.
- ரமேஷ் (45). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
- ஏட்டு முருகன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்த சாமி குடும்பத்தினர் ரமேஷை அரிவாளால் தலையில் வெட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மானத்தால் கிராமம் பரியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தனது உறவினர்களு டன் சேர்ந்து அதே பகுதியில் புதிதாக முனியப்பன் கோவில் கட்டியுள்ளனர். நேற்று இந்த கோவிலுக்கு மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது கோவிலுக்கு சென்ற ரமேஷ் சாமியை மறைக்காதவாறு பணியை செய்யும்படி கூறியுள்ளார். இது தொடர்பாக அங்கு நின்று கொண்டிருந்த கோவிந்தசாமி, அவரது மகனான ஏட்டு முருகன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்த சாமி குடும்பத்தினர் ரமேஷை அரிவாளால் தலையில் வெட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரமேஷை அருகில் இருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். இதுகுறித்து ரமேஷ் தார மங்கலம் போலீ சில் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தசாமி (70), ஏட்டு முருகன் (45), சதீஷ் (30), சூர்யா(22) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் உணவகத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவு சாப்பிட்ட சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.
- இதில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவு சாப்பிட்ட சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 15 உணவகங்களில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி திடீர் சோதனை மேற்கொண்டார். இதில் 5 உணவகங்களில் இருந்து காலாவதியான 16 கிலோ கோழி இறைச்சி, உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. 5 உணவக உரிமையாளர்களுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
- கடந்த 3 வாரங்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.
- ஓமலூரில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை அரை மணி நேரம் கன மழையாக கொட்டியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.
ஓமலூரில் கன மழை
குறிப்பாக ஓமலூரில் நேற்றிரவு 10 மணிக்கு தொடங்கிய மழை அரை மணி நேரம் கன மழையாக கொட்டியது. பின்னர் விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் 100-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. எடப்பாடி பெரிய ஏரி நிரம்பி உள்ள நிலையில் மற்ற ஏரிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. மேலும் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 11 மணியளவில் சாரல் மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பெய்த மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஓமலூரில் 19 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாநகரில் 3.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 22.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.






