என் மலர்
சேலம்
- இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் விறு விறுப்பாக நடைபெறும்.
- ஆயுதப் பூஜையையொட்டி வீடு மற்றும் கடைகள் சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்தனர்.
சேலம்:
சேலம் 4 ரோடு, குகை, தாதகாப்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் விறு விறுப்பாக நடைபெறும். இந்த நிலையில் ஆயுதப் பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்படும். ஆயுதப் பூஜையையொட்டி வீடு மற்றும் கடைகள் சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்தனர்.
சேலம் சூரமங்கலம் மீன் மார்க்கெட்டில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இன்று காலை முதலே இங்கு மக்கள் கூட்டம் இன்றி மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.
- ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம்.
- அதன்படி சேலம் கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
சேலம்:
ஆயுத பூஜை பண்டிகை நாளை (திங்கட்கிழமை) மற்றும் விஜயதசமி நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை நாளில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பட்டறைகள் என அனைத்து இடங்களிலும் பூஜை செய்வது வழக்கம். மேலும், வீடுகளிலும் பூஜை செய்து கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களுக்கு திருஷ்டி சுற்றி சாம்பல் பூசணி உடைப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
பூஜை பொருட்கள் விற்பனை
அதன்படி சேலம் கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் பூஜைக்கு தேவையான பழங்கள், தேங்காய், இலை, விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம், விளக்கு எண்ணெய், அலங்கார தோரணங்கள், பொரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை, கடலை உருண்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி சென்றனர்.
இதனால் பூஜை பொருட்களின் வியாபாரம் மும்முரமாக நடந்தது. சின்னக்கடை வீதியில் ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் அதிகளவில வாங்கி சென்றனர்.
சேலம் மாநகரில் செவ்வாய்ப்பேட்டை, பால் மார்க்கெட், கடைவீதி, அம்மாபேட்டை, பட்டைக்கோவில், வ.உ.சி மார்க்கெட், ஆனந்தா இறக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாம்பல் பூசணி விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. ஒரு கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பல் பூசணியை பொதுமக்கள் பலர் வாங்கி சென்றனர்.
இதேபோல், பால் மார்க்கெட் பகுதியிலும் பொரி விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு பக்கா பொரி ரூ.15-க்கும், 7½ கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.550-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பொட்டுக்கடலை ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120-க்கும், நிலக்கடலை ரூ.150-க்கும், அவுல் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும், குரங்குச்சாவடி, அஸ்தம்பட்டி, செரிரோடு உள்பட பல்வேறு இடங்களிலும், சாலையோரத்திலும் தற்காலிக பொரி, பூசணி உள்ளிட்ட கடைகளை சிலர் வைத்து வியாபாரம் செய்தனர். மேலும், சேலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளிலும் பூக்கள், வாழைக்கன்று, மாவிலை உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை ஜொராக நடந்தது. இதுகுறித்து செவ்வாய்பேட்டையை சேர்ந்த பழ வியாபாரி ஆறுமுகம் கூறுகையில், ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை. ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150க்கும், மாதுளை கிலோ ரூ.150 முதல் ரூ.250 வரையும், திராட்சை கிலோ ரூ.100-க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.80-க்கும், கமலா ஆரஞ்சு கிலோ ரூ.80-க்கும், கொய்யாப்பழம் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆயுத பூஜையை முன்னிட்டு வழக்கத்தைவிட பழங்கள் விற்பனை கூடுதலாக நடந்தது.
ரூ.700 ஆக உயர்வு
இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் மற்றும் ஈரடுக்கு பஸ் நிலையம் யொட்டி உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு கிலோ குண்டு மல்லிகை பூ கிலோ ரூ.700 ஆக உயர்ந்துள்ளது.
சன்ன மல்லிகை ரூ.800-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், ஜாதி மல்லிகை கிலோ ரூ.280-க்கும், சாமந்தி கிலோ ரூ.120 முதல் 200-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், பட்டன் ரோஸ் ரூ.100-க்கும், அரளி பூக்கள் ரூ. 300 முதல் ரூ. 500 வரை விற்பனை ஆகிறது.
இது குறித்து சேலத்தை சேர்ந்த பூ வியாபாரி செந்தில்குமார் கூறியதாவது:-
இந்த மார்க்கெட்டுக்கு பூசாரிப்பட்டி, அரியனூர், சீரகாபாடி, ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, கடத்தூர், பொம்மிடி ஆகிய பகுதியில் இருந்து விற்பனைக்கு விவசாயிகள் சாமந்தி பூக்கள் கொண்டு வருகின்றனர். பட்டர் ரோஸ் பெங்களூருவில் இருந்து வருகிறது. அரளிப்பூக்கள் பனமரத்துப்பட்டி, திருமனூர் வேப்பிலைப்பட்டி, வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மல்லிகை பூ மல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், குண்டுமல்லி பனமரத்துப்பட்டி பகுதியில் இருந்தும் முல்லை பூக்கள், கன்னங்குறிச்சி, வீராணம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பூக்களை விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்கள் விலை உயரும். அதேபோல் ஆயுத பூஜையை முன்னிட்டு வ.உ.சி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் ஊராட்சியில் உள்ள பங்களா கார்டு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்.
- கணவன் -மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் ஊராட்சியில் உள்ள பங்களா கார்டு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு திருமணமாகி கவுசல்யா என்ற மனைவியும், 10 வயதில் ஸ்ரீ ரமேஷ், 7 வயதில் தீபக்குமார் ஆகிய மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
மாணிக்கம் கல் உடைக்கும் தொழில் செய்து வருகின்றார். மனைவி கவுசல்யா ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்.
குடும்ப தகராறு
இந்த நிலையில் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு கவுசல்யா அருகில் உள்ள ஜோசியர் என்பவருடைய தோட்டத்திற்கு சென்றார். அங்குள்ள விவசாய கிணற்றில் கவுசல்யா தனது 2 மகன்களையும் திடீரென \தள்ளி விட்டு தானும் கிணற்றில் குதித்தார். இதில் இளைய மகன் தீபக்குமார் கிணற்றிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கிணற்றில் குதித்து தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
சிகிச்சைக்காக கவுசல்யாவை ஓமலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ரமேஷ் சிறிய காயங்களுடன் நலமாக உள்ளார்.
உருக்கமான தகவல்
இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதி இடையே குடும்ப தகராறு ஏன் ஏற்பட்டது? என விசாரணை நடத்தியதில் போலீசாருக்கு உருக்கமான தகவல் கிடைத்துள்ளது.
கவுசல்யாவின் கணவர் மாணிக்கத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் கல் உடைக்கும் தொழில் செய்து வருவதில் கிடைக்கும் சம்பளத்தை டாஸ்மாக் கடையில் கொடுத்து மது குடித்து வந்தார். மேலும் ஒழுங்காக வேலைக்கு செல்வது கிடையாது. இதனால் கவுசல்யா தனது கணவரிடம் நமக்கு 2 குழந்தைகள் உள்ளன. அவர்களை நன்றாக படிக்க வைக்க பணம் தேவைப்படும். நமது குடும்பம் வறுமையில் உள்ளது. எனவே மது பழக்கத்தை கைவிடுங்கள். தினமும் வேலைக்கு செல்லுங்கள் என அறிவுரை கூறியுள்ளார். ஆனால் மாணிக்கம் கேட்கவில்லை. தொடர்ந்து மது குடித்து வந்தார். பலமுறை சொல்லியும் கணவர் கேட்கவில்லையே என கவுசல்யா மனவேதனையில் இருந்தார்.
சண்டை
வழக்கம் போல் நேற்று காலையிலேயே மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் மாணிக்கம் வீட்டில் இருந்தார். இதனால் கவுசல்யா அவரிடம் வேலைக்கு போகாமல் இப்படி குடித்து விட்டு வீட்டில் இருக்கிறீர்களே, வேலைக்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார். அப்போது மாணிக்கம் தனது மனைவிைய சத்தம் ேபாட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கவுசல்யா தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
சோகம்
இந்த சம்பவம் ஓமலூர் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு, சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள மைல் கல்லுக்கு பூ மாலை அணிவித்து தீபமேற்றி வினோத வழிபாடு நடத்தினர்.
- பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியதோடு சமூக ஊடகங்களில் பரவி பேசு பொருளாகவும் மாறியது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு, சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள மைல் கல்லுக்கு பூ மாலை அணிவித்து வாழைமரம், மாவிலைத் தோரணங்கள் கட்டி, மஞ்சள், சந்தனம், குங்குமமும், தேங்காய், வாழைப்பழம் வெற்றிலைத் தாம்பூலமும் வைத்து, ஊதுபத்தி, கற்பூர தீபமேற்றி வினோத வழிபாடு நடத்தினர். இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால் சாலைப் பணியாளர்கள் நேற்றே மைல் கல்லுக்கு வாழைமரம், தோரணம் கட்டி, மாலை அணிவித்து நடத்திய ஆயுத பூஜை வழிபாடு, பயணிகள் மற்றும் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியதோடு சமூக ஊடகங்களில் பரவி பேசு பொருளாகவும் மாறியது.
- வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
- ஆயுஷ் நல வாழ்வு மைய சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் வாழப்பாடி அரசு மருத்துவமனை ஆயுஷ் நல வாழ்வு மைய சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். பேளூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் இலக்குமணன், கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சி அளித்தார்.
இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், வலி நிவாரணிகள் வழங்கப்பட்டன. வாழப்பாடி அரிமா சங்கத்தின் சார்பில் உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன. சிங்கிபுரம் நல வாழ்வு மைய செவிலியர்கள் கிரீஷ்மா, கனகராணி, அனுராதா, அபிநயா ஆகியோர் பரிசோதனை செய்தனர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் ஆனந்தராஜன் நன்றி கூறினார்.
- கூட்டணிக்கு முக்கியத்துவம் வழங்கும் முதல்வர் தண்ணீர் பெற முக்கியத்துவம் வழங்கவில்லை.
- இரண்டரை ஆண்டுகளில் உதயநிதியை மந்திரி ஆக்கினது மட்டுமே தி.மு.க. அரசின் சாதனை.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
வேண்டும் என்றே திட்டமிட்டு அ.தி.மு.க. சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை கடந்த காலத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் எல்லாம் ஒரு செயற்கை தோற்றத்தை உருவாக்கினார்கள்.
எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணிகாக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்படுகின்றபோது பல்வேறு மாநிலங்களில் வன்முறை நிகழ்ந்தது. அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்தபோது தமிழகத்தில் ஒரு சிறு பிரச்சனை ஏற்படாமல் சிறுபான்மை மக்களை பாதுகாத்த அரசாங்கம் அ.தி.மு.க.
அ.தி.மு.க. தமிழகத்தில் சுமார் 30 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தது. அந்த 30 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் இருக்கின்ற சிறுபான்மை மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி ஒரு சிறிய பிரச்சனை கூட இல்லாமல் சிறப்பான ஆட்சி தந்த கட்சி அ.தி.மு.க. அரசாங்கம்.
கூட்டணி என்பது வேறு. கூட்டணி தேர்தல் நேரத்தில் அவ்வப்போது அமைக்கப்படுகிறது. கொள்கை என்பது நிலையானது. அ.தி.மு.க. கொள்கை நிலையான கொள்கை. அ.தி.மு.க.வுக்கு மதம் கிடையாது, சாதி கிடையாது. அவரவர்கள் மதம் அவர்களுக்கு புனிதமானது. அதில் யாரும் தலையிட முடியாது. இது ஒரு ஜனநாயக நாடு. ஆகவே இந்த ஜனநாயக நாட்டிலேயே யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. சுதந்திரமாக அந்தந்த மதத்தை பின்பற்றி வாழக்கூடியவர்கள்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது என்று சொன்ன பிறகு தான் இஸ்லாமியர்களின் ஞாபகமே அவருக்கு வருகிறது. இஸ்லாமியர்களின் உணர்வுகளை நான் சட்டமன்றத்திலேயே எடுத்து வைக்கின்றபோது இப்போது தான் எதிர்க்கட்சி தலைவருக்கு பாசம் வந்து விட்டது என்று சொன்னார். இல்லை நான் எப்போதுமே சாதிக்கும், மதத்திற்கும் அப்பாற்பட்டவன். அனைத்து மதத்தையும் நேசிக்க கூடியவன்.
எந்த சாதிக்கும், எந்த மதத்துக்கும் அ.தி.மு.க.வுக்கு விரோதம் கிடையாது. ஒரே பார்வையில் தான் நாங்கள் பார்ப்போம். இதனால் மு.க.ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது.
பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. விலகியதுடன் சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வுடன் சேர்ந்து விடுவார்கள் என்ற அச்சம் மு.க.ஸ்டாலினுக்கு வந்து விட்டது. உண்மையிலேயே அந்த மக்களுக்கு நன்மைகள் செய்திருந்தால் அந்த மக்கள் உங்களை நேசித்து இருப்பார்கள். ஆனால் நீங்கள் எந்த நன்மையும் செய்யவில்லை. ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் திட்டமிட்டு ஒரு பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். இன்னமும் அ.தி.மு.க. பா.ஜ.க.வின் பி டீமாக இருந்து வருகிறது என சொல்கிறார்கள். நாங்கள் பி டீம் இல்லை. எடீம் என்னும் ஒர்ஜினல் டீம் அ.தி.முக. என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
எங்களுக்கு துணிச்சல் இருக்கிறது. அந்த துணிச்சல் உங்களிடம் இல்லை. இந்த 2 அரை ஆண்டு ஆட்சி காலத்தில் தி.மு.க. அரசால் எந்த நன்மை கிடைத்து இருக்கிறது. இங்கிருப்பவர்கள் சொல்லுங்கள்.
மேட்டூர் அணையை நம்பி உள்ள 24 மாவட்ட மக்களை பாதுகாக்காமல், தன் பதவியை மட்டுமே தி.மு.க. அரசு பாதுகாக்கிறது. அரிசி விலை கிலோ 10 ரூபாய் உயர்ந்து விட்டது. கூட்டணிக்கு முக்கியத்துவம் வழங்கும் முதல்வர் தண்ணீர் பெற முக்கியத்துவம் வழங்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் காட்சி அளிக்கிறது. பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. ஆனால் பா.ஜ.க.வின் பி டீமாக அதிமுக உள்ளதாக ஸ்டாலின் பொய் செய்தியை பரப்பி வருகிறார். அ.தி.மு.க. எப்போதும் ஒரிஜினல் டீம். தி.மு.க. ஆட்சிக்கு வந்து புதிதாக ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக அனைவரிடமும் கையெழுத்து வாங்கினால் நீட் தேர்வு ரத்தாகி விடுமா? பாராளுமன்றத் தேர்தலில் மக்களை சந்திக்கும் போது நீட் தேர்வு ரத்து குறித்து மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என்பதற்காகவே கையெழுத்து இயக்கத்தை துவங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். இரண்டரை ஆண்டுகளில் உதயநிதியை மந்திரி ஆக்கினது மட்டுமே தி.மு.க. அரசின் சாதனை.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஓமலூர் அடுத்த காருவள்ளி சின்ன திருப்பதியில் வரலாற்று சிறப்புமிக்க பிரசன்ன வெங்கட்ரமன கோவில் உள்ளது.
- தொடர்ந்து நேற்று தேரோட்டம் விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஸ்ரீ சுதர்சன ஹோமம், பூர்ணாஹூதி, சாமி ரதம் ஏறுதல் நடைபெற்றது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காருவள்ளி சின்ன திருப்பதியில் வரலாற்று சிறப்புமிக்க பிரசன்ன வெங்கட்ரமன கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி திருவிழா தொடங்கியது.
நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சாமி கல்யாணம் மற்றும் கருட சேவை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று தேரோட்டம் விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஸ்ரீ சுதர்சன ஹோமம், பூர்ணாஹூதி, சாமி ரதம் ஏறுதல் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணி அளவில் தேரோட்ட விழா நடைபெற்றது.
எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்பு
விழாவில் சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன், ஓமலூர் எம்.எல்.ஏ. மணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், தமிழரசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சித்தேஸ்வரன், சுப்பிரமணியம், ராஜேந்திரன், அசோகன், கோவிந்தராஜ், மணிமுத்து, காடையாம்பட்டி ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர், அறிவழகன், ரவிச்சந்திரன், நகர தி.மு.க. செயலாளர் பிரபாகரன், தி.மு.க. மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அருள் உள்ளிட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சாமி திருவீதி உலா புறப்பாடு மற்றும் சத்தாபரணம், நையாண்டி மேளம் நடைபெற்றது. தேரோட்டம் விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் அறங்காவல் குழு தலைவர் நைனா குமார் மற்றும் அறங்காவலர்கள், இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
- கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100.32 அடியாக இருந்தது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து கடந்த 10-ந்தேதி காலையுடன் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அதே நேரம் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.86 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 288 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2369 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1733 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையின் நீர்மட்டம் 74.34 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 300கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் நேற்று வினாடிக்கு 2482 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 2033 கனஅடியாக குறைக்கப்பட்டது.
- அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
சேலம்:
சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
முதல்- அமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்பு பழக்கத்தை அதகரிகத்து அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் வகையில் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடும் மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதேபோன்றும் இந்த ஆண்டும் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தக திருவிழா வருகின்ற 22.11.2023 (புதன்கிழமை) தொடங்கி 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) வரை 12 நாட்கள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெறவுள்ளது.
இப்புத்தகக் கண்காட்சியில் சேலம் மாவட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சி கள் நடத்திடவும், மாணவர்க ளுக்கு பயன்படும் மின்நூல் மற்றும் மின் பொருண்மை பதிப்பாளர்களின் படைப்பு களைக் கொண்ட விற்பனை யகங்கள் அமைத்திட வும், அரிய வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், வாசிப்பு அரங்கங்கள், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம், ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய அரங்கங்கள் இடம்பெறவுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
- ஆயுதபூஜையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இருந்தாலும் மார்க்கெட்டில் பூ வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
ஆயுதபூஜையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இருந்தாலும் மார்க்கெட்டில் பூ வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் சில பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் கிலோ ரூ.400-க்கு விற்ற குண்டுமல்லி ரூ.700-க்கு விற்பனை யானது. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.200-க்கு விற்ற சன்னமல்லி ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி கிலோ ரூ.200-க்கும், ஜாதிமல்லி ரூ.280-க்கும், காக்கட்டான் ரூ.450-க்கும், கலர் காக்கட்டான் ரூ.360-க்கும், அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி ஆகியவை தலா ரூ.440-க்கும், நந்தியாவட்டம் ரூ.400-க்கும் விற்பனையானது.
விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து பூக்களை வாங்கி சென்றனர்.
- பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
- சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சேலம்:
பட்டாசு வெடிகளைத் தயாரிப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறி முறைகளைக் கண்காணிக்கும் அலுவலர்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் த்திற்குப்பின் கலெக்டர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
குழு அமைப்பு
சேலம் மாவட்டம் முழுவதும் பட்டாசு தயாரிக்கும் இடங்களை தொடர் ஆய்வு செய்து கண்காணித்திட வருவாய்த்துறை, காவல் துறை, தொழிலக பாது காப்புத்துறை, தீயணைப்புத் துறை ஆகிய 4 துறைகளை சேர்ந்த அலுவலர்களை கொண்ட குழு வட்டார அளவில் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பட்டாசு வெடிகளை தயாரிப்ப தற்கான பாதுகாப்பு வழி காட்டு நெறிமுறைகள் குறித்தும் தொடர் ஆய்வு களை பாதுகாப்புடன் மேற்கொண்டு உடனுக் குடன் தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிடுவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
11 நிறுவனங்கள்
சேலம் மாவட்டத்தில் பட்டாசு வெடிகளை தயாரித்திட 43 நிறுவனங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை புதுப்பிக்க விண்ணப்பங்கள் வழங்கப் படாமல் செயல்பாடற் றுள்ள 11 நிறுவன ங்களுக்கு விளக்கம் கோரி உரிய பதில் வழங்கப்படவில்லை எனில் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக அவற்றை சீல் வைத்து மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள பட்டாசு வெடிகளை தயாரிக்கும் நிறுவனங்களை முழுமையான பாதுகாப்பு நடைமுறை களைப் பின்பற்றினால் மட்டுமே அனுமதி வழங்கப் பட்டு தொடர்ந்து கண் காணிக்கப்படும். மாவட் டத்தில் 18 மொத்த பட்டாசு விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களை பொறுத்த வரை அனுமதிக் கப்பட்ட இடங்களில் அனுமதிக்க ப்பட்ட அளவில் மட்டுமே பட்டாசுகளை இருப்பில் வைத்திடவும், ஆய்வின்போது விதி மீறல்கள் அறியப்பட்டால் பாதுகாப்பு நலன் கருதி இவர்களின் அனுமதியை ரத்து செய்யவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.
643 விண்ணப்பங்கள்
இதுவரை தீபாவளிக் கென தற்காலிக பட்டாசு விற்பனை கடைகள் அமைத்துக் கொள்ள 643 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. ஒவ்வொரு விண்ணப்பமும் முறையாக ஆய்வு செய்யப் பட்டு தகுதியில்லாத விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படும். திறந்தவெளி மைதானங்களில் தற்காலிக பட்டாசு விற்பனை கடைகளை அமைத்திட உரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
இதில் பட்டாசு தயாரிப் பாளர்கள், விற்பனை யளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என அனை வரின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே பட்டாசு வெடி விபத்துக்களால் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே தமிழ்நாடு அரசின் உத்தரவிற்கிணங்க, இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மேனகா, இணை இயக்குநர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) தினகரன், அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர்.
- சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர்.
சேலம்:
காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று சேலம் ஜங்ஷனில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதலே விவசாயிகள் திரண்டனர். பின்னர் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று ரெயில் மறியலுக்கு முயன்றனர்.
இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஏராளமான போலீசார் காலை முதலே குவிக்கப்பட்டு இருந்தனர். ஊர்வலமாக சென்று ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு நுழைவு வாயில் பகுதியில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகள் அதனை மீறி உள்ளே நுழைய முயன்றனர். ஆனாலும் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இதில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் 30 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.






