என் மலர்tooltip icon

    சேலம்

    • கபடிப் போட்டியில் சேலம் நீலாம்பாள் சுப்பிரமணியம் பள்ளி அணியுடன் இறுதிப் போட்டியில் மோதிய வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.
    • மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் சேலம் நீலாம்பாள் சுப்பிரமணியம் பள்ளி அணியுடன் இறுதிப் போட்டியில் மோதிய வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றது.

    வெற்றி பெற்ற கபடி அணி வீரர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பழனி முருகன், ராமமூர்த்தி, சிறப்பு பயிற்றுனர் வெங்கடேஷ் ஆகியோருக்கு, வேளாண்மை ஆத்மா குழுத் தலைவர் சக்கரவர்த்தி, பள்ளி தலைமையாசிரியர் ரவீந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ், முருகேசன், குணாளன், கோபிநாத், ரமணி மற்றும் ஆசிரியர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    • கால நிலை மாற்ற இயக்கம் தொடர்பான கருத்தரங்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
    • கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு தொலைநோக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

    சேலம்:

    கால நிலை மாற்ற இயக்கம் தொடர்பான கருத்தரங்கு சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்ததாவது:-

    கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு தொலைநோக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இம்முயற்சிப் பாதையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.

    பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றதைக் குறைப்ப தற்கான திட்டங்களை வகுத்தல், பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரித்தல், பசுமையான ஆற்றல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டின் மூலம் உமிழ்வைக் குறைப்பதற்கான உத்திகளை மேம்படுத்துதல் ஆகியவை காலநிலை மாற்ற இயக்கத்தின் முக்கிய இலக்காகும்.

    12 லட்சம் மரகன்றுகள்

    வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 12 லட்சம் மரக்கன்றுகள் ஆண்டுதோறும் நடவேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தின் நிலப்பரப்பை 33 சதவிகிதம், அதாவது 3-ல் ஒரு பங்காக உயர்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக அளவில் பசுமை சார்ந்த ஆற்றல் இயக்கங்களை உருவாக்கிடவும், சூரிய சக்தி ஆற்றல், மரபுசாரா ஆற்றல் போன்றவற்றை உருவாக்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மின் உற்பத்தி

    சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகரிக்க சேலம் மாவட்டத்தில் 1,000 ஏக்கர் நிலம் கண்டறிந்து மின்சார வாரியத்திற்கு வழங்கிடும் வகையில் இதுவரை 238 ஏக்கர் நிலம் மின்சார வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள நிலங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. வீடுகள் மற்றும் கடைகள் தோறும் சூரிய சக்தி ஆற்றல் கொண்டு வரவும், சேலம் மாவட்டத்தினை பசுமை ஆற்றல் தயாரிக்கும் மாவட்டங்களில் முதன்மை யான மாவட்டமாக உருவாக்கிட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி, தமிழ்நாடு காலநிலை மாற்றப் பணி உதவி திட்ட இயக்குநர் மனிஷ் மீனா, உதவி வனப் பாதுகாப்பு அலுவலர் (பயிற்சி) மாதவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • இரும்பாலை வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் கேட் பகுதியில் வந்த போது திடீரென நிலை தடுமாறிய ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார்.
    • விபத்து குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெயக்குமார் (38).

    கடந்த 2010-ம் ஆண்டு மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரராக பணியில் சேர்ந்த ஜெயக்குமார் தொடர்ந்து சேலம் இரும்பாலையில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், 5 மாத ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று பணியில் இருந்த அவர் பணியை முடித்து விட்டு இரவு 9.50 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டார். இரும்பாலை வளாகத்தில் உள்ள நுழைவு வாயில் கேட் பகுதியில் வந்த போது திடீரென நிலை தடுமாறிய ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தார்.

    இதில் காயம் அடைந்த அவரை இரும்பாலை ஊழியர்கள் மீட்டு சேலம்-பெங்களூரு சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 3.50 மணிக்கு ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளது. அவரது உடலுக்கு இரும்பாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் இரும்பாலை ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    • அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீரை வழங்காததாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.

    இதையடுத்து கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரத்து 355 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை மேலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 46.67 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 714 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 10-ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்மட்டம் 46.67 அடியை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களில் அணையின் நீர்மட்டம் 16 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    தற்போது மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து இன்னும் சில நாட்களில் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் நாள் விரைவில் வரும்.
    • நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி.

    சேலம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கைக்கு கப்பல் பயணம் அறிவித்த அன்றே தெரியும், அந்த கப்பல் பயணிக்க போவதில்லை என்று. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இலங்கை ராணுவமே தமிழக மீனவர்கள் மீது சுடுகிறது, வலைகளை அறுத்து எறிகிறது. சொல்ல முடியாத சித்ரவதைகளை செய்து வருகிறது. இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் எதுவும் கண்டுகொள்வதில்லை.

    நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் நாள் விரைவில் வரும். அப்போது மீனவர்கள் மீது கை வைக்க சொல்லுங்கள் பார்ப்போம். ஏனென்றால் அவர்களுக்கே தெரியும், கொன்று விடுவார்கள் என பயம் ஏற்படும். கர்நாடகம் தண்ணீர் கொடுக்க மறுப்பதால் தி.மு.க. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட்டு கூட இல்லை என்று கூறி கூட்டணியை விட்டு விலக்கி இருக்க வேண்டும்.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி. அந்த பயத்திலேயே தி.மு.க. அரசு லியோ படத்திற்கு நெருக்கடி கொடுத்துள்ளது. மத்தியில் பா.ஜனதா கட்சி இருப்பதால் அண்ணாமலையின் பேச்சு மதிக்கப்படுகிறது. இல்லாவிடில் அவரது பேச்சு எடுபடாது. நாம் தமிழர் கட்சி மக்களுடன் தான் மிகப்பெரிய கூட்டணி வைத்துள்ளது. மக்களை நம்பி பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்.

    கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. அழைத்து பேசும்போது கூட, இரு கட்சிகளுக்கும் கொள்கை முடிவு வெவ்வேறாக இருப்பதால் முடியாது என்று கூறிவிட்டோம். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட மாட்டார். அப்படி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் களம் இறங்குவேன். அவரிடம் நிறைய கேள்விகள் கேட்பேன். ஓட்டுக்காக பணம் கொடுப்பதை ஒழிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி, குளம், வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் லட்சக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொழிலாளர்களுக்கு ஊதியம் கடந்த 3 மாத காலமாக அனுப்பி வைக்காததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    மகுடஞ்சாவடி:

    தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஏரி, குளம், வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் லட்சக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான ஊதியம் நேரடியாக பணியாளர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    3 மாதங்களாக...

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட கன்னந்தேரி, வைகுந்தம், ஆ.தாைழயூர், காளிகவுண்டம் பாளையம் உள்ளிட்ட ஊராட்சி களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதியம் கடந்த 3 மாத காலமாக அனுப்பி வைக்காததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று சம்பளம் வரும், நாளை சம்பளம் வரும் என்று காத்தி ருந்தபடி உணவு மற்றும் மருந்து, மாத்திரை கூட வாங்க பணமின்றி தவித்து வருகின்றனர்.

    இது குறித்து கன்னந்தேரி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

    எங்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இது குறித்து மேற்பார்வையாளரிடம் கேட்டபோது எங்களுக்கு எதுவும் தெரியாது. பஞ்சா யத்து தலைவரிடம் கேளுங்கள் என்கின்றனர். அங்கு சென்று கேட்டால் உங்களது வங்கி கணக்கிற்கு விரைவில் பணம் வந்து சேரும் என கூறுகிறார்கள். ஆனால் இதுவரையிலும் ஊதியம் வரவில்லை.

    இருப்பினும் நாங்கள் வயிற்று பசியோடு தொடர்ந்து ஏரி, குளங்கள், வாய்க்கால்களில் வேலை செய்து வருகிறோம். மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உடனே ஊதியம் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். இல்லையெனில் அரசு அலுவலகங்கள் முன்பு அரசு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டங்களில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பன்னீர் செல்வம். இவருக்கு ெசாந்தமான நிலத்தை கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 20 சென்ட் நிலத்தை வாடகைக்கு விட்டு இருந்தார்.
    • செல்வராஜ் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 30 பேரை தங்க வைத்து தனியார் நிறுவனம் நடத்தி வந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கனககிரி கிராமம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவருக்கு ெசாந்தமான நிலத்தை கோயமுத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு 20 சென்ட் நிலத்தை வாடகைக்கு விட்டு இருந்தார்.

    தொழிலாளர்கள்

    மேலும் அந்த இடத்தில் இரும்பு தகர செட் அமைத்து அதில் செல்வராஜ் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 30 பேரை தங்க வைத்து தனியார் நிறுவனம் நடத்தி வந்தார்.

    கொலை

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தகர செட்டின் முதல் அறையில் பீகார் மாநிலம் புல்வாரியா கிழக்கு பகுதியை சேர்ந்த முகமது நகரூதின் (31), பீகார் மாநிலம் நாராயணபுரம் சகோரியா பகுதியை சேர்ந்த ஜெயகுார்ஷ்தேவ், அமித்குமார் ஆகியோர் ஒன்றாக தங்கி இருந்தனர். அன்று இரவு அவர்களுக்குள் சாப்பாடு தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஜெயகுார்ஷ்தேவ் மற்றும் அமித்குமார் ஆகியோர் ஒன்று சேர்ந்து இரவு தூங்கும்போது முகமது நகரூதின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்தனர்.

    இது குறித்து அப்போதைய மகுடஞ்சாவடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி கொலை வழக்குப்பதிவு செய்து ஜெயகுார்ஷ்தேவ் மற்றும் அமித்குமார் ஆகியோரை மார்ச் மாதம் 3-ந்தேதி கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

    ஆயுள் தண்டனை

    இவ்வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம்-1-ல் விசா ரணை நடைபெற்று வந்தது. சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இன்று நீதிபதி

    ஜெகநாதன் தீர்ப்பு வழங்கினார். ஜெயகுார்ஷ்தேவ் மற்றும் அமித்குமார் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 -ம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி, இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    சூப்பிரண்டு பாராட்டு

    இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க விரைவாக செயல்பட்ட மகுடஞ்சாவடி போலீஸ் நிலைய தற்போதைய இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் பாராட்டினார்.

    • நேற்று காலை கோவிலில் மேள, தாளங்கள் முழங்க புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • இதையொட்டி நடந்த சிறப்பு பூைஜகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதை யொட்டி கடந்த 2-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    புதிய கொடி மரம் நடுதல்

    நேற்று காலை கோவிலில் மேள, தாளங்கள் முழங்க புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு பூைஜகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

    கணபதி வழிபாடு

    இன்று (19-ந் தேதி) மாலை 6 மணி மணிக்கு மேல் மங்கள இசை, கணபதி வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. தொடர்ந்து சங்கல்பம், புண்யாகவாசனம், பஞ்ச கவ்யம், கிராம சாந்தி, அஷ்டபலி வழிபாடு, பிரவேச பலி வழிபாடு நடக்கிறது.

    24-ந் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் கணபதி வழிபாடு, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகையை ஊர்வலமாக அழைத்து வருதல் நடக்கிறது. இரவு 830 மணிக்கு வாஸ்து சாந்தி, திசா ஹோமம், காப்பு கட்டுதல் நடக்கிறது.

    முதற்கால யாக பூஜை

    25-ந் தேதி காலை 8 முதல் 11.30 வரை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், அக்னி சங்கரணம், 4 முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, 6 மணி முதல் 10 மணி வரை முதற்கால யாக பூஜை, 26-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜை, 11 மணி முதல் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்துதல், 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா

    27-ந் தேதி அதிகாலை 4.30 முதல் 7.30 வரை 4-ம் கால யாக பூஜை, 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம், 8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அதிகாரி அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் செய்து வருகிறார்கள். 

    • பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அரியா கவுண்டர் தலைமையில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பால் கொள்முதல் விலையை அரசு ஒரு ரூபாய் உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் தளவாய்பட்டி பால் பண்ணை அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அரியா கவுண்டர் தலைமையில் கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் பால் கொள்முதல் விலையை அரசு ஒரு ரூபாய் உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக பசும்பால் விலையை லிட்டருக்கு 45 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், எருமை பால் விலையை லிட்டருக்கு 54 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், 50 சதவீத மானிய விலையில் மாட்டு தீவனங்களை வழங்க வேண்டும்,

    கட்டுப்பாடு இல்லாமல் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் 100-க்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.

    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • ஊர்வலத்தை கலெக்டர் கார்மேகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் கார்மேகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசு நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தவும், நீர் மேலாண்மைக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் மழைநீரை வீணாக்காமல் அவர்களுடைய இல்லங்களில் சேகரிக்க வேண்டும்.

    பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்னதாக தங்கள் வீடுகளில் உள்ள மொட்டை மாடியை சுத்தப்படுத்த வேண்டும். மழைநீர் வடிக்குழாய்களில் அடைப்பு மற்றும் துவாரங்களை சரி செய்வதுடன், வடிகட்டும் தொட்டிகளில் உள்ள கூழாங்கல் மற்றும் கருங்கல் ஜல்லிகளை சுத்தம் செய்து மீண்டும் நிரப்ப வேண்டும்.

    வருகிற 22-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நன்றாக பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    துண்டு பிரசுரங்கள்

    மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான குறும்படத்தினை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்து பார்த்தார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்வராஜ், துணை மேற்பார்வை பொறியாளர் ஜெயகொடி, துணை நிலநீர் வல்லுனர் கல்யாணசுந்தரம், உதவி நிர்வாக பொறியாளர் கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழனிசாமி (வயது 48). இவர் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறார்.
    • அவர் இருந்த அறையில் தனது சட்டையை கழற்றி அங்குள்ள கம்பியில் கட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48). இவர் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பழனிசாமி அவர் இருந்த அறையில் தனது சட்டையை கழற்றி அங்குள்ள கம்பியில் கட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட சிறை வார்டன்கள் அவரை மீட்டு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் விசாரணை நடத்தினார். அதில், பழனிசாமி மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மணி(55). இவர் நேற்று தனது இருச்சர வாகனத்தில் ஏற்காட்டிற்கு வந்து விட்டு மீண்டும் சேலம் நோக்கி திரும்பி கொண்டிருந்தார்.
    • ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாளம் அருகில் வந்த போது இருச்சர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த 60 அடி பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி(55). இவர் நேற்று தனது இருச்சர வாகனத்தில் ஏற்காட்டிற்கு வந்து விட்டு மீண்டும் சேலம் நோக்கி திரும்பி கொண்டிருந்தார்.

    ஏற்காடு மலைப்பாதையின் 60 அடி பாளம் அருகில் வந்த போது இருச்சர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த 60 அடி பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் ஏற்காடு போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் அவரை 60அடி பள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளத்தில் விழுந்ததில் மணியின் காலில் முறிவு ஏற்பட்டது. மேலும் தலை மற்றும் முதுகு பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இவ்விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×