என் மலர்tooltip icon

    சேலம்

    • குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, பொய்யர் பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளார்.
    • எங்களை பற்றி அதிகளவில் விமர்சனம் செய்து வருகிறார்.

    சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "என்னை பற்றி பல்வேறு விமர்சனம் செய்துள்ளார்கள். அதில் ஒருசிலவற்றை குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கூட்டத்தின் நோக்கம், அந்த கட்சி சம்பந்தப்பட்டது. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால், அந்த கூட்டத்தில் என்னைப் பற்றி அதிக நேரம் பேசியுள்ளார்."

    "குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, பொய்யர் பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளார். நான் இதுவரை ஊடகத்திலோ, பத்திரிகையிலோ பொய் செய்தி வெளியிட்டதில்லை. எனது அறிக்கையிலோ அல்லது ஊடகத்தில் பேட்டி அளிக்கும் போதோ, பொய்யான செய்தியை நான் எப்போதும் கொடுத்ததில்லை. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு, திரு ஸ்டாலின் அவர்கள் என்னை பற்றி தவறான விமர்சனம் செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது."

    "இதோடு, இரண்டறை ஆண்டு திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக் கொண்டு தி.மு.க. ஆட்சியில் மக்கள் கொதித்துப்போய், வெறுத்துப் போய் இருக்கின்றார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், பயத்தில் என்னைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார் என்றுதான் நான் பார்க்கிறேன். அதுமட்டுமல்லாமல், நாங்கள் பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணியில் இருந்து விலகிவிட்ட பிறகு, எங்களை பற்றி அதிகளவில் விமர்சனம் செய்து வருகிறார்."

    "ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பது, விலகுவது அந்த கட்சியை பொருத்தது. எங்களை பொருத்தவரை நாங்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம். விலகிவிட்ட காரணத்தினால் தி.மு.க. தலைவர் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு மற்றும் அறிக்கையில் இருந்து இதனை புரிந்து கொள்ள முடிகிறது."

    "தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சிறுபான்மையினருக்கு நன்மை செய்வது போன்று தோற்றத்தை ஏற்படுத்தி வந்தார்கள். நாங்கள் கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வை சேர்ந்த என்னையும், தலைமை கழக நிர்வாகிகளை சந்திப்பதை அவரால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் தான் இதுபோன்ற வெறுப்பு பேச்சு வந்து கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்."

    "அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு முடிக்கும் தருவாயில் இருந்த போது தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு முதல்வர் ஆன மு.க. ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, முடிக்கப்பட்ட திட்டங்களைத் தான் திறந்து வைத்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியின் போது ஒரே ஆண்டில் மட்டும் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன."

    "இந்த மருத்துவ கல்லூரிகளின் பணிகள் 70 சதவீதம் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு, மீதமுள்ள பணிகளை முடித்துவைத்து, அந்த கட்டிடங்களை தான் அவர் திறந்து வைத்துள்ளார். இதே போன்று, பல்வேறு பாலங்களுக்கான பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டன. அவற்றையும் திரு. ஸ்டாலின் தான் திறந்து வைத்தார்," என்று தெரிவித்தார்.

    • அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புதுஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா காலேஜ் ரோடு, செட்டிசாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்தினி தெரிவித்துள்ளார்.  

    • தெற்கு கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணி மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை மேற்பார்வைப் பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயன் பெறுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் தெற்கு கோட்டம் மின் செயற்பொறியாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மின் பகிர்மான தெற்கு வட்டம் செயற்பொறியாளர் தலைமையில் நாளை 25-ந் தேதி (புதன்கிழமை) வள்ளுவர் நகர், ஸ்டேட் பாங்க் எதிரில், அன்னதானப்பட்டியில் உள்ள தெற்கு கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணி மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை மேற்பார்வைப் பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயன் பெறுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • பெரிய புதூர் பாறை வட்டம் பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதியில் சாக்கடை வசதி உட்பட அடிப்படை வசதி கேட்டு அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட பெரிய புதூர் பாறை வட்டம் பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சாக்கடை வசதி உட்பட அடிப்படை வசதி கேட்டு அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனாலும் அவர்களது கோரிக்கை இது வரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் 100-க்கு மேற்பட்டோர் சாரதா கல்லூரி சாலையில் திரண்டனர். பின்னர் மறியலுக்கு முயன்றனர். தகவல் அறிந்த அருள் எம்.எல்.ஏ. அங்கு விரைந்து சென்றார். பின்னர் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டார். தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். தொடர்ந்து அருள் எம்.எல்.ஏ. பாறைவட்டம் பகுதியில் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாரதா கல்லூரி அருகில் இருந்து பாறை வட்டம் பகுதி வரை ரூ.3.80 கோடியில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் தேங்கி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் மறியலுக்கு முயன்று உள்ளனர்.

    மேலும் 3 மாதத்தில் மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளனர். அப்படி அமைத்து தராவிட்டால் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே அங்கு வந்த அஸ்தம்பட்டி மண்டல தலைவர் உமா ராணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.

    • அம்சாரம்மன் சமேத வேடியப்பன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.
    • இவ்விழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி (புதன்கிழமை) காலை மகாகும்பாபிேஷக முகூர்த்தகால் நடுதல், கங்கனம் கட்டுதல், முளைப்பாரி போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் உடையாப்பட்டி குபேர கணபதி, சப்த கன்னிமார்கள், திரவுபதி அம்மன், சப்த முனியப்பன்கள், அம்சாரம்மன் சமேத வேடியப்பன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

    இவ்விழாவை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி (புதன்கிழமை) காஅம்சாரம்மன் சமேத வேடியப்பன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.லை மகாகும்பாபிேஷக முகூர்த்தகால் நடுதல், கங்கனம் கட்டுதல், முளைப்பாரி போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தீர்த்தக்குடம்

    வருகிற 26-ந்தேதி காலை 8 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, தீபாராதனை, 10 மணிக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து அழைத்து வருதல், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி, மாலை 6.30 மணிக்கு கலாகர்ஷனம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள், இரவு 8.30 உபசார பூஜை, 9.30 பஞ்சலோகம், நவரத்தினம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதையடுத்து 27-ந்தேதி காலை 6 மணிக்கு உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து பால் குடம் எடுத்து அழைத்து வருதல், 7 மணிக்கு மங்கள இசை, 2-ம் கால யாக பூஜைகள், வேதபாராயணம், மூலமந்திர ஹோமங்கள், 8 மணிக்கு ஸ்பர்சஹூதி, நாடி சந்தனம், திரவியாஹூதி, காலை 9 மணிக்கு பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, உபசார பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    கும்பாபிஷேகம்

    இதையடுத்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனூர் லக்னத்தில் யாத்ராதானம், கடம் புறப்பாடு, வேடியப்பன் சாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்திற்கும் மகாகும்பாபிஷேகம் எனும் நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது.

    காலை 10.30 மணிக்கு மேல் மகா அபிஷேகம், அலங்காரம், கோ பூைஜ, மகா நெய்வேத்தியம், மகா தீபாராதனை ஆசீர்வாதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. காலை 10.45 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இவ்விழாவில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள், குல பங்காளிகள் தங்கள் குடும்பத்தாருடன் பெருந்திர ளாக பங்கேற்று வேடியப்பன் சாமியின் அருளை பெறுமாறு வேடியப்பன் அம்சாரம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் குலவழி மக்கள், பங்காளிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது.
    • கோவில் கும்பாபி ஷேக விழா வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி கோவில் வளாகத்தில் யாகசாலைக்கு முகூர்த்த கால் நடப்பட்டது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வழிபட்டு செல்கிறார்கள்.

    கும்பாபிேஷக விழா

    இந்த கோவில் கும்பாபி ஷேக விழா வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 2-ந் தேதி கோவில் வளாகத்தில் யாகசாலைக்கு முகூர்த்த கால் நடப்பட்டது. நாளை (25-ந் தேதி) முதல் யாகசாலை பூஜை தொடங்குகிறது. தற்போது இறுதி கட்ட யாக சாலை பூைஜ பணிகள் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது-

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 60 அடி நீளம், 60 அடி அகலத்தில் பஞ்சாசன வேதிகை அமைத்து நவ குண்டத்துடன் அரண்மனை யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் கோட்டை மாரியம்மனுக்கு 9 யாக குண்டம், விநாயகருக்கு 5 யாககுண்டம் , வெள்ளையம்மன், பொம்மியம்மாள், மதுரை வீரன் ஆகிய சுவாமிகளுக்கு ஓட்டு மொத்தமாக 1 யாக குண்டம், துர்க்கை அம்மன், வைஷ்ணவி, மகேஸ்வரி உள்பட பரிவார மூர்த்திகளுக்கு ஒட்டு மொத்தமாக 1 யாக குண்டம், கோபுரத்திற்கு 5 யாக குண்டம், தங்கத்தேருக்கு தலா 1 யாக குண்டம் என மொத்தம் 23 யாக குண்டம் அமைக்கப்பட்டுள்ளது.

    ராஜகோபுரத்திற்கு 7 கலசம், மூலஸ்தான விமானம் 5 , விநாயகர் சன்னதி விமானம் 3, மதுரை வீரன் சன்னதி விமானம் 1 என ெமாத்தம் 16 கலசங்கள் வைக்கப்பட உள்ளது.யாகசாலை பூைஜக்கு சேலம், கோவை, தஞ்சை, கடலூர் உள்பட மாவட்டங்களில் இருந்து சிவாச்சாரியார்கள், தமிழ் ஓதுவார்கள் என மொத்தம் 45 பேர் பங்கேற்கிறார்கள். யாகத்திற்காக 108 வகையான மூலிகைகள், நெய் பழங்கள் பயன்படுத்தப்படும், கும்பாபிஷேகத்திற்கு பின் 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும்.

    விநாயகர் வழிபாடு

    இன்று கணபதி வழிபாடு தொடங்கியது. தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகையை யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்களும் புனித நீர் கலசம், முளைப்பாலிகையை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி, திசா ஹோமம், காப்பு கட்டுதல் நடக்கிறது.

    முதற்கால யாக பூஜை

    நாளை (25-ந் தேதி) காலை 8 முதல் 11.30 வரை விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகம், அக்னி சங்கரணம், 4 முதல் 5 மணி வரை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு, 6 மணி முதல் 10 மணி வரை முதற்கால யாக பூஜை நடக்கிறது.

    26-ந் தேதி காலை 8 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜை, 11 மணி முதல் 1 மணி வரை ராஜகோபுரம் மற்றும் விமானங்களில் கலசம் பொருத்துதல், 3.15 மணி முதல் 5.30 மணி வரை மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல், 6 மணி முதல் 10 மணி வரை 3-ம் கால யாக பூஜை நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா

    27-ந் தேதி அதிகாலை 4.30 முதல் 7.30 வரை 4-ம் கால யாக பூஜை, 7.40 முதல் 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னதி விமானம் மற்றும் கொடி மரத்திற்கு சம காலத்தில் மகாகும்பாபிஷேகம், 8.30 மணி முதல் 9.30 மணி வரை மகா கணபதி, கோட்டை பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் மூலவர் சுவாமிக்கு மகா அபிேஷகம், ராஜ அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதான பிரசாத வினியோகம், மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேர் புறப்படுதலும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அதிகாரி அமுதசுரபி, அறங்காவலர்கள் ஜெய், ரமேஷ்பாபு, வினிதா, சுரேஷ்குமார் உள்பட பலர் செய்து வருகிறார்கள்.

    • கல்லூரியில் சேர்த்து விட்டதற்காக மணிகண்டனிடம் கமிசன் தொகையாக ரூ.3,500-யை கேட்டு ஜெயசூர்யா தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • சாலையில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த ஜெயசூர்யா மற்றும் அவரது நண்பர் பிரேம் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கோணகப்பாடி கிராமம். அத்திக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ் (19) இவருடைய நண்பர் மணிகண்டன் (19)என்பவரை நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்க அத்திகட்டானூர் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் உதவி செய்ததாக கூறப்படுகிறது.

    கல்லூரியில் சேர்த்து விட்டதற்காக மணிகண்டனிடம் கமிசன் தொகையாக ரூ.3,500-யை கேட்டு ஜெயசூர்யா தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கமிஷன் தொகையை கொடுக்காமல் காலதாமதம் படுத்தி வந்த மணிகண்டனை நேற்று அத்திக்கட்டானூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த ஜெயசூர்யா மற்றும் அவரது நண்பர் பிரேம் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

    அப்போது சிவப்பிரகாஷ் என்பவர் மணிகண்டனுக்கு ஆதரவாக பேசியபோது அவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த சிவப்பிரகாஷ் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் ஜெயசூர்யா,பிரேம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 1 மாத காலமாக சரியாக மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் குப்ப கவுண்டன் வளவு பகுதியை சேர்ந்தவர் பெரமச்சி இவருடைய மனைவி குள்ளம்மாள் (80) இவர் கடந்த 5 வருடமாக ஆஸ்துமா மற்றும் டிபி நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 1 மாத காலமாக சரியாக மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய மகன் கந்தசாமி மற்றும் உறவினர்கள் குள்ளம்மாளை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    • நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில் தொடங்கப்படும் காரியம் வெற்றி கரமாக அமையும் என்பதால் அன்று குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
    • அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசும், தனியார் பள்ளிகளும் தீவிரம் காட்டி வருகிறது.

    சேலம்:

    நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில் தொடங்கப்படும் காரியம் வெற்றி கரமாக அமையும் என்பதால் அன்று குழந்தைகளுக்கு கல்வியை தொடங்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசும், தனியார் பள்ளிகளும் தீவிரம் காட்டி வருகிறது .

    அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள 800-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டிருந்தது. பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். தொடர்ந்து காலை முதலே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. ஆர்வத்துடன் மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். இதே போல தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.

    மாணவர்களுக்கு கையை பிடித்து வித்யாரம்பம் நிகழ்ச்சியுடன் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக நடந்தது. அரசு பள்ளிகளில் கல்வி துறை அதிகாரிகள், தனியார் பள்ளிகளில் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்காணித்து வருகிறார்கள். 

    • இளங்கோவன் 48, இவர் மேட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
    • இரவு 10 மணியளவில் அரசு பஸ்சில் வீட்டிற்கு திரும்பினார். பஸ் மேச்சேரி அருகே வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரியை சேர்ந்தவர் இளங்கோவன் 48, இவர் மேட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று அந்த நிறுவனத்திற்கு சென்ற அவர் இரவு 10 மணியளவில் அரசு பஸ்சில் வீட்டிற்கு திரும்பினார். பஸ் மேச்சேரி அருகே வந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த சக பயணிகள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிேலயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
    • அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

    சேலம்:

    சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களைத் தவிர்த்து, வெடிபொருள் சட்டமும் விதிகளும், 1884 மற்றும் வெடிபொருள் சட்டம் 2008–ன் கீழ் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

    தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் வழிபாடு நடத்தினர்.
    • நிறுவன உரியைாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுக்கும் மாலையிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வணங்கினர்.

    சேலம்:

    ஆயுத பூஜை விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    ஆயுத பூஜை விழா

    இதையொட்டி வீடுகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் வழிபாடு நடத்தினர். மேலும் நிறுவன உரியைாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுக்கும் மாலையிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வணங்கினர்.

    இதையொட்டி கடந்த 21 மற்றும் 22-ந் தேதிகளில் பூஜைக்கு தேவையான பழங்கள், காய்கறிகள், சுண்டல், பொரி, அவல், கடலை, சுண்டல், பூக்கள் விற்பனை அதிக அளவில் ந டந்தது. மேலும் வீடுகள், தொழில் நிறுவனங்களில் கட்டப்படும் வாழைக்கன்றுகள், வெண் பூசணிக்காய்களும் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

    இதனை பொது மக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர். வாழைக்கன்றுகளை வீடுகள், நிறுவனங்களிலும் அதிக அளவில் கட்டியிருந்தனர். மேலும் மீதம் உள்ள வழைக்கன்றுகள், சேதம் அடைந்த காய்கறிகள், பூக்களையும் வியாபாரிகள் சாலையோரம் விட்டு சென்றனர். இதனால் சந்தைகள் உள்பட பல பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடந்தன.

    இதே போல திருஷ்டி சுற்றிய வெண் பூசனிக்காய்களையும் பொதுமக்கள் சாலைகள் மற்றும் தெருக்களில் போட்டு உடைத்தனர். மேலும் வீடுகளை சுத்தப்படுத்தி தேவையில்லாத பொருட்களையும் தெருக்களில் தூக்கி போட்டனர். இதனால் சேலம் மாநகரில் கடை வீதிகள், மார்க்கெட்கள், சாலையோர கடைகள், குடியிருப்புகள் என அனைத்து மண்டலங்களிலும் குப்பைகள் மலை போல தேங்கி குவிந்து கிடந்தன.

    1300 டன் குப்பைகள்

    இந்த குப்பைகளை மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் வாக னங்க ளில் ஏற்றி அப்புறப்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் 1300 டன் குப்பைகள் மாநகரில் தேங்கி இருந்ததாகவும் தற்போது அந்த குப்பைகள் வேகமாக அகற்றப்பட்டு வருவதாகவும் இன்று மாலைக்குள் அனைத்து குப்பகைளும் அகற்றப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×